அன்னதானம் ஏற்க வந்த ஆயிரத்தில் ஒருவர்

கோச்செங்கட்சோழன், எழுபது மாடக் கோயில்களை எழுப்பினான். இவற்றில் திருஆக்கூர் திருத்தலமும் ஒன்று. மயிலாடுதுறை- திருக்கடையூர் சாலையில், சுமார் 10 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள இந்த ஆலயத்தை 'தான்தோன்றி மாடம்' என்று சிறப்பிப்பர்.
யானை ஏறி வரமுடியாத படிக்கட்டுகளைக் கொண்ட உயரமான தளத்தைக் கொண்ட மாடக் கோயிலில், லிங்கத் திருமேனியராக அருள்பாலிக்கிறார் ஸ்ரீதான்தோன்றி அப்பர்; சுயம்புவாகத் தோன்றியதால் இந்தப் பெயர்.அம்பாளின் திருநாமம் - ஸ்ரீவாள்நெடுங்கண் நாயகி.
மூலவரின் லிங்க மூர்த்தத்தில், பாணம் பிளந்த நிலையில் இருப்பது காண்பதற்கு அரிய ஒன்று! மார்க்கண்டேயனுக்காக... எமதேவனை ஈசன் தண்டித்த திருத்தலம் திருக்கடையூர். மார்க்கண்டேயனை நோக்கி எமன் வீசிய பாசக்கயிறு லிங்கத்தின் மீதும் விழுந்தது. அந்த லிங்க மூர்த்தம் வெடித்து விழுந்த இடம் திருஆக்கூர் என்கிறது கோயிலின் தல புராணம். எனவேதான் இந்தத் தலத்தின் லிங்க மூர்த்தம், பாணம் பிளந்த நிலையில் உள்ளதாகக் கூறுகின்றனர்.


சிவனடியார்க்கு அன்னமிட்டு சிறப்படைந்த சிறப்புலி நாயனார் அவதரித்தது, வாழ்ந்தது, முக்தி பெற்றது இந்தத் தலத்தில்தான். தினமும் 1000 அடியவருக்கு அன்னம் வழங்குவதை வழக்கமாகக் கொண்டவர் சிறப்புலி நாயனார். ஒருநாள்... எண்ணிக்கையில் ஒருவர் குறைந்துவிட, மனம் வருந்தினார் நாயனார். அப்போது ஸ்ரீதான்தோன்றீஸ்வரரே அடியவராக வந்து சிறப்புலி நாயனாரின் அன்னதானத்தை ஏற்றதுடன், திருக்காட்சி கொடுத்தும் அருளினாராம். இதனால் இந்த இறைவனுக்கு ஆயிரத்தில் ஒருவர் எனும் திருநாமமும் உண்டு. அடியவர் உருவில் கோலூன்றியபடி இறைவன் வந்ததை உணர்த்தும் வகையில், இங்கு உள்ள உற்ஸவரும் கோலூன்றியபடி நின்ற கோலத்தில் தரிசனம் தருகிறார்.
கல்வெட்டுகள், ஏராளமான சிற்பங்கள் என அழகு மிளிரக் காட்சி தரும் ஆலயத்தில், கார்த்திகை சோமவாரத்தில் 108 சங்காபிஷேகம் விமரிசையாக நடைபெறுகிறது.
அதுமட்டுமா? சிறப்புலி நாயனார் முக்தி அடைந்ததும் கார்த்திகை மாத பூராட நட்சத்திரத் திருநாளில்தான். (நவம்பர்-20) இந்த நாளில், ஸ்ரீதான்தோன்றி அப்பருக்கு சிறப்பு அபிஷேக - ஆராதனைகளும் ஆயிரம் பேருக்கு அன்னதானமும் விமரிசையாக நடைபெறவுள்ளது

Comments