சித்தர்கள் பூமியில் சிலிர்ப்பான தரிசனம்!

கொல்லிமலை போன்ற இறையருள் ததும்பும் மலைக்குச் செல்லும் போது, அங்கு வசிப்பதாகச் சொல்லப்படும் சித்த புருஷர்களை அடையாளம் கண்டு நாம் தரிசிக்க முடியுமா?' எனும் சந்தேகம் பலருக்கும் இருக்கிறது.
மனித சக்திக்கு அப்பாற்பட்டவர்கள் சித்த புருஷர்கள்! சக மனிதர்களிலேயே நல்லவர் யார், கெட்டவர் யார் என்பதை நம்மால் அறிந்து கொள்ள முடிவதில்லை. நெருங்கிப் பழகுபவர் எப்படிப்பட்டவர் என்பதைத் தெரிந்து கொள்ள முடிவதில்லை. இந்தக் கலிகாலத்தில், பொய்யும் சூதுமே வாழ்க்கை என்று நினைத்து சிலர் வாழ்ந்து வரும்போது அஷ்டமா ஸித்திகளும் கைவரப் பெற்ற சித்தர்களை எப்படி இனம் காண முடியும்?
'நான்தான் கோரக்கர் வந்திருக்கிறேன்... உனது கஷ்டத்தைச் சொல்லப்பா' என்று உண்மையான கோரக்கரே நம் எதிரில் எழுந்தருளினாலும், இவர் கோரக்கர்தானா... இல்லை போலிச் சித்தரா என்றுதான் சிலரது மனம் எண்ணும். காலம் அப்படி!
சித்தர்களது சொல்லும் செயலும், மனிதர்களால் கண்டறிய முடியாதவை! இவர்களது தவ வாழ்க்கை நம் கண்களுக்குப் புலப்படாது. எவருக்கு, எந்த நேரத்தில் உதவி செய்ய வேண்டும் என்று தீர்மானிக்கிறார்களோ, அந்த வேளையில் தோன்றி, சம்பந்தப்பட்டவர்களுக்கு அருள் புரிகிறார்கள் சித்தர்கள். எவர் தன்னிடம் நம்பிக்கை வைத்து நெருங்குகிறார்களோ, அவர்களுக்கு நல்லாசிகளை வழங்குகிறார்கள். ஆக, இன்றைக்கும் சித்தர்களைத் தேடிச் செல்லும் சிலர், அவர்களது தரிசனத்தைப் பெறுகிறார்கள் என்பதே உண்மை!
இப்படி சித்தர்களைத் தேடிச் செல்லும்போது எதிர்பார்ப்புகள் நம்மிடம் இருக்கக் கூடாது. இறை வழிபாட்டிலேயே கூட பக்தனுக்கு என்ன செய்ய வேண்டும் என்பதை பகவான்தான் தீர்மானிக்கிறார். பக்தன் வைக்கும் கோரிக்கைகளை எல்லாம் நிறைவேற்றுவதற்கு, சித்தர்களும் பகவானும் ஒன்றும் அலுவலகம் நடத்தவில்லை.
எதிர்பார்ப்புகள் இல்லாத வாழ்க்கையில்தான், இனிமையும் ஏகாந்தமும் இருக்கும் என்பதற்குப் புராணங்களில் பல உதாரணங்கள் உள்ளன. உண்மையான பக்தியில் கோரிக்கை கூடாது.
கொல்லிமலைக்கு வருவோம்.
கொல்லிமலையில் சித்தர்கள் பலரும் இன்றளவிலும் இருந்து வருகிறார்கள். சித்தர்களுக்கு இத்தனை நாள் தான் வாழ்க்கை என்பதெல்லாம் இல்லை. பழநிக்கு அருகே இன்றைக்கும் வசித்து வரும் ஒரு சித்தரை 'போகரின் அவதாரம்' என்கிறார்கள். ஆக, சித்தர்களின் வாழ்க்கையும் காலமும் முடிந்து விட்டதாகக் கருதக் கூடாது.
சித்த புருஷரான கோரக்கர் தன் சீடர்களுடன் பல காலம் கொல்லிமலையில் தங்கி தவம் புரிந்துள்ளார். அரிய தவத்தின் பலனாக ஏராளமான மூலிகைகளை இவர் கண்டறிந்துள்ளார். இவற்றை தானும் உண்டு, தன் சீடர்களுக்கும் கொடுத்து உபதேசித்துள்ளார்.
மத்ஸ்ய முனிவர் எனும் மச்சமுனியும் கொல்லிமலையில் வாழ்ந்துள்ளதாகத் தகவல் உண்டு (அறப்பளீஸ்வரர் ஆலயத்தின் அருகே உள்ள 'மீன்பள்ளி' எனும் ஐந்தருவி தீர்த்தத்தில் இப்போதும் மீன் வடிவில் இருந்து வருகிறாராம் மச்சமுனி. இதனால், இந்த மீன்களை எவரும் பிடிப்பதில்லை. இது குறித்த தகவலை அறப்பளீஸ்வரர் தல தரிசனத்தின்போது தெரிந்து கொள்ளலாம்).
காலாங்கி முனிவர் கொல்லிமலையில் தவம் இருந்துள்ளார். தன் தவ வாழ்வு சிறப்பதற்கு, இந்த மலையின் மூலை முடுக்குகளுக்கெல்லாம் அவர் சென்று வந்ததாகச் சொல்கிறார்கள்.
சில நூறு ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த அருணகிரி நாதர், கொல்லிமலைக்கு வந்து தரிசித்திருக்கிறார். அறப்பளீஸ்வரர் ஆலயத்தில் குடி கொண்டுள்ள முருகப் பெருமானின் அழகில் வியந்து திருப்புகழ் பாடியுள்ளார்.
சித்த புருஷர்களான பல முனிவர்களின் தவத்துக்கு அசுர இனத்தவர் இடையூறு செய்தபோதுதான், 'கொல்லிப்பாவை' எனும் சக்தி வாய்ந்த தெய்வீகப் பதுமை ஒன்று இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டது. மிகவும் வியக்கத் தகுந்த அற்புத வடிவம் இது.
_ இப்படி எண்ணற்ற சித்த புருஷர்களைக் கொல்லிமலையுடன் இணைத்துச் சொல்லப்படுவது உண்டு.
ராமாயணத்தில் சுக்ரீவன் ஆட்சி செய்ததாகக் கூறப்படும் 'மதுவனம்' எனும் மலைப் பிரதேசம் கொல்லிமலைதான் என்கிற கருத்தும் உண்டு. சித்தர்கள் காலத்திய பல செய்திகளுக்கு ஆதாரங்கள் கிடையாது. வழி வழியாகச் சொல்லப்பட்டு வரும் பல செய்திகளே, இன்றைக்கு ஆவணங்களாக இருக்கின்றன.
சித்தர்கள் பரவலாக கொல்லிமலையில் வசித்து வந்ததற்கான காரணம் & இந்த மலையில் செறிந்து வளர்ந்துள்ள மூலிகை வளம்தான்! அமைதியான இந்த மலையில் சில உட்பிரதேசங்களில் அரிய மூலிகைகள் பலவும் காணப்படுகின்றன.



பரந்து விரிந்துள்ள ஆன்மிகம் ததும்பும் மலைப் பிரதேசங்களில் எண்ணிலடங்கா மூலிகைகள் இன்றைக்கும் உள்ளன. இவற்றுள் பல அடையாளம் காண முடியாதவை. காரணம்& ஒரு மூலிகையை நெருங்கி அதைப் பறிப்பதற்கு, சம்பந்தப்பட்ட மூலிகை பற்றிய அறிவும் அனுபவமும் தேவை.
கட்டுமானத் தொழிலில் இருக்கும் ஒருவருக்கு, ஒரு கட்டடம் கட்டுவதில் இருக்கக் கூடிய நுணுக்கங்கள் தெரிந்திருக்க வேண்டும் என்று எப்படிச் சொல்கிறோமோ, அது போல்தான் மூலிகைகளைக் கையாளுவதற்கும் பிரத்தியேக அனுபவம் தேவை. மூலிகைகளைப் பற்றிய அறிவும் அனுபவமும் நமக்கு இருந்தால்தான் அதன் அருகே நெருங்க முடியும்; பறிக்க முடியும்; பயன்படுத்திக் கொள்ள முடியும்.
மூலிகை பற்றிய அறிவை வளர்த்துக் கொள்வதற்கு, அதை பற்றிய படிப்பு மட்டும் போதாது; பரிச்சயம் வேண்டும். தவம் வேண்டும். இறை அருள் கூடி வர வேண்டும்.
சித்த புருஷர்களுக்கு இவை எல்லாமே கைகூடியது. மூலிகைகளைப் பறித்தார்கள். அதன் பயன்பாடுகளை அறிந்தார்கள். இப்படி நமக்குக் கிடைத்திருப்பவைதான் இன்றைய மூலிகை வைத்திய முறை. பாட்டி வைத்தியம், நாட்டு மருத்துவம், மூலிகை மருத்துவம் என்றெல்லாம் இன்றைக்குச் சொல்கிறோமே... இதற்கெல்லாம் காரணகர்த்தாக்கள் & நமது சித்தர்கள்தான்!
பசியை உருவாக்கவும் மூலிகை உண்டு; பசியைப் போக்கவும் மூலிகை உண்டு. மனிதர்களுக்கு மகிழ்ச்சியைத் தருவதற்கும் மூலிகை உண்டு; மரணத்தை விளைவிக்கக் கூடிய மூலிகையும் உண்டு.


மனிதர்களின் வாழ்வில் பல நல்ல மாற்றங்களை உண்டு பண்ணக் கூடிய சில தைலங்கள், ரசக் குளிகை போன்றவற்றைக் கொல்லிமலையில் தயாரித்த கோரக்க சித்தர், இவற்றை இதே மலையில் ஓரிடத்தில் பாதுகாப்பாகப் புதைத்து வைத்திருப்பதாகவும் தகவல் இருக்கிறது. இது பற்றிய செய்தி, சில நூல்களில் இருக்கிறதாம். ரசக் குளிகை இருக்கக் கூடிய இடத்தில் மழை பொழியும்; எந்தவிதக் கெட்ட சக்தியும் அண்டாது; நோய் நொடிகள் தாக்காது.
கொல்லிமலையின் மகத்துவத்தை உணர்ந்த மந்திரவாதிகள் சிலர், தேசத்தின் பல பகுதிகளில் இருந்தும், அவ்வப்போது கொல்லிமலைக்கு வந்து செல்கிறார்களாம். தங்களது மந்திர சக்தியைப் பெருக்கிக் கொள்ளவும், சில தாந்த்ரீக வேலைகளுக்கும் இவர்கள் இங்கே வந்து செல்வதாகச் சொல்லப்படுகிறது. இப்படிப்பட்ட மந்திரவாதிகள், கொல்லிமலையின் தனிமையான பகுதிகளுக்குச் சென்று, வழிபாடு நடத்துகிறார்களாம். இவர்களில் சிலர், விவரம் அறிந்த மலைவாசிகளை, தங்கள் உதவிக்கென்று காசு பணம் கொடுத்துக் கூட்டிச் செல்கிறார்கள்.


''இங்கே மலைக்குக் காவலாக இருக்கும் கொல்லிப்பாவை, சாதாரணமானவள் அல்ல! நன்மக்களை அழிக்க நினைத்த அசுரர் கூட்டத்தையே கபளீகரம் செய்தவள். கெட்ட எண்ணம் கொண்ட கூட்டத்தை அவள் என்றைக்குமே விட்டு வைக்க மாட்டாள். பொய் புரட்டு பேசி, மக்களை ஏமாற்றும் எவரும் அவளுடைய அருளாட்சியில் இருக்கும் இந்த மலையில் அரை விநாடி கூட தாக்குப் பிடிக்க முடியாது. எனவே, தவறான எண்ணத்துடனும், மோசமான திட்டங்களுடனும் இங்கு எப்பேர்ப்பட்ட மந்திரவாதிகள் வந்தாலும், அவர்கள் தவிடுபொடி ஆகி விடுவார்கள்'' என்று கொல்லிமலையில் நீண்ட வருடங்களாக வசித்து வருபவர் ஒருவர் சொல்கிறார்.
கொல்லிமலையின் அழகைக் கண்டு இலக்கியத்தையும் சரித்திரத்தையும் இயன்றவரை புரட்டினால், கொல்லிமலை என்னென்ன பெயர்களில் எல்லாம் வழங்கப்பட்டு வந்துள்ளது என்பதை ஓரளவு அறிய முடிகிறது.

தமிழகத்தில் இலக்கியச் சிறப்பும் வரலாற்றுப் பெருமையும் கொண்ட ஏராளமான மலைகள் பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இருந்து வருகின்றன. அவற்றுள் சைவ சமயக் குரவர்களால் பாடல் பெற்ற சிறப்புகளுக்கு உரிய பல மலைகளும் உண்டு. அவற்றுள் திருக்காளத்தி, திருக்கழுக்குன்றம், திருவண்ணாமலை, திருச்சிராப்பள்ளி, திருஈங்கோய்மலை, திருக்குற்றாலம் முதலானவை குறிப்பிடத்தக்கவை! இதேபோல், சமயக் குரவர்களின் காலத்துக்கும் முன்னால் அதாவது சங்க காலத்தில் பெருமைமிக்க மலைகள் பலவும் இருந்துள்ளன.
பழநிமலை, பறப்புமலை, கோடைமலை, பொதியமலை, குதிரைமலை, முதிரமலை, தோட்டிமலை போன்றவற்றை சங்க கால மலைகளுக்கு உதாரணமாகச் சொல்லலாம். இவற்றுள் சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டு, சங்க கால புலவர்களால் போற்றப்பட்ட மலைதான் கொல்லிமலை.
கொல்லிமலைக்கு வேறு பல பெயர்களும் உண்டு. குடதிசையில் (மேற்கு) உள்ளதால், இந்த மலையை 'குடவரை' என்பர்.

நான்கு புறமும் சதுரமாக இந்த மலை பரவி உள்ளதால் 'சதுரகிரி' என்ற பெயரும் உண்டு. என்றாலும், வத்திராயிருப்புக்கு அருகே சதுரகிரி என்ற பெயரிலேயே ஒரு புனித மலை நெடுங்காலமாக இருப்பதால், கொல்லிமலைக்கு இந்தப் பெயர் ஏட்டளவிலேயே இருந்துள்ளது.

அறப்பளீஸ்வரரை தெய்வமாகக் கொண்டுள்ள மலை என்பதால் 'அறப்பளீஸ்வர மலை' என்றும் அழைப்பர்.
''கொல்லிப்பாவை என்கிற பெண் தெய்வம் இங்கே குடி கொண்டதால்தான் இந்த மலைக்குக் கொல்லிமலை என்கிற பெயர் வந்திருக்க வேண்டும். அதற்கு முன் வரை வேறு பெயரால்தான் இந்த மலை வழங்கப்பட்டிருக்க வேண்டும்'' என்று சொல்கிற அறிஞர்களும் உண்டு.

கொல்லிமலை அறப்பளீஸ்வரர் ஆலய கல்வெட்டுகளை ஆராயும்போது ஏராளமான மன்னர்கள், இந்த ஆலயத்துக்குத் திருப்பணி செய்து, நிவந்தங்கள் அமைத்த தகவல்களும் கிடைக்கின்றன. தென்னிந்தியக் கல்வெட்டுத் துறையின் அறிக்கையின்படி இந்த ஆலயத்தில் இருபது கல்வெட்டுக்கள் இருந்ததாகத் தெரிகிறது.

விஜயநகர அரசர் வேங்கடபதி தேவமகாராஜர், சோழ அரசர் பரகேசரி வர்மன், பொன்னிவர்மன், ராசாதிராசதேவர், ராசகேசரிவர்மன், திரிபுவனச் சக்கரவர்த்தி ராசாதிராசதேவர், குலோத்துங்க சோழ தேவர், ராசமகேந்திரர், பராந்தகன் சுந்தரசோழன், வாசிராசு நரசிங்கராசர் துறையூர் தாசில் ஆகிய மன்னர்களின் கல்வெட்டுக்கள், அறப்பளீஸ்வரர் ஆலயத்தின் பெருமையையும் புராதனத்தையும் இன்றைக்கும் பறை சாற்றுகின்றன.

Comments