விதம் விதமாய் விநாயகர்கள்

அவிநாசி கல்வி கணபதி
அவிநாசி பழைய பேருந்து நிலையத்திற்கு அருகே இருக்கும் இக்கணபதியை `கல்வி கணபதி' என்கிறார்கள்.

மாணவர்கள் விநாயகர் சதுர்த்தியன்று பாட நோட்டு, புத்தகங்களை இவர் முன் அடுக்கி வைத்துப் பிரார்த்தித்து எடுத்துச் செல்கிறார்கள். கல்வியில் தேர்ச்சி பெறவும், குழந்தைகளுக்கு ஞாபக சக்தி பெருகவும் இவரை தரிசித்துப் பயன் பெறுவதாக பக்தர்கள் சொல்கிறார்கள்.
ஈரோடு மும்முக செல்வ விநாயகர்
ஈரோடு பிரப் ரோடில் மும்முக செல்வ விநாயகர் கோயில் உள்ளது. கருவறையில் மும்முக விநாயகர் வடக்கு நோக்கி காட்சி தருகிறார்.

இந்த விநாயகரை வணங்கினால் சுகப்பிரசவம் நிகழும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
கருங்கல்பாளையம் பாறை விநாயகர்

ஈரோடு கருங்கல் பாளையம் காவேரி ரோடில் கல்லுப்பிள்ளையார் கோயில் தெருவில் பாறைவிநாயகர் எழுந்தருளியுள்ளார்.

சுமார் மூன்றரை அடி நீளமும் ஐந்து அடி உயரமும் கொண்ட பாறையில் செதுக்கப்பட்ட விநாயகர் இவர்.

தங்கள் பிரார்த்தனைகளை நிறைவேற்றி வைக்கின்ற இந்த விநாயகருக்கு பக்தர்கள் தேங்காய் மாலை அணிவித்து நன்றிக் கடன் செலுத்துகின்றனர்.

நாமக்கல் அரசமரத்தடி பிள்ளையார்
நாமக்கல் கோட்டைப் பகுதியில் எழுந்தருளியுள்ள அரசமரத்தடி பிள்ளையார் சக்தி வாய்ந்த பிள்ளையாராகக் கருதப்படுகிறார். ஆஞ்சநேயர் கோயிலுக்குச் செல்லும் வழியில் இந்தப் பிள்ளையாருக்கு கோயில் உள்ளது.

திருச்சி சாலை விநாயகர்
திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து உறையூர் செல்லும் சாலையில் சுமார் 2 கி.மீ.யில் உள்ளது சாலை விநாயகர் ஆலயம்.

ஆலயம் கிழக்கு திசை நோக்கி சாலையிலேயே அமைந்துள்ளது. சுமார் ஐந்நூறு ஆண்டுகளுக்கும் மேல் பழமையான ஆலயம் இது. கருவறையில் சாலை விநாயகர் கம்பீரமாக அருள்பாலிக்கிறார். ஒண்டி கருப்பண்ணசாமி, நாகர்கள், நடராஜர்-சிவகாமி, நவகிரக நாயகர்களும் இங்கு அருள்பாலிக்கின்றனர்.

இங்கு சுற்று வட்டார மக்கள் தங்கள் வீட்டில் நடைபெறும் சுபகாரியங்கள் தொடங்குவதற்கு முன் மங்களப் பொருட்களை சாலை விநாயகர் முன் வைத்து வழிபட்ட பின்னரே செயல்களைத் தொடங்குவதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர்.
இப்பகுதி வியாபாரிகள் இந்த விநாயகரை வழிபட்ட பின்னரே புது வணிகத்தை தொடங்குகின்றனர்.


பூனா சுந்தர விநாயகர்
மகாராஷ்டிராவின் பெரு நகரம் பூனாவில் தமிழர்கள் அதிகம். இங்கே `கோண்டுலா' எனும் பகுதியில் பிள்ளையாருக்கு ஒரு கோயில் கட்டியுள்ளனர். சுந்தரகணபதி ஆலயம் என்று பெயர். மூலவரின் சிலாரூபம், மயிலாடுதுறையிலிருந்து வரவழைக்கப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. உரிய யந்திரங்களை காஞ்சி காமகோடி பீடம் வழங்கியது தனிச்சிறப்பு. தென்னிந்தியாவிலுள்ள  ஒரு விநாயகர் வடஇந்திய நகரம் சென்று அங்குள்ளோருக்கு அருள்பாலிப்பது நமக்கும் மகிழ்ச்சியான விஷயம்தானே!

Comments