ஆடி மாத அற்புதங்கள்!

ஆடி மாதம் பெண் தெய்வங்களைப் போற்றும் மாதமாக விளங்குகிறது. ஆடிமாதம் ஒன்றில்தான் அன்னை காமாட்சி சிவனை நோக்கி தவமிருந்து ஈசனை அடையும் பேறு பெற்றாள். ஆண்டுதோறும் வரும் நான்கு நவராத்திரிகளுள் வாராஹி நவராத்திரி இம்மாதத்தில் கொண்டாடப்படுகிறது. ஆடி அமாவாசை முதல் இது அனுஷ்டிக்கப்படுகிறது.

துளசி வழிபாடு
ஆடி மாதம் வளர்பிறை துவாதசி தொடங்கி கார்த்திகை மாத வளர்பிறை துவாதசி வரை துளசியை வழிபட நீண்ட ஆயுளும் ஆரோக்யமும் கிடைக்கும். வளமான வாழ்க்கை அமையும்.

ஆடி முளைக்கொட்டு
திருச்சி அருகிலுள்ள நெடுங்களநாதர் ஆலயத்தில் ஆடி மாதம் முழுவதும் சூரியனின் கதிர்கள் மூலவர் மீது விழும். இச்சமயத்தில் சூரிய பூஜை வெகு விமரிசையாக நடைபெறும்.
மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் ஆடி முளைக்கொட்டு விழா பத்து நாட்கள் சிறப்பாக நடைபெறும்.

ஆடி செவ்வாய், ஆடி வெள்ளி
ஆடி மாதத்தில் வரும் செவ்வாய், வெள்ளிக்கிழமைகள் விசேஷமானவை. அன்றைய தினம் இல்லத்தின் வாசலில் கோலமிட்டு பூஜை அறையில் குத்து விளக்கேற்றி ஸ்ரீலலிதா சகஸ்ரநாமம் மற்றும் பல அம்மன் பாடல்களைப் பாடி தேவியை வணங்குவது நன்மை தரும். பால் பாயசம், சர்க்கரை பொங்கல் ஆகியவற்றø நிவேதனம் செய்யலாம். பெண் குழந்தைகளை அம்மனாக பாவித்து உணவளித்து, அவர்களுக்கு மங்களப் பொருட்களைக் கொடுத்து சிறப்பிக்க, தேவியின் அருள் கிடைக்கும்.

வாராகி நவராத்திரி
திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் ஆலயத்தில் அகிலாண்டேஸ்வரிக்கு ஸ்ரீ வித்யா பூஜை நடைபெறும். இந்த தேவியின் காதுகளில் ஸ்ரீசக்கரமே தாடங்கமாக உள்ளது. ஆடி வெள்ளியன்று அமாபாள் காலையில் லட்சுமியாகவும், உச்சிகால வேளையில் பார்வதியாகவும், மாலையில் சரஸ்வதியாகவும் காட்சி தருகிறாள். வாராகியின் அம்சமான திருவானைக்கா அகிலாண்டேஸ்வரியை இக்காலகட்டத்தில் தரிசிப்பது சிறப்பானது.
தகடூரிலுள்ள கோட்டை கல்யாண காமாட்சியை ஆலயத்தில் அருள்பாலிக்கும் சூலினி துர்க்கையின் முழு உருவத்தை ஆடிமாத மூன்றாவது செவ்வாய்க் கிழமையன்று மாலை 4 மணி முதல் 9 மணி வரை மட்டுமே தரிசிக்க முடியும். மற்ற நாட்களில் முகதரிசனம் மட்டுமே!

நாகபூஜை
ஆடி, வெள்ளியில், புற்றுள்ள அம்மன் கோயில்களுக்குச் சென்று நாக தேவதைக்கு பால் தெளித்து விசேஷ பூஜை செய்வது தோஷங்களைப் போக்கும் என்பது நம்பிக்கை. நவசக்தி அர்ச்சனை, சண்டி ஹோமம் போன்றவையும் செய்வார்கள்.

ஆடி பௌர்ணமி
திருநெல்வேலி, சங்கரன்கோவிலில் உள்ள கோமதி அம்மன் புன்னை வனத்தில் ஆடிப் பௌர்ணமியன்று தவமிருந்தாள். அவளது தவத்திற்கு இரங்கி ஆடி பௌர்ணமி உத்திராட நட்சத்திரத்தன்று சங்கரநாராயணர் காட்சி அளித்தார்.
ஹயக்ரீவரின் அவதார தினமும் ஆடி பௌர்ணமி நன்னாளே!

Comments