பகவான் ரமணரின் பதில்கள்

பூரண சரணாகதி என்றால்?
ஈசன் பேரில் எவ்வளவு பாரத்தைப் போட்டாலும் அவ்வளவையும் அவர் வரித்துக் கொள்கிறார். சகல காரியங்களையும் ஒரு பரமேச்வர சக்தி நடத்திக் கொண்டிருப்பதால், நாமும் அதற்கு அடங்கி இருக்காமல், `இப்படிச் செய்ய வேண்டும்; அப்படிச் செய்ய வேண்டும், என்று எப்போதும் சிந்திப்பதேன்? புகை வண்டி எல்லா பாரங்களையும் தாங்கிக் கொண்டு போவது தெரிந்திருந்தும், அதில் ஏறிக்கொண்டு போகும் நாம் நம்முடைய சிறிய மூட்டைகளையும் அதில் போட்டுவிட்டு சும்மா இருக்காமல், அதை நமது தலையில் தாங்கிக்கொண்டு ஏன் கஷ்டப்படவேண்டும்?. எல்லாம் அவனே என்று விட்டுவிடுவதுதான் பூரணசரணாகதி.
மனம் சஞ்சலப்படக் காரணம் என்ன?

உறுதியின்மைதான். மரத்தடியில் நிழல் சுகமாக இருக்கிறது. வெளியில் சூரியவெப்பம் கொடுமையாயிருக்கிறது. வெயிலில் அலையும் ஒருவன் நிழலில் சென்று குளிர்ச்சி அடைகிறான். சிறிது நேரத்திற்குப் பின் வெளிக்கிளம்பி, வெப்பத்தின் கொடுமைக்கு ஆற்றாமல், மறுபடியும் மரத்தடிக்கு வருகின்றான். இவ்வாறு நிழலிலிருந்து வெயிலிற்போவதும், வெயிலில் இருந்து நிழலில் செல்வதுமாயிருக்கிறான். இப்படிச் செய்கிறவன் உறுதியற்றவன்; பலவீனன். விவேகி நிழலை விட்டு நீங்கான். இப்படியே ஞானியின் மனமும் பிரம்மத்தை விட்டு நீங்குவதில்லை. ஆனால் அஞ்ஞானியின் மனமோ பிரபஞ்சத்தில் உழன்று துக்கப்படுவதும், சிறிது நேரம் பிரம்மத்திற்குத் திரும்பி சுகம் அடைவதுமாக இருக்கிறது.
மனஅமைதிக்கு எளிதான வழி உண்டா? அல்லது தவம், யோகம் போன்றவற்றில் ஈடுபடத்தான் வேண்டுமா?
வேண்டியதில்லை. உலக வாழ்வில் இருக்கும்போது அமைதி சுகம் அனுபவிக்கலாம். `நான் வேலை செய்கிறேன்' என்ற உணர்ச்சியே தடை. ``வேலை செய்வது யார்?'' என்று விசாரித்து உன் உண்மை சொரூபத்தை நினைவிற்கொள். வேலை தானாகவே நடக்கும்; உன்னைப் பந்தப்படுத்தாது. வேலை செய்யவோ துறக்கவோ முயல வேண்டாம். உன் முயற்சியே பந்தம். விதிக்கப்பட்டது நடந்தே தீரும். வேலையே விதிக்கப்பட்டிருந்தால் நீ தேடினாலும் துறவு உனக்குக் கிட்டாது. நீ அதை விட்டு அகல முடியாது. உன்னைக் கட்டாயமாக வேலை வாங்கிவிடும். ஆகையால் அதையெல்லாம் பரமேஸ்வரனிடம் விட்டுவிடு.
தவத்தில் ஈடுபடுவதும் ஒருவகை சோம்பேறித்தனமே என்று சிலர் கூறுகிறார்களே?
அல்ல; சோம்பேறிகள் தன்னை அறிவதில்லை. தன்னைத் தான் அறிந்தோன் கல்லைப்போல் உணர்வற்றுக் கிடப்பதில்லை. அப்படியானால், இந்த நிலைக்கும், ஆழ்ந்த கும்பகர்ணத் தூக்கத்திற்கும் வித்தியாசம் யாது? தவத்தில் மூழ்கிய பெரியோர், இடையறாது உழைப்பவர் ஆவர். சும்மா இருப்போர் அல்லர். எப்போதும் அவர்கள் வேலை நடந்து கொண்டுதான் இருக்கிறது.
நிராசைதான் ஞானம் என்கிறார்களே சித்தர்கள், அப்படியென்றால் என்ன பொருள்?
ஆம். நிராசையே ஞானம். அதுவேறு, இது வேறல்ல. உண்மையில் இரண்டும் ஒன்றே. `நிராசை' என்பது ஒரு பொருளிலும் மனம் செல்லாது இருப்பது. `ஞானம்' என்பது ஒரு பொருளும் தோன்றாது இருப்பது. அந்நியத்தை நாடாதிருத்தல் வைராக்கியம் அல்லது நிராசை; தன்னை விடாதிருத்தல் ஞானம்.
மனதில் எண்ணங்கள் எழாமல் செய்வது எப்படி?
மனதில் எதுவரை விஷயங்கள் இருக்கின்றனவோ அதுவரை `நான் யார்?' என்ற விசாரணையும் வேண்டும். நினைவுகள் தோன்றத் தோன்ற, அப்போதைக்கு அப்போதே அவற்றை எல்லாம் உற்பத்தி ஸ்தானத்திலேயே விசாரணை மூலமாக நசுக்கிவிட வேண்டும். ஒருவன் சொரூபத்தை அடைகின்ற வரையில் நிரந்தர சொரூப உணர்வை கைப்பற்ற வேண்டும். அது ஒன்றே போதும்.

கோட்டைக்குள்ளே எதிரிகள் உள்ள வரையில் அதிலிருந்து வெளியே வந்து கொண்டிருப்பார்கள். வரவர அவர்களையெல்லாம் வெட்டிக் கொண்டே இருந்தால், கோட்டை கைவசப்படும்.
மனதை ஒருமுகப்படுத்த வழி உண்டா?
உண்டு. ஒருவன் தான் `பாவி' என்னும் எண்ணத்தை அறவே ஒழித்து, தியானத்தில் ஊக்கம் உள்ளவனாக இருந்தால், அவன் மனம் ஒருப்படும்; உருப்படும். பிரபஞ்ச விஷயங்களிலும், பிறர் காரியங்களிலும் மனதை விடக்கூடாது. பிறர் எவ்வளவு கெட்டவர்களாக இருப்பினும், அவர்களிடம் துவேஷம் கொள்ளலாகாது. விருப்பு - வெறுப்பு இரண்டுமே வெறுக்கத்தக்கன. தான் - எழுந்தால் சகலமும் எழும். தான் -அடங்கினால் சகலமும் அடங்கும்.
மனம் என்பது உடலில் எங்குள்ளது?
தேகத்தில் `நான்' என்ற எண்ணம் தோன்றும் இடமே மனம். எல்லா நினைவுகளையும் மனம் தோற்றுவிக்கிறது. நினைவுகளை எல்லாம் நீக்கிப் பார்க்கின்றபோது தனியாக மனம் என்றொரு பொருள் இல்லை. எனவே, நினைவே மனதின் சொரூபம்.

துக்கத்தைப் போக்கி இன்புற்றிருக்க விரும்பாதவர் இல்லை. அதற்காகப் பாடுபடுபவரும் இல்லாமல் இல்லை.மனதின் போக்கு - போக்கின்மைகளைக் குறித்து ஆராய்ச்சி செய்யும் விஞ்ஞானிகளுக்கும் குறைவில்லை. ஆனால் மனதின் தன்மையை விசாரிக்க வேண்டியது பிறனிடத்து அன்று; தன்னகத்தில்! இன்ப துன்பங்கள் தன்னால்தான் உண்டாக்கப்படுகின்றது என்பதை அறிபவர் அரிது.

Comments