தீர்த்தமலை தரிசனம்'

கொடைவள்ளல் அதியமான் ஆட்சியிலும் ஒரு சமயம் விதி வசத்தால், பஞ்சம் ஏற்பட்டது.
வான்மழை பொய்த்து மக்கள் துயருற்றனர். விளைநெல்லின்றி, உணவுக்கும் தவித்தனர். ஆனால், மன்னன் அறியாமல், தண்டல்காரர்கள் வரி வசூல் செய்வதை மட்டும் நிறுத்தவில்லை. குடிமக்கள் துயரம் கூடியது.

பஞ்சத்தில் துயருற்ற மக்களைக் காக்க, மற்றுமோர் கொடைவள்ளல் தோன்றினான். அவன்தான் காரியாசான். அரசனுக்கு தான் செலுத்த வேண்டிய திரையைச் செலுத்தாமல், அந்த நெல்லை, பசிப்பிணியால் துயருற்ற மக்களுக்கு வழங்கினான். தண்டல்காரர்கள் காரியாசானை சிறைபிடித்தனர். அது கேட்டு நெஞ்சம் கொதித்து நீதிகேட்டாள் ஔவைப் பிராட்டி. தகடூர் மன்னன் அதியமான் தவறை உணர்ந்தான்.

காரிமங்கலம்

கொடைவள்ளல் பெயரை நினைவுறுத்துவதுதான் காரிமங்கலம். பாலக்கோடுக்கு கிழக்கே 15 கி.மீ. தொலைவில் அமைந்தது. அழகிய ஐந்து நிலை ராஜகோபுரம், பெரிய பிராகாரங்களும் கொண்டது.

அருணேசுவரரின் ஆறடி உயரத்திருமேனி, இப்பகுதியில் உள்ள மிகப் பெரிய சிவலிங்கத் திருமேனி ஆகும். பார்க்கப் பார்க்கப் பரவசம் மேலிடும் திவ்ய தரிசனம் அது.

அன்னை `உண்ணாமுலை' அபீத குஜாம்பிகை. பங்குனி உத்திரம், பெருவிழாக் காண்கிறது. ஆறுமுகர் சந்நதி அழகாக உள்ளது.

புலிக்கால்
பாலக்கோடுக்கு கிழக்கே 6 கி.மீ. தொலைவில் உள்ளது புலிக்கால். விசாலாட்சி சமேதராக விசுவநாதர் அருள்பாலிக்கும் திருத்தலம்.

சோமேசுவரர் அருள்பாலிப்பது, பாலக்கோடுக்கு வடக்கில் 6 கி.மீ. தொலைவில் உள்ள தண்டுகரமஹள்ளி மற்றும் எலுமிச்சம் பட்டியில்!
அரூர்
அரியூரே `அரூர்' ஆனதாகக் கூறுவர். தருமபுரிக்குக் கிழக்கே வன்னியாற்றின் கரையில் வன்னீசுவரர் அருள்பாலிக்கும் தலம்.

தென்கரைக்கோட்டை
அரூருக்குத் தென்மேற்கில் 12 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. ஒரு ஏக்கர் நிலப்பரப்பில் நஞ்சுண்டேசுவரர் கோயில் கொண்டுள்ளார்.

புட்டிரெட்டிபட்டி
அரூருக்கு மேற்கில் 18 கி.மீ. தொலைவில் தருமபுரி-பாப்பிரெட்டி சாலையில், கடத்தூரில் பிரியும் சாலையில் 6 கி.மீ. தொலைவில் உள்ளது, புட்டிரெட்டிபட்டி.

`கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்' என்பதால், ஊர் மக்கள் கூடி உருவாக்கிய ஆலயம் இது. விஜயநகர மன்னன் நரசிங்கத் தேவனின் கல்வெட்டுகள் உள்ளன. சோமேசுவரர் அருள்பாலிக்கும் தலம்.

பாப்பிரெட்டி பேருந்து நிலையம் அருகில் உள்ளது, சென்றாயப் பெருமாள் திருக்கோயில். நந்தவனம் ஒன்றில் அமைந்துள்ள அழகிய திருக்கோயில். வழிபடுவோருக்கு வரம் தரும் வள்ளலாகவும், குலதெய்வமாகவும் திகழுபவரே சென்றாயப் பெருமாள். அருகிலேயே சுயம்பு வடிவில் மாரியம்மன் அமைந்த பழமையான கோயிலும் உள்ளது. 

தீர்த்தமலை
அருணகிரிநாதரின் திருப்புகழ் பெற்ற திருத்தலம், தீர்த்தமலை.

ராமேசுவரத்திற்கு இணையான புனிதத்துவம் பெற்றுள்ள திருத்தலம் இது. ராவணனை வதம் செய்ததால் ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷம் நீங்கிட ராமபிரான் வழிபட்ட திருத்தலம்.

தீர்த்தமலை, தருமபுரி மாவட்டம் அரூரிலிருந்து கோட்டபட்டி செல்லும் நெடுஞ்சாலையில் 16 கி.மீ. தொலைவில், லிங்கம் நந்தியின் தோற்றம் கொண்டதாக அமைந்துள்ளது.

பதினொரு தீர்த்தங்கள்
பூவுலகில் உள்ள உயிர்களின்பால் கருணை கொண்டு பேரருளாளனான பரமேசுவரன், தீர்த்தமலை உச்சியைச் சுற்றி பதினொரு தீர்த்தங்களை வழங்கி அருளியுள்ளார். காணார்க்கும் கண்டவர்க்கும் களிப்பை அருளும் கயிலாயபதி, இங்கே சுயம்புமூர்த்தியாக அருள் பாலிக்கிறார்.

மலைக்கோயிலின் பின்புறம் ராமபிரான் உருவாக்கிய ராமதீர்த்தம், அக்னி பகவான் உருவாக்கிய அக்னிதீர்த்தம், அன்னை பார்வதி உருவாக்கிய கௌரி தீர்த்தம், முருகப் பெருமான் உருவாக்கிய குமார தீர்த்தம் மற்றும் குறுமுனி அகத்தியர் உருவாக்கிய அகத்திய தீர்த்தம் ஆகியவை உள்ளன. கடல் மட்டத்திலிருந்து மூவாயிரம் அடி உயரத்தில், மலை உச்சியில் உள்ள இவை, தீர்த்தமலைக்குப் பெருமை சேர்க்கின்றன.

வசிஷ்டர் தீர்த்தம், மலைக் கோயிலிலிருந்து சுமார் 2 கி.மீ. யில் மேலே உள்ளது.

மலையின் பின்புறம், வேப்பம்பட்டியிலிருந்து 6கி.மீ. தொலைவில் உள்ளது, யமதீர்த்தம். அரூர் பேருந்து நிலையம் அருகில் உள்ளவை, வருண தீர்த்தமும், வாயுதீர்த்தமும். இவை இரண்டுமே வருணீசுவரர் திருக்கோயிலின் முன்புறம் உள்ளன.

அனுமன் நிறுவிய அனுமன் தீர்த்தம், தென் பெண்ணை ஆற்றின் நடுவில், தீர்த்தமலை-ஊத்தங்கரை பாதையில் 6 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.

மலைக்குக் கீழே கிழக்கே, மொண்டுகுழி என்னுமிடத்தில் தென்பெண்ணை ஆற்றின் கரையில் அமைந்துள்ளது, இந்திர தீர்த்தம்.

வானவரும் மானவரும் போற்றும் இந்தப் பதினொரு புனித தீர்த்தங்களுமே, இறைவனின் தனிப் பெருங்கருணையினால் மக்கள் துயர் தீர்க்க உருவானவையே.

மலைச்சாரலில் வளரும் அபூர்வ மூலிகைகளின் சத்தும், இரும்புத் தாதுக்களும் கலந்து விளங்கும் இந்தப் புனித தீர்த்தங்கள் பக்தர்களின் உடற்பிணியையும், உள்ளப் பிணியையும் நீங்கச் செய்கின்றன.

ராமேஷ்டம்
தீர்த்தமலைக்கு மற்றொரு பெயர், ராமேஷ்டம். ராமேசுவரம் என்று அழைப்பது போலவே உள்ளது. தல புராணமும் அப்படியே. தீர்த்தமலையில் உள்ள தீர்த்த கிரீசுவரர் திருமேனியும், ராமபிரானால் பிரதிஷ்டை செய்யப்பட்டதேயாகும்.

இத்தல தரிசனம் சகல பாவங்களையும் நீக்கி, துயர் மற்றும் சோகங்களுக்கு நிவர்த்தியாக அமைவதால் பாவவிநாசகம், துக்கஹரம், சோகஹரம் என்ற பெயர்களும் தீர்த்தமலைக்கு உண்டு.

மலைக்கோயில்
மலையின் மேல் அமைந்துள்ள திருக்கோயிலில் தீர்த்தகிரீசுவரர் சுயம்புலிங்கத் திருமேனியாக எழுந்தருளியுள்ளார். அன்னை வடிவாம்பிகை. அருள்மொழி வடிவாம்பிகை என்றும் அழைக்கப்படுகிறாள். முருகப் பெருமான் வடக்கு நோக்கி உள்ளார்.

ஞானமூர்த்தியாக எழுந்தருளியுள்ள வேத நாயகர் சந்நதியில் சாதிமத வேறுபாடின்றி பலரும் வழி படுவதைக் காண முடிகிறது. சைவ, வைணவ பேதமின்றி `ராம தீர்த்தத்தில்' அவர்கள் நீராடுவதையும் காணலாம்.

கீழக்கோயில்
மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள கீழக்கோயில் சுமார் ஆறு ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்ததாகும். அதன் நெடிய மதில் சுவர்கள் பழமையைப் பறைசாற்றிய போதும், பராமரிப்பில்லாமல் நிற்கின்றன.

திருக்கோயிலின் உள்ளே நுழைந்ததும், `அதிகார நந்தி'யின் இடத்தில் ஆறடி உயரத் திருமேனி ஒன்றைக் காண்கிறோம். மானும் மழுவும் ஏந்திய படி, வானர முகத்துடன் உள்ள இவர் மீது பக்தர்கள் வெண்ணெய்க்காப்பு சாத்தி, ஆஞ்சநேயராகவே வழிபட்டு வருகிறார்கள்.

இந்திரனிடம், சப்த விடங்கர்களைக் கோரிப் பெற்று, தஞ்சை தரணியில் நிறுவிய `முசுகுந்த சக்ரவர்த்தியின்' திருஉருவமே அது என்று, மக்களுக்கு விளக்க வேண்டிய நிலை.

மூலவர் திருமேனி சுயம்பு மூர்த்தி ஆகும். சித்தர்கள் பலர் இவரை வழிபட்டு, அநேக சித்திகளைப் பெற்றுள்ளனர். தீர்த்தமலைக்கு `இஷ்ட சித்தி அருளும் மலை' என்ற பெயரும் உண்டு.

பவளமல்லியே தலவிருட்சமாக விளங்குகிறது.

ராமலிங்கர்
ராமபிரான் பிர திஷ்டை செய்த சிவலிங்கத் திருமேனி, ராமலிங்கர் என்ற திருப்பெயரோடு உடையவர் சந்நதிக்கும், உமையவள் சந்நதிக்கும் இடையே உள்ளது. எதிரே வடக்கு நோக்கி நின்றபடி அருள் பாலிக்கிறாள் துர்க்கை அம்மன்.

தெற்கு நோக்கியபடி மயில்மீது ஆரோகணித்து நிற்கும் ஞானபண்டிதன், அருணகிரியாருக்கு அருள் செய்தவன்.

மாசிமாதத்தில் திருக்கோயில் பெருவிழா காண்கிறது. ஆடிப்பதினெட்டு, ஆவணி மூலம், நவராத்திரி, சிவராத்திரி ஆகியவை பெருமளவில் பக்தர்கள் கூடிடும் திருவிழாக்கள்.

புராண வரலாற்றுடன், புனிதமான புண்ணிய தீர்த்தங்கள் அமைந்த `தீர்த்தமலை தரிசனம்' என்றும் நெஞ்சத்தில் நிலைத்திருக்கும்.

அனுமன் தீர்த்தம்
ஊத்தங்கரை வட்டத்தில், சேலம்-சென்னை நெடுஞ்சாலையில் அரூரிலிருந்து 16 கி.மீ. தொலைவில் உள்ள திருத்தலம் இது. அனுமனின் வியர்வை வான் முழுதும் பரவியதால் அனுமன் தீர்த்தம் என அழைக்கப்படுகிறது.

சாந்த ஸ்வரூபியாக, பவ்ய ஆஞ்சநேயராக, இருகரங்கூப்பியபடி, நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார், அனுமந்தீசுவரர். அபிஷேக ஆராதனை, வடைமாலை சாத்துதல், இத்திருத்தலத்தின் சிறப்புகள். திருமணத்தடை, பில்லி சூனியம், சித்தபிரமை நீங்கிடவும் அருளும் தலம்.

சாலமரத்துப்பட்டி
தருமபுரி-திருவண்ணாமலை சாலையில், ஊத்தங்கரையிலிருந்து 22 கி.மீ. தொலைவில் உள்ள திருத்தலம். சுயம்பு வடிவில் சென்றாய சுவாமி அருள் பாலிக்கும் தலம்.

வடக்கு நோக்கியபடி மூலவர் அருள்பாலித்திட, மேற்கு திசையில் முருகப் பெருமான் சந்நதியும், வட மேற்கு திசையில் ஆஞ்சநேயர் சந்நதியும் உள்ளன.

பக்தர்களுக்காக தங்கும் மண்டபம், குளியலறை, குடிநீர் வசதிகள் சிறப்பாகச் செய்யப்பட்டுள்ள பிரார்த்தனைத் தலம் இது.

ஊத்தங்கரை நகரில் அமைந்துள்ள மாரியம்மன் கோயிலும், பக்திப் பரவசத்தோடு பக்தர்கள் கூடிடும் ஆலயமாகும்.

Comments