வெள்ளிப் பிள்ளையார் விரதம்

வெள்ளிப் பிள்ளையார் விரதம். இந்தப் பேரைச் சொன்னதும் ஏதோ வெள்ளியிலான பிள்ளையாரை வைத்து செய்யப்படும் நோன்பு என்று நினைத்துவிடாதீர்கள்.
விநாயகனை வேண்டி வெள்ளிக்கிழமைகளில் விரதமிருந்து வணங்கிடும் வழிபாட்டு முறைக்குத்தான் வெள்ளிப் பிள்ளையார் விரதம் என்று பெயர்.

பெண்களால் மட்டுமே அனுஷ்டிக்கப்படும் இந்த நோன்பின் செவிவழிக்கதை என்ன தெரியுமா?

அரசகுமாரன் ஒருவன் பசுங்கன்று ஒன்றை  செல்லமாக வளர்த்து வந்தான். ஒரு நாள் அந்தப் பசுங்கன்று, ஒரு வீட்டு முற்றத்தில் உலர்த்தப்பட்டிருந்த நெல்லைத் தின்றது. அவ்வீட்டுக்காரி ஆத்திரப்பட்டு அடித்ததில், அந்தக் கன்று இறந்துவிட்டது.

அரசகுமாரனின் செல்லக் கன்று என்பதை உணர்ந்து அதிர்ச்சியடைந்த அப்பெண், இறந்த கன்றை அடுக்குப்பானை ஒன்றில் மறைத்துவிட்டாள்.

அரசகுமாரன், தனது செல்லமான பசுங்கன்று திரும்பி வராததால் வேதனைப்பட்டு உண்பதுமில்லை, உறங்குவதுமில்லை என மாறினான். மகனது நிலை கண்டு அதிர்ந்து போன அரசன், எல்லா திக்குகளிலும் தேடி விசாரிக்குமாறு சேவகர்களுக்கு ஆணையிட்டான்.

சிலர், ஊர்க்கோடியில் பசுங்கன்றைக் கண்டதாகவும், ஒரு வீட்டில் நெல் தின்று கொண்டிருந்ததாகவும் கூறியதையடுத்து, குறிப்பிட்ட வீட்டினுள் புகுந்து சோதனை போடத் துவங்கினர்.

அதற்கு முன்பாகவே அரசாணையைக் கேள்வியுற்றிருந்த அப்பெண்மணி, ``விநாயகப் பெருமானே! எப்படியாவது நீதான் காப்பாற்ற வேண்டும்'' என நெஞ்சுருகி வேண்டினாள்.

அரசனின் ஆட்கள் அந்த வீட்டிற்குள் புகுந்து அடுக்குப் பானைகளை சோதனையிட்ட போது, பானைகளுக்குள் தாமரைப் பூக்களைக் கண்டு திரும்பி விட்டனர்.

மறுபடியும் அப்பெண்மணி பிள்ளையார் கோயிலுக்குச் சென்று, உள்ளம் உருகி வேண்டினாள். கணபதி அவளது வேண்டுகோளுக்கு செவி சாய்த்து அருள்புரிந்தார். பசுங்கன்று உயிர்பெற்று, துள்ளிக் குதித்துக் கொண்டு, அரச குமாரனிடம் சென்று சேர்ந்தது.

பசுங்கன்று கணபதியருளால் உயிர்பெற்று எழுந்த நாள் வெள்ளிக்கிழமை விடியற்காலை ஆகும். அந்த நேரத்திலேயே கருணைபுரிந்த கணபதியைத் தொழுது விரதத்தை கடைப்பிடிக்கத் தொடங்கினாள் அப்பெண்மணி.
இவ்வாறாகத்தான் `வெள்ளி விநாயகர் விரதம்' பழக்கத்திற்கு வந்தது.

வெள்ளிக்கிழமையன்று பெண்கள் பொழுது விடியுமுன்பே துயிலெழுந்து மங்களநீராடி, நல்லாடை உடுத்தி, ஈனாக்கன்றின் சாணத்தால் பிள்ளையார் பிடித்து வைத்து, தாழைமடல், நெற்கதிர் ஆகியவற்றைப் பரப்பி,சாணப்பிள்ளை யாரை நடுவே அமர்த்தி செவ்வலரி, செவ்வரத்தை, அறுகு முதலியவற்றால் பூசனை செய்து முடிப்பர். 

அன்று, ஒருவேளை மட்டுமே உணவு உட்கொள்வர். நாள் முழுதும் ஆனைமுகனையே அகத்தால் தியானிப்பர்.

வெள்ளியன்று ஆபத்தை நீக்கி அருள்பாலித்த பிள்ளையாருக்குச் செய்யும் வெள்ளிக்கிழமை விரதம் பெண்களால் இன்றளவும் நடத்தப்பட்டு வருகின்றது.

இந்த நோன்பை தூய மனதுடன் முறையாக நடத்தும் பெண்களுக்கு ஆபத்துகளும் தடைகளும் நீங்கி, செல்வம் பெருகும்; ஆரோக்யம் சிறக்கும் என்று அனுபவம் பெற்றவர்கள் இன்றளவும் சொல்லி வருவதே இவ்விரதத்தின் மகிமையை உணர்த்தும்.

Comments

  1. பகுதி / முழு நேரமாக பதிவுகள் எழுதி தர ஆட்கள் தேவை

    95 66 66 12 14
    95 66 66 12 15
    cpedenews@gmail.com

    ReplyDelete

Post a Comment