பெரியபுராண திருக்கோவில்

ல்லா மதங்களும், இறைவனை விட, இறைவனின் அடியவர்களையே போற்றுகின்றன. வணங்குகின்றன. ஆண்டவனை அடைய வேண்டும் எனில், அடியவர்களைப் போற்றிக் கொண்டாட வேண்டும் என்பதையே மதங்களும் வலியுறுத்துகின்றன.

சைவ வழிபாட்டு முறைகளிலும் சிவனடியார்க¬ளை வணங்கித் தொழுதார்கள். அவர்களில் உன்னதமான அடியவர்களை நாயன்மார்கள் என்று புகழ்கிறோம். அவர்கள் கடவுள் குறித்துப் பாடியதை, பதிகங்களாக இயற்றியதைப் பாடி, பரவசத்துடன் இறைவனை வணங்குகிறோம்.
நாயன்மார்கள் அறுபத்து மூவரும் ஒவ்வொரு விதமாக தங்களது பக்தியை வெளிப்படுத்தினார்கள். அடடா... என்று வியக்கும் விதமாக சதாசர்வ காலமும் சதாசிவத்தையே நினைந்து உருகினார்கள். சிவபெருமானின் திருவடியை அடைந்தார்கள்.
அறுபத்து மூவரின் சரிதங்களைக் கேட்ட மன்னன் ஒருவன், வியந்து போனான். 'இப்படியரு பிடிப்பா சிவனின் மீது' என்று அரண்டு போனான். நாயன்மார்களின் வாழ்வும் வாக்கும் அந்த மன்னனை ஏதோ செய்தது. இவர்களின் சரிதங்கள், நம் காலம் கடந்தும் நிற்க வேண்டுமே என்கிற கவலையும் ஆவலும் அவனைத் தூங்க விடாது செய்தன.
பெரியபுராணத்தில் உள்ள நாயன்மார்களின் வரலாற்றை, வரிக்கு வரி சிற்பங்களாக வடித்து விட்டால் நூறாண்டுகள் கடந்தும் நிற்கும் என எண்ணினான் மன்னன். அங்கே ஸ்வாமிக்கு மிகப்பெரிய கோயிலை எழுப்பினான். ஆனால், கோயிலின் உள்ளே, பிராகாரப் பகுதி முழுவதிலும் நாயன்மார்களின் வாழ்க்கையை, கல்லுக்குள் சிற்பமாக, சிற்பத்துக்குள் பக்தியாக வடித்து வைத்தான். அந்தத் திருவிடம்.... தாராசுரம்.
''கும்பகோணம் அருகில் உள்ள தாராசுரம் ஸ்ரீஐராவதீஸ்வரர் கோயில், தனித்துவம்மிக்கது. நாயன்மார்களைப் போற்றுவதற்காகவே, பெரியபுராணத்தைச் சொல்வதற்காகவே எழுப்பப்பட்ட பிரமாண்டமான ஆலயம். பரந்து விரிந்த சோழ தேசத்தின் மிக முக்கியமான கோயில்களில், தாராசுரம் ஸ்ரீஐராவதீஸ்வரர் கோயிலுக்கு தனி இடம் உண்டு'' என்று சொல்லிச் சிலாகிக்கிறார் எழுத்தாளர் பாலகுமாரன்.
தாராசுரம் போகவேண்டும் என நினைத்துவிட்டால், சட்டென்று அங்கே சென்று விடுவார் பாலகுமாரன். காலையில் கோயிலுக்குள், தயிர்சாத டிபன் பாக்ஸுடன் நுழைந்து விட்டால், ஒவ்வொரு சிற்பமாகத் தொட்டுப் பார்த்துக் கொண்டே, தடவியபடியே மாலை வரைக்கும் அங்கேயே இருப்பது அவருடைய வழக்கம்.
''தாராசுரம் ஊருக்குள்ளேயே இருக்கிறது ஸ்ரீஐராவதீஸ்வரர் கோயில். தள்ளி நின்று பார்த்தாலே, அந்தக் கோயிலும் மதிலும் மதிலைச் சுற்றியுள்ள புல்தரையும் நம்மை இழுக்கும். ஈர்க்கும். உள்ளே சென்று ஒவ்வொரு கல்லாக, சிற்பமாகத் தடவிப் பார்க்க... சிலிர்த்திருக்கிறேன். தொல்லியல் துறையின் மிகக் கவனமான பராமரிப்பில் இருக்கிறது, இந்தக் கோயில். சிதிலம் அடைந்த கோயிலை சீர்செய்து பார்க்கக் கொடுத்திருக்கிறார்கள்'' என்கிறார் பாலகுமாரன்.
முதலில், பெரியவர்கள்... பெரியபுராணத்தைப் படிக்க வேண்டும். அவர்கள் படித்து உள்வாங்கிக் கொண்டால்தான், குழந்தைகளுக்கு விவரமாக பெரியபுராணத்தைப் புகட்ட முடியும்.
வாயில் வைத்திருந்த தண்ணீரை சிவலிங்கத்தின் மீது துப்பி, அபிஷேகம் செய்து, தலையில் வைத்த பூவை எடுத்து, லிங்கத்துக்கு வைத்து, கறியை நைவேத்தியம் செய்த திண்ணன் எனும் வேடன்... மிக நவீன செருப்புகளை அணிந்த கண்ணப்ப நாயனாரின் சிற்பத்தை இங்கே பார்க்கலாம். 'நில்லு கண்ணப்ப...’ என்று சிவனார் அழைத்து அருள்பாலித்ததைச் சிற்பமாகப் பார்த்து வியக்கலாம்.
இதுதான் கலிக்காம நாயனாரின் கதை, அது திருநீலகண்டர், இதோ... பிள்ளைக் கறி சமைத்துக் கொடுத்த சிறுத்தொண்டர்... என்று பெரியபுராணத்தின் வரிகளை, சிற்பம் சிற்பமாகச் செதுக்கியிருக்கிற நுட்பத்தைக் கண்டு ரசிக்கலாம்.
கோடை விடுமுறை, இதோ... வந்துவிட்டது. குழந்தைகளையும் குடும்பத்தையும் அழைத்துக் கொண்டு, ஊட்டி, கொடைக்கானல் என்று மலைவாச ஸ்தலங்களுக்குச் செல்வது இருக்கட்டும். சோழ தேசத்தின் ஆலயங்களுக்குச் சென்று, கோயில் கோயிலாகத் தரிசனம் செய்யுங்கள். தூணிலும் மண்டபங்களிலும் சுவர்களிலும் உள்ள சிற்பங்களைப் பாருங்கள்.
குறிப்பாக, குழந்தைகளை அழைத்துக் கொண்டு, தாராசுரத்துக்கு வாருங்கள். இதுதான் இந்த நாயன்மாரா... அதுதான் அந்தக் கதையை விவரிக்கிறதா என்று சிற்பத்தைக் காட்டியபடியே, குழந்தைகளுக்கு பெரியபுராணத்தைச் சொல்லிக் கொடுங்கள்.
தஞ்சாவூரில் ராஜராஜப்பெருவுடையார் எழுப்பிய ஆலயத்தை, பெரியகோயில் என்போம். இங்கே... தாராசுரத்தில், மூன்றாம் குலோத்துங்க சோழ மன்னன் உருவாக்கி வைத்த ஆலயத்தை, பெரியபுராணக் கோயில் என்றும் சொல்லலாம்.
''பெரியபுராணச் சிற்பங்கள் தாண்டி, விதம்விதமான சிற்பங்கள் வியப்பதற்கு உண்டு. ஒருமுறை பார்க்கப் போனவர்கள், பலமுறை போவார்கள்'' என்று உறுதிபடத் தெரிவிக்கிறார் பாலகுமாரன்.போய்ப் பாருங்கள். நீங்களும் அவ்விதமே உணர்வீர்கள்.

Comments