கூட்டு பிரார்த்தனையால் கொட்டும் மழை

சுமையும் குளுமையும் இணைந்து தென்றலாக வீசி இதமாக வருடிச் செல்லும் விதமாக ஆல், அரசு, வேம்பு புடைசூழ்ந்து நிற்க ஈஸ்வரனும் ஈஸ்வரியும் ஏகாந்தமாக வீற்றிருக்கும் திருத்தலம் பதுவஞ்சேரி.
பெயரைக் கேட்டதும் இது ஏதோ குக்கிராமம் போலும் என்று நினைத்துவிடாதீர்கள். பரபரப்பான சென்னை மாடம்பாக்கத்தினருகே உள்ள கிராமம்தான் இது.

இறைவன் கைலாசநாதரும் இறைவி திரிபுரசுந்தரியும் இங்கே கோயில் கொண்ட வரலாற்றைப் பார்ப்போம்.

கைலாசநாதர் என்ற பெயரைக் கேட்டாலே சட்டென்று நினைவுக்கு வருபவர்கள் பல்லவர்கள்தான். ஏனென்றால், பெரும்பாலும் அவர்கள் கட்டி வைத்த கோயிலுக்கு கைலாசபதியின் பெயரையே சூட்டி மகிழ்ந்தனர். அப்படித்தான் இந்தக் கோயிலும் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பாக பல்லவ மன்னனால்  எழுப்பப்பட்டுள்ளது. தொல்பொருள் ஆராய்ச்சியின் குறிப்புப்படி இத்தலம் சுமார் ஆயிரம் வருடங்களுக்கு முன்பு புஞ்சேரி அக்ரஹாரம் என்று வழங்கப்பட்டதாகவும் அதுவே பதுவஞ்சேரியாகி இருக்க வேண்டும் என்றும் சொல்கின்றனர். 

காலவெள்ளத்தால் முறையான பராமரிப்பின்றி மண்மூடிப் போனது இக்கோயில்.ஈஸ்வரன் மீண்டும் தன்னை வெளிக்காட்டும் தருணத்துக்காக காத்துக்கிடந்தான்.

இதே பதுவஞ்சேரியில் பிறந்து, வளர்ந்த சிவபக்தர் ஒருவரது கனவில், ஒரு துறவி தோன்றி, ``இப்பகுதியில் ஒரு மணல்மேட்டில் ஈஸ்வரன் லிங்கத் திருமேனியாக புதைந்து கிடக்கிறார். அவரை வெளிக்கொணர்ந்து பூஜித்து வருவாயாக. நலமே உண்டாகும்!'' என்று கூறி மறைந்தார். இந்தக் கனவை அவர் தனது கிராம மக்களுடன் பகிர்ந்து கொள்ள அவர்களும் மிகுந்த சந்தோஷமடைந்து ஈசன் இருக்குமிடத்தைத் தேடி அலைந்து முடிவில் தற்போது கோயில் உள்ள இடத்தில் வேப்ப மரத்தின் கீழிருந்த மணல்மேட்டைத் தோண்ட ஆரம்பிக்க, அங்கு லிங்கத் திருமேனியராக ஐந்தெழுத்துப் பெருமான் தம்மை வெளிப்படுத்திக் கொண்டார்.

சரியாக அதே சமயத்தில் புழுதி படிந்து கிடந்த லிங்கத் திருமேனியை புனித நீராட்டுவது போல் கனமழை பொழிந்திட, பக்தர்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கினர்.

வேப்ப மரத்தின் வேர்கள் ஆவுடையாரைச் சற்று பிளந்து உட்புகுந்து பின்னமாக்கியிருந்ததால், லிங்கத் திருமேனியார் புதிய ஆவுடையார் செய்விக்கப்பட்டு கருவறையில் பிரதிஷ்டை செய்யப்பட்டார். மேலும் ஒரு லிங்கமும் மணல்திட்டிலிருந்து கிடைக்கப்பெற்று சுற்றுப் பிராகாரத்தில் தனிச்சன்னதியாக பிரதிஷ்டை செய்யப்பட்டது.
மேற்கு பார்த்த நுழைவுவாயில். கருவறையில் கைலாசநாதர் கிழக்கு நோக்கி காட்சி கொடுக்கிறார்.ஆரம்பத்தில் அம்பிகையில்லையாதலால், ஈஸ்வரன் முன் ஸ்ரீ சக்ரம் அமைத்து அம்பாளாக வணங்கப்பட்டு வந்தது. பிறகு  இறைவனுக்கு இடதுபுறத்தில் அமைக்கப்பட்ட சன்னதியில் திரிபுரசுந்தரி என்ற திருநாமம் தாங்கி அம்பிகை இடம் பிடித்தாள்.

கோஷ்டத்தில் தட்சிணா மூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மா, துர்க்கை சன்னதிகள் அமைந்துள்ளன. சண்டிகேசுவரரும் உள்ளார். பைரவர், சூரிய பகவான் சன்னதிகளும் நவகிரகங்களின் சன்னதியும் இருக்கின்றன. ஆஞ்சநேயர், நவகிரக சன்னதிக்கு முன்பாக வீற்றிருந்து, வரும் பக்தர்களின் நவகிரக தோஷங்களைப் போக்கியருள்கிறார்.

ஆலயம் கண்டுபிடிக்கப்பட்டு புனருத்ராணம் செய்யப்பட்ட மாதமாக கூறப்படும் மார்ச் மாதத்தில் ருத்ரஜபம் செய்யப்படுகிறது. மற்றபடி சிவனுக்குரிய அனைத்து விசேஷ தினங்களும் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன.

இத்தலத்தின் நாயகியான திரிபுரசுந்தரியை வணங்கி பெண்கள் மாங்கல்ய பாக்யமும் மணப்பேறும் பெறுவதாகச் சொல்கின்றனர்.

இத்தலத்து இறைவன் தான் வெளிப்பட்டபோதே கனமழை கொட்டச் செய்தவர் என்பதால்,இவரை நம்பிக்கையோடு வழிபட்டு கூட்டுப்-பிரார்த்தனை செய்தால், மழை கொட்டோ  கொட்டென்று கொட்டித் தீர்த்துவிடும் என்பது நிதர்சனமான உண்மை.

தன் அருளால், வணங்கிடும் பக்தர்களின் மனம் குளிர்விப்பதோடு அவர்கள் வாழும் மண்ணும் குளிர மழை தந்தருளும் மகேசனை தரிசிக்க நீங்கள் செல்லப்போவது எப்போது?

தாம்பரம் பேருந்து நிலையத்திலிருந்து 51A,51D பேருந்துகளில் பயணித்து பதுவஞ்சேரியில் இறங்கினால் அருகிலேயே உள்ளது ஆலயம். மாடம்பாக்கம் வந்து அங்கிருந்து ஆட்டோவிலும் செல்லலாம்.

Comments