செந்தமிழ் நாட்டில் ஸ்ரீராமன்

ராமாயணம் தொடர்பான வரலாற்று நிகழ்வுகள் மிகப்பல, சங்க இலக்கியங்களில் சொல்லப்பட்டிருக்கின்றன.
அவதார புருஷனாக விளங்கிய ராமபிரானுக்கு தனிக்கோயில்கள் அமைத்து மூலவராக ராமரை வைத்த வழிபடும் பழக்கம் தஞ்சை நாயக்க மன்னர் காலத்தில் பிரபலமான பழக்கமாகும். ஆழ்வார்களால் மங்களா சாசனம் செய்விக்கப்பட்ட தலங்களுள் ஏழு தலங்களை சப்தராம ÷க்ஷத்திரங்கள் என்று சொல்வார்கள்.

தஞ்சையை சோழர் காலத்துக்குப் பின்னால் அரசு புரிந்த பரம்பரை ஒன்று உண்டு. அதை தஞ்சை நாயக்கர் பரம்பரை என்பார்கள். தஞ்சையை ஆண்ட நாயக்க அரசர்களில் செவ்வப்ப நாயக்கர், அச்சுதப்ப நாயக்கர், ரகுநாத நாயக்கர் என்ற மூன்று மன்னர்கள் சிறப்பிடம் பெறுபவர்கள். இம்மூன்று மன்னர்களுக்கும் அமைச்சராக இருந்தவர் ஒரு பெரியவர். அவருக்கு கோவிந்த தீட்சிதர் என்று பெயர்.
அவரே தென்னாட்டில் ராமர் கோயில்கள் தனியாக அமைய பெரிதும் வழி செய்தவர்.

கோவிந்த தீட்சிதர் காலத்துக்கு சற்று முன்னாக காஞ்சி காமகோடி பீடத்தின் 59-வது ஆச்சாரியராக இருந்தார் போதேந்திர சரஸ்வதி சுவாமிகள். இவர் நாம ஜபத்துக்கு பெரிதும் முக்கியத்துவம் கொடுத்தார். கலியுகத்தில் பகவான் நாமாவை உச்சரிப்பவன் மூலம், அதாவது தெய்வத் திருப்பெயரை உள்ளன்புடன் ஓதுவதன்மூலம் எளிதில் மோச்சமடையலாம் என்பது இவர் பரப்பிய கொள்கை. எனவே, இவரை பகவான் நாமபோதேந்திரர் என்று மக்கள் போற்றி அழைக்களானார்கள். இவர் காலத்தில் நாமசித்தாந்தமும், பஜனை மார்க்கம் பெரும்புகழ் பெற்றமையால் இந்த நாளில் பஜனைகள் செய்யும் பாகவதர்கள் அதன் ஆரம்பத்தில் நாமபோதரை துதித்துவிட்டுத்தான் தொடங்குவார்கள்.
நாமசித்தாந்தம் பெரும் புயலாக புறப்பட்ட அந்த நேரத்தில் ராமநாமாவின் பெருமையை விளக்கும் ராமநாம ரசோதயம், ராம நாம சொயனம் முதலிய வடமொழி நூல்கள் உருவாயின. ராமநாமத்தின் பெருமையைப் பரப்பின.
ராமநாமத்தை பலநூறு கோடிகள் உச்சரித்து ராமரை நேரில் தரிசிக்கும் பாக்கியம் பெற்றவர் தியாகராஜர். தஞ்சையிலும், திருவையாறிலும் வாழ்ந்த இந்த மகான் பாடிய கீர்த்தனைகள் ஏராளம். இவை ராமநாமத்தின் மேன்மையை பறைசாற்றக்கூடியது. சங்கீதமும் மூர்த்திகளின் அருட்பணி ஒருபுறம் ராமர் வழிபாட்டைப் பரவலாக்க அதற்கு முன்னாலேயே, சீர்காழி அருணசசல கவிராயர் என்பவர் ராம நாடக கீர்த்தனைகளை இயற்றி ராமர் வழிபாட்டைப் பரவலாக்கினார். இவரை தமிழில் கீர்த்தனைகள் இயக்கிய தமிழிசை மும்மூர்த்திகளில் ஒருவராகச் சொல்வர். இவர் தியாகய்யருக்கு முற்பட்டவர். விஜய நகர அரசர்கள் காலத்திலும், நாயக்கர் மன்னர்கள் காலத்திலும் ஏராளமான கோயில்களில் ராமர் வழிபாடு பிரசித்தம் பெற்றது.
மங்களாசாசனம் செய்யப்பட்ட ஏழு ராமர் திருப்பதிகளோடு, வடுவூர், தில்லைவளாகம் போன்ற தலங்களிலும் ராமர் கோயில்கள் பிரசித்தம் அடைந்தன.



தஞ்சையை ஆண்ட நாயக்க மன்னர்கள் கால கலைப் பணிக்கு எடுத்துக்காட்டாக கும்பகோணத்தில் ராமசாமி கோயில் உருவாயிற்று. அந்தக் கோயிலில் கர்ப்பக்கிரகத்தில் பட்டாபிஷேக கோலத்தில் ராமபிரான் எழுந்தருளி அருள்பாலிப்பதும், அனுமன் வீணாகான அனுமனாக சித்திரிக்கப்பட்டிருப்பதும் வால்மீகி ராமாயணத்தை அடிப்படையாகக் கொண்டு மூன்று வரிசைகளில் ராமாயணம் முழுமையும் ஓவியங்களாக எழுதப்பட்டிருப்பதும் நாம் கண்டு இன்புற வேண்டிய ஒன்றாகும்.

Comments