செப்பறை நெல்லையப்பர் கோவில் ஆனித்திருவிழா

சிதம்பரம் நடராஜர் சிலை எப்படி இருக்கிறதோ, அதற்கு சற்றும் மாறாமல், நான்கு சிலைகள், அக்காலத்தில் வடிவமைக்கப்பட்டன. அந்த சிலைகளை காண வேண்டுமானால், திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள செப்பறை, கரிசூழ்ந்தமங்கலம், கருவேலங்குளம், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கட்டாரிமங்கலம் கோவில்களுக்கு செல்ல வேண்டும். இவற்றில் செப்பறை நெல்லையப்பர் கோவில் ஆனித்திருவிழா, ஜூன் 17ல், துவங்கி, 26 வரை நடக்கிறது.
ராமபாண்டிய மன்னனின் எல்லைக்குட்பட்ட சிற்றரசன் வீரபாண்டியன். அவன் செப்பறை நெல்லையப்பர் கோவிலுக்கு தரிசனம் செய்ய வந்தான். அங்கிருந்த நடராஜர் சிலையின் அழகு அவனை கவர்ந்தது. அதேபோல, தனக்கும் இரண்டு சிலைகள் வேண்டும் என, ஒரு ஸ்தபதியிடம் கூறினான். சிலை செய்யும் பணி துவங்கியது. இதில் ஒன்றை, தன் எல்லைக்குட்பட்ட கட்டாரிமங்கலம் சிவன் கோவிலிலும், மற்றொன்றை, கரிசூழ்ந்தமங்கலம் சிவன் கோவிலிலும் வைக்க எண்ணினான். பணி முடிந்தது. சிலைகளின் அழகைக் கண்டு, மன்னன் ஆனந்தம் கொண்டான். தன் விருப்பப்படியே அந்தந்த கோவில்களில் பிரதிஷ்டையும் செய்தான்.
இதே போல, அழகான சிலைகள், வேறு யாருக்கும் கிடைக்கக் கூடாது என்ற எண்ணத்தில், ஸ்தபதியை கொன்றுவிடும்படி, காவலாளிகளுக்கு கட்டளையிட்டான். வீரர்கள் ஸ்தபதியின் மீது இரக்கம் வைத்து, அவரது கையை மட்டும் வெட்டி விட்டனர். இதை கேள்விப்பட்ட ராமபாண்டியன், வீரபாண்டியன் மீது கோபம் கொண்டான். ஸ்தபதியின் கையை வெட்டிய வீரபாண்டியனின் கைகளைத் துண்டித்தான்.
கைகளை இழந்தாலும், கலையார்வம் மிக்க ஸ்தபதி, மரக்கைகளைப் பொருத்தி, அவற்றின் உதவியுடன், முன்னை விட அழகாக மற்றொரு சிலை செய்தார். அந்தச் சிலையின் அழகைப் பார்த்து, அதன் கன்னத்தில் கிள்ளினார். அவ்வாறு கிள்ளிய வடுவுடன் கூடிய சிலை, கருவேலங்குளம் சிவன் கோவிலில் வைக்கப்பட்டது.
செப்பறையில் மூலவர் நெல்லையப்பர், அம்பாள் காந்திமதி. ஆனாலும், நடராஜருக்கே இங்கு முக்கியத்துவம். இந்த நடராஜர் சிலை செய்யப்பட்ட வரலாறு சுவையானது.
உத்தரதேசத்தின் மன்னன் சிங்கவர்மன் கொடுங்கோல் ஆட்சி செய்தான். பிற்காலத்தில் மனம் திருந்தி, பதவியை உதறிவிட்டு காட்டிற்குச் சென்றான். அங்கு, வியாக்ரபாதர் என்ற புலிக்கால் முனிவரும், பதஞ்சலி முனிவரும் தவம் புரிந்தனர். அவர்களுக்கு, சிவன் நடனக் காட்சி அருளினார். அந்தக் காட்சியை, சிங்கவர்மனும் கண்டான். முனிவர்களின் அறிவுரைப்படி சிதம்பரத்தில் கோவில் எழுப்பினான். நடராஜர் சிலை செய்யும்படி சிற்பிகளை பணித்தான். அவர்கள், தாமிரத்தால் ஒரு சிலை செய்தனர். அதைப்பார்த்த அரசன், "தாமிர சிலையே இவ்வளவு அழகாக இருக்கிறது என்றால், தங்கத்தால் செய்தால் எப்படி இருக்கும்...' என எண்ணி, நமச்சிவாய முத்து ஸ்தபதியிடம் ஏராளமான தங்கம் கொடுத்தான். ஆனால், அந்தச்சிலை தாமிரமாக (செம்பு) மாறி விட்டது. மன்னனுக்கு தகவல் சென்றது. அவன் சிற்பி மீது சந்தேகப்பட்டு, சிறையில் அடைத்தான்.
அன்றிரவு, மன்னனின் கனவில் தோன்றிய சிவன், தங்கமாக இருக்க விரும்பவில்லை என்றும், தாமிரமாக மாறியதாகவும் கூறினார். சிற்பி விடுதலை செய்யப்பட்டார். ஆக, இரண்டாவதாக செய்யப்பட்ட சிலையை, சிதம்பரம் கோவிலில் அமைத்தனர். முதலில் செய்யப்பட்ட சிலையை, சிவனின் உத்தரவுப்படி, தென்திசைக்கு நமச்சிவாய ஸ்தபதி தூக்கி வந்தார். எந்த இடத்தில் கனக்கிறதோ, அங்கே வைத்துவிட வேண்டும் என சிவன் சொல்லியிருந்தார்.
தாமிரபரணி கரையில், செப்பறை என்ற இடத்திற்கு வரும்போது சிலை கனத்தது. அந்த இடத்திலேயே சிலையை வைத்து விட்டார். அவ்விடத்தில் ஒரு கோவில் கட்டினான் ராமபாண்டியன். திருநெல்வேலிக்கு சற்று முன் தாழையூத்து என்ற ஊரில் இருந்து ராஜவல்லிபுரம் செல்லும் ரோட்டில் சென்றால், செப்பறையை அடையலாம். 
புறப்படுவோமா ஆனித்திருவிழா காண!
***

Comments

Post a Comment