நல்லோருக்கு நலன்கள் நல்கும் நார்தம்பூண்டி பெருமான்

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள திருத்தலம் நார்த்தாம்பூண்டி. தான் பெற்ற சாபம் நீங்குவதற்காக கயிலையம்பதியை வழிபட்டு நாரத மகரிஷி சாபவிமோசனம் பெற்ற  தலம் இது!
தட்சனுக்கு மூன்று மகன்கள். அம்மூவரையும் சந்தித்து, சிவபெருமானின் தெய்வீகப் பெருமைகளையும், அவரது மாபெரும் சக்தியையும் விளக்கினார் நாரத மகரிஷி. அ ன்றிலிருந்து அம்மூவரும் சிவனடியார்களாக மாறினர். ஸ்ரீ கைலாசநாதப் பெருமானின் மீது துவேஷம் கொண்டிருந்த தட்சன் இதனால் நாரத மகரிஷி மீது கடும் சினம்  கொண்டான். எனவே நாரத முனிவருக்குச் சாபம் கொடுத்து, தன் கோபத்தைத் தணித்துக்கொண்டான்.

தட்சனின் சாபத்தால் உடல் மெலிந்தார் நாரதர். உடல் சோர்வுற்று தளர்ந்தார். ஆனால் உள்ளத்தில் மட்டும் சிவபக்தியுடன் உறுதியாக இருந்தார். தான் இருந்த இடத்திற்கு  அருகேயிருந்த நதிக்கரைக்கு மெதுவாக நகர்ந்து வந்தார். அங்கிருந்த இலந்தை மரத்தடியில் அமர்ந்து சிவபெருமானைக் குறித்து கடும்தவமியற்றினார். நாரதரின் தவத்தில்  மகிழ்ந்த சிவபெருமான், ரிஷப வாகனத்தில் ஸ்ரீபெரியநாயகி அம்பாள் சமேதராக ஸ்ரீகைலாசநாதராகத் திருக்காட்சி தந்து அருளினார். அன்றிலிருந்து இந்த ஊர் நாரதர்பூண்டி என்று பெயர் பெற்று விளங்கியது.  தற்போது நார்த்தாம்பூண்டி என மருவியுள்ளது.

நார்த்தாம்பூண்டி திருத்தலம் சப்த கயிலாயத் திருத்தலங்களுள் ஒன்றாகப் போற்றப்படுகிறது. நீண்ட நாட்களாகத் திருப்பணிகள் ஏதுமின்றி, வழிபாட்டுத் திருக்கோலாகலங்கள்  ஏதுமின்றி இருந்தது இத்திருத்தலம். சோழ மன்னன் எழுப்பிய இந்த ஆலயம், பிற்காலத்தில் விஜயநகர மன்னர்களால் திருப்பணிகள் செய்யப்பட்ட பெருமையைப் பெற்றது.  தற்போது, சிவசாய் சாரிடபிள் டிரஸ்ட் அமைப்பினர் மற்றும் உள்ளூர் ஆன்மிக அன்பர்களின் பெருமுயற்சியினால் திருப்பணிகள் செய்யப்பட்டு, மகா கும்பாபிஷேகம்  காண உள்ளது இந்த நார்த்தாம்பூண்டி திருத்தலம்.

தெற்கு நோக்கிய இவ்வாலயத்தின் உள்ளே நுழைந்ததும்
ஸ்ரீதட்சிணாமூர்த்தியின் தரிசனம் கிடைப்பது காணற்கரியது. இப்பெருமானுக்கு வஸ்திரம் சார்த்தி வேண்டினால், குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்குவர். ஸ்ரீ முருகப்  பெருமான் அம்மையப்பனை வழிபட்ட தலம் இது. இத்தலத்தின் விருட்சம் இலந்தை மரம்.

மகா கும்பாபிஷேகம்!
சிதிலமடைந்து கிடந்த இந்தப் பொக்கிஷம், தற்போது சிவசாய் சாரிடபிள் டிரஸ்ட் அமைப்பினர் மற்றும் இந்தக் கிராம ஆன்மிக அன்பர்களின் பெறற்கரிய திருப்பணிகளால்  மீண்டும் தனது பொலிவைப் பெற்றுத் திகழ்கிறது. நார்த்தாம்பூண்டி அருள்மிகு ஸ்ரீபெரியநாயகி அம்பாள் உடனுறை ஸ்ரீ கைலாசநாதப் பெருமானின் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்,மிகவும் சிறப்பாகவும்,  பக்தியுடனும் நடைபெற உள்ளது. ஆன்மிக அன்பர்கள் அனைவரும் இவ்வைபவத்தில் கலந்துகொண்டு பெரும்பேறு பெற்றுய்யுமாறு வேண்டுகிறோம். மகா கும்பாபிஷேகத் திற்காகப் பொருளுதவியோ, பண உதவியோ செய்து இப்புண்ணிய கைங்கர்யத்தில் கலந்துகொள்ள விரும்பும் அன்பர்கள் கீழ்க்கண்ட முகவரியில் தொடர்புகொள்ளும்படி  வேண்டுகிறோம்.

SIVA SAI CHARITABLE TRUST
‘Sri Ranga’
64, Ayyavo Nagar,
Maduravayal, Chennai600 095.
Phone : 9444571980.

குறிப்பு : திருவண்ணாமலை - வேலூர் சாலையில் சுமார் 18 கி.மீ. தொலைவில் உள்ளது நாயுடுமங்கலம் கூட்ரோடு. அங்கிருந்து 5 கி.மீ. தூரத்தில் உள்ளது  நார்த்தாம்பூண்டி திரு த்தலம். நாயுடுமங்கலத்திலிருந்து ஆட்டோ வசதிகள் உண்டு.

Comments