பாரதத்தின் ஆன்மீக சக்தி அன்னை பசு

தேவர்களின் குரு பிரகஸ்பதி. சப்த ரிஷிகளில் ஒருவரான ஆங்கிரஸர் என்ற மகரிஷியின் புத்திரர்தான் குரு. வேதங்கள், உபநிஷத்துகள் என சகல சாஸ்திரங்களையும் கற்றுத் தேர்ந்து, மிகக் கடினமான தவங்களைச் செய்து ஞானபலம், தபோ பலம், தெய்வ பலம் என அனைத்துச் சக்திகளையும் பெற்று, சூரியனுக்கு ஒப்பான தேஜஸ்ஸை (ஒளி) பெற்று, நவக்கிரகங்களில் எவ்வித தோஷமும் இல்லாமல், பிற கிரகங்களினால் ஏற்படும் மிகக்கொடிய தோஷங்களையும் போக்கும் அளவற்ற சக்தி பொருந்தியவர் குரு.
வியாழக்கிழமையைத் தனது சக்தி தினமாகக் கொண்ட குருபகவான், மனிதப் பிறவிக்கு அத்தியாவசியமான மக்கட்பேறு, மனநிம்மதி, தெய்வ பக்தி, நேர்மை, ஒழுக்கம், நற்குணங்கள் ஆகியவற்றை அளித்து, பாவங்களில் சிந்தனை செல்லாது காத்தருளும் பரம கருணையுள்ளவர்!

இத்தகைய மகத்தான தெய்வீகப் பெருமை பெற்ற குருபகவானை ஒரு சமயம் பிரம்மதேவரின் மானஸ புத்திரரான நாரத மகரிஷி சந்திக்க நேர்ந்தது. அப்போது நாரத மகரிஷி, யுகங்கள் நான்கிலும் மக்களுக்கு அதிக அளவு துன்பத்தைத் தரும் கலியுகத்தில் தர்மம், நீதி, சத்தியம் ஆகியவற்றை எங்கு காணலாம் என்று கேட்டார்.

நாரதர் கேட்ட கேள்விக்கு குருபகவான் தனது திவ்ய ஞான திருஷ்டியினால் கலியின் தன்மையைக் கண்டறிந்து, நாரத மகரிஷியைப் பார்த்து, ‘‘மகரிஷியே! கலியுகத்தில் தர்மம் பசுவின் உருவில் மக்களிடையே இருக்கும்’’ என்பதைக் கூறி, எவ்விடத்தில் பசு இருக்கிறதோ அவ்விடத்தில் தர்மம், பக்தி, நீதி, சத்தியம், ஒழுக்கம், வெற்றி ஆகியவை நிலைபெற்றிருக்கும். ஆதலால், பசுவைப் பூஜிக்கும் இடங்களில் இறைவனும் இருப்பான் என்ற ரகசியத்தையும் கூறியருளினார்.

மன்னன் திலீபன்
சூரிய வம்சத்தின் பிரசித்திபெற்ற மன்னனும்,அயோத்தியைத் தலைநகராகக் கொண்டு பாரத புண்ணியபூமியைத் தர்மத்தின் நெறி தவறாமல் ஆண்டு வந்தவன் சக்கரவர்த்தி திலீபன்.அவனது வம்சத்தில் தான் பகவான் ஸ்ரீமந் நாராயணன், ஸ்ரீ ராமபிரானாக அவதரித்தார். மன்னன் திலீபனின் பிள்ளை ரகு. ரகுவின் மகன் அஜன். அஜனின் புத்திரன் தசரதர். தசரதனுக்குப் பிள்ளையாகத்தான் ஸ்ரீராமபிரான் அவதரித்தார்.

ஒரு சமயம், அளவற்ற வலிமை பொருந்திய மன்னன் திலீபன், தெய்வப் பசுவான காமதேனுவின் பெண்ணான நந்தினியை மகரிஷி வசிஷ்டரின் ஆணையை ஏற்றுப் பாதுகாத்து வந்தான்.திலீபனின் தேவியான சுதட்சணை நந்தினி பசுவைத் தினமும் பூஜித்து வந்தாள்.அவர்கள் அறியாமல் ஒரு சமயம் நந்தினி அடர்ந்த காட்டினுள் சென்றபோது, மிகப்பெரிய சிங்கம் ஒன்று நந்தினியைப் பிடித்துக்கொண்டது.அந்தச் சிங்கம் வெகு நாட்களாக ஆகாரமின்றி இருந்ததுபோல் தோன்றியது. ஆதலால்,எந்த நிமிடமும் நந்தினியை அந்தச் சிங்கம் கொன்று புசித்துவிடக் கூடிய நிலை!

நந்தினியைக் காணாமல் தேடிய திலீபன், சிங்கத்தின் பிடியில் நந்தினி அகப்பட்டுக்கொண்டிருப்பதைப் பார்த்து மனம் கலங்கினான். ஒரு விநாடி தாமதித்தாலும் பசுவை அந்தச் சிங்கம் கொன்றுவிடக்கூடும்! தனது வில்லை எடுத்து, அதில் அம்பைப் பூட்டி சிங்கத்தை நோக்கி விடுவதற்குத் தயாரான அவனிடம் அந்தச் சிங்கம் பேசத் தொடங்கியது. ஆச்சர்யத்தினால் அம்பை விடாமல் அப்படியே திகைத்து நின்றான் மன்னன்.

சிங்கம் பேசிற்று...‘‘காட்டினுள் நுழைந்த பசுவை எனது பசியைத் தீர்த்துக்கொள்வதற்காக நான் பிடித்துக்கொண்டேன்! வலிமை இல்லாத பிராணிகளை,வலி மிகுந்த மிருகங்கள் பிடித்துப் புசிப்பது இயற்கை. அவ்விதமிருக்க, நான் பற்றிய நந்தினிப் பசுவைக் காப்பதற்காக என்னை நீ கொல்ல முயற்சி செய்வது எவ்விதம் நியாயமாகும்? தர்மத்தை அறிந்த மன்னனான நீ, என் போன்ற உயிர்களைக் காப்பாற்ற வேண்டியதும் உன் தர்மமல்லவா? ஆதலால், நான் பிடித்த நந்தினியை என்னிடமே விட்டுவிடு. அதைத் தின்று என் பசியைத் தீர்த்துக்கொள்வேன். பசியுடன் இருக்கும் என்னைக் கொல்வதால் உனக்கு மிகப்பெரிய பாவம் ஏற்படும்...’’ என்றது சிங்கம்.

மன்னன் தர்மத்தை அறிந்தவன். மன்னனாகவே இருந்தாலும் தர்மத்திற்குக் கட்டுப்பட்டவன். சிங்கம் சொல்வதிலும் நியாயம் இருப்பதை உணர்ந்துகொண்டான்; ஏற்றுக்கொண்டான்.சிங்கத்தின் பசியைப் போக்கவேண்டும். அதேசமயத்தில் நந்தினிப் பசுவையும் காப்பாற்றவேண்டும். என்ன செய்வது என்று ஒரு கணம் திகைத்து நின்றான். மறுகணம் ஒரு தீர்மானத்திற்கு வந்தான்! சிங்கத்தைப் பார்த்து பதிலளித்தான்...

‘‘உனக்காக நீ பற்றிய நந்தினியை என்னால் கைவிட முடியாது. அதே தருணத்தில் பசியினால் துன்புறும் உன் பசியையும் தீர்க்க வேண்டிய கடமை மன்னனாகிய எனக்கு உள்ளது. ஆதலால், இந்த நந்தினிக்குப் பதிலாக என்னை உண்டு, உன் பசியைப் போக்கிக்கொள்...’’ என்று கூறி அந்தச் சிங்கத்தின் முன் பாய்ந்தான், மாபெரும் சக்கரவர்த்தியும், பல அஸ்வமேத யாகங்களைச் செய்து புகழ்பெற்றவனுமான மன்னன் திலீபன்!

அந்த விநாடியில்தான் அந்த அற்புதம் நிகழ்ந்தது.சிங்கமாக வந்த தர்மராஜன், திலீபனுக்குத் தரிசனமளித்து, ‘‘பசுவின் பெருமையையும், தர்மத்தின் உயர்வையும் உலகிற்கு எடுத்துக்காட்டவே மாமன்னனான உன்னை இத்தகைய பரீட்சைக்கு உட்படுத்தினேன்’’என்று கூறி, மன்னரைப் பல காலம் இப்பாரத புண்ணிய பூமியைத் தர்மத்திலிருந்து சிறிதும் விலகாமல் ஆண்டு வரும்படி பணித்து,பல வரங்களையும் அளித்து மறைந்தார்.

கிருத யுகத்தில் பசுவின் உருவில் பரம்பொருளான தெய்வத்தைக் கண்டனர் நமது மகரிஷிகள். அதன்பிறகு வந்த திரேதாயுகத்திலும் மக்கள் பசுவைத் தெய்வமாகப் பூஜித்து வந்தனர்.பசுவின் சரீரத்தில் மும்மூர்த்திகளும், கங்கை, யமுனை முதலிய மகத்தான புண்ணிய நதி தீர்த்தங்களும், பரம பவித்திரமான புஷ்கரம், மானஸ சரோவரம், பிரயாகை, பிரும்ம சரஸ், சூரிய, சந்திர புஷ்கரணி தீர்த்தங்கள் ஆகிய அனைத்துப் புனித தீர்த்தங்களும், அக்னி, வருணன், வாயு ஆகிய இந்திராதி தேவர்களும், நவக்கிரகங்களும், ஸ்ரீ மகாலட்சுமி, ஸ்ரீ பார்வதி, ஸ்ரீ சரஸ்வதி, ஸ்ரீ துர்க்கை, சப்த கன்னியர், தர்மதேவதை, முப்பத்துமுக்கோடி தேவர்களும் எழுந்தருளியிருப்பதை மகரிஷிகள் தங்கள் ஞான சக்தியினால் அறிந்து கூறியுள்ளனர்.

கலியில் துணையிருப்பது தர்மமும், பசுவும்!காஞ்சி காமகோடி பீடத்தை அதன் 68-வது பீடாதிபதியாக அலங்கரித்தவரும்,ஸ்ரீ ஆதிசங்கரரின் மறு அவதாரம் எனப் பூஜிக்கப்படுபவரும், சிவபெருமானின் அம்சங்களைக் கொண்டு இன்றும் நம்மிடையே திகழ்பவருமான காஞ்சி ஸ்ரீபரமாச்சார்யர் தங்கள் ஜீவித காலத்தில் மக்களின் நன்மைக்காகவே பசுக்களை ரட்சித்தாக வேண்டும் என்று தனது திருவுள்ளத்தில் நினைத்து,சென்னையின் முக்கிய பகுதிகளில் ஒன்றான மேற்கு மாம்பலத்தில் 1976-ம் ஆண்டு நான்கு பசுக்களைக் கொடுத்து மேற்கு மாம்பலம் ஸ்ரீ சங்கர மடம் பின்புறம் உள்ள நிலத்தில் கோசாலை ஒன்றை அமைக்குமாறு அருளாணையிட்டார். அதன்பின்பு, அப்போது தமிழகத்தின் ஆளுநராக இருந்துவந்த ஸ்ரீ பிரபுதாஸ் பட்வாரி அவர்களால் கோசாலை ஆரம்பிக்கப்-பட்டது.இதன் முதல் நிறுவனத் தலைவரான திரு. என்.வி. ஸ்வாமி அவர்கள் மகா பெரியவரின் அத்யந்த பக்தர். அம்மகாபுருஷருடன் நெருங்கிப் பழகும் தெய்வீக வாய்ப்பினைப் பெற்றவர். தற்போது இப்பெரியவரின் வயது 97. சென்ற 35 ஆண்டுகளாக, இக்கோசாலையைப் பராமரிப்பதற்காகத்தான், மகா பெரியவரின் கருணையினால் தனக்கு இப்பிறவியை இறைவன் அளித்திருக்கிறான் என்ற உறுதியான எண்ணத்துடன் இவர் இன்றும் ஆற்றிவரும் பணிக்குக் கைமாறு என்ன செய்யமுடியும்?

தர்மத்தின் உருவான மகா பெரியவர் ஊன்றிய விதை அல்லவா இந்தக் கோசாலை! ஆதலால், அது மிகப்பெரிய ஆலவிருட்சமாக வளர்ந்து, இன்று 100 பசுக்கள் மற்றும் அழகான கன்றுக்குட்டிகள் ஆகியவை மிகச் சிறப்பான முறையில் அங்கு பராமரிக்கப்பட்டு வருகின்றன. கசாப்புக் கடைகளுக்குக் கொண்டு செல்லப்பட்ட வயதான பல பசுக்களையும் மீட்டுக் கொணர்ந்து,அவற்றிற்கு இயற்கையாக மரணம் சம்பவிக்கும் வரையில் இந்த கோசாலையில் காப்பாற்றப்பட்டு வருகின்றன. கறவை நின்றுபோய்விட்ட பசுக்களைக்கூட விட்டுவிடாமல், பெற்ற தாயென இங்கு அன்புடனும்,ஈடுபாட்டுடனும் புண்ணிய காரியமாகக் கருதி போஷிக்கப்படுகின்றன.

இவை மட்டுமின்றி,இங்கு கொண்டுவிடப்படும் பசுக்களைத் தமிழகத்திலுள்ள 36 கோசாலைகளுக்கு கொடுத்து, இப்போது 1450 பசுக்களுக்கு மேல் பராமரிக்கப்படுகின்றன.

கோபூஜை!கோசாலையும் ஒரு திருக்கோயிலே என்பதால்,ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மாலை 6.00 மணிக்குச் சிறப்பு கோபூஜை மேற்கு மாம்பலம் கோசாலையில் நடைபெறுகிறது. ஞாயிற்றுக்கிழமைகள்தோறும் மாலை 6.30 முதல் பஜனையும், கோபூஜையைத் தொடர்ந்து பிரசாதமும் விநியோகிக்கப்படுகிறது. பிரதி தினமும் 7.00 மணிக்கு ஸ்ரீவிஷ்ணு சஹஸ்ரநாம பாராயணமும் நடைபெறுகிறது. பூஜ்யஸ்ரீ பரமாச்சார்யரின் ஜென்ம நட்சத்திரமான அனுஷ நட்சத்திர தினத்தில் ஆவஹந்தி ஹோமத்துடன் மதியம் 12.00 மணிக்கு அன்னதானமும் நடைபெறுகிறது.
பிரார்த்தனை தலம்!

மும்மூர்த்திகளும், முப்பத்துமுக்கோடி இந்திராதி தேவர்களும், அனைத்துப் புண்ணிய தீர்த்தங்களும் இந்த கோசாலையில் பிரத்யட்சமாக இருப்பதால், ஏராளமான பக்தர்கள் அதிகாலையில் கோமயத்தில் அங்கப்பிரதட்சணம் செய்வது மெய்சிலிர்க்க வைக்கிறது. இதன்மூலம் துன்பங்கள் தீர்ந்து நன்மைகளைப் பெற்று அவர்கள் மகிழ்வது அனுபவத்தில் கண்டுவரும் உண்மையாகும்.

நேபாளத்திலிருந்து கொண்டு வரப்பட்ட பரம பவித்திரமான ருத்ராட்ச மரமும்,மகா வில்வ மரமும் இந்த கோசாலையில் வளர்க்கப்பட்டு வருகின்றன. இவை தவிர, வில்வம், துளசி, பூஜைக்குரிய புஷ்பச் செடிகளும், ஹோமங்களுக்குரிய புரசு, அத்தி, வன்னி மரங்களும் இங்கு பரம பக்தியுடன் வளர்க்கப்படுகின்றன.

உதவி கோரி, பணிவன்புடன் வேண்டுகோள்!
இன்றைய சூழ்நிலையில் மேற்கு மாம்பலம் கோசாலையில் போஷிக்கப்படும் அனைத்துப் பசுக்களுக்கும் மாலை ஒரு வேளை வைக்கோல் கொடுப்பதற்கு ரூ. 500/- செலவாகிறது. ஒரு பசுவை ஒரு மாதம் போஷிக்க ரூ.1000/- தேவைப்படுகிறது. குறைந்தபட்ச நன்கொடை ரூ.10/-கொடுத்தால் ஒரு பிரி வைக்கோல் அல்லது ஜீவனம் அளிக்கமுடிகிறது.

பெற்ற தாய்க்குச் சமமான பசுக்களைக் கோரமான முறையில் வதை செய்யும் கொடுமையை நினைக்க நினைக்க நெஞ்சம் பதைபதைக்கிறது. தமிழகத்திலிருந்து கேரளத்திற்குத் தினமும் லாரிகளில் கடத்திச் செல்லப்படும் கொடூரமும்,அவற்றின் கண்களில் பெருகும் ஒவ்வொரு சொட்டுக் கண்ணீரும், நெஞ்சைத் தீயாகச் சுடுகிறது. அந்தப் பசுக்களைக் கண்டால் நெஞ்சம் துடிதுடிக்கும்.

பசுக்களைத் தெய்வமாகவும், தர்மத்தின் உருவாகவும், யுகம் யுகமாகப் பூஜித்து வந்த பாரத புண்ணியபூமியில் இத்தகைய அதர்மம் நடப்பதைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை. எவ்வித பிரதிபலனையும் எதிர்பாராமல், ஏராளமான பக்தர்கள் (பெண்கள் உட்பட) இந்த கோசாலையில் ஆற்றும் பணியைப் பார்த்தபோது,இப்பாரத புண்ணியபூமியில் இன்றும் தர்மம் ஓரளவாவது இருக்கிறது என்பதை உணர்ந்து, ஒரு கணம் மனம் சற்று அமைதி பெறுகிறது. ஏராளமான பெண்கள், தினமும் அத்யந்த பக்தியுடன் இந்த கோசாலைக்கு வந்து, அங்குள்ள சாணம் முதலியவற்றை அகற்றி, கோசாலையைத் தண்ணீர் ஊற்றிச் சுத்தம் செய்து,பசுக்களுக்கும், கன்றுகளுக்கும் நெற்றியில் மஞ்சள், குங்குமமிட்டு, பூ அணிவித்து, அவற்றை சாஷ்டாங்கமாகக் கீழே விழுந்து நமஸ்கரிக்கும் தெய்வீகத்தைக் காணும்போது உள்ளம் பரவசமடைகிறது.

பசுவின் உருவில் உள்ள தர்மம் நிலைக்க வேண்டுமென்றால், இத்தகைய கோசாலைகளை நாம் காப்பாற்றியே ஆகவேண்டும்.ஏற்கெனவே பலமுறை நாங்கள் சுட்டிக்காட்டியபடி நமக்கு உதவுவார் எவருமில்லை.காலம் காலமாக அன்பு, அமைதி, சாந்தம் ஆகியவற்றின்படியே வளர்ந்துவிட்டோம். இன்றும் அவற்றின்படியே வாழ்ந்து வருகிறோம். நம் நற்குணங்களே - பிறரிடம் நாம் காட்டிவரும் தூய அன்பே இன்று நமக்கு யமனாகிவிட்டது.

அதனால் ஈடிணையற்ற தர்மகாரியத்தை அரும்பாடுபட்டுச் செய்துவரும் அற்புதமான இந்த கோசாலைக்கு உதவ வேண்டுகிறோம். கொட்டகையின் பல இடங்களில் மேற்கூரைகூட இல்லாமல் இருப்பது வேதனை அளிக்கிறது. அவரவர் சக்திக்கேற்ப உதவிகளை அனுப்பினால் போதும். பெற்ற தாயைப் பாசத்துடனும்,அன்புடனும் பேணிக் காக்கும் புண்ணியத்தை எளிதில் அடைந்துவிட முடியும்.

நன்கொடைகளைக் காசோலை,வரைவோலைகளாக அனுப்ப விரும்புபவர்கள் கீழ்க்கண்ட ‘GOH SAMRAKSHANA SALA' என்ற பெயரில் எடுத்து,

13, Kasi Viswanathar Koil Street,
West Mambalam, Chennai600 033.
Phone : 04424700336 / 9840046649 / 9444279696

என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கும்படி பிரார்த்திக்கிறோம்

Comments