பூர்வ ஜென்ம தோஷங்களை போக்கும் பஞ்ச பிருந்தாவன சேத்திரம்

கவான் ஸ்ரீமந் நாராயணனின் திவ்ய கல்யாண குண விசேஷங்கள் 21 என்று நம் பெரியோர்கள் அருளியுள்ளனர்.

அவற்றில் ஆறு திருக்கல்யாண குணங்கள் தனிச்சிறப்பு பெற்றவை. அவை :
1) பக்த வாத்ஸல்யம் :
தனது பக்தர்களிடையே அவன் கொண்டுள்ள அளவற்ற அன்பு. பெற்ற தாய் தன் குழந்தையிடம் வைத்துள்ள பாசத்தைவிட அவன் நம்மீது கொண்டுள்ள அன்பு அதிகமானது என ஆழ்வார்கள் போற்றிப் பாடியுள்ளனர்.

உதாரணம் : சிறு குழந்தைகளே ஆனாலும், பக்தனான பிரகலாதனுக்கும், துருவனுக்கும் பாசம் காட்டி, அனுக்ரஹம் செய்த பெருமை.

2) ஸௌலப்யம் :
மிகவும் எளிமையானவன்.பக்தி ஒன்றை மட்டுமே அவன் நம்மிடம் எதிர்பார்ப்பவன். ஒரே ஒரு துளசி தளத்தைச் சமர்ப்பித்தாலும், திருவுள்ளம் பூரித்துப்  போவான்.

உதாரணம் : சுசீலையின் ஒரு பிடி அவலை ஏற்று மகிழ்ந்தது.

3) ஆபத்பாந்தவம் :
நமக்கு ஆபத்து நேரும்போது,உண்மையான பக்தியுடன் அவனை நினைத்தால்,உடனடியாக ஓடி வந்து,ஆபத்திலிருந்து நம்மை விடுவிப்-பவன்.

உதாரணம் (1) : கஷேந்திரன் என்ற யானை பிளிறி அழைத்தபோது, தனது வாகனமாகிய கருடனுக்காகக் காத்திருந்தால்,தன்னை அழைத்த பக்தனுக்கு என்ன நேர்ந்து விடுமோ என்று வாகனம்கூட இல்லாமல் ஓடிவந்து காப்பாற்றியது.

(2) கௌரவர் சபையில் திரௌபதி கதறி அழைத்தபோது அந்த விநாடியே அவள் மானத்தைக் காப்பாற்றியது.

(4) பக்த ஸேவ்யம் :
பக்தர்களுக்குப் பணிவிடை செய்து மகிழ்தல்.

உதாரணம் : (1) ஏழை குசேலருக்குப் பாத பூஷை செய்து, அந்தப் பாத தீர்த்தத்தைத் தன் சிரஸிலும், தன் தேவி ஸ்ரீ ருக்மிணியின் சிரஸிலும் சேர்த்துக்கொண்டதுடன், தீர்த்தப் பிரசாதமாகப் பருகி, குசேலரின் பாதங்களை வலி தீர பிடித்துவிட்ட கருணை.

(2) அர்ச்சுனனுக்குத் தேரோட்டியாகத் தன்னை அமர்த்திக்கொண்டது.

(3) தனது பரம பக்தரும், பிறவிக் குருடருமான சூர்தாஸரை, அவரது கைத்தடியைப் பிடித்து, பிருந்தாவனத்திற்கு அழைத்துச் சென்றது.

(5) காருண்யம் :
மிகக்கொடிய பாவங்களைச் செய்தவனானாலும்,அதற்காக மனம் வருந்தி, பகவானின் திருவடிகளைப் பற்றிக்கொண்டு சரணடைந்தால், உடனடியாக மன்னித் துவிடும் கருணை.

உதாரணம் (1) : காகாசுரனை மன்னித்து அருளியது.

(2) தனது தேவியான ஸ்ரீ சீதையையே கவர்ந்து சென்ற இராவணனைக்கூட கொல்ல மனமில்லாமல், ‘‘இன்று போய் நாளை வா’’ - அப்போதாவது மனம் தி ருந்தட்டுமே எனக் காட்டிய கருணை.

(6) சத்ய பராக்ரமம் :
தர்மத்தைக் காப்பாற்றுவதற்காக,மகா பாவிகளைத் தண்டிக்கும் பராக்ரமம்.

உதாரணம் :கொடிய பாவங்களைச் செய்து வந்த துரியோதனன் முதலான கௌரவர்கள் தங்களைத் திருத்திக்கொண்டு தர்மநெறியின்படி வாழ பல சந் தர்ப்பங்களை அளித்தும், அவர்கள் திருந்தாததால், குருக்ஷேத்திர யுத்தத்தில் அவர்களை அழியச் செய்து, தர்மத்தைக் காத்தருளியது.

இவ்விதம், பகவானின் பெருமையையும், கருணையையும், கல்யாண குண விசேஜங்களையும் முழுமையாக அறிந்துகொள்ள சனகாதி மகரிஷிகளாலும்  முடியாது.

ஆச்சார்ய மகாபுருஷர்கள்!எம்பெருமானும்,ஸ்ரீ மகாலட்சுமியைத் தன் திருமார்பில் அணிந்து கொண்டுள்ளவனுமான ஸ்ரீமந் நாராயணனிடம் உள்ள மேற்கூறிய ஆறு குண விசேஷங்களும், அப்பெருமானைத் தினமும் பூஜிக்கும் அருளாளர்களிடமும் (சந்நியாசிகள்) உள்ளன. அதே கருணை, பக்தர்களிடம் பாசம், சோதனைக் காலத்தில் துணையிரு ப்பது, பக்தர்களுக்குப் பணிபுரிவதில் ஆனந்தம், கருணை ஆகிய அனைத்து விசேஷ குணங்களையும் கொண்டு திகழ்வதால்தான் ஆச்சார்ய மகாபுருஷர்களைத் (குரு, துறவிகள்) தெய்வத்திற்கு ஈடாக நாம் மதிக்கிறோம்; பூஜிக்கிறோம்.


பக்தி, ஆச்சார அனுஷ்டானங்கள், மனத்தூய்மை ஆகியவற்றினால் உயர்ந்து, இன்பம், துன்பம் ஆகிய அனுபவங்களினால் பாதிக்கப்படாமல், சம நோக்குடன்  தூய வாழ்க்கையைக் கடைப்பிடிப்பதால், சந்நியாசிகள் பகவானுக்கு வெகு சமீபத்தில் செல்லும் பேற்றைப் பெற்று, ஸர்வலோக சரண்யனான எம்பெருமானிடம்  நமக்காக வேண்டி, நமக்கு நல்வாழ்வைப் பெற்றுத் தருகிறார்கள்.

கலியுகத்தில் தனது பக்தர்கள், தூய துறவிகள், சாதுக்கள், பக்தர்கள் ஆகியோரின் இதயத்தில்தான் இருப்பதாக உத்தவர் என்ற பரம பாகவதோத்தமரிடம் வெளிப்படுத்தினான் ஸ்ரீகண்ணன் தனது கிருஷ்ணாவதார காலம் முடிவதற்குச் சற்று முன்பு.

துறவிகள் அவதரிக்கும்போது,தங்களது வலது ஹஸ்தத்தில் (கை) அமுத கலசத்துடன் அவதரிப்பதாக நமது புராதன,தெய்வீக நூல்கள் கூறுகின்றன.  ஆதலால், கலி தோஷத்தினால் மக்கள் மனமறிந்து பல தவறுகளைச் செய்து அந்த தோஷத்தின் விளைவாகப் பலவித நோய்கள், தரித்திரம், குறைந்த ஆயுள்,  அகால மரணம், மன அமைதியின்மை, குழந்தைப் பாக்கியம் தடைபடுதல், கணவர்- மனைவியரிடையே ஒற்றுமைக்குறைவு போன்ற துன்பங்களுக்கு ஆளாகி வருந்த நேரிடுகிறது.அத்தகைய தருணங்களில் நமது குற்றங்களைப் பொறுத்தருளி, நம்மை மன்னித்து, நமக்காக இறைவனிடம் மன்றாடி, அவனது அருளை  நமக்குப் பெற்றுத் தந்து, அனைத்துப் பாவங்களிலிருந்தும்,அவற்றின் விளைவாக ஏற்படும் துன்பங்களிலிருந்-தும் நம்மை விடுவித்து நமக்கு நல்வாழ்வளித்துக் காப்பாற்றுகின்றனர் இத்தகைய ஆச்சார்ய மகாபுருஷர்கள்.அளவற்ற கருணையினால் இவ்விதம் பகவானை நமக்குக் காட்டியருளி,பிறவிப்பயனை நமக்கு  அளித்தருளும் ஆச்சார்ய மகாபுருஷர்கள் நமது மகிழ்ச்சியைத் தவிர வேறு எதையும் நம்மிடம் எதிர்பார்ப்பதில்லை.

பகவானிடம் நேரிடையாக வேண்டிக்கொள்வதைவிட சந்நியாசிகளின் மூலம் பகவானின் அருளைப் பெறுவது மிகவும் எளிய வழியாகும். ஆதலால்தான் நாம்  நமது ஆச்சார்ய புருஷர்களிடம் (குடும்ப, குல, குரு) தெய்வத்திற்கு இணையான பக்தியையும்,மரியாதையையும் செலுத்த வேண்டும்.

ஸ்ரீமத் அஹோபில மடத்தின் புராதனப் பெருமை!
யுகங்கள்தோறும் பாரத புண்ணியபூமியில் பல மகான்களும், மகாபுருஷர்களும் அவதரித்து மக்களுக்கு நல்வழிகாட்டி அருளியுள்ளனர். தங்களது அவதார காலத்திற்குப் பிறகும் மக்களுக்கு நல்வழி காட்டி உதவுவதற்காகத் தங்கள் ஜீவித காலத்திலேயே பல ஆசிரமங்களையும், மடங்களையும், தர்மஸ்தாபனங்களையும், அறக்கட்டளைகளையும் இம்மகாபுருஷர்கள் நிறுவி அருள்புரிந்துள்ளனர்.

இவ்விதம் அவதார புருஷர்களான மகான்கள் நிறுவிய மடங்களில் ஸ்ரீ சிருங்கேரி சாரதா பீட மடம், ஸ்ரீ துவாரகா பீடம், ஸ்ரீகோவர்த்தன பீடம், ஸ்ரீ ஜோதிர் சங்கராச்சார்ய மடம், காஞ்சி காமகோடி பீடம், ஸ்ரீபத்ரி சங்கராச்சார்ய பீடம், மந்த்ராலயம் ஸ்ரீராகவேந்திர ஸ்வாமிகள் மடம், ஸ்ரீநரசிம்மராலேயே ஸ்தாபிக்கப்பட்ட ஸ்ரீமத் அஹோபில மடம், ஸ்ரீமத் ராமானுஜர் ஸ்தாபித்த பல மடங்கள், வானமாமலை ஜீயர் மடம் போன்ற மடங்களைக்  கூறலாம்.


இவை தவிர, தமிழகத்தில் தோன்றிய தருமபுரம், திருவாவடுதுறை, திருப்பனந்தாள், தொண்டை மண்டலம், மதுரை ஆதீனம், குன்றக்குடி போன்ற மடங்களும் மக்களை தெய்வீக நன்னெறியில் வழிநடத்திச் செல்கின்றன.

ஸ்ரீ நரசிம்மபுரம்!
இத்தகைய அவதார புருஷர்கள் தங்கள் ஜீவித காலத்திற்குப் பின்பும், நம்மை அனாதைகளாக இக்கலியின் தோஷத்திற்கு முன் விட்டுவிட்டுச் செல்ல மனமி ல்லாமல் தங்களின் பிருந்தாவனங்களில் (ஜீவசமாதி) தவத்தில் அமர்ந்து, தங்களின் திவ்ய சக்தியினால் பாவங்களிலிருந்தும், துன்பங்களிலிருந்தும் விடுவித்து,  மனநிறைவையும், நிம்மதியையும் அளித்து அருள்புரிந்து வருகின்றனர்.

இவ்விதம் சமாதி நிலையில் அமர்ந்திருக்கும்போது இம்மகாபுருஷர்கள் தங்கள் திருவுள்ளத்தில் நினைக்கும்போதெல்லாம் பகவானிடம் சென்று பெருமானைத் தரிசித்து,மீண்டும் தங்கள் பிருந்தாவனங்களுக்குத் திரும்புகின்றனர். இத்தகைய மகத்தான சக்தி வாய்ந்த பிருந்தாவனங்கள் சில திருக்கோயில்களின் வளாகத் திலேயே உள்ளன. மற்றும் பல, ஏகாந்தமான நதிக்கரைகளிலும், நதிகளின் மத்தியிலும், புண்ணிய காடுகளிலும், புனித திருத்தலங்களிலும் உள்ளன.



இத்தகைய அற்புதமான அளவற்ற சக்தி வாய்ந்த பிருந்தாவனங்களில் ஒன்றுதான் கும்பகோணம் அருகிலுள்ள ஸ்ரீ நரசிம்மபுரம் என்னும் திவ்ய க்ஷேத்திரத்தில் அமைந்துள்ள பஞ்ச ஆச்சார்ய க்ஷேத்திரம் எனப் புகழ்பெற்ற ஸ்ரீ நரசிம்மபுரமாகும்.கிருத யுகத்திலிருந்து திகழும் ஸ்ரீ லட்சுமிநரசிம்மனின் அழகிய தி ருக்கோயிலும் இங்குள்ளது.

700 ஆண்டுகளுக்கு முன்பு ஸ்ரீஅஹோபிலம் மகாக்ஷேத்திரத்தில் ஸ்ரீ நரசிம்மனாலேயே ஆரம்பித்து வைக்கப்பட்டது புகழ் வாய்ந்த ஸ்ரீமத் அஹோபில மடம்.அதன் 25-ம் பட்டம் ஸ்ரீமத் அழகியசிங்கராக விளங்கிய ஸ்ரீ ஸ்ரீநிவாஸ யதீந்திர மகாதேசிகன் கி.பி. 1776-ம் ஆண்டு மடத்தின் பீடாதிபதியாக ஆஸ்ரம  ஸ்வீகாரம் (சந்நியாசம்) ஏற்றார். அனைத்து சாஸ்திரங்களையும் கற்றுணர்ந்த இம்மகான் மந்திர சாஸ்திரத்தில் பிரசித்தி பெற்றிருந்தார். தனது திவ்ய ஞானத்தினால்  மந்திர சாஸ்திர பிரயோகத்தை அறிந்திருந்ததால்,இவரது சக்தி அவரது ஜீவித காலத்திலேயே ஈடிணையற்று இருந்தது. பித்ரு தோஷம், புத்திர தோஷம்,  செய்வினை தோஷம், பூத, பிரேத, பைசாச தோஷங்களினால் ஏற்படும் பயம்,மனோ வியாதிகள் ஆகியவற்றில் தனது ஒப்புயர்வற்ற மந்திர பிரயோக சக்தியினால் பூரண குணமாக்கி வந்ததால், வெகு விரைவிலேயே அவரை சாபானுக்கிரக ஸ்வாமி என்ற பெயரில் மக்கள் பூஜித்தனர். ஏராளமான குடும்பங்களைத் தன் மந்திர சக்தியினாலும்,தபோ வலிமையினாலும் பூர்வ ஜென்ம பாவங்களிலிருந்து விடுபடச் செய்த இம்மகானை கருடனின் அம்சமாகப்  பெரியோர்கள் கூறுவதுண்டு.

தஞ்சை சரபோஜிமன்னனைஆட்கொண்டது!
பல திவ்யதேச எம்பெருமான்களைத் தரிசித்துக்கொண்டு ஊர் ஊராக சஞ்சாரம் செய்துகொண்டு வந்த இந்த ஸ்வாமி, கும்பகோணத்தை அடுத்த புள் ளம்பூதங்குடி என்ற திவ்யதேசத்திற்கு (பாடல்பெற்ற தலம்) எழுந்தருளினார். அதற்கு முதல்நாள் (கி.பி. 1798-ம் ஆண்டு) தஞ்சையை ஆண்ட சரபோஜி மன் னனின் கனவில் ஸ்ரீ லட்சுமிநரசிம்மன் சேவை சாதித்து (தரிசனமளித்து),புள்ளம்பூதங்குடியில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீமத் அழகியசிங்கரைத் தரிசித்து  ஆராதிக்கும்படி அருளாணையிட்டார்.


அதனால் மனம் நெகிழ்ந்த சரபோஜி மன்னரும்,புள்ளம்பூதங்குடிக்கு ஓடோடிச் சென்று ஸ்ரீமத் அழகியசிங்கரைத் தரிசித்து அவரது தெய்வீக தேஜஸ்ஸிலும்  மந்திர சக்தியிலும், ஞான சக்தியிலும் கட்டுண்டு மெய்சிலிர்த்து நின்றார்.பின்பு கிருதயுகத்திலிருந்தே அங்கு ஸ்ரீ லட்சுமிநரசிம்மன் கோயில் கொண்டுள்ள அந் தக் கிராமத்தையும், சுற்றியுள்ள வேறு சில கிராமங்களையும் காணிக்கையாக மடத்திற்குச் சமர்ப்பித்து மகிழ்ந்தார்.அதுவே ஸ்ரீ நரசிம்மபுரம் எனப் பிற்காலத்தில்  சக்தி வாய்ந்த க்ஷேத்திரமாக ஆயிற்று.

பிருந்தாவனப் பிரவேசம்!
பல காலம் ஸ்ரீநரசிம்மபுரத்திலேயே எழுந்தருளி தனது திருக்கரங்களினாலேயே ஸ்ரீலட்சுமி நரசிம்மனை ஆராதித்து வந்தார் அவதார புருஷரான ஸ்ரீ ஸ்ரீநிவாஸ  யதீந்திர மகாதேசிகன்.

காலக்கிரமத்தில் இம்மகானின் ஜீவித காலம் முடிந்தவுடன் அவரது திருவுள்ளப்படியே அழகான பிருந்தாவனமும் நிர்மாணிக்கப்பட்டது. ஆச்சார்ய மகாபுருஷரின் மந்திர பிரபாவமும்,ஞான சக்தியும் இப்பிருந்தாவனத்திற்கு இன்றும் இருந்து வருவதால்,கொடிய தோஷங்களினால் அவதியுறும் ஏராளமான மக்கள் தொடர்ந்து ஸ்ரீ நரசிம்மபுரம் வந்து இப்பிருந்தாவனத்தைத் தரிசித்து துன்பங்கள் நீங்கி நல்வாழ்வு பெற்று வருகின்றனர்.

பிற்காலத்தில் இம்மகானின் பரம்பரையிலேயே வந்த மேலும் நான்கு அஹோபிலமடம் ஜீயர் ஸ்வாமிகளின் பிருந்தாவனங்களும் இங்கு அமைந்ததால், பஞ்ச  பிருந்தாவன க்ஷேத்திரம் என உலகப் பிரசித்தி பெற்றது.

பக்தர்களைப் பரீட்சிக்கும் கலியின் தோஷம்!
மந்திர சக்தியில் இன்றும் சிறிதளவும் குறையாத ஸ்ரீ நரசிம்மபுர க்ஷேத்திரத்தின் ஸ்ரீ நரசிம்மனின் திருக்கோயிலும், பிரசித்தி பெற்ற ஐந்து பிருந்தாவனங்களும்  புனரமைக்க வேண்டிய நிலையில் உள்ளன. இதற்கு பக்த பெருமக்களைத்தான் தொந்தரவு செய்ய வேண்டியுள்ளது. ஏனெனில், நமது தெய்வீகத் திருத் தலங்களுக்கு இன்று உதவி செய்வதற்கு எவருமில்லை. வரும் காலத்தில், என்றோ ஒருநாள் மீண்டும் இப்பாரத புண்ணிய பூமியில் அதர்மம் விலகி தர்மம்  செழித்தோங்கும். அந்த நாள் வரும் வரை நம் திருக்கோயில்களையும் அவதார புருஷர்களின் பிருந்தாவனங்களையும்,புண்ணிய தீர்த்தங்களையும்,தூய  ஆசிரமங்-களையும் காப்பாற்றியாக வேண்டும்.நம் குழந்தைகளுக்காகவும், பேரன்கள், பேத்திகள் அவர்களது சந்ததியினர் ஆகியோருக்காகவும் நாம் வைக்கும்  உண்மையான சொத்து இவை மட்டுமே.

ஸ்ரீநரசிம்மபுரத்தின் ஸ்ரீ லட்சுமிநரசிம்மர் திருக்கோயிலையும்,ஐந்து அஹோபில மட ஆச்சார்ய புருஷர்களின் திவ்ய பிருந்தாவனங்களையும் சீரமைத்துப் பாது காப்பதற்கு உதவும்படி இருகரம் கூப்பி மன்றாடி வேண்டுகிறோம்.

பகவானும், மகான்களும் கருணையே உருவானவர்கள். ஒரே ஒரு செங்கல்லைக் கொடுத்தாலும், ஒரு பிடி மணலைத் தந்தாலும் அவற்றை ஒரு கோடியாக  ஏற்று திருவுள்ளம் பூரித்துப் போவார்கள். நமக்குக் கிடைத்துவிடும் அஸ்வமேத யாகம் செய்த பலன். அதனால் நாமும், நமது குடும்பமும், குழந்தைகளும்,  சமூகமும், நாடும் நலம் பெறும்.

மக்களின் நல்வாழ்வு மகான்களின் கருணையில்! இத்திருப்பணிக்கு நன்கொடை அளிக்கவிரும்பும் வாசக அன்பர்கள் தங்கள் வசதிக்கு உட்பட்டு, டி.டி. அல்லது காசோலையாகவோ, ‘H.H. JEER OF AHOBILA MUTT’ என்ற பெயருக்கு எடுத்து, கீழ்க்கண்ட விலாசத்திற்கு அனுப்பும்படி வேண் டிக்கொள்ளப்படுகிறார்கள்.

Sri V.R. Kannan,
Sri Narasimha Krupa,
No.2, 4th Cross Street,
Kannan Nagar,
Madipakkam, Chennai600 091.
PH : 9841023450

Comments