பார்வதி கல்யாணம்

ல்லா கோயிலிலும் நடக்கும் பிரதோஷம் போலத்தான் அந்தக் கோயிலிலும் பிரதோஷ விசேஷம் நடக்கும். அந்த பிரதோஷ நாயகருக்கு அந்திவேளையில் வெகு எளிதாக அறுநூறு, எழு நூறு மாலைகள் சாற்றப்படும். சில சமயம் ஆயிரம் மாலைகள் கூட வந்ததுண்டு.
இரண்டாம் சுற்றில் கோயிலில் ஒரு பகுதியில் சுவாமியை நிலைநிறுத்தி மாலைகளைப் பிரித்து, பெரும் மாலையாக்கி அரைவட்டமாக பிரதோஷ நாயகருக்கு சாற்றுவார்கள். கைமுழம் உயரமுள்ள மாலைகளை ஆளுயர மாலைகளாகத் தொடுத்து கிட்டத்தட்ட முக்கால் மணிநேரம் சாற்றிக் கொண்டிருப்பார்கள். ஆனா லும் பக்தர்களுடைய அன்பு தொடர்ந்து மாலைகளாக வந்து கொண்டிருக்கும்.

என்னவித அன்பு? ஒரு வேண்டுதல் கலந்த அன்பு. என்ன வேண்டுதல்? மகனுக்கு, மகளுக்கு, தங்கைக்கு, அக்காவுக்கு, தமையனுக்கு, நண்பனுக்கு திருமணம் ஆக வேண்டும் என்று வேண்டிக் கொண்டு, இரண்டு இரண்டு மாலைகளாகக் கொண்டு வந்து ஒன்று சுவாமிக்கு, மற்றொன்று அம்பாளுக்கு என்று கொண்டு வந்து கொடுப்பார்கள்.

மூன்று பிரதோஷம் கொண்டு வந்து கொடுத்தால் போதும். நிச்சயம் திருமணம் நடக்கும் என்பது அராளகேசி - இரத் தினகிரீசுவரர் பக்தர்களின் நம்பிக்கை. ஏதாவது நல்லது நடந்தால் தானே நடக்கும் என்ற நம்பிக்கை வரும். நல்லது நடந்திருக்கிறது என்பதால் நம்பிக்கை அதிகரித்துவிட்டது. இப்படி வேண்டிக் கொண்டு திருமணங்கள் நிகழ்ந்ததால், பக்தர்களின் எண்ணிக்கை பெருகிவிட்டது.

திருமணம் மட்டுமல்ல, எந்த பிரார்த்தனையாக இருந்தாலும் பிரதோஷ வழிபாட்டின்போது சிவனுக்கும், அம்பாளுக்கும் மாலை சாற்றி, கை குவித்து மனமுருக வேண்டி, அந்த வேண்டுதல் நிறைவேறுகிறது. வேண்டுதல் நிறைவேறியவுடன் இறைவன் மீது நன்றி கலந்த ஒரு காதல் பொங்குகிறது.

`இன்று பிரதோஷம்; என் மகளுக்குத் திருமணம் நடத்தி வைத்த சிவபெருமானை எட்டி ஒரு நடை பார்த்துவிட்டு `தேங்க்ஸ்' சொல்லிவிட்டு வந்து விடுவோம்' என்று பலரும் வருகிறார்கள்.

வார நாட்களில் கூட அந்தக் கோயிலில் பிரதோஷத்தின் போது அடர்த்தியாக ஜனங்கள் கூடுகிறார்கள். அராளகேசியை விதம் விதமாக அலங்கரித்துப் பார்க்கிறார்கள். புதிதாய் தாடங்கம் செய்து போட்டிருக்கிறார்கள். சர்வாலங்காரபூஷிதையாய், அராளகேசி மடிசார் புடவையுடன் புன் முறுவலுடன் நிற்க, எதிரே வரிசையாய் அமர்ந்து லலிதா ஸஹஸ்ரநாமம் சொல்கிறார் கள், பாட்டுப் பாடுகிறார்கள். பெண்கள் நகர்ந்து போன வுடன் ஆண்கள் சிவன் சன் னதியில் அமர்ந்து ருத்ரம் சொல்கிறார்கள்.

அராளகேசி என்றால் என்ன அர்த்தம்? சுருளான கேசத்தை உடையவள். பெண்களுக்கு சுருட்டைத் தலை ஒரு கூடுதல் அழகல்லவா! அவள் அழகிய பெண்களிலும் அழகி. அராளகேசி. யார் இரத்தினகிரீசுவரர்? இரத்தின மலை மீது அமர்ந்திருக்கின்ற சிவன். சிவலிங்கம்.

பெசன்ட் நகரில் வாழ்கின்ற சிலர் மகாபெரியவர் ஸ்ரீசந்திர சேகர சரஸ்வதியிடம் கோயில் கட்ட வேண்டும் என்று விண்ணப்பித்தபோது, கோயிலுக்குண்டான சிவலிங் கம் கடலில் கிடைக்கும் என்று சொன்னார்கள்.

கடல் ஜலத்தில் அலைந்து அலைந்து தேடிக் கண்டு பிடித்த சிவலிங்கம்தான் இரத்தினகிரீசுவரர். ராமர் சன்னதியும், ஆஞ்சநேயர் சன்ன தியும், நவகிரக சன்னதிகளும், அழகான துர்க்கையும் நிறைந்து அகலமான கூடத்தோடு, அழகிய விமானத்தோடு தினந்தோறும் குதூகலமான வழிபாட்டோடு இருவரும் வீற்றிருக்கிறார்கள்.

பண்டிகைக்கால விழாக்களைத் தவிர பெரிய ஹோமங்களும், சுவையான உபந்நியாசங்களும் அவ்வப்போது அந்தக் கோயிலில் நடந்து கொண்டிருக்கும்.

அந்தப் பகுதி பொது மக்கள் ஒன்று சேர்ந்து கோயில் நிர்வாகத்தை சீரும் சிறப்புமாக நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அப்படி அவர்கள் நடத்தப் போகும் இன்னொரு விழா தான் பார்வதி கல்யாணம்.

சீதா கல்யாணம், வள்ளி திருமணம் என்று நடைபெறுவ துண்டு. ஆனால் பார்வதி கல்யாணம் என்பது தனித்த விசேஷமானது. எந்த விதத்தில் விசேஷம்?

உலகம் இரண்டானது. ஆண்-பெண், மேல்-கீழ், இடது-வலது, இருள்-ஒளி, நீர்-நெருப்பு, பூமி-ஆகாசம் என்று ஒன்றுக்கு ஒன்று எதிரான அதே நேரம் ஒன்றுக்கொன்று இழுக்கின்ற தன்மை உடையது. இரண்டானது ஒன்றாவதே வாழ்க்கை.

அசையாத சிவமும், அசை கின்ற சக்தியும் இணைந்தால் தான் இவ்வுலகம். பிரபஞ்சம். தனியாக சிவம் மட்டும் இருப்பின் அந்த இடத்தில் உயிரினங்கள் தோன்றாது. வாழ்க்கை என்பது இல்லை. வெறும் சக்தி மட்டுமிருப்பின் அதனால் உபயோகமாகாது. உயிரின் அசைவுதான் உடம்பு. உடம்பின் அசைவுதான் வாழ்க்கை. இரண்டு மிகப் பெரிய சக்திகள் ஒன்றாக சரி யான விகிதத்தில் கலக்கின்ற இடம் பூமி.

அந்த இரண்டு சக்திகளுக்கு உருவம் கொடுத்து ஒரு கதை சொன்னால் அது பார்வதி கல்யாணம். இது தத்துவ விளக்கம். இது வாழ்க்கையோடு எப்படி ஒன்று சேரும்?

திருமணம் என்பது மிக முக்கியமான விஷயம். திருமண மற்ற வாழ்க்கை என்பது ஒழுங் கற்ற கலவை. இலக்கு இல்லாத முயற்சி. இலக்குத் தேடி சொருகாத அம்பால் என்ன லாபம்? எதற்கு அம்பு எய்ய வேண்டும்?

திருமணம் என்ற விஷயத் தின் இலக்கு எது? வாழ்தல். வாழ்தலின் இலக்கு எது? அன்புமயமாக இருத்தல். அன்புமயமாக இருத்தலின் அவசியம் என்ன? கடவுளை அறிதல். கடவுளை அறிதல் என்ன பலன் அளிக்கும்? இரண்டு பெரிய சக்திகளுக்கு நடுவே மிகச் சிறிய புள்ளியாய் ஊடாடிக் கொண்டிருக்கிறோம் என்பது புரிய வரும்.

அந்தப் புரிதல் மிகப் பெரிய அமைதியைக் கொடுக்கும். அந்த அமைதிதான் உன்னதமான வாழ்க்கை.

இதை அறிய திருமணம் செய்து கொள்ளத்தான் வேண்டுமா? வேறு வழியிலும் அடையலாம். ஆனால் திரு மணம்தான் எளிதான வழி. இயல்பான வழி.

பனிச்சறுக்கு போல ஒவ் வொரு அடியிலும் ஒரு அனு பவம் பெற்று, ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு அனுபவம் பெற்று முற்றி முதிர்ந்து வெகு எளிதாக தன்னை அறியலாம். தன்னை அறியும் கலையே விஞ்ஞானம். இதில் அன்பு மயமாதல்தான் ஆரம்பம். இல்லறத்தார் வெகு எளிதில் அன்புமயமாகி விடுகிறார்கள்.

வேறு ஒரு குழந்தை அவஸ்தைப்படும்போது தன் குழந்தையோடு தான் பட்ட அவஸ்தை ஞாபகம் வருகிறது. அந்தக் குழந்தை- அவஸ்தைப் படுகின்ற குழந்தை சரியாக வேண்டுமே என்ற பிரார்த்தனை எழுகிறது. இதே விதமாக தன் பெண்ணுக்குத் திருமணம் ஆனது போல எதிர்வீட்டுப் பெண்ணுக்கும் திருமணம் ஆக வேண்டும் என்ற எண்ணம் எழும். அவள் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்ற ஆசிர்வாதம் கிளம்பும். அந்தத் திருமணத்திற்குப் பிறகு அவள் சீரும் சிறப்புமாக இருப்பது கண்டு மனம் சந்தோஷப்படும்.

இறை வணக்கம், வேண்டுதல் தன் குடும்பத்தோடு மட்டும் நில்லாது மிகப் பெரிதான வட்டமாக விரிவடையும்.

எந்தக் கல்யாணப் பெண் ணைப் பார்த்தாலும், எந்தப் பெண் கருக்கழியாத தாலி அணிந்து கொண்டு தலை நிறைய பூவோடு நடப்பதைப் பார்த்தாலும் மனம் துள்ளும். வாழ்க வாழ்கவென்று வாழ்த்தும். பெயர் கூடத் தெரிய வேண்டிய அவசியமில்லை. தொலைவி லிருந்து பார்த்தால் போதும் ஆசிர்வாதம் உள்ளிருந்து பொங்கி வரும்.

இந்த அன்புமயமாதல் கடவுள் தேடுதலில் மிக முக்கியமான விஷயம். திருமணம் என்ற விஷயத்தை மிக உன்னதமாக மனம் கருதுகிற போது, அந்தத் திருமணத்தை இறைவனுக்கும் நடத்திப் பார்ப்பது என்பது சந்தோஷமான விளையாட்டு. பக்தி கலந்த பயிற்சி.

இறைவிக்கு மாங்கல்ய தாரணம் ஆகப் போகிறது. இதேபோல திருமணமாகாத எல்லா பெண்களுக்கும் இந்த மாங்கல்ய தாரணமாகட்டும் என்று மனம் வேண்டும்.

சில சமயம் தனக்குத் தெரிந்த பெண்களின் பெயரை மனதில் குறித்துக் கொண்டு அவர் பெயர் சொல்லி அவர்களை வாழ்த்தும்.

இறையே! அந்தக் குழந் தைக்குத் திருமணம் நடத்து. இந்தக் குழந்தைக்குத் திருமணம் நடத்து என்று உள்ளுக்குள்ளே ஏக்கம் பரவும்.

மனம் வாழ்த்த வாழ்த்த வாழ்க்கை விரிவடைகிறது. மனம் என்ன சொல்கிறதோ அப்படித்தான் வாழ்க்கை நடை பெறுகிறது.

அராளகேசி சமேத இரத்தின கிரீசுவரர் ஆலயத்தில் வருகின்ற ஜூலை இருபத்தைந்து, இருபத்தாறு தேதிகளில் நடை பெற இருக்கின்ற பார்வதி கல்யாண வைபவத்தில் கலந்து கொண்டு திருமணமாகாத பெண்களுக்குத் திருமணம் ஆக வேண்டும் என்று வேண்டிக் கொள்ளுங்கள்.

இல்லறம் நல்லறமாக இருக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்யுங்கள்.

அராளகேசி - இரத்தின கிரீசுவரர் ஆலயம் சென்னை பெசன்ட் நகரில் ரிசர்வ் பாங்க் குவார்ட்டர்ஸுக்கு அருகே இருக்கிறது.

பிரதோஷத்திற்கு இரண்டு மாலைகள்  கொடுத்தால் போதும், திருமணம் உடனே நடத்தி வைக்கின்ற இரத்தின கிரீசுவரர், இந்த வைபவத்தில் கலந்து கொண்ட அத்தனை பேருக்கும் எல்லா வரங்களையும் வாரி வாரி வழங்குவார் என்பது சத்தியமான ஒரு நம்பிக்கை!

Comments