அருட்கவி கிருத்திவாசர்

ன்மிகம், இலக்கியம், சமூக சீர்திருத்தம், கலை, அரசியல் என்று நவீன இந்தியாவில் எல்லாத் துறையிலும் முன்னணி வகித்தவர்கள் வங் காளிகள். கவிக்கு ஒரு தாகூர், ஆன்மிகத்திற்கு பரமஹம்சர், விவேகானந்தர், சமூக சீர் திருத்தத்திற்கு ராஜாராம் மோகன்ராய், அரசியலுக்கு நேதாஜி, கலைக்கு சத்ய ஜித்ரே, பாதல்சர்க்கார், கதை இலக்கியத்திற்கு பங்கிம்சந்திரர், சரத்சந்திரர் - இப்படியாக....
அதே வங்காளத்தில்தான் இன்றைக்கு சுமார் 600 ஆண்டு களுக்கு முன்னால் கி.பி. 1380-ல் அருட்கவி கிருத்திவாசர் அங்குள்ள ஃபுலியா என்ற ஊரில் அந்தணர் குலத்தில் பிறந்தார்.

`பஞ்ச கவுட' என்ற மன்னனின் ஆதரவில் இலக்கிய வாழ்வில் வளர்ந்தார். வால்மீகி ராமாயணத்தை அடியொற்றி, வங்காள மொழியில், புதிய ராமாயணம் படைத்தார். ஆனால் வால்மீகி துணிவும் உறுதியும் கொண்டு எழுதிய சில பகுதிகளை இந்த ராமாயணத்தில் காண முடியாது.

ராமன் வனவாசம் செய்யப் புறப்படும்போது லட்சுமணன், ``இதோ, கைகேயியிடம் பித்துக் கொண்ட என் தந்தையைக் கொல்லப் போகிறேன், பார்'' என்று சொல்லி, சீறி எழுந்திருக் கிறான். வால்மீகியில் உள்ள பகுதி இது.

`மகன், தந்தையைக் கொல் வேன்' என்று சொல்வது கூட அடுக்காது என்ற கருத்தினால் கிருத்திவாசர் ராமாயணத்தில் இது இடம் பெறவில்லை.

``காட்டில், இரும்புத் தடி போன்ற தன் கையின் மேல் தலையை வைத்துக் கொண்டு ராமன் கண்ணயர வேண்டி யிருக்குமே!'' என்று கவுசல்யை வருந்துவதாக வால்மீகி குறிப் பிடுவதை கிருத்திவாசர் ஏற்க வில்லை.

ராஜகுமாரனின் கையை உழவன் கைபோல் கடினமானது என்று சொல்ல அவர் மனம் ஒப்பவில்லை! காட்டு வாகை மலர் போன்றது என்று வர்ணிக்கிறார்.

``ராமன் இளவயதில் தோட்டத்தில் மலராலான வில்லேந்தி உலாவுவான்'' என்று அவர் குறிப்பிடுவதால் அவருடைய ராமன் `மெத்து மெத்'தென்ற கையுடைய, வங்காளப் பெரிய மனிதர் வீட்டுப் பிள்ளையாகத்தான் காட்சியளிக்கிறான்!

தமக்கு சிருங்காரமாகப் பட்ட வால்மீகி ராமாயணப் பகுதி களையெல்லாம் கிருத்திவாசர் விட்டுவிட்டார். வால்மீகியின் வர்ணனைக்கும் இவருடைய இயற்கை வர்ணனைக்கும் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம் உண்டு.

கங்கை நதிப்புரத்தில் மழை நீரும் வெள்ளமும் நிறைந்த சூழ்நிலையையே கிருத்தி வாசரின் வர்ணனையில் காண முடியும்.

வால்மீகியின் தேவதாருவுக்கு பதிலாக வங்காளத் துக்கு உகந்த மலரும் கேதகிப் பூஞ்செடியும் எங்கும் காட்சி அளிக்கின்றன.

கிருத்திவாசருடைய கவுசல் யையும் ராமனும் சீதையும் சாதாரணமாக நாம் வங் காளத்தில் காணும் தாயும் மகனும் மருமகளுமாகவே தோன்றுகிறார்கள். தமது நாட்டு மக்களுக்கு இதுதான் பிடித்திருக்கும் என்ற நம்பிக்கை யோடுதான் கிருத்திவாசர் இப் படி எழுதியிருக்க வேண்டும்.

ராமன் சீதையைப் பிரிந்து புலம்பும் வர்ணனை வால்மீகி எழுதிய ரீதியிலிருந்து மாறு படுகிறது. கிருத்திவாச ராமா யணத்தில் ராமர் நாடு திரும்பி யதும், லட்சுமணன் வன வாசத் தின்போது தூங்காமலும் உண் ணாமலும் இருந்ததை நம்பாமல் சோதித்தது புதுமையானது.

``உங்கள் பட்டாபிஷேகத்தின் போது என் கையில் தாங்கியிருந்த குடை சற்று நழுவிச் சாய்ந்தது ஏன் தெரியுமா? அன்றுதான் தூக்கம் என் கண்ணை அழுத் தியது'' என்று லட்சுமணன் சொல்லுகிறான். இந்தப் பகுதி யைப் படிப்போர் உள்ளம் கலங்கும்.

மகிராவணன் கதையையும் இந்த ராமாயணத்தில் காண்கிறோம்.

காலநேமி என்ற அசுரனிடம், ``போரில் ராமலட்சுமணர்களை வென்று நீ திரும்பினால் ராஜ் யத்தில் உனக்குப் பாதிப் பங்கு கிடைக்கும்'' என்று ராவணன் சொன்னானாம். அப்போது கால நேமி கட்டிய மனக் கோட்டை கிருத்திவாசரின் நகைச்சுவை வீச்சுகளில் ஒன்று.

``நான் அவர்களை வென்றதும் வடக்கு, தெற்கு, மேற்கு_ இந்த மூன்று பகுதிகளையும் அளந்து எடுத்துக் கொள்ளப் போகிறேன். கிழக்குப் பக்கம் கடற்கரையில் அணை இருக்கிறது. அங்கே கை வைத்தால் அணை சரிந்து கடல் உள்ளே வந்துவிடும். சேச்சே! அந்தப் பக்கத்தை ராவணனுக்கே விட்டு விடுகிறேன்,'' என்று எண் ணுகிறானாம், காலநேமி!

இன்றும் கூட வங்காளத்தில், ``காலநேமி லங்கையைப் பங்கு கொடுத்தது போல'' என்ற பழமொழி மக்கள் வழக்கில் இருப்பதற்குக் காரணம் கிருத்தி வாசரின் இந்த ராமாயணப் பகுதிதான்!

துளசிதாசர் ராமபக்தியையே பிரதானமாகக் கொண்டு `ராம சரித மானஸம்' எழுதினார். ஆனால் கிருத்திவாசர் கிருஷ்ண பக்தியினால், கிருஷ்ணன் வடிவு எடுக்கும்படி கருடன் ராமனை வேண்டிக் கொள்வதாக எழுதி இருக்கிறார்.

கவுசல்யையும் பரதனும் சிவனை வழிபட்டார்கள் என்பதும், மகிராவணனைப் பற்றிய பகுதியில் சக்தி பூஜை சிறப்பும் கிருத்திவாச ராமாயணத்திலுள்ள சில புதுமைகள்.

வங்காளிகளின் திருமணச் சடங்குகளை இவரது ராம கல் யாண வைபவத்தில் காணலாம். இருட்டறையில் மற்ற தோழி களோடு மணமகளை உட்கார வைத்து விடுவார்கள், வங்காளி கள்!

அப்போது மணமகளை மணமகன் கண்டுபிடிக்க வேண்டும்.

ராமன் அருகே வரும்போது இடதுகையை அசைத்தாளாம் சீதை. வளையல் குலுங்கும் ஓசையிலிருந்து அவள் இருக்கும் இடத்தைத் தெரிந்து கொண்டு அவள் கையைப் பிடித்துக் கொண்டானாம்  ராமன்.

ஷெனாய், தபலா முதலிய மத்திய கால வாத்தியங்களின் இன்னிசையையும், வங்காள மக்களின் தின்பண்ட வகைகளையும் கிருத்திவாச ராமனின் திருமண விழாவில் சுவைக்கலாம்.

இன்றும் வங்காளத்தின் ஒவ்வொரு மூலை முடுக்கிலும் வயதானவர்களும், கிராமிய மக்களும் கிருத்திவாசருடைய ராமாயணத்தைக் கேட்டு உருகு வது சாதாரணமாகக் காணக் கூடிய காட்சி!

Comments