ஆஷ்லாந்து லக்ஷ்மி கோவில்


ஊரைவிட்டு, உறவைவிட்டு, நகரைவிட்டு, நாடுவிட்டு நாடு வேலை தேடிச் செல்லும் யாரை வேண்டுமானாலும் கே ட்டுப்பாருங்கள். அவர்கள் எல்லோருக்கும் ஒரே ஒரு லட்சியம்தான் இருக்கும்.

அது, பணம் சம்பாதிப்பது. அதுதான் அவர்களின் லட்சியம்.
அப்படிப் போகிறவர்கள் பலர்கூடி ஓரிடத்தில் சந்திக்கும்போது, அங்கே அவர்களுக்கு எழுகின்ற முதல் எண்ணம் என்ன தெரியுமா? தமக்கென்று ஒரு கோயில் அமைக்க வேண்டும் என்பதுதான்.

எண்ணம் என்னவோ சுலபமாகத் தோன்றிவிட்டாலும் அந்நிய மண்ணில் ஓர் இந்துக் கோயில் கட்டுவது என்பது அவ்வளவு சுலபம் இல்லை. அதற்கு அந்நாட்டு அரசின் அனுமதியும், தெய்வத்தின் அனுகிரகமும் வேண்டும்.

எல்லாம் கிடைத்துவிட்டால், அடுத்து எழும் கேள்வி, எந்த தெய்வத்திற்குக் கோயில் கட்டுவது?

அப்படி ஒரு கேள்வி அமெரிக்கா வாழ் இந்தியர்கள் மனதில் எழுந்தபோது அவர்கள் எடுத்த தீர்மானம் என்ன தெரியுமா? தங்களின் லட்சியம் என்னவோ அதனை ஈடேறச் செய்யும் கடவுளுக்கு கோயில் அமைப்பது என்பது தான்.

அவர்கள் லட்சியம் என்ன? பொருள் ஈட்டுவது. அதற்கு யாருடைய அருள் வேண்டும்? திருமகளின் கருணைதான் அல்லவா?
அமெரிக்காவின் ஆஷ்லாண்டில் அலைமகளுக்குக் கோயில் எழுந்ததன் தொடக்கம் இதுதான்.

‘லக்ஷ்ய’ என்ற சமஸ்கிருத வார்த்தையில் இருந்து வந்த பெயர்தான் லக்ஷ்மி. லக்ஷ்ய என்றால் லட்சியம் என்று அர்த்தம். நம் வாழ்வின் லட்சியம் ஈடேறச் செய்பவள் என்பதால் லக்ஷ்மி. செல்வத்தை மட்டுமல்ல, பக்தி வழியில் சென்று முக்தியாகிய பிறவிப் பயனை அடைய உதவுபவளும் அவளே! அமெரிக்காவில் உள்ள இந்தக் கோயி லுக்கும் திருமகளுக்கும் மட்டுமல்ல தீபாவளிக்கும்கூட சம்பந்தம் உண்டு.
அது என்ன என்பதைப் பார்க்கும் முன் திருமகள் பிறந்த கதையைப் பார்த்து விடலாம்.



துர்வாச முனிவர் சாபத்தால் இந்திரன் செல்வமெல்லாம் இழந்தான். பூமகள் பார்வை படாததால் தேவலோகமே களை இழந்தது. ஒரு களை கூட முளைக்காத அளவுக்குப் பஞ்சம் பரவியது.

எல்லோரும் வாடினார்கள்..வளமை பெற வழி என்ன என்று தேடினார்கள்.. மும்மூர்த்திகளிடம் ஓடினார்கள்.!

லட்சணம் இழந்த தேவலோகம் மறுபடியும் தழைக்க லட்சுமி கடாட்சம் வேண்டும் என்றார்கள் மூவரும். பாற்கடலைக் கடைந்தால், அமுதத்தோடு அலைமகளும் அவதரிப்பாள் எனச் சொன்னார்கள்.
அப்படியே எல்லாம் நடந்தன. பாற்கடலை கடையக் கடைய பல அற்புதங்கள் தோன்றின.

முதலில் உச்சைஸ்ரவம் எனும் குதிரை தோன்றியது. அடுத்து காமதேனு, கற்பகத் தரு, சந்திரன் என வர, மிகுந்த அழகோடும் சர்வ ஐஸ்வர்யங்களுடனும் மகாலக்ஷ்மி தோன்றினாள். சுகந்தமும் சோபனமும் பொருந்திய அவள், பரந்தாமனுடன் தன்னை இணைத்துக் கொண்டாள்.பாற்கடலில் தோன்றியவளாதலால் லக்ஷ்மிக்கு ‘க்ஷீராப்த புத்ரி’ அதாவது, பாற்கடல் மகள் என்றும் ஒரு பெயர் உண்டு.

செல்வமகள் வரவால் மீண்டும் செழிப்பானது தேவருலகம். எல்லா தேவர்களும் கூடிப் பிரார்த்தித்ததால் தோன் றியவள் என்பதால், எல்லோரின் அம்சமும் மகாலக்ஷ்மியிடம் இருந்தது.

பூ மகள் வரவால் பொன்னுலகாக தேவலோகம் மாறியதும், அந்த தங்கமங்கை தாமோதரனைத் திருமணம் செய்து கொண்டதும் துலா மாதம் ஒன்றின் தேய்பிறை சதுர்த்தசி தினத்தில் என்கின்றன புராணங்கள்.
அந்த நாள்தான் தீபாவளி என்பது உங்களுக்கே தெரியும் அல்லவா?
இப்போது நாம் அமெரிக்காவின் ஆஷ்லாண்டில் உள்ள லக்ஷ்மி கோயிலுக்கு வந்திருக்கிறோம். கோயிலைச் சுற்றிப் பார்த்தபடியே தீபாவளிக்கும் இந்தக் கோயிலுக்கும் என்ன சம்பந்தம் என்பதைத் தெரிந்து கொள்வோம்.

இன்முகமும், ஒற்றுமையும் உள்ள மக்கள், நெல்லி மரம், தூய்மையான வீடுகள், தானியக் குவியல்கள், உணவைப் பகிர்ந்துண்ணும் மனிதர்கள், நாவடக்கம் உள்ளவர்கள், உணவை உண்பதில் அதிக நேரம் செலவிடாத மனிதர்கள், வலம்புரிச் சங்கு, பரிசுத்தமான ஆடை அணிகலன்கள் இங்கெல்லாம் மகாலக்ஷ்மி வாசம் செய்வாள் என்று புராணங்கள் கூறுகின்றன. இந்த இடங்களோடு ஆஷ்லாண்ட் லக்ஷ்மி கோயிலையும் சேர்த்துக் கொள்ளலாம். அவ்வளவு எழிலுடன் இருக்கிறது கோயில்.

பூமகள் கோயிலைச் சுற்றி பசும்புல்வெளியும் இடையிடையே மலர்ந்திருக்கும் பூச்செடிகளும் அழகுக்கு அழகுசேர்க்க வெள்ளை வெளேர் கோபுரம், லக்ஷ்மிகடாட்சம் இங்கே நிறைந்திருக்கிறது என்று கட்டியம் கூறுவ துபோல் கம்பீரமாக நிமிர்ந்து நிற்கிறது.
வெளிநாட்டுக் கோயில்கள் பலவற்றை வடிவமைக்கும் பாக்கியத்தினைப் பெற்ற கணபதி ஸ்தபதி அவர்களே இக்கோயிலையும் வடிவமைத்திருக்கிறார்.

அவர் வரைந்து கொடுத்த அமைப்பின்படி அமெரிக்கப் பணியாளர்களும் இந்தியச் சிற்பிகளும் கோயில் கட்டும் திருப்பணியினைச் செய்திருக்கின்றனர்.

1981-ல் மசாசுசட்ஸ் மாகாணத்தில் இருக்கும் ஆஷ்லாண்டில் 12 ஏக்கர் நிலம் வாங்கப்பட்டு, நிதிகள் திரட்டப்பட்டு, 1984 ஜூன் மாதத்தில் தடபுடலாக கணபதி பூஜையுடன் தொடங்கி பூமி பூஜை செய்யப்பட்டிருக்கிறது.

குளிர், பனி என்றெல்லாம் பாராமல் இரவு பகலாக உழைத்ததன் பலனாக, 1989-ல் கும்பாபிஷேகம் நடந்தேறி¢யி ருக்கிறது.

திருமகளின் இக்கோயிலைக் கட்ட திருப்பதி தேவஸ்தானம் ஐந்து லட்ச ரூபாய் கடனாக அளித்ததாம். தற்சமயம் கடனெல்லாம் அடைத்து விட்டார்கள்.

கோபுரவாசல் கடந்து, உள்ளே வந்து மூல தெய்வமான மகாலக்ஷ்மியின் சன்னதி முன் நின்று மனதாரப் பணிகி ன்றோம். பலவிதப் பூக்களால் அழகிய மாலை கட்டி, பொன்மகளுக்குச் சாத்தியிருக்கிறார்கள். தேயாத செல்வ வளத்தைத் தேடிவந்து அளிக்கும் அந்தத் தாயை தரிசிக்கும் போது நம் மனம் பூரணமாக நிறைகிறது. புது வாழ்வு பிறக்கும் என்ற நம்பிக்கை மனதில் துளிர்க்கிறது.

மகாலக்ஷ்மி, ஸ்ரீதேவி அஷ்டகத்தில் ஜகன்மாதா என்று போற்றப்படுகிறாள். கோயிலுக்கு வந்து அவளைத் தொழும் வெளிநாட்டவரைப் பார்த்தால் அது எவ்வளவு உண்மை என்பது புரி¢யும். உலகத்தில் உள்ள எல்லா உயிர்களுக்குமே அல்லவா அவள் தாயாகத் திகழ்கிறாள்!
நித்திய அன்னதானமும் உண்டு.

நவகிரகங்கள், சிவன், பிள்ளையார், முருகன், ஆஞ்சனேயர் ஆகிய கடவுளருக்கு தனித்தனி சன்னதிகள் இருக்கின் றன.
ஆஞ்சனேயருக்கு வடை மாலை சாற்ற வேண்டுமெனில் முன்னரே பதிவு செய்ய வேண்டும் எனில் இவரது பெ ருமையை நீங்களே யோசித்துப் பாருங்களேன்..!

காலை ஒன்பது மணிக்கு வேங்கடேஸ்வர சுப்ரபாதத்துடன் தொடங்கும் நித்திய பூஜை, இரவு ஏழு முப்பது மணிக்கு ஸ்ரீலக்ஷ்மி ஆரத்தியுடன் நிறைவடைகிறது.வெள்ளிக்கிழமை தோறும் மகாலக்ஷ்மிக்கு அபிஷேகமும் சஹஸ்ரநாம அர்ச்சனையும் உண்டு.

மிகவும் ஆசாரமான கோயில். அதனால் இங்குள்ள இந்தியர்கள் தங்கள் இல்ல விழாக்களை நடத்த இக்கோயிலையே தேர்ந்தெடுக்கிறார்கள்.
அமெரிக்காவில் வாணவேடிக்கைகள் நடத்த, ஏகப்பட்ட கட்டுப்பாடுகள் உண்டு. ஆனால் தீபாவளி என்றால் பட்டாசு வெடிக்க ஆசைப்படாமல் இந்தியர்களால் இருக்க முடியுமா? ஆஷ்லாண்ட் பகுதியில் குடியிருக்கும் இந் தியர்களுக்காக இக்கோயில் நிர்வாகத்தினரே அரசு அனுமதி பெற்று குழந்தைகளும் பெரி¢யவர்களும் வான(ண) வேடிக்கை நடத்தி ஆனந்தமாகக் கொண்டாடுகின்றனர்.

தீபாவளியன்று இக்கோயிலில் சிறப்பு வழிபாடுகள், அலங்கார ஆராதனைகளும் உண்டு. தீபாவளிக்கும் இந்தக் கோயிலுக்கும் ஒரு சிறப்பு பந்தமே உண்டு என்றுகூடச் சொல்லலாம். அது என்ன தெரியுமா?
1978-ம் வருடம் தீபாவளித் திருநாளன்றுதான் இங்கே திருமகளுக்குக் கோயில் அமைக்கலாம் என்று தீர்மானித்து, அதற்கு ஆரம்பமாக லக்ஷ்மி பூஜை நடத்தி நிதி திரட்டத் தொடங்கியிருக்கிறார்கள்.

ஞாயிற்றுக்கிழமை மாலைகளில் பக்தர்கள் ஒன்றுகூடி விஷ்ணு சஹஸ்ரநாம பாராயணம் செய்வது பார்ப்பவரை பரவசத்தில் ஆழ்த்திவிடும். அன்றைய தினம் இந்தியர்கள் இங்கே குவிந்துவிடுகிறார்கள்.

பக்தி இருக்கும் இடத்தில் இசை இல்லாமலா? தியாகராஜர் ஆராதனை விழா, தீட்சிதர் நினைவு நாள், சுர்தாஸ், மீரா பஜன் பாடல்கள் என்று இசை விழாக்களையும் நடத்துவதால், கோயில் வழிபாட்டுத் தலமாக மட்டுமன்றி இந் தியர்களை ஒருங்கிணைக்கும் மிக முக்கிய தலமாகவும் திகழ்கிறது.
திரைகடல் ஓடி திரவியம் தேடச் சென்றவர்கள் அதனைப் பெற திருமகள் அருள் தேவை என்பதை உணர்ந்து க ட்டிய கோயில் என்பதால் திருமாலின் நாயகி இங்கே நித்திய வாசம் செய்வதோடு தன்னைத் தேடி வந்து பணியும் பக்தர்களுக்குத் தன் அருளையும் தாராளமாகத் தருகிறாள். அந்த தாமரைச்செல்வியின் தண்ணருள் நிச்சயம் உங்களுக்கும் உண்டு!

எப்படிப் போகலாம் ஆஷ்லாண்ட் ஸ்ரீலக்ஷ்மி கோயிலுக்கு?
ஆஷ்லாண்ட், அமெரி¢க்காவின் மசாசுசட்ஸ் மாகாணத்தில்
உள்ளது. ரோட் ஐலாண்ட்டின் ப்ராவிடன்ஸ் நகரம், ஹார்ஃபோர்ட், நியூ ஹாம்ஷுரி¢ன், நாஷுவா, லோகன் ஏர்போர்ட் ஆகிய இடங்களில் இருந்து ஒரு மணி நேரப் பயணத்தில் கோயிலுக்குச் சென்று விடலாம்.

கோயில் நேரம்:
திங்கள் முதல் வெள்ளி வரை
காலை 9 மணி முதல்
பகல் 12 மணி வரை.
மாலை 5.30 மணி முதல்
இரவு 9 மணி வரை.
சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை கோயில் திறந்தே இருக்கும்.
லக்ஷ்மி கோயில் அமைந்துள்ள ஆஷ்லாண்ட், பாஸ்டன் பகுதிகள் கடும் குளிருக்குப் பெயர் போனவை. அதனால் நேரம் அவ்வப்போது மாறுபடும்.

Comments