பெனாங் பால தண்டாயுதபாணி கோவில்


எத்தனை எத்தனையோ மொழிகள் இருந்தாலும் தனிப்பெருமை மிக்கதாக இருப்பது தமிழ்மொழி.

சிறப்புகள் பல கொண்ட தமிழ்மொழிக்கு, வேறு எந்த மொழிக்கும் இல்லாத தனிப்பெரும் சிறப்பு ஒன்று உண்டு. அது, தமிழுக்கென்றே ஒரு கடவுள்... தமிழ்க் கடவுள் இருப்பதுதான்.


அந்தக் கடவுளும் வேதமே போற்றும் பெருமைக்கு உரியவர்.

அந்தக் கடவுள் கந்தக் கடவுள் என்பதைச் சொல்ல வேண்டுமா என்ன? தமிழ் ஒலிக்கும் இடமெல்லாம் தன் அருள் நிறைக்கும் அந்த தண்டபாணியைத்தான் நாம் இப்போது தரிசிக்கப் போகிறோம்.

அதுவும் எங்கே தெரியுமா? சீனர்கள், மலேய மக்கள், தமிழர்கள் என்று யாவரும் இணைந்து வாழும், சேர்ந்து வழிபடும் ஒரு கோயிலில். அது இருக்கும் இடம் ‘பெனாங்க்’.

என்ன, பினாங்கு நாடு தெரியும் அது எங்கே இருக்கிறது ‘பெனாங்க்’ என்று யோசிக்கிறீர்களா?

பெனாங்க்தான், தமிழரின் உச்சரிப்பில், ‘பினாங்கு’ ஆகிவிட்டிருக்கிறது. நாட்டின் பெயர் எப்படி மாறி இ ருந்தாலும் சிங்கார வேலன் தன் பெயரில் எந்தச் சிதைவும் இல்லாமல் ‘பாலதண்டாயுதபாணி’யாகவே கோயில் கொண்டிருக்கிறார் இங்கே. உலகம் எங்கும் தமிழ் பரவுவதுபோல், தமிழ்க் கடவுளும் இங்கே கோயில் கொண்டிருப்பதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லைதான்.

ஆனால், இங்கே தண்ணருள் புரியும் தண்டபாணி கோயில் கொண்டவிதம், தனித்தன்மையானது என்பதால் அதைக் கொஞ்சம் பார்த்துவிடுவோம்.
பழநியில் ஆறுமுகன்,கையில் தண்டத்துடன் கோவணம் தரித்து ஆண்டியாக காட்சியளிப்பதால் தண் டாயுதபாணி என்ற பெயர் அவனுக்கு வந்ததாகக் கூறப்படுவது தெரிந்ததே.

பழநி மலைக்கு நிகராக மலேசியாவின் பெனாங்க்கிலும் தண்டாயுதபாணி ஸ்வாமி என்ற பெயரிலே கோயில் கொண்டுள்ளான் முருகன். பழநிமலை போல் பெரிய குன்றில்லையென்றாலும், இங்கும் மலையில்தான் கோயில் அமைந்துள்ளது.புராண வரலாறு எதுவும் பெனாங்க் முருகனுக்கு இல்லை. இக்கோயிலை தண் ணீர் மலைக்கோயில் என்று மலேசிய மக்கள் அழைக்கிறார்கள். ஏன் இந்தப் பெயர் என்பதன் பின் னணியில் ஒரு சுவாரசிய வரலாறு ஒளிந்திருக்கிறது.

1700களின் இறுதியில், பெனாங்க் பொடானிகல் கார்டனில் இருந்த ஒரு நீரருவியின் கீழே வேல் வழிபாடு நடத்தப்பட்ட சிறிய கோயிலாகத்தான் இக்கோயில் இருந்தது. இப்பகுதியில் முதன் முதலில் வேலை பிரதிஷ்டை செய்து வணங்க ஆரம்பித்தவர் யார் என்ற விவரம் தெரியவில்லையென்றாலும், அப்பொழுதே அங்கு குடியிருந்த தமிழர்கள் முருகனின் வேலை வழிவழியாக வணங்கி வந்திருக்கின்றனர். காலப்போக்கி ல், தண்ணீரை வண்டிகளில் ஜார்ஜ் டவுன் பகுதிக்கு சுமந்து செல்லும் கூலித் தொழிலாளிகளின் முக்கிய வழிபாட்டுத் தலமாக வளர்ந்தது அக்கோயில்.

மெல்ல மெல்ல வளர்ந்து 1800களில் மிகப் பிரபலமாகிவிட்டது ஆலயம். அக்காலத்திலேயே தைப்பூசத் தி ருவிழா என்றாலே மலேசியத் தமிழர்கள் எல்லாம் இக்கோயிலை நாடி வர ஆரம்பித்தனர்.

அச்சமயம் பிரிட்டிஷ் அரசே மலேசியாவை ஆண்டு வந்தது. பக்தர்களின் உற்சாகத்தையும் கட் டுக்கடங்காத கூட்டத்தையும் பார்த்த ஆங்கிலேயர்கள், நீர்வீழ்ச்சி இருந்த இடத்தைப் பாதுகாக்க நினைத் தனர். அதேசமயம், பக்தர்களின் மதம் சார்ந்த உணர்வுகளுக்கும் மதிப்பளித்தனர். எனவே மற்றொரு இட த்தில் பதினொரு ஏக்கர் நிலத்தை கோயிலுக்காக பிரிட்டிஷார் ஒதுக்கினர்.

அந்த இடத்தில் ராஜகம்பீரமாக இருக்கிறது கோயில்.

1850-ல் முழுமையாகக் கட்டப்பட்டு முடிவடைந்தது கோயில். சிறப்புற நிர்வகிக்கப்பட்டதோடு இக்கோயிலுக்கு ஒவ்வொரு 12 வருட மாமாங்கத்திலும் உரிய முறையில் கும்பாபிஷேகம் தவறாது நடத்தி வந்தி ருக்கிறார்கள்.

காலப்போக்கில் கோயில் மலேசியாவில் வசித்த நாட்டுக்கோட்டைச் செட்டியார்களின் முயற்சியினால் மிக அற்புதமாக கட்டி முடிக்கப்பட்டது. வெகு சிறப்பாக கட்டப்பட்ட கோயிலுக்கு, முதல் கும்பாஷேகம் 1935-ல் நடந்தேறியிருக்கிறது.

பின்னர் அவர்களே தமிழகத்தைச் சேர்ந்த சிவாசாரியார்களின் கருத்தின்படி பண்டாரம் ஒருவரை நியமித்து பூஜைகளை தொய்வின்றிச் செய்ய ஆரம்பித்து இருக்கிறார்கள்.

இன்று வரையில் நாட்டுக்கோட்டைச் செட்டியார் சமூகத்தினரே கோயில் நிர்வாகத்தில் முக்கிய இடம் வகிக்கின்றனர். அதனால் நாட்டுக்கோட்டைச் செட்டியார் கோயில் என்றும் அழைக்கின்றனர்.

தண்டாயுதபாணி ஸ்வாமி கோயில் எதிரிலேயே மற்றொரு கோபுரம், தமிழ் மணம் கமழக் காட்சியளிக்கிறது. மீனாட்சி சுந்தரேஸ்வரர் அருளும் அந்தக் கோயிலுக்குப் பிறகு செல்வோம்.

தொடக்க நாட்களில் நீரருவி இருந்த மலையில் வழிபடப்பட்ட தண்டாயுதபாணி என்பதால் தண்ணீர்மலை முருகன் கோயில் என்று சொன்னால்தான் பெனாங்க் மக்களுக்குப் புரிகிறது.

வாருங்கள்... கந்தனுக்கு அரோகரா சொல்லிக் கொண்டே, கோயிலுக்குள் நுழைவோம். கோயில் வளாகத்தில் நுழைந்தவுடன் சிறிய பிள்ளையார் கோயில் ஒன்றும் உள்ளது.வேலவனுக்கு மூத்தவரான வேழமுகனை தரிசித்தபிறகே படியேறுகிறோம். மரங்கள் சூழ்ந்திருப்பதால், படிக்கட்டுகள் ஏறும்போது சிரமம் தெரிவதில்லை.



கருவறையில் ஒரு முகத்துடன் காட்சி தரும் ஆறுமுகனை தரிசிக்கும்போது அவன் திருமுகம் நம் நெஞ் சில் பதிகிறது. அஞ்சேல் என்று அருளும் அவனது அருட்கரம் நமக்கு ஆனந்தம் அளிக்கிறது. அழகெ ன்ற சொல்லுக்குப் பொருளாக விளங்கும் முருகன் ஆண்டிக்கோலத்தில் புன்முறுவல் பூத்தபடி,எனது அ ன்பிற்கும் அருளுக்கும் எல்லையேது என்று சொல்வதுபோல் இருக்கிறது. முருகா, கந்தா, குமரா, ஷண் முகா என்றெல்லாம் அவன் புகழ் பாடி அங்கேயே இருந்துவிடத் தோன்றுகிறது.

வைரக் கிரீடமும் ஆபரணங்களும் அணிந்து வெற்றிவேல் ஏந்தியபடி தரிசனம் தரும் பினாங்கு நகர் பாலசுப்ரமணியன்,தன் மாறாத புன்னகையால் மனதுள் மகிழ்ச்சிப் பூவினை மலர வைக்கிறார்.

‘அஞ்சுமுகம் தோன்றில் ஆறுமுகம் தோன்றும்
வெஞ்சமரில் அஞ்சேல் எனவேல் தோன்றும்...!’
நெஞ்சில் ஒருகால் நினைக்கில் இருகாலும் தோன்றும் முருகா என்று ஓதுவார்முன்’

என்பதுபோல் ஆறுமுகனே நம் முன்வந்து நம் அல்லல் எல்லாம் அறுத்துவிட்டதாகத் தோன்றி மனம் லேசாகிறது. ஆனந்தக் கண்ணீர் வழிகிறது.

முருகக் கடவுள் தாரகாசுரனை சம்ஹாரம் செய்த தைப்பூசத் திருநாளில் ஒவ்வோர் ஆண்டும் மலேசியா முழுவதிலிருந்தும் பக்தர்கள் கூடுகிறார்கள். ஏழு லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்களின் வருகையினால் கூட்டத்தை சமாளிக்க முடியாமல் திணறுகிறது மலேசிய அரசு. காவடி, அலகு, யானையேற்றம் என்று வெகு அமர்க்களப்படுகிறது.

தமிழர்கள் மட்டுமன்றி சீனர்களும் வணங்குகிறார்கள் இந்த வடிவேலனை. ஊர்வலத்தில் வழிநெடுகிலும் ஆயிரக்கணக்கில் தேங்காய் உடைத்து மலைக்க வைக்கிறார்கள். தேங்காய்த் தண்ணீர் ஆறு போல சாலையில் ஓடுகிறது. கணக்கேயில்லாமல் தேங்காய்களை தமிழர்களைக் காட்டிலும் சீனர்களே அதிகம் உடைக்கிறார்கள்.

அனல் பறக்கும் சூட்டில் பெனாங்கு நகரச்சாலைகளில் பக்தர்கள் வெறும் காலுடன் நடந்து செல்கிறார்கள். அதனால் அவர்கள் கால்கள் குளிர, நகராட்சி நடைபாதை முழுக்க தண்ணீர் ஊற்றிச் செல்வது அழகோ அழகு!
தைப்பூசத் திருநாளில் பெனாங்கிலிருக்கும் மிகப் பெரிய அலுவலகங்களும்கூட தண்ணீர்ப்பந்தல் ஏற்பாடு செய்கின்றன.

ஏறக்குறைய இருபது கிலோமீட்டர் தூரம் ஊர்வலம் செல்கிறது. இதைக் கண் நிறையக் காண்பற்காகவே தமிழகத்திலிருந்தும்கூட ஏராளமான பக்தர்கள் வருடா வருடம் இத்தலம் வருகின்றனர்.

அன்று நடைபெறும் அன்னதானத்திற்கு பக்தர்கள் மூட்டை மூட்டையாய் அரிசி, காய்கறிகள், பழங்கள் எ ன்று கொண்டு வந்து குவிக்கின்றனர்.

தினமுமே காலையில் ஏழு மணிக்கு அபிஷேகத்துடன் பூஜைகள் தொடங்கினால் இரவு ஒன்பது மணி வரையாகிறது முடிவடைய.

1850களிலேயே கட்டப்பட்ட கோயிலானதால், இன்று கோயில் கட்டுமானம் நலிந்து போய் ஆட்டம் கண் டிருக்கிறது. காஞ்சி ஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் ஆசிர்வாதத்துடன், தற்சமயம் நிதி திரட்டி ஆகம விதிகளுடன் கோயில் கட்டுமானப் பணி தொடங்கியிருக்கின்றனர்.

தண்ணீர்மலையின் தண்டாயுதபாணி தன்னை வழிபடும் பக்தர் தம் வாழ்வினைத் தனது தண் அருளால் குளிர்விக்கத் தவறுவதில்லை. பெனாங்க் நகர முருகனை தூய மனதுடன் துதியுங்கள்.தன் திருவடி பற்றுவோருக்கு எல்லாச் செல்வங்களையும் தரக் காத்திருக்கிறான் அந்த தண்டபாணி!



எப்படிப் போகலாம்

பெனாங்க் முருகன் கோயிலுக்கு?

சென்னையில் இருந்து பெனாங்க் சர்வதேச நிலையத்திற்கு நேரடி விமான வசதி உண்டு. சிங்கப்பூர் மற்றும் கோலாலம்பூரிலிருந்தும் பெனாங்க் செல்ல ரயில் வசதி உண்டு.

வாட்டர் ஃபால்ஸ் சாலையில் இருக்கும் இக்கோயிலுக்கு பஸ், டாக்சி வசதிகளும் நிறைய இருக்கின்றன.

கோயிலைச் சுற்றி பத்து நிமிட கார் பயணத்தில் ஏராளமான தங்கும் விடுதிகளும் உள்ளன.

Comments