அருட்கவி

பரஞ்சோதி என்ற பெயருடன் தமிழ கத்தில் புகழுடன் விளங்கியவர்கள் இருவர். ஒருவர் கவியரசர்; மற்றவர் புவியரசர்.

இரண்டாமவர்,புலிகேசியுடன் போர் புரிந்து அவன் தலைநகர் வாதாபியைத் தீக்கிரையாக்கிய காஞ்சி நரசிம்ம பல்லவனது படைத்தலைவராக இருந்த பரஞ்சோதி!. இவர்தான், பெரிய புராணத்தில் கூறப்படும் அறுபத்துமூன்று நாயன்மார்களுள் ஒருவரான சிறுத்தொண்டர்.

முதலாமவர், திருவிளையாடற்புராணம் இயற்றிய பரஞ்சோதி முனிவர்.

வேதாரண்யத்தில் சைவ குருக்கள் மரபில் மீனாட்சி சுந்தர தேசிகர் என்பவரது மகனாக சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பு பிறந்தவர், பரஞ்சோதி.

தமிழும் வடமொழியும் கற்றுத் தேர்ந்தவர்; சிவபக்தி யில் சிறந்தவர்.

பரஞ்சோதி மதுரை நகர் சென்று மீனாட்சியம் மையையும் சோமசுந்தரக் கடவுளையும் வழிபட்டு, அந்நகரிலேயே சில காலம் தங்கியிருந்தார். அப்போது ஒரு நாள் மீனாட்சியம்மை இவரது கனவில் தோன்றி, ``அன்பனே! எம்பெருமான் திருவிளையாடல்களை நீ பாடுக!'' என்று அருளி மறைந்தாள்.

பரஞ்சோதியார் அப்பணியை சிரமேற்கொண்டு இந்தப் புராணத்தை இயற்றினார்.சொக்கநாதர் திரு முன்பு அடியவர்களும் புலவர் களும் நிரம்பிய பேரவையில் ஆறுகால் பீடத்தில் அமர்ந்து தமது திருவிளையாடல் புராண நூலை அரங்கேற்றினார்.

அது மட்டுமல்லாது இவர் இயற்றிய வேறு நூல்கள், வேதாரணிய புராணம், திருவிளையாடற் போற்றிக் கலிவெண்பா, மதுரை பதிற்றுப் பத்தந்தாதி ஆகியன.

சிவபிரானின் திருவிளையாடல்களை உணர்த்துவதற்காகவே தமிழில் எழுந்த நூல்கள் இரண்டு.

ஒன்று - வேம்பத்தூரார் இயற்றிய `திருவாலவாயு டையார் திருவிளையாடல்.மற்றொன்று - பரஞ்சோதி முனிவரின் திருவிளையாடற் புராணம்.

கதை அமைப்பிலும் முறை வைப்பிலும் வேம்பத்தூரார் திருவிளையாடல்தான் முற்பட்டதாகும். ஆயினும் வேம்பத்தூரார் நூலின் குறைவிற்கும் பிறகு வந்த பரஞ்சோதியார் நூலின் நிறைவிற்கும் இதன் செய்யுள் சிறப்பே காரணம். பெரிய புராணம் போல பக்தர்களால் பரவசத்துடன் படிக்கப்படுவது பரஞ்சோதியாரின் திருவிளையாடற் புராணமே!

மனம் குழம்பிய சூழலில், அறிவிற்கும், அனுபவத்திற்கும் அப்பாற்பட்ட சூட்சும ஞானத்திடம் விடை கேட்கும் விதமாக, நல்லது கெட்டது அறிய விரும்பி சைவ மக்கள் இந்நூலில் கயிறு சாத்திப் பார்க்கும் வழக்கம் இன்றும் தமிழ்நாட்டில் உள்ளது.

நவரசம் ததும்பும் பெருமித நடையில் பாக்களைப் புனைவதில் பரஞ்சோதி வல்லவர். தாம் தொடங்கும் நூல் இடையூறின்றி இனிது முடியும் பொருட்டு தூய சொல்லையும் பொருளையும் தந்தருளும்படி விநாயகரை வேண்டிக்கொள்ளுமிடத்து,

``சத்தியாய்ச் சிவமாகித் தனிப்பர

முத்தியான முதலைத் துதிசெயச்

சுத்தியாகிய சொற் பொருள் நல்குவ

சித்தி யானை தன் செய்ய பொற் பாதமே''

என்கிறார்.

இதில், சக்தியை முதலில் கூறியது, மதுரை சக்தி பீடங்களுள் முதன்மையானது என்பதாலும், பராசக்தியின் ஆணைப்படி இந்நூலை இவர் பாடியதாலும், சக்தியின் அனுக்கிரகத்தைக் கொண்டே சிவத்தை அடையவேண்டும் என்பதாலுமே!

இவர் தன் நூலில் திருஞான சம்பந்தருக்கு வணக்கம் கூறுகையில், `அவர் உமாதேவியார் ஊட்டிய ஞானப் பாலை உண்டு சிவகுமாரர் ஆனபடியால், தந்தையார் செய்த அருஞ்செயலையே மகனும் செய்தார்' என்கிறார்.

அப்படியென்ன அருஞ்செயல்? ஒருவனைத் தீயால் எரித்து, பிறகு உயிர் அளித்த செயல்தான்.

அதாவது, சிவபிரான் மன்மதனை நெற்றிக் கண்ணால் எரித்து, பின் அவனது மனைவி ரதியின் வேண்டுகோளால் அவனுக்கு உயிர் அளித்தார்.
திருஞானசம்பந்தர் சமணர்களை எதிர்க்கும் பொருட்டு, சமணர்களின் ஆதரவாளனான மதுரை மன்னன் கூன்பாண்டிய னுக்கு வெப்பு (வெம்மை - சூடு) நோயை உண்டாக்கி, பிறகு அந்தப் பாண்டியன் மனைவியான மங்கையர்க் கரசியின் வேண்டுகோளால் பாண்டியனுக்கு உயிர் அளித்தார்.
இவ்விருவர் செயலையும் ஒரே வரியில் சிலேடையாகத் தனது திருவிளையாடல் புராணத்தில் இவர் கூறும் பாட்டு.

``...... மீனக்

கொடியனை வேவ நோக்கிக்

குறையிரந் தனையான் கற்பிற்

பிடியன நடையாள் வேண்டப்

பின்னுயிர் அளித்துக் காத்த

முடியணி மாடக் காழி

முனிவனை வணக்கஞ் செய்வாம்.''

மீன்கொடியை உடைய வன் மன்மதன். அவனை சிவன் தன் தீக்கண்ணால் எரித்து விட்டான். இதையே சம்பந் தருக்குப் பொருத்திப் பார்த் தால், `வெப்பு (தீ) நோயினால் மீன் கொடியுடைய பாண்டிய மன்னனை வேகச் செய்து' என்று பொருள்படும்.

`பிடியன நடையாள் வேண்டப் பின்னுயிர் அளித்துக் காத்த' என்ற இடத்தில், பிடி (பெண் யானை) போன்ற நடையுடைய ரதி வேண்டவே, உயிர் தந்து உதவிய எனவும், ஞானசம்பந்தருக்குக் கூறும் போது `பாண்டியனின் மனைவி வேண்டவே, உயிர்தந்து உதவிய' எனவும் பொருள் கொள்ள வேண்டும்.இறுதியில் `காழி முனிவன்' என்றது, சீகாழியில் (சீர்காழி) அவதரித்த ஞானசம்பந்தரைக் குறிக்கும்.

Comments

  1. அருமையான பதிவு.
    வாழ்த்துகள்.

    ReplyDelete

Post a Comment