தாண்டி குதித்து ஆஞ்சேநேயர் வழிபாடு

நம் ஊரைப்போல கேரள மாநிலத்திலும் ராமாயண கதாபாத்திரங்களுடனும், சம்பவங்களுடனும் நெருங்கிய தொடர்பு கொண்ட பல தலங்கள் உள்ளன.

கேரள மாநிலம் திரூருக்கு அருகில் உள்ள ஆலத்தியூர் (ஆல்+ அத்தி+ஊர்) மிகவும் சிறப்பு வாய்ந்த ஓர் அனுமன் தலமாகும்.

இங்குள்ள அனுமன், வசிஷ்டமுனிவரால் சுமார் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே பிரதிஷ்டை செய்யப்பட்டவர் எனச் சொல்லப் படுகிறது. இந்த ஆலயத்தின் பிரதான சன்னதியில் ராமர் இருந்தாலும், முக்கியத்துவம் அனைத்தும் இங்குள்ள அனுமனுக்கே தரப்படுகிறது.

அனுமன், சீதாதேவியைத் தேடி இலங்கைக்குச் செல்வதற்கு முன்பு ராமபிரான் அவரை தனியே அழைத்து தனக்கும் சீதாதேவிக்குமிடையே நடைபெற்ற பல ரகசிய நிகழ்ச்சிகளை வெளிப்படுத்தினார். அதை நினைவூட்டும் வகையில், ராமபிரானின் அருகில் அவரது பேச்சை செவிமடுக்கும் பாவத்தில் காட்சி தருகிறார், அனுமன்.

ராமனும் அனுமனும் பேசிக்கொள்ளும்போது தான் அருகில் இருப்பது உசிதமல்ல என்பது போல், லட்சுமணன் சற்று தள்ளிச் சென்று நின்று கொண்டாராம். இதன் அடிப்படையில் கொஞ்சம் தள்ளி லட்சுமணரின் சன்னதி அமைந்துள்ளது.

அனுமன் இலங்கை செல்லும் பொருட்டு ஒரு பாறையின் மீது ஏறி நின்று பாய்ந்ததை நினைவூட்டும் வகையில் அமைக்கப்பட்டுள்ள நீளமான மேடை, பக்தர்களை மிகவும் கவரக்கூடிய முக்கிய அம்சமாகும்.

இந்த மேடையையொட்டி சமுத்திரத்தை நினைவுபடுத்தும் விதமாக ஒரு கருங்கல் பீடமும் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த ஆலயத்திற்கு வரும் பக்தர்கள் ராமபிரானையும் அனுமனையும் தரிசித்துவிட்டு இப்பகுதிக்கு வந்து நீள மேடையின் மீது ஏறி ஓடி கருங்கல் பீடத்தை தாண்டி தரையில் குதிக்கின்றனர். இதை ஒரு பிரார்த்தனைச் சடங்காகவே செய்கின்றனர்.

இந்தப் பிரார்த்தனையால் ஆரோக்யம், உடல்வலிமை, நீண்ட ஆயுள், கல்வி, செல்வம் ஆகியன தங்களுக்குக் கிட்டும் என்று பக்தர்கள் நம்புகின்றனர்.

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம், திரூரிலிருந்து 12 கி.மீ. தூரத்தில் ஆலத்தியூர் உள்ளது.


Comments