ஈசனின் நெற்றியில் இந்திரனின் கைவிரல்கள்




கௌதம ரிஷியின் மனைவி அகலிகை மீது கொண்ட ஆசை காரணமாக, அவரது சாபத்துக்கு ஆளானான் இந்திரன். அவனது உடல் முழுதும் அருவறுப்பான ஆயிரம் குறிகள் தோன்றின. அந்த வடிவோடு வானுலகில் வாழ வெட்கப்பட்டு, மண்ணுலகு வந்தான் இந்திரன்.

சாபம் விலக வேண்டி, பிருத்வி தலமாகவும், கமல கே்ஷத்திரமாகவும் விளங்கும் திருவாரூரில் சர்வேஸ்வரனை நோக்கி தவமியற்றினான். அப்போது அசரீரியின் வாக்கொலித்தது. அதன்படி கோங்கு வனமான இந்த திருத்தலம் வந்தடைந்தான். தனது வச்ராயுதத்தால் ஒரு தீர்த்தம் உண்டாக்கினான். மணல் லிங்கம் பிடித்து அந்த தீர்த்தத்தால் தொடர்ந்து பூஜை செய்து வந்தான்.

வைகாசி மாத விசாக நட்சத்திர நன்னாளில் தான் பூஜித்து வந்த மணல் லிங்கத்தை தீர்த்தக் குளத்தில் கரைத்து, பூஜையை முடித்திட எண்ணி, லிங்கத்தை எடுக்க முற்பட்டான். ஆனால் அந்த லிங்கம் பூமியோடு பற்றிக் கொண்டது. இதன் காரணமாக இந்திரனின் கைவிரல்கள் அந்த மணல் லிங்கத்தின் நெற்றியில் பதிந்தன.

உடன் பரமன் அங்கே தோன்றி, இந்திரனின் உடலிலிருந்த குறை போக்கி அதனை ஆயிரம் கண்களாக மாற்றி அருள் புரிந்தார். இதனால் இந்திரனுக்கு சகஸ்ராட்சன் என்ற பெயர் ஏற்பட்டது.

சிவனாரை வணங்கி மகிழ்ந்த இந்திரன், இத்தலத்தில் தீர்த்த நீராடி; `உம்மை வந்து வணங்கும் யாவருக்கும் சகல வரங்களையும் அருள வேண்டும்' எனக் கேட்க, அதன்படி அருளினார் அரனார்!

இந்திரனின் கை அடையாளம் லிங்கத்தின் மீது பதிந்ததால் இத்தல இறைவன் கைச்சின்னேஸ்வரர் என்றும், இந்த திருத்தலம் கைச்சின்னம் என்றும் வழங்கப்படலாயிற்று!

அகத்திய மகரிஷிக்கு உண்டான பிரம்மஹத்தி தோஷம் நீக்கியதோடு, அவருக்கு இங்கே தியாகராஜராகவும் காட்சி தந்தருளியுள்ளார் இறைவர். திருமணபிந்து, விதுமன், மித்ரசஹன் போன்றோரும் இத்தலத்தில் வழிபட்டு பேறு பெற்றுள்ளனர்.

திருஞானசம்பந்தர் இத்தலமெய்தி ஒரு பதிகம் பாடிச் சிறப்பித்துள்ளார். திருநாவுக்கரசர் கே்ஷத்திரக்கோவையில் இத்தலத்தை கயிலை தலத்திற்கு ஒப்பாகப் பாடிப் போற்றியுள்ளார். அருணகிரிநாதர் இத்தல முருகப்பெருமான் மீது ஒரு திருப்புகழ் பாமாலையைச் சாற்றியுள்ளார்.

புராணப் பெருமைமிக்க இத்தலத்தில் ராஜராஜ சோழன் எழுப்பிய, ராஜேந்திர சோழனால் திருப்பணி செய்யப்பட்ட சிவாலயம் பிரமாண்டமாகத் திகழ்கிறது. பழமை பிரதிபலிக்கும் இத்தலத்தில் கல்வெட்டுகளும் பெருமளவில் காணப்படுகின்றன.

இரண்டு பெரிய பிராகாரங்களைக் கொண்டது இவ்வாலயம், நுழைவுவாயில். பலிபீடம் கடந்தால், நந்தியம்பெருமான் மண்டபத்துள் வீற்றுள்ளார். மூன்று நிலை ராஜகோபுரம் 2ம் வாயிலில் உள்ளது. உள்ளே இடப்புறம் மடப்பள்ளியும், கிணறும் அமைக்கப்பட்டுள்ளன. வலப்புறம் மூன்று பைரவர்கள் கொண்ட சன்னதியும், நவகிரகங்களும் அமையப்பெற்றுள்ளன.

முகமண்டபம், அந்தராளம், கருவறை என சுவாமி சன்னதி முழுதும் தரையிலிருந்து சுமார் ஐந்தடி உயரத்திற்கு மேடை போன்று எழுப்பப்பட்டுள்ளது.

நீண்ட மண்டபம் கடந்து, கருவறைக்கு அருகே சென்று இறைவனை தரிசனம் செய்கின்றோம். அற்புதமான லிங்கம்! கைச்சின்னேஸ்வரர் என்பது இவரது நாமம்! இந்திரனின் கை அடையாளம் லிங்கத்தின் நெற்றியில் உள்ளதை தத்ரூபமாகக் காண்கின்றோம். இவர் முன்னே கலையம்சம் கொண்ட பிரபை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது!

பின்னர், கலைநயமிக்க பழம்பெரும் நடராஜர் - சிவகாமியன்னையை தரிசிக்கின்றோம். உடன் மணிவாசகப் பெருமானும் உள்ளார். சுவாமி சன்னதிக்கு அடுத்ததாக தியாகராஜர் சன்னதியுள்ளது. அகத்தியருக்கு இங்கு இறைவன் தியாகராஜராக காட்சி தந்ததால் இவருக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

தென்புற கோஷ்டத்தில் மேதா தட்சிணாமூர்த்தியாக ரிஷபத்தின் மீது அமர்ந்த வண்ணம் அருள்பாலிக்கின்றார்.

வரிசையில் முதலில் விநாயகர் சன்னதி உள்ளது. அடுத்து சுமார் ஏழு அடி உயர ஸ்ரீநிவாசப்பெருமாள் அற்புதமாக காட்சித் தருகின்றார். இக்கோயிலுக்குச் சொந்தமான நிலத்தினை அகழ்ந்தபோது கிடைத்த பெருமாள் இவர்!

பிறகு லிங்கங்கள் சிலவும், ஆறுமுகர் சன்னதி, கஜலக்ஷ்மி சன்னதி என வரிசையாக உள்ளது. சுவாமி சன்னதியின் வட கோஷ்ட மாடங்களில் பிரம்மா, அர்த்தநாரீஸ்வரர், ஜேஷ்டாதேவி, மகிஷன் இல்லா துர்க்கை, வீணையில்லா சரஸ்வதி என அநேக சிற்பங்கள் காணப்படுகின்றன!

இறைவன் சன்னதிக்கு இடப்புறம் அம்பாள் சன்னதி முக மண்டபம், அர்த்த மண்டபம், மூலஸ்தானம் ஆகிய அமைப்பில் அமைந்து எழில்கூட்டுகிறது. அம்பாள் ஸ்வேதவளையாம்பாள் கருணைக் கடலாய் கடாக்ஷிக்கின்றாள்! வெள்வளைநாயகி என்பது இவ்வன்னையின் தீந்தமிழ்ப் பெயராகும்!

காண்போரை கவரும் மிகப் பெரிய கலைக்கோயில் இது! காலக்கரம் செய்த சிதைவுகளால் தற்போது பாலாலயத்தில் உள்ளது.

ஆண்டுதோறும் வைகாசி மாதம் பிரம்மோற்சவம் வெகு விமரிசையாக நடத்தப்படுகிறது. அப்போது சுவாமி புறப்பாடும் தீர்த்தவாரியும் உண்டு. ஏனைய விசேஷங்களும் இங்கு சிறப்புற அனுசரிக்கப்படுகின்றன!

இத்தல தீர்த்தமான இந்திர தீர்த்தம் ஆலயத்தின் தென்புறம் காணப்படுகிறது. தல விருட்சம் வன்னி மரம்.

இவ்வாலயத்தில் ஐந்து கால பூஜைகள் நடத்தப்படுகின்றன. தினசரி காலை 7.30 மணி முதல் 12 மணி வரையும்; மாலை 4 மணி முதல் 8 மணி வரையும் ஆலயம் தரிசனத்திற்காக திறந்திருக்கும்.

ஸ்ரீஹத்தி தோஷ நிவர்த்திக்கு உகந்த தலமிது என்று பழங்கால ஓலைச் சுவடிகள் கூறுகின்றன.

திருத்துறைப்பூண்டி தாலுகாவில், திருவாரூர் - திருத்துறைப்பூண்டி பிரதான பேருந்து சாலையில் முக்கிய நிறுத்தமாக உள்ளது கச்சனம்!

Comments