சிங்கப்பூர் சித்திவிநாயகர்



இருந்த இடத்திலிருந்தே உலக நாடுகள் பலவற்றிலும் உள்ள திருத்தலங்களை, இந்த பதிவின் தரிசித்துக் கொண்டிருக்கிறீர்கள் நீங்கள்.

முதன்முதலில் இப்படி ஒரே இடத்திலிருந்து கொண்டே உலகம் அனைத்தையும் வலம் வந்த பலனைப் பெற்றவர் யார் தெரியுமா?

பிள்ளையார்தான். அம்மை அப்பனைச் சுற்றி வந்து அகிலத்தை வலம் வந்ததாகச் சொல்லி ஞானப் பழத்தைப் பெற்றவர் அவர்தானே.

இந்த புராணக்கதை தென்இந்தியாவில் மட்டும்தான். வடநாட்டில் இந்தக் கதை வேறு மாதிரியாக இருக்கிறது.அதில் பிள்ளையாருக்கு கனி கிடைக்கவில்லை...அதற்கு பதிலாக,இரு கன்னியரை மணக்கும் பாக்கியம் கிடைக்கிறது.

இன்னொரு முக்கியமான விஷயம். தமிழகத்தில் மட்டும்தான், பிள்ளையார் பிரம்மசாரியாக அநேக இடத்தில் இருக்கிறார்.முருகன் வள்ளி, தேவசேனா சமேதராக காட்சியளிக்கிறார். வடநாட்டிலோ முருகன்தான் பிரம்மசாரி...! கார்த்திகேயனாக அங்கே கல்யாணம் ஆகாத வடிவில் முருகன் இருக்க, கணபதி,சித்தி,புத்தி என இரு தேவியருடன் மணக்கோலத்தில் காட்சியளிக்கிறார்.

சரி... வெளிநாட்டுக் கோயில் தரிசனத்திற்கும் இந்த புராணக் கதைக்கும் என்ன சம்பந்தம்?

அது, நாம் இப்போது பார்க்கப் போகும் கோயில் விநாயகர், சித்தி விநாயகர் என்ற பெயரோடு காட்சி தரும் கோயில் என்பதுதான்.முக்கியமான விஷயம், இங்கே பிள்ளையார் தனித்துதான் தரிசனம் தருகிறார்.

எங்கே இருக்கிறது கோயில்?ஒரு நிமிடம் சித்தத்தினை சித்தி விநாயகரிடம் வைத்து, சிங்கப்பூருக்கு வாருங்கள்...!

இப்பொழுது நாம் வந்திருப்பது சிங்கப்பூரின் படு பிசியான சைனா டவுன் பகுதி. அங்குதான் சித்தி விநாயகர் அருள் பாலிக்கிறார்.

இன்று இவ்வூரின் பிரபலமான கோயில்களுள் ஒன்றாக விளங்கும் இக்கோயில் முன்னர் வெறும் மரத்தடி பிள்ளையார் கோயிலாகத்தான் இருந்திருக்கிறது.

பல வருடங்களுக்குமுன்,சிதம்பரத்திலிருந்து இந்திய ராணுவத்தின் சிப்பாய் திரு. பொன்னம்பல ஸ்வாமி என்பவர் சிங்கப்பூர் வந்தார். சைவ மதத்தைச் சார்ந்த இவர்,தினசரி வழிபாட்டிற்காக விநாயகர் விக்ரகம் ஒன்றை தன்னுடன் கொண்டு வந்திருந்தார்.

அவர் தினமும் பூஜைகள் செய்து வழிபட்டு வந்த சமயத்தில், அக்கம்பக்கத்தினரும் பிள்ளையார் வழிபாட்டில் அவருடன் கலந்துகொண்டனர்.

அந்தத் தனி மனிதரின் முயற்சியினால் சிங்கப்பூர் பொதுமருத்துவமனையின் அருகே இக்கோயில் முதன்முதலாக தொடங்கப்பட்டது.

ஆரம்பத்தில் விநாயகர் மற்றும் ராமர் நாமம், நாகர் சிலைகள் மட்டுமே இக்கோயிலில் இருந்துள்ளன.மருத்துவமனைக்கு வந்து போவோரே வழக்கமான பக்தர்களாக இருந்திருக்கிறார்கள்.

பொன்னம்பல ஸ்வாமி இந்தியா திரும்ப வேண்டிய தருணம் வந்தபொழுது அவ்விக்ரகத்தை சிங்கப்பூரில் வசிக்கும் நகரத்தார் எனப்படும் நாட்டுக்கோட்டைச் செட்டியார் சமூகத்தினைச் சார்ந்தோரிடம் அளித்துவிட்டு நாடு திரும்பினார்.தம்மைத் தேடி வந்த யானை முகத்தோனை யாரேனும் மறுப்பார்களா?சந்தோஷத்துடன் அதனை வாங்கிக் கொண்ட நகரத்தார், கோயில் கட்டும் பணியினைத் தொடங்கினர்.
பண்டாரம் என அழைக்கப்படும் அர்ச்சகரையும் நியமித்து தினப்படி பூஜைகள் நடத்த ஆரம்பித்தனர்.

1920-ல் சிங்கப்பூர் அரசு மருத்துவமனை விரிவாக்கப்பட்டபோது, அரசாங்கம் கோயில் நிலத்தை வாங்கியது.அதற்குரிய பணத்தையும் நகரத்தாரிடம் கொடுக்க,தற்பொழுதுள்ள புதிய இடத்தில் கோயில் பணியை கிடுகிடுவென ஆரம்பித்தனர்.

புதிய கோயிலில் பிள்ளையாரை பிரதிஷ்டை செய்ய வேண்டிய வேளையில்தான் அச்சிலை பல இடங்களில் பின்னப்பட்டிருந்தது தெரிய வந்தது.உடனே,கருங்கல்லால் ஆன பிள்ளையார் விக்ரகத்தை இந்தியாவிலிருந்து தருவித்தனர்.

புதிய கற்சிலை விநாயகர் கர்ப்பகிருகத்தில் இருப்பினும் பொன்னம்பல ஸ்வாமிகளின் நினைவாக பழைய விநாயகர் சிலையையும் ஸ்வாமி எதிரிலேயே இன்றும் வைத்துள்ளனர்.

சிங்கப்பூரில் அக்காலத்தில் குடியிருந்த திரு.பிச்சப்பா செட்டியார் தன்னிடம் இருந்த விக்ரகத்தையும் கோயிலுக்குக் கொடுக்க,ஆக மொத்தம் மூன்று விநாயகர் விக்ரகங்களின் கண்கொள்ளா தரிசனம் பக்தர்களுக்குக் கிட்ட ஆரம்பித்துவிட்டது.

கந்தனைக் குறிக்கும்படி வேல் ஒன்றினையும் பிரதிஷ்டை செய்திருக்கின்றனர்.

உயர்ந்து ஓங்கி நிற்கும் பல மாடிக் கட்டடங்கள் நிறைந்த சிங்கப்பூரின் கியோங்க் சைக் சாலையின் நடுவே நம்மூர்க் கோபுரம் தனித்து கம்பீரமாக நின்று கண்ணைக் கவர்ந்து நம்மைச் சுண்டியிழுக்கிறது.

கோயிலில் மின்னும் தமிழ் எழுத்துகள், முதல் கும்பாபிஷேகம் 1925-ல் நடந்தேறியுள்ளது என்று நமக்கு வரலாறு கூறுகின்றன.

1975, 1989-ம் வருடங்களைத் தொடர்ந்து, 2007-ல் நடந்த கும்பாபிஷேக விழா நகரத்தாரால் வெகு சிறப்பாக நடத்தப்பட்டிருக்கிறது.

கோயிலை நிர்வகிக்கும் நகரத்தார் பல லட்சங்களை செலவு செய்து சித்தி விநாயகர் கோயிலின் தோற்றத்தையே அதியற்புத அழகுடன் மாற்றியிருக்கிறார்கள்.

மெய், வாய், கண்கள், மூக்கு மற்றும் செவிகள் ஆகிய ஐம்பொறிகளையும் மனம் என்னும் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து இறை வழிபாட்டில் ஈடுபடுங்கள் என்று அமைதியாக உணர்த்துவதுபோல் உள்ளது ஐந்து நிலைக் கோபுரம்.

மிக அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய துவாரபாலகர்கள் கருவறையின் இருபுறமும் கம்பீரமாக நிற்கின்றனர்.

தேவாதி தேவர் பலர் வணங்கியவரும், நமக்கு மோட்சத்தை அளிப்பவரும், பரம்பொருளுக்கு நிகரானவருமான கணபதி இங்கே மிகுந்த மகிழ்வுடன் கையில் மோதகத்தைப் பிடித்துக்கொண்டு, அடியவர்களின் குறைகள் களைந்து நம்மைக் காக்கும், வற்றாத வரம் பல நல்கும் சிங்கப்பூர் சித்தி விநாயகராக அழகுத் திருக்கோலத்தில் காட்சியளிக்கிறார்.

கருவறையில் மூலவரோடு, இரண்டு விக்ரகங்களுக்கும் கூட வெள்ளிக் கவசம் சாத்தியிருக்கிறார்கள். ஒன்று, இரண்டு, மூன்று என மேலிருந்து கீழே கொலுப்படிகள் போன்று அமர்ந்து அருள்புரிகின்றனர், யானைமுகக் கடவுள்கள்.

முழுமுதற் கடவுள் அடியவர்களின் எல்லாக் காரியங்களிலும் விக்னத்தைப் போக்கி வெற்றியை அளிப்பார் என்பது நமக்குத் தெரிந்ததே. இங்கு மூன்று விநாயகர்கள் அருள்பாலிப்பதால்,எடுத்த காரியங்களில் எல்லாம் மும்மடங்கு வெற்றி நிச்சயம் என்கின்றனர்.

மல்லிகை, ரோஜாப் பூ மாலைகள் மட்டுமன்றி இங்கு பிள்ளையாருக்கு செவ்வாய்க் கிழமைகளில் சாத்தும் வெற்றிலை மாலை கூட இங்கு கிடைக்கிறது. தேங்காய், பழ நைவேத்தியத்திற்கும் கவலையே இல்லை. அப்பம், கொழுக்கட்டைகளோடு சதுர்த்தி பூஜைகளை ஜமாய்க்கிறார்கள் சிங்கப்பூர்வாசிகள்.

கோயிலருகே பூக்கட்டி விற்பனை செய்வோர் யாவரும் தமிழர்களே.

உலகின் மிக நாகரிகமான நகரத்தில் இப்படி ஒரு பாரம்பரியம் மறக்காத கோயில். பக்தி மணத்தோடு கோயிலெங்கும் தமிழ் மணமும் வீசுவது மகிழ்ச்சியாக இருக்கிறது.

சீன,மலாய் மக்களும் குட்டிக் கொண்டு கும்பிட்டு தோப்புக்கரணம் போடுவது அழகோ அழகு!

சிங்கப்பூரின் சுத்தம் பற்றிக் கூறவே வேண்டியதில்லை. அத்தூய்மையைக் கோயிலிலும் காண முடிகிறது.

நெரிசலான சைனா டவுன் பகுதியில் இக்கோயில் இருந்தாலும், உட்பிராகாரம் அமைதியோ அமைதி. தியானத்தில் அமர்ந்தால் நேரம் போவதே தெரியாது...!

‘கிட்டங்கிகள்’ என்னும், வணிகத்தை நடத்தி வந்த செட்டியார் சமூகத்தினராலேயே இன்று வரை கோயில் நிர்வகிக்கப்படுகிறது.

வாரநாட்கள், விடுமுறை நாட்கள் என்ற பாரபட்சம் இல்லை. மக்கள் அனைவருக்குமே இஷ்டக் கடவுளாதலால் எப்பொழுதும் கோயிலில் பக்தர் கூட்டம் நிரம்பி வழிகிறது. சங்கடஹர சதுர்த்தி அன்று மக்கள் கூட்டம் சற்று அதிகமாகவே இருக்கிறது. வருடாந்திர பிள்ளையார் சதுர்த்தி விழாவின்போது பத்து நாட்களுக்கும் மேல் கொண்டாட்டங்கள் பல சிறப்பாக நடக்கின்றன.

தினந்தோறும் அதிகாலை ஆறு மணிக்கு அபிஷேகத்துடன் தொடங்கும் பூஜைகள் இரவு எட்டு மணிக்கு மேல் நிறைவு பெறுகின்றன.

சுமார் இருநூறு பேர் கலந்து கொள்ளும் அளவு திருமணம் மற்றும் வீட்டு விசேஷங்கள் நடத்த பெரிய ஹால் கோயிலிலேயே கட்டப்பட்டிருக்கிறது.
சிங்கப்பூரின் சித்தி விநாயகரை மனக்கண்ணால் தரிசித்து, சற்று நேரம் அவர் அருள்பற்றி சிந்தித்தாலே போதும்,துயரெல்லாம் துடைத்து வேண்டியனவெல்லாம் ஓடோடி வந்து அருள்வார் என்பது நிச்சயம்.


எப்படிப் போகலாம்?

பிற நாடுகளைக் காட்டிலும் சிங்கப்பூர் செல்ல பயண நேரமும், கட்டணமும், விசா பிரச்னைகளும் குறைவே. தகவல் பலகைகளும் வரைபடங்களும் தமிழிலிருப்பதால் முன் அனுபவம் இல்லாதவர்கூட எளிதாகச் சென்று வரலாம்.

மாஸ் ராபிட் ட்ரான்ஸ்போர்ட் (எம்.ஆர்.டி) என்னும் அதி வேக ரயிலில் அவுட் ராம் நிறுத்தத்தில் இறங்கினால், வேக நடையில் சிங்கப்பூரின் கியோங்க் சாக் சாலை மற்றும் க்ரேத்தா ஆயர் சாலையின் சந்திப்பில் உள்ள இக்கோயிலை வந்தடையலாம். அல்லது எல்.ஆர்.டி. எனும் லைட் ட்ரான்ஸ்போர்ட் சிஸ்டம் பஸ் அல்லது ட்ரெயின் மூலமாகவும் வரலாம்.

Comments