தாழிக்குள் இருந்தாள் பூமியில் கிடைத்தாள்



வருடம் முழுவதும் வற்றாத தாமிரபரணி, வளம் சேர்க்கும் கருணையாறு, வாழ்விக்கும் உள்ளாறு என மூன்று நதிகள் சங்கமிக்கும் இடம் முக்கூடல்! ஊரின் தென்திசையில், தாமிரபரணி நதிக்கரையில் எழில் சூழ வீற்றிருந்து அருள்பாலிக்கிறாள் ஸ்ரீமுத்துமாலை அம்மன்!



திருநெல்வேலியில் இருந்து சுமார் 20 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது முக்கூடல் கிராமம். முக்கூடல் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராம மக்கள், அந்தக் காலத்தில் குரங்கணியில் உள்ள ஸ்ரீமுத்துமாலை அம்மனை வழிபட்டு வந்தனர். பிற்காலத்தில் வழிப்பறிக் கொள்ளையர்களின் அட்டகாசம் அதிகரித்து வந்ததால், குரங்கணி சென்று வழிபட மக்கள் பயந்தனர்.

அதனால், முக்கூடலைச் சேர்ந்த குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள், குரங்கணி ஸ்ரீமுத்துமாலை அம்மன் கோயிலில் இருந்து பிடிமண் எடுத்து வந்து... முக்கூடல் தாமிரபரணி ஆற்றின் வட கரையில் குடில் அமைத்து வழிபடத் துவங்கினர்.

அந்தக் காலத்தில் சலவைத் தொழிலா ளர்கள் துணிகளைத் துவைத்த பின்பு உவர் மண் தாழிகளை மணல் மீது கவிழ்த்து வைத்து மறுநாள் எடுப்பது வழக்கம். ஒருநாள் அப்படி எடுக்கும் போது, ஒரு தாழியை மட்டும் எடுக்கவே முடியவில்லை. இதைக் கண்டு அனைவரும் குழம்பினர்.



அன்றிரவு, கோயில் பூசாரி கனவில் தோன்றிய அம்மன், 'தாழியை எடுக்க வேண்டாம். அங்கு நான் இருக்கிறேன். அதைச் சுற்றி கோயில் கட்டி வழிபடுங்கள்’ என்று ஆணையிட்டாளாம்.

விடிந்ததும், கனவில் வந்து அம்மன் இட்ட ஆணையை ஊருக்குத் தெரிவித் தார் பூசாரி. இதையடுத்து, அங்கே அழகிய ஆலயத்தை அமைத்து, வழிபடத் துவங்கினர் முக்கூடல் மக்கள். இன்றைக்கும் கருவறையில் வீற்றிருக்கும் அம்மனுக்கு அருகில் உள்ள தாழிக்கும் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன.

சிலகாலம் கழித்து, அம்மனுக்கு விக்கிரகம் அமைக்க முடிவு செய்தனர். அப்போது கோயில் அர்ச்சகரின் கனவில் தோன்றி, 'அருகில் உள்ள கிராமத்தின் மேற்குப் பகுதியில், வயலில் புதைந்திருக்கிறேன். அங்கு சென்றால், வானத்தில் கருடன் வட்டமிட்டு நிழல் காட்டும் இடத்தில் நான் இருக்கிறேன்’ என்று சொல்லி மறைந்தாள் அம்மன்.



அதேபோல், வயலுக்குச் சொந்தக் காரரின் கனவிலும் தோன்றி, 'விக்கிரகம் எடுப்பதைத் தடுக்க வேண்டாம்’ என்று அருளினாளாம்.

இதையடுத்து, கருடன் அடையாளம் காட்டிய இடத்தில், கருங்கல் விக்கிரகத் திருமேனி கிடைத்தது. அந்த விக்கிரகத்தை எடுத்து வந்து, மண் தாழிக்கு அருகில் பிரதிஷ்டை செய்து வழிபடத் துவங்கினார்கள் என்கிறது ஸ்தல வரலாறு.

''1967-ல் பட்டப்பகலில் கோயிலில் இருந்த செம்பு உண்டியலை சிறுவன் ஒருவன் திருடிச் சென்றான். அப்போது, பாதி வழியிலேயே அவனுக்கு கண்களில் ஒளி மங்கி, சுருண்டு விழுந்துவிட்டான். பிறகு, மனம் திருந்தி, உண்டியலைக் கோயிலில் கொண்டு வந்து வைத்த பிறகுதான், அவனுக்குப் பார்வை கிடைத்தது'' என்கிறார் ஊர்ப் பெரியவர் பூவையா.

''இன்னொரு சம்பவம்.... 1939-ஆம் வருடத்துக்கு முன்பு வரை இந்தத் திருக்கோயில் குடிசையாகத்தான் இருந்தது. ஒருமுறை ஆற்றில் பயங்கர வெள்ளம். குடிசைகள் அனைத்தும் அடித்துக் கொண்டு போயிற்று. வெள்ளம் வடிந்ததும் ஊர்மக்கள் எல்லோரும் சென்று பார்த்தபோது, அம்மன் குடியிருந்த குடிசை இருந்த இடத்தில், எந்தப் பாதிப்பும் இல்லாமல் இருந்ததாம்! அம்மன் விக்கிரகமும் தீபாராதனைத் தட்டும் அப்படியே இருந்தது'' என்று சிலிர்ப்புடன் தெரிவிக்கிறார் பாலகன் ஆறுமுகசாமி.

தைப்பூசத் திருவிழா, மகா சிவராத்திரி, வைகாசி விசாகம், சனிப் பெயர்ச்சி, குருப்பெயர்ச்சி மற்றும் மாதாந்திர பௌர்ணமி ஆகிய நாட்களில், சிறப்பு பூஜைகள் நடைபெறும் ஆலயத்தில், வருடந்தோறும் ஆனி மாதத்தில், ஸ்ரீமுத்துமாலை அம்மன் கோயில் திருவிழா பத்து நாள் விழாவாகச் சிறப்புறக் கொண்டாடப்படுகிறது.



1938-ஆம் வருடம் வரை, இந்தக் கோயிலில், ஆடு, கோழி பலியிடும் வழக்கம் இருந்து வந்தது. ஆனாலும், அனைத்து மக்களும் ஒற்றுமையாக, அம்மனை வழிபடும் இடத்தில் பலியிட வேண்டாம் என பிறகு முடிவு எடுத்தார்களாம்!

''ஸ்ரீமுத்துமாலை அம்மன், கருணைக் கடல். அருளையும் பொருளையும் அள்ளித் தருபவள். அம்மனின் அனுக்கிரகத்தால், குழந்தை வரம் கிடைத்தவர்களும் திருமண வரம் கிடைத்தவர்களும் ஏராளம். கை, கால் நோவு மற்றும் நோய் தீரவேண்டி அம்மனை வேண்டுவோர், உடல் பாகங்களை மரக்கட்டையில் செய்து, காணிக்கையாக்கி வழிபட்டால், விரைவில் குணம் அடைவார்கள்'' என்கிறார் பக்தர் காளிமுத்து.



Comments