தட்சிணாமூர்த்தி

சக்தி தட்சிணாமூர்த்தி: அம்பிகையுடன் காட்சி தரும் அரிய வடிவம் இது. சென்னைக்கு அருகில் (பெரிய பாளையம் போகும் வழியில்) உள்ள தலம் திருக் கண்டலம் எனப்படும் திருக்கள்ளில்; தேவாரப் பாடல் பெற்றது. சக்தி தட்சிணாமூர்த்தி தனி சந்நிதியில் அருள் பாலிக்கும் தலமும்கூட! இங்கு, தட்சிணாமூர்த்தியின் மடியில் அம்பிகை அமர்ந்திருக்கிறாள்.


மேற்கரங்களில் ஜெப மாலை மற்றும் அமுத கலசமும், முன் வலக் கரத்தில் சின்முத்திரை; இடக் கரத்தில் புத்தகமும் திகழ... அம்பிகையை அணைத்த கோலத்தில் காட்சியளிக்கிறார் சக்தி தட்சிணாமூர்த்தி. இந்தத் திருவடிவில் ஆலமரம் மற்றும் முயலகன் இல்லை. இதுபோன்ற பஞ்சலோகப் படிமம் வாணியம் பாடி ஆலயத்தில் உள்ளது. ஞானமும் சாந்தியும் இணை பிரியாதவை என்பதை உணர்த்துகிறது இந்தத் திருவடிவம். திருமணப் பேறு, இனிமையான இல்லறம் வேண்டி, சக்தி தட்சிணாமூர்த் தியை வழிபடுகிறார்கள். சக்தி தட்சிணாமூர்த்தி, கோஷ்டத்தில் அமைந்துள்ள தலம் சுருட்டப்பள்ளி. இந்தப் பெருமான் தம் வலக் காலைத் தொங்க விட்டு, இடக் காலை குத்திட்ட நிலையில் வைத்து, யோக பட்டம் தரித்துள்ளார். பின் கரங்களில் மான்- மழு. இடப்புறம் நிற்கும் அன்னை, பெருமானை தழுவிய நிலையில் காட்சி தருகிறார். இந்த வடிவை, 'சாம்ய தட்சிணாமூர்த்தி' என்பர்.

மேதா தட்சிணாமூர்த்தி: மயிலாடுதுறை- வள்ளலார் திருக்கோயிலில், ரிஷபத்தின் மீது அமர்ந்து ஞானம் உபதேசிக்கும் தட்சிணாமூர்த்தியைக் காணலாம். இந்த வடிவை 'மேதா தட்சிணாமூர்த்தி' என்பர். ரிஷபதேவர், தர்மத்தின் வடிவம். தர்மத்தின் பொருளை உபதேசிக்கும் தட்சிணாமூர்த்தியுடன் ரிஷப தேவரையும் சேர்த்து வழிபடுவது சிறப்பு. திருவாரூர்- சித்தீச்சரம் திருக்கோயில், சேந்தமங்கலம் ஆபத்சகாயேஸ்வரர் கோயில் ஆகிய தலங்களில் மேதா தட்சிணாமூர்த்தியை தரிசிக்கலாம். திருவிடைமருதூர் சாம்பவி தட்சிணாமூர்த்தி வடிவில்... காலடியில் நந்தி படுத்திருக்க, அதன் முதுகில் வலக் காலை ஊன்றிக் காட்சி தருகிறார் பெருமான்.

சிவாலய கோபுரங்கள் மற்றும் விமானங்க ளிலும் விநாயகர் மற்றும் முருகன் ஆலயங்கள் சிலவற்றிலும் தெற்கு நோக்கிய விமான முகங்களில் தட்சிணாமூர்த்தி வடிவங்கள் உள்ளன. திருவஹிந்திரபுரம், உத்தரமேரூர் ஆகிய தலங்களில் உள்ள திருமால் ஆலயங்களி லும் விமானத்தில் தட்சிணாமூர்த்தி வடிவம் உள்ளது குறிப்பிடத் தக்கது.

சில தலங்களில் உள்ள தட்சிணாமூர்த்தி வடிவங்கள் அபூர்வமானவை. அவற்றில் ஒன்று தக்கோலம்- சோமநாதேஸ்வரர் ஆலயத்தில் உள்ள உத்குடிகாசன தட்சிணாமூர்த்தி வடிவம். உத்தரகாமிகாகமத்தில் குறிப்பிட்டுள்ளபடி, இடக் கரத்தை முழந்தாளின்மீது நீட்டியுள்ள யோக வடிவம் இது. சென்னைக்கு அருகில் உள்ள திரிசூலம் மற்றும் திருவெண்காடு ஆகிய தலங்களிலும் இந்த வடிவைக் காணலாம். திருக்கழுக்குன்றம் பக்தவத்சலேஸ்வரர் ஆலயத்தில் உள்ள வடிவம், யோக பட்டத்துடன் கூடிய உத்குடிகாசனர்.

அரக்கோணம் அருகில் உள்ள இலம்பையங்கோட்டூர் ஆலயத்தில் உள்ள ஆத்மநாத தட்சிணாமூர்த்தி வடி வம் வலது முன் கையை சின்முத்திரையுடன் மார்பில் வைத்து, பின் கரங்களில் சூலம்- ஜபமாலை கொண்டு திகழ்கிறது. மழுவேந்திய தட்சிணாமூர்த்தியை சுவாமி மலையை அடுத்த தியாகசமுத்ரம் கயிலாயநாதர் ஆலயத் தில் காணலாம். திருச்சி- துவாக்குடிக்கு அருகில் உள்ள திரு நெடுங்களம்- நெடுங்களநாதர் ஆலயத்தில்... இரு கால்களையும் மடித்து ஒன்றின்மேல் ஒன்றை படிய விட்டு அமர்ந்திருக்கும் தட்சிணாமூர்த்தி வடிவை, 'ராஜ லிங்காசன தட்சிணாமூர்த்தி' என்பர்.

கழுகுமலை வெட்டுவான் கோயிலில், மிருதங்கம் வாசிப்பது போன்று அமைந்திருக்கும் தட்சிணா மூர்த்தி திருக்கோலம் அபூர்வமானது. காசியில் அனுமன்காட்டில் உள்ளது சக்ரலிங்கேச்வரர் ஆலயம். இங்கிருக் கும் அர்த்தநாரீஸ்வர தட்சிணாமூர்த்தி உற்சவர் திருமேனி சிறப்பானது.

திருப்புறம்பியம் சாட்சிநாதர் கோயிலின் முன்புறம் தனிச் சந்நிதியில் உள்ள தட்சிணா மூர்த்தி திருவடிவை சம்பந்தர் மற்றும் மணிவாசகர் ஆகியோர் போற்றியுள்ளனர்.

திருப்புத்தூருக்கு அருகிலுள்ள பட்டமங்கை சுந்தரேசர் ஆலயத்தில், தட்சிணாமூர்த்தி சந்நிதி கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. இவர் வீராசனத் தில் விளங்குகிறார். தட்சிணாமூர்த்தி ஆலயங்களில் இதுவே பெரியது. சென்னை- திருவொற்றியூர் தியாக ராஜ சுவாமி ஆலயத்தின் வெளிப்புறம், யோகீஸ்வரர் திருமடத்தில் உள்ள மிகப் பெரிய தட்சிணாமூர்த்தி, வடக்கு நோக்கிக் காட்சி தருகிறார். திலதைப்பதி (தற்போது செதிலப்பதி எனப்படுகிறது) எனும் தலத்தில், ஆலயத்தின் வெளியே உள்ள ஆதிவிநாயகர் வடிவம், தட்சிணாமூர்த்தி என்பது ஆய் வாளர்களது கருத்து. பத்மாசனத்தில் அமர்ந் திருக்கும் தட்சிணாமூர்த்தியை திங்களூர் கயிலாயநாதர் ஆலயத்தில் காணலாம்.

திருவிடைக்கழி சுப்ரமண்ய சுவாமி கோயில் அர்த்த மண்டபத்தில் விசேஷமான தட்சிணாமூர்த்தி மூர்த்தத்தை தரிசிக்கலாம். இந்த வடிவில் இடம்பெற்றிருக்கும் ஆல மரத்தில் பறவை, பாம்பு, பொக்கணம் (விபூதிப் பை) முதலியன காணப்படுகின்றன. தஞ்சைப் பெரிய கோயிலில், ராஜராஜசோழன் அளித்துள்ள தட்சிணாமூர்த்தி உற்சவ மூர்த்தி வடிவில்... ஒன்பது பெருங்கிளைகள் மற்றும் பல சிறு கிளைகளுடன் திகழும் ஆல மரத்தில் விபூதிப் பை, வெண்சாமரம் ஆகியன வைக்கப்பட்டுள்ளன.

பாசுபத சைவர்கள் வழிபடும் தட்சிணா மூர்த்தி யான லகுளீசர் திருமேனியை திருவொற்றியூர் மற்றும் திருவையாறு ஐயாறப்பர் கோயில்களில் காணலாம். இந்த வடிவில்... பின் கரங்களில் சூலம்- கபாலம் திகழ, வலது முன் கரம் சின் முத்திரையுடனும் இடது முன் கரம் தியான முத்திரையுடனும் அமைந்துள்ளது. சடையை எடுத்துக் கட்டியுள்ள அமைப்பில், பத்மாசனத்தில் திகழ்கிறார் இவர்.



நவக்கிரக குருவும் தட்சிணாமூர்த்தியும்

'குருபகவான்' என்ற பெயரில்... நவக்கிரக குருவுக்கும், லோக குருவான தட்சிணாமூர்த்திக்கும் வித்தியாசம் புரியாமல் மக்கள் குழம்பி வருகின்றனர். இதனால் அநேக வழிபாடுகள் முறைமாறி நடந்து வருகின்றன.

நவக்கிரக குரு என்பவர், பிரம்ம புத்திரராகிய ஆங்கிரச மக ரிஷியின் மைந்தன் ஆவார். இவர், சிவபெருமான் அருளால் தேவர்களுக்கு குருவாகவும், நவக்கிரகங்களில் ஒருவராகும் பேற்றையும் பெற்றார். இவரை வாசஸ்பதி, பிரகஸ்பதி, தேவ குரு என்று அழைப்பர். வடக்கு நோக்கி இருக்கும் இவர் பொன்னாபரணங்களை அணிந்தவர். திருமணங்களை கூட்டி வைப்பவர். உயிர்களுக்கு, போகங்களை அளிக்கும் பேறு பெற்றவர்.

உலகம் தோன்றி நிலைபெற்று, அந்த உலகையே மீண்டும் ஒடுங்கச் செய்யும் பேராற்றல் மிக்க சிவபெருமானின் வடிவமே தட்சிணாமூர்த்தி! இவர் காமனை வென்றவர். மகா யோகி; ஞானத்தை அருள்பவர்; கல்லாடை புனைந்தவர்.

'குருபகவான்' என்ற பெயர் குழப்பத்தால் தட்சிணாமூர்த்திக்கு மஞ்சள் ஆடை மற்றும் கொண்டைக் கடலை மாலைகளை அணிவித்தல், மஞ்சள் பொடி அபிஷேகம் ஆகியன செய்தல் சரியல்ல. குருப் பெயர்ச்சிக்கும் தட்சிணாமூர்த்திக்கும் சம்பந்தமே கிடையாது.

-

Comments