நூற்றுட்டு முறை வலம் வந்தால் லக்ஷ்மி கடாக்ஷம்

காசி க்ஷேத்திரத்திலிருந்து சிவலிங்கத் திருமேனியை எடுத்து வந்து தென்னகத்தில் பிரதிஷ்டை செய்த தலங்கள் பல உண்டு. அவற்றில், பொறையார் ஸ்ரீவிசாலாட்சி சமேத ஸ்ரீவிஸ்வநாதர் ஆலயமும் ஒன்று!

நாகப்பட்டினம் மாவட்டம் தரங்கம்பாடியில் இருந்து சுமார் 3 கி.மீ. தொலைவில் உள்ளது பொறையார். அழகிய இந்தக் கிராமத்தில், சுமார் 800 வருடப் பழைமை வாய்ந்த திருக்கோயிலில் இருந்தபடி, தன்னை நாடி வரும் அடியவர்களுக்கெல்லாம் அருளிக் கொண்டிருக்கிறார் சிவனார்.

காசியம்பதியில், கங்கை நதியில் இருந்து கிடைத்த சிவலிங்க மூர்த்தம் இது. எனவே, ஸ்வாமியின் திருநாமம் ஸ்ரீவிஸ்வநாதர் என்றும், அம்பாளின் திருநாமம் ஸ்ரீவிசாலாட்சி என்றும் அமைந்ததாகச் சொல்கிறது ஸ்தல புராணம்.

கோயிலின் ஸ்தல விருட்சம் - பவளமல்லி. ஸ்ரீவிநாயகர், ஸ்ரீசுப்ரமணியர், ஸ்ரீதட்சிணாமூர்த்தி, ஸ்ரீஅய்யனார், ஸ்ரீதுர்கை. ஸ்ரீசரஸ்வதிதேவி ஆகியோர் தனிச் சந்நிதிகளில் இருந்தபடி அருள்பாலிக்கின்றனர்.

பொறையார் ஸ்ரீவிஸ்வநாதர் கோயிலில் பிரதோஷம் சிறப்புற கொண்டாடப்படுகிறது. இந்தக் கோயிலில், சோமவாரம் மற்றும் சனிப் பிரதோஷங்களில் கலந்துகொண்டு, சிவ- பார்வதியை தரிசித்து வந்தால், காசி க்ஷேத்திரத்துக்குச் சென்று வணங்கிய பலன் கிடைக்கும் என்பர்.

அழகும் கருணையும் கொண்ட அம்பிகைக்கு, ஆடிப்பூர நன்னாளில் வளையல் அணிவித்து விழா எடுப்பார்கள். இந்த வளையலைப் பிரசாதமாகவும் தருவார்கள். திருமண பாக்கியத்துக்கு தவிப்போரும், குழந்தை வரம் கிடைக்காமல் வருந்துவோரும் அம்பிகையை வணங்கி, வளையலை அணிந்து கொண்டால், கல்யாண வரம் கைகூடும்; பிள்ளை பாக்கியம் கிடைக்கப் பெறலாம்; கருவுற்றவர்களுக்கு சுகப்பிரசவம் நிகழும் என்பது ஐதீகம்!

காசிக்கு நிகரான இந்தத் தலத்தில், மாசி மகா சிவராத்திரியும் வெகு விமரிசையாகக் கொண்டாடப் படுகிறது. அன்று ஒவ்வொரு பூஜையின்போதும், ஸ்ரீவிஸ்வநாத ஸ்வாமிக்கு 16 வகை அபிஷேகங்களுடன், சிறப்பு அலங்காரம் மற்றும் பூஜைகள் நடந்தேறுகின்றன.

தீராத நோயால் அவதிப்படுபவர்கள், ஏதேனும் தோஷத்துக்கு ஆளானவர்கள் மாலையில் இங்கு வந்து, சிவனாருக்கு செவ்வரளி சார்த்தி, சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் செய்து விளக்கேற்றி, அன்றிரவு 108 முறை ஆலயத்தைப் பிராகார வலம் வந்து, மறுநாள் அதிகாலையில் நடைபெறும் சிறப்பு பூஜையைத் தரிசித்தால், சகல நலனும் பெற்றுப் பெருவாழ்வு வாழலாம் என்பது நாகை மாவட்ட மக்களின் நம்பிக்கை!

மகா சிவராத்திரி புண்ணிய நாளில் இங்கு வந்து, சிவனாருக்கு அபிஷேகப் பொருட்களும் சர்க்கரைப் பொங்கல், தயிர்சாதம், புளியோதரை என ஏதேனும் நைவேத்தியமும் வழங்கி சிவ தரிசனம் செய்தால், பித்ரு தோஷத்தில் இருந்து நீங்கி, பித்ருக்களின் ஆசீர்வாதத்தையும் பெறலாம் என்கிறார் கோயிலின் சுப்ரமணிய குருக்கள்.

Comments