அருள் கவி

தமிழுக்கு ஒரு கம்பன். `யாமறிந்த மொழிகளிலே கம்பனைப் போல்...' என்று அவரையே முதலில் வைத்துப் போற்றுகிறான் பாரதி. கம்பனுக்கு இணையாக கன்னடத்திலும் ஒரு கவி உண்டு. அவரே பம்பகவி. இயற்பெயர் நாகசந்திரர். ஆனால் கன்னட மொழி மக்கள் அவரை `அபிநவ பம்பன்' என்று குறிப்பிடுகின்றனர். அதுவே அவரது பெயராகவும் நிலைத்துவிட்டது.

இன்று பீஜப்பூர் எனப்படும் ஊரே முற்காலத்தில் விஜயபுரம் என்று வழங்கப்பட்டது. பம்பகவி பிறந்த ஊரும் அதுவே. மன்னனைப் பாடி பரிசில் பெற்றுப் பசி தீர்ந்த பஞ்சைக் கவிகளின் பட்டியலில் மற்றும் ஒருவர் அல்ல, அவர். செல்வமும் செல்வாக்கும் மிக்க குடும்பத்திலே செல்லமும் சீராட்டும் பெற்று வளர்ந்தவர். ஆயினும் பொருள் வாழ்வைப் புறந்தள்ளி தெய்வமணம் கமழும் அட்சரத் தொண்டில் தோய்ந்து அருள்வாழ்வு வாழ்ந்தவர்.

தனது புலமைத் திறனால் புகழுக்குரியவராகி கவிதா மனோகரா, பாரதீ கர்ணபூர, சாகித்ய வித்யாதர முதலிய விருதுகளைப் பெற்றவர். கன்னடத்தில் இவர் எழுதிய `ராம சந்திர சரித புராணம்' என்ற ராமாயணத்தின் ஒவ்வோர் அத்தியாயத்தின் முடிவிலும் இந்த விருதுகளில் ஒன்றைக் கதாநாயகன் மேல் ஏற்றி இவர் பாடியிருக்கிறார். இவருடைய காலம் கி.பி.12ஆம் நூற்றாண்டின் முற்பகுதி என்று நிர்ணயித்திருக்கிறார்கள்.


பம்ப ராமாயணத்தில் புத்திர காமேஷ்டி வேள்வி இல்லை. ராமனுடைய தாயின் பெயர் கௌசல்யை அல்ல; அபராஜிதா! சுமித்திரைக்கு லட்சுமணன் ஒரே மகன். சத்துருக்கனன் சுப்ரபை என்ற மற்றொரு மனைவியின் மகன். கைகேயிக்கு பரதன் மகன்.

விசுவாமித்திரரின் பிரவேசமே பம்ப ராமாயணத்தில் இல்லை. நாரதர், சீதையைப் பார்த்து மோகித்து, அவள் இவரை வெறுத்ததால் அவளுக்குத் தீங்கு செய்யவும் முயற்சி செய்கிறார்.

ஜனகரிடம் வஜ்ராவர்த்தம், ஸாராவர்த்தம் என்ற இரண்டு வில் இருக்கின்றன. அவற்றில் ஒன்றை ராமன் உடைத்து சீதையை மணக்கிறான். மற்றொன்றை லட்சுமணன் உடைத்து சந்திரதுவஜன் என்பவனின் இரண்டு மகள்களையும் மணந்து கொள்கிறான்.

பரதன், ராம-லட்சுமணர்களுக்குக் கிடைத்த பெருமையைக் கண்டு பொறாமையும் வைராக்கியமும் கொள்கிறான். இங்கே ராமன் காட்டுக்குப் போக வேண்டுமென்று கைகேயி வரம் கேட்பதில்லை. பரதனுக்குப் பட்டம் கட்ட வேண்டுமென்று கேட்கிறாள்.

ராமன், தானே திக்விஜய யாத்திரை போவதாகக் கிளம்பிவிடுகிறான். பிறகு, கைகேயியே ராமனைத் திரும்ப அழைக்க வேண்டும் என்று கோருகிறாள். தன் மகன் பரதன் மேல் கொண்ட அதீத பாசத்தால் ராஜ்ஜியத்தைக் கேட்டுவிட்டாளே தவிர, அப்புறம் பலமுறை பச்சாதாபப்பட்டு ராமனை நினைத்து வருந்துகிறாள். அவன் நாடு திரும்ப வேண்டும் என்று வற்புறுத்துகிறாள்.

பம்பகவி, ராமனை ஏக பத்தினி விரதனாக சித்திரிக்கவில்லை. க்ஷத்திரியர்களுக்கே உரிய லட்சணமாக ராமனும், லட்சுமணனும் தங்கள் திக்விஜயத்தின்போது மேலும் சில திருமணங்கள் செய்து கொள்வதாகக் காட்டுகிறார். ராமன், சுக்ரீவனுடைய மகளையும், ரத்தினபுரத்து அரசனுடைய மகளையும் திருமணம் செய்து கொள்கிறான்.

மாரீசன் வரவு இதில் இல்லை. ராமன் சீதைக்கு ஜடாயுவைக் காவல் வைத்துவிட்டுப் போகிறான்.

சுக்ரீவன் முதலானோர் குரங்குக் கொடி உடையவர்கள்.

வாலி, கைலாச மலையில் தவம் செய்து கொண்டிருந்தபோது, ராவணன் மலையைப் பெயர்க்கிறான். வாலி, கால் பெருவிரலால் மலையை அழுத்த, ராவணன் துடித்துப் போய் கூக்குரலிடுகிறான். அதனாலேயே ராவணன் என்று அவனுக்குப் பெயர் ஏற்பட்டது.

பம்பகவி அனுமனையும் பிரமசாரியாகச் சொல்லவில்லை. ராவணனுடைய தங்கை சந்திரநகி (சூர்ப்பணகை)யின் மகளான அனங்கபுஷ்பையை அனுமன் கல்யாணம் செய்து கொள்கிறார். தங்கையின் பொருட்டு ராவணன் சீதனமாகக் கொடுத்த கர்ண குண்டலபுரத்தை அனுமன் அரசாளுகிறார். ராவணனுடைய நண்பனாக இருக்கிறார்.

ராவணன், சீதையை அபகரித்த அக்கிரமச் செயலால் அவனுக்கு எதிரி ஆகிவிடுகிறார். ராமனுக்குத் துணை செய்கிறார்.

ராவணனைக் கொன்றவன் ராமன் அல்ல; லட்சுமணனே. இப்படி வால்மீகியிலிருந்து பல மாறுதல்கள் இவரது ராமாயணத்தில் உள்ளன.

கவி ஜைன மதத்தைச் சேர்ந்தவர். ஆதலால் வேள்வியை விரும்பாதவர். பரந்த அறிவுடைய இவர், சமண நூல்களில் வருவது போல் கதாநாயகனுக்கு தயை, வீரம், தைரியம் இவற்றை மட்டும் சொல்லி, வேள்வி, யுத்தம், கொலை இவற்றைக் கூடிய மட்டும் தவிர்த்திருக்கிறார்.

கன்னடத்தில் வேறு சில ராமாயணங்களும் உண்டு. ஆயினும் கன்னட மக்கள் பம்பனுடைய `ராமசந்திர புராணமே' சிறந்த இலக்கியம் என்று ஏற்றுப் போற்றுகின்றனர்.


Comments