தலை எழுத்தை மாற்றும் பிரம்மா

திருச்சியிலிருந்து சுமார் 25 கி.மீ. தொலைவில் அமைந்திருக்கிறது திருப்பட்டூர் பிரம்ம புரீஸ்வரர் திருக்கோயில்.

``சிவனுக்கு ஐந்து முகம், எனக்கும் ஐந்து முகம். ஆதலால், நானும் சிவனும் சமமே!'' என்று ஆணவம் கொண்டார் பிரம்மா. அவரது அடக்கமின்மையைத் தடுத்து நிறுத்த சிவபெருமான் தீர்மானித்தார். பிரம்மாவின் ஐந்து தலைகளுள் ஒன்றைக் கிள்ளியெறிந்தார்.

இதனால் பிரம்மாவின் தலையெழுத்து கேள்விக் குறியாயிற்று. எனவே சிவபெருமானை நினைந்து உருகிக் கண்ணீர் மல்க இத்தலத்தில் கடும்தவம் மேற்கொண்டார். சிவபெருமான் மனமிரங்கி மிக அழகிய தேஜஸுடன் கூடிய நான்முகனாகத் தோற்றமளிக்க பிரம்மாவுக்கு வரம் அளித்தார்.

இத்திருக்கோயிலில் பிரம்மாவிற்கென்று தனியே மிகப்பெரிய சன்னதி உள்ளது. பத்ம பீடத்தில் பத்மாசனத்தில் பிரம்மாவின் திருமேனி காணப்படுகின்றது. பிரம்மாவின் பெரிய முகம் முன்னோக்கியும், தோள்களின் இருபுறத்திலும் இரண்டு முகங்களும் இருக்கின்றன. மற்றொரு முகம் பின்பக்கமாகக் காணப்படுகின்றது.

இந்த பிரம்மாவை திங்கள், வியாழக்கிழமைகளில் தரிசிப்பவர்களுக்கு அனைத்து நலன்களும் உடன் கிடைப்பதாகச் சொல்கிறார்கள்.

பதஞ்சலி முனிவரும், வியாக்கிரபாதரும் இத்தலத்தில் தங்கித் தவம் செய்து வழிபட்டிருக்கிறார்கள் என்று இங்குள்ள கல்வெட்டு ஒன்றில் காணப்படுகிறது!

இந்திரன் கயிலாயத்திலிருந்து தீர்த்தம் கொண்டு வந்து திருவானைக்கா ஜம்புகேசுவரரை வழிபடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தான். ஒருநாள் திருப்பட்டூர் துணைக் கோயில் காசிவிசுவநாதரை வழிபடும் வியாக்கிரபாதரால் தடுத்து நிறுத்தப்பட்டு தீர்த்தம் கேட்கப்பட்டபோது, இந்திரன் தர மறுத்துவிட்டான். வியாக்கிரபாதர் கடும் சினமடைந்து உடனே `புலிபாச்சிக் குளம்' என்ற குளத்தை உருவாக்கினார். அதன் தீர்த்தம் கொண்டு காசி விசுவநாதரை வழிபாடு செய்தார்! வியாக்கிரபாதர் உருவாக்கிய புலிபாச்சிக் குளத்தில் இன்றும் எப்படிப்பட்ட கோடைகாலத்திலும் நீர் வற்றுவதே இல்லை என்பது அதிசயமாக உள்ளது.

திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரரின் திருக்கோயிலில் பன்னிரண்டு லிங்கங்கள் நடைமுறை வழிபாட்டில் இடம் பெற்றுள்ளன. பழமலைநாதர், கந்தபுரீஸ்வரர், பாதாளலிங்கேசுவரர், சுந்தரவனேசுவரர், தாயுமானவர், மண்டூகநாதர், ஏகாம்பரேசுவரர், காளத்திநாதர், ஜம்புகேசுவரர், சப்தகிரீசுவரர், கயிலாசநாதர், அருணாசலேசுவரர் என்று பெயரிடப்பட்டு நித்திய பூஜைகளும் வழிபாடும் நடைபெற்று வருகின்றன. மூலவராக விளங்கும் சுயம்புலிங்கமே பிரம்மபுரீஸ்வரர்.

திருப்பட்டூர் திருக்கோயிலுக்குள் நுழைந்ததும் முதல் நான்கு தூண்களில் நரசிம்ம அவதாரம், இரணியன் அழிவு இவற்றோடு தொடர்புடைய செய்திகளை விளக்கும் சிற்ப உருவங்களைக் காணமுடிகிறது. இந்தத் திருக்கோயிலின் ஐந்து நிலை ராஜகோபுரத்தைக் கட்டியவர் சோழ மன்னன் அநபாயன் என்று கல்வெட்டு கூறுகின்றது.

அம்பாள் பிரம்மநாயகியின் திருக்கோலம் நம் மனதைவிட்டு என்றும் அகலாதவண்ணம் அருள் மணம் பரப்புகின்றது. திருமணத்தடைகளை இவள் நீக்குவதால் பலரின் திருமண வாழ்வு சிறப்புற்றிருக்கின்றது.

திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரரின் கோயிலின் உட்பிரிவில் கோபுரத்துடன் கூடிய மற்றொரு கோயிலும் காணப்படுகின்றது. இது காஞ்சிபுரத்திலுள்ளது போன்ற கற்றளிக்கோயிலாகும்!

இக்கோயிலில் இருப்பது மிகப்பெரிய நந்தியாகையால் தனிச்சன்னதியில் நிலை நிறுத்தப்பட்டு பக்தர்களால் வணங்கப்பட்டு வருகின்றது. இந்த நந்தியின் சன்னதிக்கு எதிரே கயிலாயநாதர் அருள்பாலிக்கிறார். இந்தத் திருக்கோயிலில் ஆண்டில் மூன்று நாட்கள் முதல்மரியாதையைக் காலணி உற்பத்தித் தொழில் செய்வோர் பெறுகின்றனர்.

பங்குனி மாதத்தில் 15ம் தேதி முதல் மூன்று நாட்கள் காலை சூரியனின் ஒளிக்கற்றை சிவலிங்கத்தின்மீது படர்ந்து பரவசப்படுத்துகின்றது.

தலை எழுத்தையே மாற்றும் சக்தி படைத்த திருப்பட்டூர் பிரம்மாவை தரிசித்து அருள்பெற பக்தர்கள் குடும்பத்தோடு வந்து செல்கிறார்கள்.

காலை 7.30 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் 7.30 மணி வரையிலும் இத்திருக்கோயில் நடை திறந்திருக்கும்!

திருச்சி-பெரம்பலூர் நெடுஞ்சாலையில் சிறுகனூரில் இறங்கி,அங்கிருந்து 5 கி.மீ. தூரம் சென்றால் இத்திருக்கோயிலை அடையலாம். அல்லது திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து திருச்சி - வாழையூர் செல்கின்ற 98 ஆம் நெம்பர் டவுன்பஸ்ஸில் செல்லலாம்.

Comments