சத்யம் செய்து தந்த சர்ப்பம்

சைவமும், வைணவமும் வெவ்வேறு சித்தாந்தங்களைக் கொண்டிருந்தாலும் இறை பக்தி என்று வரும் போது அவை, இந்து தர்மம் என்ற ஒரே குடையின் கீழ் நின்று பல தெய்வத் திருப்பணிகளைச் செய்து வருகிறது.

அரியும், அரனும் ஒன்றுதான் என்பதை உணர்ந்த சிவனடியார்களும், வைணவப் பெருந்தகையாளர்களும் பல பழமை வாய்ந்த சிவ, விஷ்ணுதலங்களைப் புனருத்தாரணம் செய்து அவற்றில் சிறப்பான வழிபாடுகள் தொடர்ந்து நடைபெறும் வகையில் பேருதவி புரிந்து வந்துள்ளார்கள்.




அப்படித்தான் ஒரு வைணவப் பெருந்தகையாளர், தனக்குச் சொந்தமான நிலத்தில் பல நூற்றாண்டுகளாக மண்ணில் புதையுண்டு கிடந்த லிங்கத் திருமேனியாக சிவனும், அவரது இஷ்ட வாகனாதிபதியான நந்திகேஸ்வரரும் இருந்ததைக் கண்டு அத்தெய்வத் திருவுருவத்திற்கு ஒரு திருக்கோயிலை பண்டிகாவனூர் என்னும் ஊரில் நிர்மாணித்தார்.

ஈசன் கருவறையில் அமர்ந்துகொள்ள, கூடவே அம்பிகை திரிபுர சுந்தரியும், ஸ்ரீனிவாசப் பெருமாள் - குபேர ஸ்ரீனிவாசனாகவும், மற்றும் பல பரிகார தெய்வங்களும் அருள்பாலிக்கிறார்கள்.

மிகப்பெரிய ஆலமரத்தின் அடியில் இந்த ஈசன் இருந்ததால் இவருக்கு ஆலாலீஸ்வரர் என்ற திருநாமம் சூட்டப்பட்டது.

இந்த இடம் முன்பொரு காலத்தில் பண்டிதகாவனூர் என்றே அழைக்கப்பட்டதாம். பல வைணவப் பண்டிதர்கள் இந்தப் பகுதியில் வாழ்ந்து வந்ததாகவும், திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் கைங்கர்யத்தில் அவர்கள் ஈடுபட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. அருகிலேயே குசஸ்தலை ஆறு ஓடுகிறது.

இத்தலத்தைப் பற்றிய மேலும் ஒரு விந்தைக் குறிப்பு செவிவழிச் செய்தியாகக் கூறப்படுகிறது. இந்த பாண்டிகாவனூரில் இருக்கின்ற வரையில் சர்ப்பம் யாரையும் தீண்டாது என்பதும், அப்படித் தீண்டினாலும் விஷம் ஏறாது என்றும் கூறப்படுகிறது. அதற்கு ஒரு நிகழ்ச்சியை குறிப்பிட்டுச் சொல்கிறார்கள்.

பல ஆண்டுகளுக்கு முன்பு, இங்கு வாழ்ந்து வந்த பண்டிதர் ஒருவர் அவரது இல்லத்தின் முன்பு உள்ள திண்ணையில் அமர்ந்து சந்தியா வந்தனம் செய்து கொண்டிருந்த போது, ஒரு நாகப்பாம்பு அவர் முன்பாக நின்று படமெடுத்து ஆடிக் கொண்டிருந்தது. அதற்கு ஏதோ பிரச்னை என்று பண்டிதர் தெரிந்து கொண்டார். உற்று நோக்கியதில், அந்தப் பாம்பின் நாக்கில் ஒரு நெருஞ்சி முள் குத்தி தாங்கொணா துயரத்தைக் கொடுத்துக் கொண்டிருந்தது தெரிந்தது.

பாம்பென்றால் படையும் நடுங்குமே. அதற்கு தீட்சிதர் மட்டும் விலக்கல்லவே! தீட்சிதரின் பயத்தைப் பாம்பு புரிந்து கொண்டிருக்க வேண்டும். அதனால் அது தீட்சிதரை வலம் வந்து தரையில் அடித்து சத்யம் செய்தது. அதைப் புரிந்து கொண்ட தீட்சிதர் இனியும் தாமதிக்கக்கூடாது என்று எண்ணி, தனது மேல் துண்டால் பாம்பின் வாயிலிருந்த நெருஞ்சிமுள்ளை மெதுவாக எடுத்து தூக்கியெறிந்தார். பாம்புக்கு பரம சந்தோஷம்! மீண்டும் அந்த தீட்சிதரை மூன்று முறை வலம் வந்து தரையில் அடித்து விட்டு அதன் பின் தான் இருந்த புதருக்குள் சென்று மறைந்து விட்டது.

இந்தத் தலத்தைப் பொறுத்தவரை பாம்பினால் யாருக்கும் எந்தக் கெடுதலும் நிகழாது என்று பாம்பு சத்தியம் செய்திருப்பதாக ஊர் மக்கள் நம்புகிறார்கள். அது மட்டுமல்ல, பல ஆண்டுகளாக இந்தப் பகுதியில் பாம்பு கடித்து யாரும் இறந்ததாக எந்தச் செய்தியும் கிடையாது என்றும் கூறுகிறார்கள்.

இத்தகைய சிறப்புகள் வாய்ந்த இத்தலத்துப் பெருமான், லிங்க வடிவில் மண்ணில் புதைந்து கிடந்தபோது, அவரை ஆவுடையாருடன் வெளிக்கொணர்ந்து ஒரு சிறு மண்டபத்தில் பாலாலயம் செய்து வைக்க அவரை வெளியே தூக்க அறுபது பேர் தேவைப்பட்டதாம். அவ்வளவு கனம் வாய்ந்த அந்த பெருமானுக்குக் கோயில் கட்டி அவருக்கென்று கருவறை அமைக்கப்பெற்று அதில் அவரை நிலைநிறுத்த தற்காலிகமாக வைக்கப்பட்டிருந்த இடத்திலிருந்து கருவறைக்குள் தூக்கிச் செல்ல வெறும் நாலுபேரே தேவைப்பட்டதாம்.

இனி கோயிலை வலம் வருவோம். மேற்குப் பார்த்த நுழைவாயில் தெற்குப் பார்த்து கோயிலின் உட்புற வாசல் அமைந்துள்ளது என்றாலும் கோயிலில் அம்பாள், துர்க்கையைத் தவிர மற்ற தெய்வங்கள் கிழக்கு நோக்கியே காட்சி தருகிறார்கள்.

கோயிலினுள் நுழைந்ததும் இடதுபுறம் அன்னை துர்க்கை வடக்குப் பார்த்து இருக்க, சுற்றுப் பிராகாரத்தில் கிழக்கு நோக்கிய சன்னதிகளில் சச்சிதானந்த கணபதி, சாஸ்தா, சக்தி ஸ்கந்தன் மற்றும் ஜெய வீர ஆஞ்சநேயர் அருள்பாலிக்கின்றார்கள்.

கிழக்குப் பார்த்த கருவறையில் ஆலாலீஸ்வரர் மிக அற்புதமாக காட்சி தந்து அருள்பாலிக்கின்றார். இவரை மூன்று பிரதோஷ காலத்தில் தரிசித்து வந்தால் வேலை கிடைக்காதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்க அருள்பாலிப்பதாக கூறப்படுகின்றது.

இங்கு உள்ள லிங்கத் திருமேனி பச்சை மரகதக் கல்லால் செய்யப்பட்டிருக்க வேண்டும் என்று எண்ணத் தோன்றும் வகையில் லிங்கத் திருமேனிக்கு பால் அபிஷேகம் செய்யும் போது பால் சிறிது பச்சை நிறத்தில் காட்சியளிக்கிறது.

மூலவர் ஆலாலீஸ்வரர் கருவறைக்கு வெளியே இடதுபுறத்தில் பெருமாள் குபேர சீனிவாசனாக மிகவும் அழகாக அமர்ந்து சேவை சாதிக்கிறார். குபேர கணபதி, குபேர லக்ஷ்மி, குபேர லிங்கம் நாம் கேள்விப்பட்டிருக்கிறோம்; தரிசனம் செய்திருக்கிறோம். ஆனால் பெருமாளை குபேர சீனிவாசனாக தரிசிப்பது அபூர்வம். இங்கு ஆஞ்சநேயர் பெருமாளை நோக்கி அமராமல் நவகிரகங்களில் சனீஸ்வரனை நோக்கி அமர்ந்திருப்பது, அற்புதக் காட்சியாகும். இந்த ஆஞ்சநேயரை வணங்குவதால் சத்ருபயம் நீங்குவதோடு, சனியின் தாக்கம் நம்மை அண்டாமல் காத்தருள்வதாகவும் கூறப்படுகிறது.

இப்படி எண்ணற்ற பல அருமையான விஷயங்களைத் தனக்குள் உள்ளடக்கிய இந்தத் தலத்துக்கு வந்து ஆலாலீஸ்வரரின் அருளையும் குபேர சீனிவாசனின் அருளையும் ஒருசேரப் பெற்று சிறப்புடன் வாழுங்கள்!

சென்னை செங்குன்றத்தையடுத்த காரனோடை மேம்பாலத்துக்கருகே இடதுபுறம் பெரியபாளையம் செல்லும் நெடுஞ்சாலையில் 2 கி.மீ. சென்றால் பண்டிகாவனூர் வரும். மெயின் சாலையிலிருந்து வடக்கே சுமார் 2 கி.மீ. உள்ளே சென்றால் இத்தலத்தை அடையலாம். காரனோடையிலிருந்து வாகனத்தில் செல்வது உத்தமம்.

Comments