அருள் கவி வித்யாபதி


ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த, மிதிலையின் மகாகவி வித்யாபதி. மிதிலைக்கு மன்னனான கீர்த்தி சிம்மனின் ஆஸ்தான கவி அவர். அந்த மன்னனின் புகழை `கீர்த்தி லதா' என்ற காவியமாகப் பாடினார். அதில் தன் சம காலத்து சமுதாய நிலையைத் தெளிவாகக் குறிப்பிட்டுக் காட்டுகிறார். இவர் எழுதிய `கீர்த்தி பதாகை' என்ற காவியமும் அந்த மன்னனைப் பற்றியதே.

தன் இருபத்தைந்தாம் வயதுக்குள்ளேயே நைமிசாரண்யத்திலுள்ள தபோவனத்தில் தங்கி அணியிலக்கணம், வேத வேதாந்தமெல்லாம் கற்றார்.

தம்முடைய வாழ்வில் பலவகை அனுபவங்களைக் கண்டவர் வித்யாபதி. மன்னனின் ஆஸ்தானத்தில் சிறப்புற்றிருந்தபோதும், போரில் மன்னன் தோற்று காட்டில் வாழ்ந்து வந்தபோதும் அவனுக்குத் துணையாக இருந்து வந்தார். பின்னால் சில காலம் எதிலும் விருப்பமின்றி, தீர்த்த யாத்திரையில் ஈடுபட்டார்.

அவருடைய வாழ்வே விசித்திரமாக இருந்தது. சமஸ்கிருதத்தில் `பூபரிக்ரமா' என்ற நூல் ஒன்று எழுதினார். அதில் மிதிலை முதல் நைமிசாரண்யம் வரையில் தாம் கண்ட புண்ணியத் தலங்களைப் பற்றி ரசமான பல விவரங்களை எழுதியிருக்கிறார்.

புராதித்யன் என்ற மன்னனை மகிழ்விப்பதற்காக `லிகநாவலீ' என்ற பெயரில் ஒரு நூல் எழுதியிருக்கிறார். அந்தக் காலத்தில் பலவகையில் கடிதம் எழுதும்முறை இருந்தது, இதிலிருந்து தெரிகிறது. பின்னொரு சமயம் தன் கையாலேயே பாகவதம் முழுவதையும் ஓலைச் சுவடியில் எழுதி வைத்தார்.

பூகோளம், சரித்திரம், நியாய சாஸ்திரம், ஸ்மிருதி, நீதி, சிவன், துர்க்கையின் மேல் பாடல், ராதாகிருஷ்ணரின் மேல் பதாவளி இப்படிப் பல துறைகளில் தமது எழுத்துத் திறமையைக் காட்டியிருக்கிறார். பல இடங்களில் அவர் தம்மை `அபிநவ ஜயதேவன்' என்று குறிப்பிட்டுக் கொள்கிறார். காரணம், அந்த நாளில் முதன் முதலாக ஜயதேவருடைய சமஸ்கிருத நடையையொட்டித் தாய்மொழியில் கவிதை எழுதியவர் அவர்தான். `கவிகண்ட ஹாரம்' என்ற பட்டமும் அவருக்கு உண்டு.

வித்யாபதிக்குத் தம் தாய்மொழியான மைதிலி மொழியில் மிகுந்த அன்பு. (இன்றும் பீகார் மாநிலத்தில் மைதிலி மொழி பேசுவோர் உண்டு. மைதிலி மொழி பத்திரிகையும் வெளிவருகிறது) மைதிலியின் அமைப்பும் பெரும்பாலும் வங்காளி, இந்தி, உடியா, அஸ்ஸாமியா மொழியமைப்பைப் போன்றது. ஆகவே, இந்தப் பிராந்திய மக்களிடையே அவருடைய பாடல்கள் எளிதில் பரவிவிட்டன.

தலைவன் - தலைவியரைப் பற்றி அவர் இயற்றிய கவிதைகளை ஸ்ரீசைதன்யரே படித்து இன்புற்றார் என்றால், அதற்கு மேல் கேட்பானேன்? வித்யாபதியைப் பின்பற்றிப் பதாவளி எழுதிய வங்காளக் கவிகள் கோவிந்ததாஸ், ஞானதாஸ், பலராம்தாஸ் ஆகியோர். இவர்கள் வங்காளியும் மைதிலியும் கலந்த `ப்ரஜபுலி' என்ற மொழியில் பாடல்கள் இயற்றினார்கள். இதனால்தான் இன்று வங்காளிகளுக்கு இவருடைய கவிதைகள் புரிகின்றன.

அந்தணர் குலத்தில் கி.பி.1380-ஆம் ஆண்டு பிறந்து, சுமார் எண்பது ஆண்டுகள் வாழ்ந்தார் வித்யாபதி. இளவயதில் இவரது கவித்திறமையைக் கண்டு வியந்த மிதிலை மன்னன் சிவசிம்மன், இவருக்கு விஸபி என்ற கிராமத்தையே மானியமாக அளித்தான்.

ஒரு சமயம் சிவசிம்மனை டில்லி பாதுஷா சிறைப்படுத்தி, டில்லிக்குக் கொண்டு போய்விட்டான்.அவனை மீட்க வித்யாபதியும் அங்கே புறப்பட்டுச் சென்றார். மைதிலி மொழியில் அவர் பாடிய அருமையான பாடல் ஒன்றைக் கேட்ட பாதுஷா மெய்மறந்து போனான். அவரை வெகுவாகப் பாராட்டி, `என்ன பரிசு வேண்டுமானாலும் கேள்?' என்றான்.

வித்யாபதி அவனிடம், தம்மை ஆதரிக்கும் வள்ளலான சிவசிம்ம மன்னனை விடுவிக்கும்படி கேட்டுக் கொண்டார். நட்பின் பெருமையை உணர்ந்த பாதுஷா அவ்வாறே செய்தான்.

வித்யாபதியின் பாடல்களில் அன்பு, எளிமை, அழகு சுடர்விடுகின்றன. சிவபெருமானைப் பற்றி அவர் எழுதிய காவியம் ஒன்றில் வரும் நிகழ்ச்சி:

`கையில் சூலமேந்தி, கழுத்தில் ருத்ராட்சத்துடன் புலித்தோல் உடுத்து வந்து கௌரியை மணந்த சிவனைப் பார்த்ததும் அண்டை அயலில் உள்ளவர்கள், `இதென்ன கூத்து!' என்று ஏளனம் செய்தார்கள். அப்போது அவனுடைய கழுத்தில் இருந்த நாகங்கள் `புஸ்' என்று சீறவே, அவர்கள் பயந்தோடி ஒளிந்தார்கள். திரிபுவனங்களுக்கும் உரிய ஈசன் இப்படித் தன்னை எள்ளி நகையாடியவர்களின் பேச்சைக் கேட்டு நாணவில்லை. குடும்பம் நடத்தும்போது அவனுக்கு எத்தனை தொல்லை! `கணேசனுடைய பெருச்சாளி என் கையைக் கடித்துவிட்டதே! அதோ என் இளைய மகன் கார்த்திகேயனின் மயில் வருகிறது. அதைப் பார்த்து என் கழுத்திலுள்ள பாம்புகள் நடுங்குகின்றனவே! இதென்ன கௌரி, நீ கூட இப்படி ஒரு பெரிய சிங்கத்தின் மேல் ஏறி வந்துவிட்டாயா? ஐயோ! என் எருதுக்கு நடுக்கம் கண்டுவிட்டதே!' என்கிறார்.

இக்கவிஞர் பெருமானின் வைணவப் பதாவளிகள்தான், `பாநுஸிம்மனின் பதாவளி' என்ற சிறு காவியத்தை, மகாகவி ரவீந்திரர் தம் இளவயதில் எழுதுவதற்கு ஊக்கம் அளித்தன.



முருகனின் வித்தியாசமான கோலம்

கர்நாடக மாநிலத்தில் உள்ள கங்காதேஸ்வரர் ஆலயத்தில் சுப்பிரமணிய சுவாமி இரு வேறு உருவங்களில் அருள்பாலிக்கிறார். ஒன்று மயில்மீது அமர்ந்த கோலம். இன்னொன்று பத்துத்தலைகள் கொண்ட நாகத்தின்மீது நிற்கும் வித்தியாசமான கோலம். மயில் மீது அமர்ந்த முருகனுக்கு முகங்கள் ஆறு. நாகராஷனாக நிற்கும் சுப்பிரமணியனுக்கு நான்கு கரங்கள். இவ்விரு திருக்கோலங்களையும் காண கண் கோடி வேண்டும்.


Comments