மத்வர் கண்டுஎடுத்த மகத்தான புதையல்



துவாரகை!

துவாபர யுகத்தில் உலக பிரசித்திபெற்ற பெரிய நகரங்களில் ஒன்று துவாரகை. பரம பவித்திரமான கோமதி நதி, கடலில் சங்கமமாகும் புனித இடத்தில் தேவசிற்பியான விஸ்வகர்மாவினால் நிர்மாணிக்கப்பட்ட தங்கமயமான மாபெரும் நகரம் துவாரகை. மாட மாளிகைகள், கூடகோபுரங்கள் எனக் கவிஞர்கள் வர்ணிப்பார்களே அதேபோன்று ஏராளமான அரண்மனைகள், மாளிகைகள் என்று அழகிற்கு அழகுச் செய்யும் பேரழகு நகரமான துவாரகையில் அஷ்டலக்ஷ்மியும் நிரந்தரமாக எழுந்தருளியிருந்தாள் எனக் கூறும்படியாகத் தெருக்களில் தங்கம், வெள்ளி, வைரம், வைடூரியம் போன்ற நவரத்தினங்கள் குவிக்கப்பட்டு, வெளிநாடுகளிலிருந்து வர்த்தகர்கள் வந்து அவற்றை வாங்கிச் செல்வது கண்கொள்ளாக்காட்சியாக இருக்கும்.

கோமதி நதியின் கரைகளில் ஆசிரமங்கள் அமைத்து யாகங்களையும், ஹோமங்களையும் மகரிஷிகள் செய்த வண்ணம் இருந்தனர்.

மாசற்ற மனதுடன் மக்கள் கண்ணனையே தெய்வமாகக் கருதி, பூஜித்து நல்வாழ்வு பெற்று வந்தனர். நோய் நொடிகள், அற்ப ஆயுளில் மரணம், வறுமையினால் வாடி வதங்குதல், பொய் பேசுதல், பிறரை ஏமாற்றுவது, ஜீவவதை செய்தல், புலால் உண்ணுதல் போன்ற பாவங்கள் எதிலும் மனதைச் செலுத்தாமல் மக்கள் அனைவரும் ஆரோக்கியமாகவும், ஆனந்தமாகவும், நீண்ட ஆயுளுடனும் எவ்வித குறையுமின்றி அளவற்ற மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வந்தனர். இவற்றுக்குக் காரணம், தர்மத்தில் உருவான கண்ணனால் துவாரகை சாம்ராஜ்யம் அரசாட்சி செய்யப்பட்டு வந்ததேயாகும்.

பகவான் ஸ்ரீமந் நாராயணனே தர்மத்தை நிலைநாட்டுவதற்காக ஸ்ரீ கிருஷ்ணனாக அவதரித்ததால், சனகாதி மகரிஷிகளும், வசிஷ்டர், அத்திரி போன்ற சப்தரிஷிகளும் பிரம்மதேவரின் மானச புத்திரரான நாரத மகரிஷியும், வியாசரும் அடிக்கடி துவாரகைக்கு வந்து கண்ணனைத் தரிசித்துவிட்டுச் செல்வது வழக்கமாக இருந்தது.

குருக்ஷேத்திர யுத்தத்திற்கு முன்பு,பஞ்ச பாண்டவர்களும், துரியோதனனும், மகாத்மாவான விதுரர் போன்ற பாகவத சிரேஷ்டர்களும், ஆயர் குலத்தின் மணிவிளக்கான கண்ணனைத் தரிசித்து பேரின்பம் பெற்றுச் செல்வது அக்காலத்தில் அடிக்கடி நிகழ்ந்து வந்தது.

ஸ்ரீ ருக்மிணியின் பக்தி!

கண்ணனின் தேவி ருக்மிணி. விதர்ப தேச மன்னர் பீஷ்மமகரின் பெண்தான் இந்த ருக்மிணி. துவாரகாநாதனான ஸ்ரீகிருஷ்ணனின் பட்டத்து ராணி. கண்ணனுக்காக தேவி விரதம் இருந்து அவனைத் தன் பதியாக அடையும் பேறு பெற்றவள். விவாகத்திற்கு முன்பு,

ஸ்ரீகிருஷ்ணரின் பெருமைகளை விவரிக்கும் அற்புத ஸ்லோகம் ஒன்றை எழுதி, ஓர் அந்தணப் பெரியவர் மூலம் துவாரகைக்கு அனுப்பினாள் ருக்மிணி.

‘‘ஸ்ருத்வா குணான் புவன சுந்தரா...’’ எனத் தொடங்கும் அந்த ஈடிணையற்ற ஸ்லோகம், முக்கியமாகப் பெண்களுக்கு ஏற்படும் விவாகத் தடை, கணவர்-மனைவியருக்குள் ஏற்படும் ஒற்றுமைக்குறைவு, உத்தியோகம் காரணமாகவோ அல்லது வேறு காரணங்களினாலோ தாற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ கணவர் அல்லது மனைவி குடும்பத்திலிருந்து பிரிந்திருத்தல் ஆகிய தோஷங்களுக்கு உடனடியாக நிவாரணம் அளிக்கும் சக்திவாய்ந்த பரிகார ஸ்லோகமாகும்.

மகா உத்தமியான ருக்மிணி விடியற்காலையிலேயே எழுந்திருந்து, மகத்தான புண்ணிய நதியான கோமதி நதியில் நீராடி அந்தப் புனித நீரைக் கொண்டு தன் பதியான கண்ணனுக்குத் தினமும் பாத பூஜை செய்து வந்தாள். அவ்விதம் பாதபூஜை செய்த தீர்த்தத்தைத் தனது சிரஸில் (தலையில்) தெளித்துக்கொண்டு, அதில் சிறிது பருகிவிட்டு அதன்பின்புதான் ஆகாரம் உண்பது வழக்கம். பாரத புண்ணிய பூமியில் திருமணமான பெண்மணிகள் அனைவருமே தினமும் தங்கள், தங்கள் கணவருக்குப் பாத பூஜை செய்வது வழக்கமாக இருந்து வந்தது. இதற்குக் காரணம், பாரத புண்ணிய பூமியில் பிறக்கும் பேறு பெற்ற உத்தம பெண்மணிகளுக்கு கணவனே தெய்வம்.

இது இவ்வாறிருக்க, பஞ்ச பாண்டவர்களின் வனவாசத்தின்போது, கவலையினால் அவர்களைப் பார்ப்பதற்காக கண்ணன் அடிக்கடி அவர்களைத் தேடிச் சென்று விடுவது வழக்கம். அவ்விதம் துவாரகையை விட்டு கண்ணன் சென்றுவிடும் நாட்களில் ருக்மிணியினால் பாதபூஜை செய்ய முடியாமல் போய்விட்டது. மேலும், பல சமயங்களில் ராஜ்ஜிய அலுவல்கள் காரணமாகவும் கண்ணன் வெளியே சென்றுவிட வேண்டிய அவசியம் ஏற்பட்ட காலங்களிலும் ருக்மிணியின் பதிபூஜை தடைபட்டது.

இதனால் மனம் வருந்திய ருக்மிணி, தன் வருத்தத்தை கண்ணனிடம் கூறினாள். பிரச்சினையைத் தான் தீர்ப்பதாகக் கூறிய கண்ணன், தேவசிற்பியான விஸ்வகர்மாவை அழைத்து, தன்னைப் போன்றே ஒரு சிலா திருமேனியை வடித்துத் தருமாறு ஆணையிட்டான். அப்பொழுது ருக்மிணி கண்ணனைப் பார்த்து, ‘‘தாங்கள் குழந்தையாக இருந்தபோது, தங்கள் அன்னை யசோதை தயிர் கடையும்போது அந்த மத்தினை நீங்கள் பிடுங்கிக்கொண்டு ஓடும் அழகைப் பார்த்துப் பார்த்து பரமானந்தம் படுவார்களாமே! அதே காட்சியில் தங்கள் திருவுருவத் திருமேனியை வடித்துத் தரும்படி பிரார்த்திக்கிறேன்’’ என்று ஈரேழு பதினான்கு உலகங்களையும் தனது சிறு பருவ லீலைகளினால் மயக்கிய அந்தப் பேரருளாளனை வேண்டி நின்றாள் ருக்மிணி. அவ்விதமே தனது குழந்தைப் பருவ திருமேனியைத் தயிர் கடையும் மத்துடன் கூடியவராகச் செய்து தரும்படி கட்டளையிட்டான் கண்ணன் விஸ்வகர்மாவிற்கு!

ருக்மிணியின் பூஜை!

தேவர்கள், மகரிஷிகள், கந்தர்வர்கள், வித்யாதரர்கள் அனைவரும் பார்த்துப் பார்த்து வியக்கும்படியான பேரழகுடன் விஸ்வகர்மா தனது முழு திறமையையும் செலுத்தி, ருக்மிணி கேட்ட அந்த கண்ணன் திருவுருவத் திருமேனியைச் சாளக்கிராமத்தில் வடித்துக் கொடுத்தார். அன்றிலிருந்து ருக்மிணி அந்த ஸ்ரீ கிருஷ்ண விக்கிரகத்தைத் தினமும் பூஜித்து வந்தாள். ஸ்ரீ மஹாலட்சுமியின் அவதாரமான ருக்மிணி, அந்த ஸ்ரீ கிருஷ்ண விக்கிரகத்திற்குத் தனது திருக்கரங்களினாலேயே தினமும் மஞ்சனமாட்டி (அபிஷேகம்), ஆபரணங்களால் அலங்கரித்து, நறுமலர்கள் சூட்டி, பூஜித்து வந்தாள். கண்ணனின் சான்னித்தியம் (சக்தி) அனைத்தையும் முழுமையாகக் கொண்டு விளங்கியது அந்த ஸ்ரீகிருஷ்ண விக்கிரகம். துவாரகையில் கண்ணன் இல்லாதபோது வந்த மகான்கள், மகரிஷிகள், மக்கள் ஆகியோர் ருக்மிணி பூஜித்து வந்த அந்த ஸ்ரீ கிருஷ்ண விக்கிரகத்தைக் கண்ணனாகவே கருதி தரிசித்துச் சென்றனர்.

துவாரகை கடலில் மூழ்குதல்!

தான் அவதரித்த தெய்வீகக் காரியம் முடிவடைந்ததும்,ஸ்ரீ கிருஷ்ணன் தனது திவ்ய திருமேனியை விட்டு ஸ்ரீவைகுண்டத்திற்கு எழுந்தருளினான். அதற்கு முதல் தினம் தனது பரம பக்தரான உத்தவரை அழைத்து தர்மத்தின் பல ரகசியங்களை அவருக்கு உபதேசித்தான். அந்த உபதேசமே உத்தவ கீதை எனப்படும் மிகப் பெரிய ஞான நிதியாகும். உத்தவருக்குத் தர்மநெறியின் சூட்சுமங்களை உபதேசித்த கண்ணன், தான் கிருஷ்ண அவதாரத்தை முடித்துக்கொண்டு,ஸ்ரீ வைகுண்டத்திற்கு எழுந்தருளப் போகும் ரகசியத்தையும் தெரியப்படுத்தினான்.

கண்ணனின் முடிவைக் கேட்ட உத்தவர் திடுக்கிட்டார், கலங்கினார், கதறினார். கண்ணன் இல்லாத உலகைக் கற்பனை செய்து பார்ப்பதற்கும் அவரால் முடியவில்லை. ஸ்ரீகிருஷ்ணன் அவரைச் சமாதானப்படுத்தி, பத்ரி ஆசிரமத்திற்குச் சென்று அங்கு தவமியற்றும்படி அருளினான். கண்ணன் வைகுண்டத்திற்குச் சென்றதும், பலராமன், ருக்மிணி ஆகியோரும் வைகுண்டத்திற்கு எழுந்தருளிவிட்டனர்.

அப்பொழுதுதான் அந்த ஆச்சர்யம் நிகழ்ந்தது. கடல் பொங்கி துவாரகை முழுவதையும் தன்னுள் ஈர்த்துக்கொண்டு விட்டது. துவாரகை கடலில் மூழ்கியது. ருக்மிணி பூஜித்த அந்த அற்புத ஸ்ரீ கிருஷ்ண விக்கிரகமும் கடலில் மூழ்கியது. பல ஆயிரம் ஆண்டுகள் கடந்துவிட்டன. பாற்கடலில் பள்ளிகொண்ட எம்பெருமான் அல்லவா! அதனால்தானோ என்னவோ கடலுக்கு அடியில் நீண்டகாலம் அந்த ஸ்ரீ கிருஷ்ண விக்கிரகமும் இருந்து வந்தது.

காலம் கனிந்தது... நேரமும் வந்தது!

கலியுகம் பிறந்து பல ஆயிரம் ஆண்டுகள் கடந்துவிட்ட நிலை. கலியுகம் ஆண்டு நாலாயிரத்து முன்னூற்று முப்பத்தொன்பதாம் (4339) ஆண்டு, தற்கால சரித்திரத்தில் கி.பி. 1238-ம் ஆண்டு, விளம்பி வருடம் விஜயதசமி புண்ணிய தினத்தன்று கடற்கரையிலுள்ள உடுப்பி திருத்தலத்தை அடுத்த, அழகிய ‘பாஜக க்ஷேத்திரம்’ என்னும் சிறு கிராமத்தில் துருவ அந்தணர் குலத்தில் ஸ்ரீ நாராயண பட்டருக்கும் அவரது மனைவியான வேதவதிக்கும் பிள்ளையாக அவதரித்தார் மகான் ஸ்ரீ மத்வாச்சாரியர். குழந்தைக்கு ‘வாசுதேவன்’ என்றுப் பெயரிட்டு மகிழ்ந்தனர் பெற்றோர்கள். வாயு பகவானே மத்வாச்சாரியராக உலக நன்மையை முன்னிட்டு அவதரித்ததாகப் புராதன நூல்கள் கூறியுள்ளன. இம்மகான் வேத தர்மத்திற்காக ஆற்றியுள்ள தெய்வீகப் பணிகளை வேறோர் இதழில் விளக்கியிருக்கிறோம். பாரத புண்ணியபூமியில் அவதரித்த மகான்களில் இந்த மத்வருக்கென்று ஒரு தனிச்சிறப்பு உண்டு.

எம்பெருமான் ஸ்ரீ கிருஷ்ணன் தனது திருவுள்ளத்தில் தீர்மானித்திருந்த நாள் அது! கடலை நோக்கி அமர்ந்து இறை தியானத்தில் ஆழ்ந்திருந்தார் ஸ்ரீ மத்வர். அப்பொழுது துவாரகையிலிருந்து சரக்குகளை ஏற்றிக்கொண்டு வந்த ஒரு கப்பல் பாஜக க்ஷேத்திரத்திற்கு அருகே வரும்போது கடலில் சூறாவளி வீசத் தொடங்கியது. ஆளுயர அலைகள் வீசின. ஆர்ப்பரித்து எழுந்தன. சூறாவளியோ பயங்கரமாக வீசியது. அவற்றுக்கிடையே அகப்பட்ட துரும்பைப் போல அச்சிறு பாய்மரக்கப்பல் தத்தளித்தது. எந்தச் சமயத்திலும் மூழ்கிவிடக்கூடும் என்ற அச்சத்தில் கப்பலில் இருந்த மாலுமிகள் அலறினார்கள். கரையில் நின்றிருந்த மத்வர், தொலைதூரத்தில் மன்றாடித் தத்தளிக்கும் அக்கப்பலைக் கருணையுடன் கடாக்ஷித்தார் (கருணை பார்வையைச் செலுத்தினார்). ஒருகணம் தனது இதயத்தில் கண்ணனைத் தியானித்தவாறு கடலை நோக்கித் தனது திருக்கரத்தினால் அமைதியாக இருக்கும்படி அருளினார்.

என்ன ஆச்சர்யம்! அடுத்த விநாடியே சூறாவளி நின்றது. அலைகளும் சீற்றம் குறைந்து அமைதியாயின. கப்பலின் தலைவன் நன்றி கலந்த வியப்புடன், கரையில் நின்றிருந்த மத்வரை நோக்கி அக்கப்பலில் இருந்தபடியே அவரை வணங்கினான். கரையை நோக்கி கப்பலைச் செலுத்தும்படி மாலுமிகளுக்கு உத்தரவிட்டான். கரைக்குச் சமீபமாக கப்பல் வந்து நின்றவுடன் சிறு படகுகள் மூலம் கரைக்கு வந்த கப்பல் தலைவனும், மாலுமிகளும் தங்கள் கப்பலையும், இன்னுயிரையும் காப்பாற்றி அருளிய மத்வரின் திருவடிகளில் விழுந்து வணங்கினர்.

‘‘கப்பலையும், துவாரகையிலிருந்து நாங்கள் ஏற்றி வந்த பொருட்களையும், எங்கள் உயிரையும் காப்பாற்றி அருளிய தங்களுக்கு ஏதாவது கைம்மாறு செய்யவேண்டும்’’ என்று வேண்டி நின்றனர்.

‘‘துறவியான எனக்கு எதுவும் வேண்டியதில்லை. இருப்பினும், துவாரகையிலிருந்து புறப்படும்போது கப்பல் அதிகமாக ஆடாமல் மிதந்து செல்வதற்காக (Ballast) கனமுள்ள கோபி சந்தன உருண்டைகள் ஏற்றப்பட்டுள்ளன. அவற்றில் சிலவற்றை எனக்குக் கொடுங்கள்’’ என்று கேட்டார்.

கப்பல் தலைவனுக்கு ஆச்சர்யம்!‘‘எந்த உருண்டைகள் வேண்டுமானாலும், எத்தனை உருண்டைகள் வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளுங்கள்’’ என்று கூறினான். தனது ஞான திருஷ்டியினால் அனைத்தையும் உணர்ந்த அவதார புருஷரான மத்வர், கப்பல் தலைவன் காட்டிய ஏராளமான கோபி சந்தனக் கட்டிகளிலிருந்து ஒரு குறிப்பிட்ட மிகப்பெரிய உருண்டையை மட்டும் எடுத்து, மார்புறத் தழுவி, கண்களில் ஒற்றித் தனது சிரஸின் மேல் வைத்துக்கொண்டு ஆனந்தக் கூத்தாடினார். கப்பல் தலைவனும், மத்வரின் திருவடிகளைத் தொட்டுக் கண்களில் ஒற்றிக்கொண்டு மீண்டும் தனது கப்பலை நோக்கிச் சென்றான்.

மத்வரைச் சுற்றியிருந்த அனைவரும் ஆச்சர்யம் மேலிட கண்ணிமைக்காமல் அவரையே உற்று நோக்கிக் கொண்டிருந்தனர். பக்திப் பரவசம் என்ற உச்ச நிலையிலிருந்த மத்வரின் திருவாக்கிலிருந்து ஈடிணையற்ற துவாதச ஸ்தோத்திரம் என்ற பன்னிரண்டு அற்புத ஸ்தோத்திரங்கள் வெளிப்பட்டன. அறிந்தோ, அறியாமலோ நாம் செய்யும் பாவங்கள் எத்தகைய கொடியவையாக இருந்தாலும், அவற்றை உடனடியாகப் போக்கி அருளும் மகத்தான சக்தி வாய்ந்த ஸ்தோத்திரங்கள் இவை. படிப்பதற்கும், உச்சரிப்பதற்கும் மிக, மிக எளிதானவை. அர்த்தம் புரியாதவர்களைக்கூட மெய்சிலிர்க்க வைக்கும் ஸ்தோத்திரம் இது.

மத்வர் அந்த கோபி சந்தன உருண்டையைத் தன் தலைமேல் வைத்துக்கொண்டு ஏன் இவ்விதம் கூத்தாடுகிறார் என்று அங்கிருந்தவர்களுக்குப் புரியவில்லை. சிறிது நேரம் கழித்து மத்வர் சுத்தமான தீர்த்தத்தைக் கொண்டு, மிகுந்த பக்தியுடன் அந்தக் கோபி சந்தன உருண்டையைச் சுத்தம் செய்வது போல் கரைத்தார்.

ஆச்சர்யத்திலும் ஆச்சர்யம்! அந்த உருண்டையிலிருந்து, துவாரகையில் ருக்மிணி பூஜித்த அதே கிருஷ்ண விக்கிரகம், வலது ஹஸ்தத்தில் (திருக்கையில்) மத்துடனும், இடது ஹஸ்தத்தில் மத்தை கடையும் கயிற்றுடனும் திவ்ய அழகுடன் வெளிப்பட்டது. கரையும் கோபி சந்தனத்துடன் மனமும் கரைய, அருவியெனப் பெருகி வரும் ஆனந்தக் கண்ணீருடன் ஆயர்குலத்து அழகுபாலனை அணைத்து அணைத்து முத்தமிட்டு, பரமானந்த பரவசத்தில் ஆழ்ந்து திளைத்தார் அம்மகான். எவருக்குத்தான் கிடைக்கும் இத்தகைய மாபெரும் பேறு?

Comments