காத்தருளும் பெருமானை இனியும் காக்க வைக்கலாமோ?



மிகப் புராதனமான திருக்கோயில்களில் ஒன்றானதும், பிரசித்திபெற்றதுமான புலியூர் ஸ்ரீ பெருந்தேவி தாயார் சமேத ஸ்ரீ வரதராஜப் பெருமானின் திருக்கோயிலின் இன்றைய நிலை பற்றி குமுதம் ஜோதிடம் 3.10.2008 தேதியிட்ட இதழில் விவரித்திருந்தோம். அந்த இதழில் வெளியிட்டிருந்த உற்சவமூர்த்திகளின் பேரழகைக் கண்டு வியக்காதவர்களே இல்லை. இத்தகைய அழகு வாய்ந்த பெருமானுக்கு ஏற்ற தேவியாகிய ஸ்ரீபெருந்தேவி தாயாரின் திவ்ய லாவண்யத்தை வர்ணிப்பதற்கு வார்த்தைகள் இல்லை. எமது கட்டுரையைப் படித்து புலியூர் திருத்தலம் சென்று, இப்பெருமான் மற்றும் தாயாரைத் தரிசித்து அவர்களது ரூப லாவண்யத்தில் மனதைப் பறிகொடுத்து பரமானந்தமடைந்த பக்தர்கள் ஏராளம்!

அன்னியர்களின் மூர்க்கமான படையெடுப்புகளினால் சீரழிக்கப்பட்ட அற்புதமான, சக்திவாய்ந்த திருக்கோயில்களில் ஒன்றுதான், கரூர் மாவட்டத்தில், பவித்திரமான அமராவதி நதிக்கரையில் தென்புறத்தில் அமைந்துள்ள பழைமையும் சக்திவாய்ந்ததுமான புலியூர் ஸ்ரீ பெருந்தேவி தாயார் சமேத ஸ்ரீ வரதராஜப் பெருமாள் திருக்கோயில்.

`குமுதம் ஜோதிடம்' வாசக அன்பர்கள் அனைவரும் வழக்கம்போல் அன்பும், பக்தியும் பெருக்கெடுத்து இத்திருக்கோயிலின் புனர்நிர்மாணத் திருப்பணிகளுக்குச் செய்துள்ள உதவிகளைக் கொண்டு ஓரளவே இத்திருக்கோயிலைச் சரிசெய்ய முடிந்தது. புனர்நிர்மாணத்திற்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்தினால், திருக்கோயிலைச் சீரமைக்கும் பணி பாதியிலேயே நின்றுபோய்விட்டது.
`பட்ட காலிலேயே படும்...' என்ற மூதுரைக்கிணங்க, நமது ஏராளமான சிதிலமடைந்துள்ள புராதனமான கலைக் களஞ்சியமாகத் திகழும் திருக்கோயில்களைச் சீரமைப்பதற்கு அரசாங்கம் உதவுவதில்லை. நமக்கும் பொருளாதார வசதிகள் குறைவாகவே உள்ளன. ஆயினும், மற்ற மதத்தினருக்கு வெளிநாடுகளிலிருந்து கோடிக்கணக்கில் பணம் வந்து கொண்டிருப்பதால், அவர்கள் அவர்களது ஏராளமான வழிபாட்டுத் தலங்களைப் புதிது புதிதாக பாரதமெங்கும் அமைத்துக்கொண்டு வருகின்றனர். ஆனால் இந்துக்களின் கதியோ நெஞ்சைக் கலங்க வைக்கிறது. கோடிக்கணக்கில் பணத்தைச் செலவு செய்து, ஆடம்பர ஹோட்டல்கள் அமைத்துவரும் கோடீஸ்வர இந்து முதலாளிகள்கூட திருக்கோயில்களின் புனர் நிர்மாணத்திற்கென்று கேட்டால் கொடுப்பதற்குத் தயங்குகிறார்கள்.

பாரத புண்ணியபூமி வேத பூமியாக மீண்டும் புத்துயிர்பெற்று, வீறுகொண்டு வரவேண்டுமானால் நம் திருக்கோயில்கள் செப்பனிடப்பட வேண்டியது மிகவும் அவசியமாகும். மேலும், மறுபடியும் தினமும் ஒருமுறையேனும் அவரவர் ஊரிலுள்ள திருக்கோயிலுக்குச் சென்று தரிசிப்பதைக் கண்டிப்பாக வழக்கத்தில் கொண்டு வர வேண்டும்.

புலியூர் திருக்கோயிலின் புராதனப் பெருமை!

வைணவ மகாபுருஷரான ஸ்ரீமத் ராமானுஜரின் இதயத்தைக் கவர்ந்தவன் இந்த புலியூர் ஸ்ரீ வரதராஜப் பெருமான். அம்மகானின் அவதார காலத்தில், ஒரு நெருக்கடியான சூழ்நிலையில் திருவரங்கத் திருத்தலத்தை விட்டு, தனது திருவடிகள் நோக, திருநாராயணபுரத்திற்குச் சென்றபோது ஓரிரவு புலியூரில் தங்கி, தாயாரையும், பெருமானையும் தரிசித்து மகிழ்ந்ததாகத் தலவரலாறு கூறுகிறது. இது ஒன்றே போதும், அற்புதமான இத்திருக்கோயிலின் தெய்வீகச் சிறப்பிற்கு!

பக்தர்கள் கேட்பதற்கு முன்னரே, அவர்கள் கேட்கப் போவதைத் தவறாமல் நிறைவேற்றி வைத்து அருள்புரியும் வரப்பிரசாதியான இப்பெருமானின் கருணையை கீழ்க்கண்ட புலியூர் தல தியான ஸ்லோகம் போற்றுகிறது.

விமாநே வைதிகே திவ்யே
வ்யாக்ரபுரீயாம் வரப்ரத:
தடே பவித்ர அமராவதீ நத்ய:
தேவ தேவ: அதிராஜதே

அதாவது, அவனைத் தரிசித்து மனமுருகி நாம் கேட்பதற்கு முன்னரே நம் துன்பத்தைத் தீர்க்கும் கருணை காட்டும் இப்பெருமானின் பெருமையை, ``வரப்ரத:'' என்ற சொல் குறிப்பிடுகிறது.

இத்திருக்கோயிலைச் சுற்றி ஒரு காலத்தில் ஆச்சார, அனுஷ்டானங்களில் உயர்ந்த ஏராளமான பெரியோர்கள் இருந்து வந்துள்ளனர். ஆண்டுதோறும் பிரம்மோற்சவம், மார்கழி மாதத்தில் வைகுண்ட ஏகாதசி, பரமபத வாசல் திறப்பு போன்ற உற்சவங்கள் சிறப்பாக நடைபெற்று வந்தன.

இதேபோன்று இத்திருக்கோயிலுக்கு மிக அருகில் விளங்கும் சிவாலயமும் பிரசித்தி பெற்று விளங்கியது. ஸ்ரீ சிவபெருமானிடத்தில் அத்யந்த பக்தி பூண்ட ஏராளமான பெரியோர்கள், இவ்வூரை மிகவும் விரும்பித் தங்கள் ஆன்மிக வாழ்க்கையுடன் இணைத்துக்கொண்டு வாழ்ந்து வந்தனர். அப்போது ஆண்டுதோறும் ஆருத்ரா தரிசனமும், பஞ்சமூர்த்தி புறப்பாடும், சிவராத்திரியும் வெகு சிறப்பாக நடைபெற்று வந்தன.

வைணவ உற்சவங்களில் சிவாச்சாரியர்களும், சைவ உற்சவங்களில் வைணவப் பெரியோர்களும் தவறாமல் பரஸ்பர ஒற்றுமையுடன் கலந்துகொண்டதற்குக் கல்வெட்டுகள் சான்று கூறுகின்றன.

சிவபெருமானின் மிகவும் சிதிலமடைந்திருந்த திருக்கோயில், பல பக்தர்களின் பெருமுயற்சியினால் ஓரளவு புனர்நிர்மாணம் செய்யப்பட்டு, பூஜைகளும் செவ்வனே நடைபெற்று வருகின்றன.

அடியோடு சிதிலமடைந்து நிர்மூலமான பெருமாள் கோயிலையும் சீரமைத்திட `ஸ்ரீ வரதராஜப் பெருமாள் கோயில் டிரஸ்ட்' என்ற பெயரில் திருப்பணிக்குழு அமைக்கப்பட்டு, திருப்பணிகள் நடைபெற்று வந்த நிலையில், தற்போது திருப்பணிகள் பாதியில் நின்றுபோயுள்ளன. திருப்பணிகளை முடிப்பதற்கு மேலும் 12 லட்ச ரூபாய் தேவைப்படுகிறது.

நமது திருக்கோயில்களை நாம்தான் காப்பாற்றியாக வேண்டும். நமக்கு உதவுவார் இல்லை. ஆதலால், பொருளாதார வசதியின்மையால் பாதியில் நின்றுபோய்விட்ட புலியூர் திருக்கோயில் திருப்பணிக்கு உதவினால், மீண்டும் திருப்பணியைத் தொடங்கி, மகத்தான இப்புனித சேவையைப் பூர்த்தி செய்து, ஸ்ரீ பெருந்தேவி நாயிகா சமேத ஸ்ரீ வரதராஜப் பெருமாளின் திருக்கோயில் கும்பாபிஷேகத் தையும் சிறப்பாகச் செய்ய இயலும்.

ஆதலால், தங்கள் வசதிக்குட்பட்டு எமது வாசக அன்பர்கள் மற்றும் தமிழக மக்கள் உதவும்படி வேண்டுகிறோம். கீழ்க்கண்ட விலாசத்திற்கு, `Shri Varadaraja Perumal Kovil Trust' என்ற பெயரில் வரைவோலையாகவோ, காசோலையாகவோ, மணியார்டராகவோ அனுப்பி புண்ணிய பலனைப் பெறுமாறு ஆன்மிக அன்பர்களை வேண்டுகிறோம்.
முகவரி :

Shri Varadaraja Perumal Kovil Trust,
38, 4th Street, Gokulam Colony,
P.N. Pudur,
Coimbatore-641 041.
Ph. No : 94421 22226

Comments