குருமலை சுந்தரேஸ்வார்



தமிழகத்தில், இன்றைக்கு ஆன்மிகம் மேலோங்கி இருக்கிறது. இறை உணர்வும் பக்தியும் மக்களிடையே அதிகம் காணப்படுகிறது. ஒவ்வொருவருக்கும் தேவைகள் அதிகமாகி விட்டன. இவற்றை எல்லாம் நிறைவேற்றிக் கொள்ள கோயில்களுக்குச் சென்று இறைவனிடம் பிரார்த்திக்கிறார்கள்.உண்மையான பக்தியும் தூய்மையான எண்ணமும் இருந்தால், நியாயமான தேவைகளை ஆண்டவனே நிறைவேற்றி வைக்கிறான்.


விசேஷ நாட்களில் கோயில்களுக்குப் போய் ஆன்மிகத்தைப் போற்றியவர்கள் பண்டைய மக்கள். ஆனால், வருடத்தின் எல்லா நாட்களையும் விசேஷ தினங்களாக மாற்றியவர்கள் இன்றைய மக்கள். ஒரு தமிழ் மாதத்தையே எடுத்துக் கொள்ளுங்களேன்... மாதப் பிறப்பு, சிரவணம், அமாவாசை, பௌர்ணமி, கார்த்திகை, சதுர்த்தி, சஷ்டி, ஏகாதசி தவிர வெள்ளிக்கிழமை, செவ்வாய்க்கிழமை என்று கோயில்களில் கூட்டம் கூடும் நாட்களைக் கூட்டிக் கொண்டே போகலாம். இது தவிர தங்களுக்கு வசதியாக இருக்கிறது என்று விடுமுறை தினங்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளைத் தேர்ந்தெடுத்து ஆலய தரிசனம் செய்வோரும் உண்டு.

ஆன்மிகத்தை மக்களிடையே கொண்டு செல்லும் பிரசாரகர்கள் ஏராள மானோர் இங்கே அவதரித்துள்ளனர். நாயன் மார்கள், ஆழ்வார்கள் மற்றும் எண்ணற்ற மத குருமார்கள் தோன்றிய பெருமைக்குரிய இடம் நம் தமிழகம்.

தமிழகத்தில் ஆயிரக்கணக்கான திருக்கோயில்கள் இருக்கின்றன. ஆனால், இவை அனைத்தும் ஒரே விதமாகவா இருக்கின்றன? இல்லை. ஒவ்வொன்றும் ஒவ்வொரு மாதிரி. ஒரு கோயிலில் நித்தமும் ஆறு கால பூஜை, மேள வாத்தியத்தோடு நடக்கிறது. இன் னொரு கோயிலில் நான்கு கால பூஜை சிறப்பாக நடக்கிறது. ஒரு சில கோயில்களில் ஒரு கால பூஜைக்கே சிரமப்படுகிற சூழ்நிலை. அதாவது அங்கே எந்த விதமான பூஜைகளும் இருக்காது. பக்தர்களுக்கும் இப்படி ஒரு கோயில் இருக்கிறது என்கிற விவரம் ஏதும் தெரிந்திருக்காது. உள்ளூர்க்காரர்கள் கூட இத்தகைய கோயில்களை எட்டிப் பார்க்க மாட்டார்கள்.

பூஜையே நடக்காத கோயில்களை விட, ஒரு கால பூஜை நடக்கும் கோயில் கள் சற்றுத் தேவலை ரகம்தான்! ஒன்றுமே இல்லாததற்கு ஏதாவது இருப்பது உசத்திதானே! 'ஐந்து விரல் களும் ஒன்றாகவா இருக்கிறது? அது போல்தானே நம் ஊரில் உள்ள எல்லா கோயில்களும்' என்று நம் மனதை ஆறுதல் படுத்திக் கொள்ள வேண்டும்!



அரசின் தயவில் ஒரு கால பூஜைத் திட்டத்தில் இருந்தாலும், தினமும் காலை, மாலை என்று இரு வேளைகளில் ஏதோ தங்களால் முடிந்த அளவுக்குப் பொருட் களைச் சேகரித்து பூஜையைத் தொடர்ந்து நடத்தி வருகிறார்கள், குருமலை சுந்தரேஸ்வரர் ஆலயத்தில். 'அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் சுவாமி ரிலிஜியஸ் வெல்ஃபேர் அண்ட் கல்ச்சுரல் டிரஸ்ட்' அமைப்பினர் இந்த ஆன்மிகப் பணியைச் செய்து வரு கிறார்கள்.

செடி- கொடிகள் மண்டிப் போன இந்த சுந்தரேஸ்வரர் ஆலயத்தை சுமார் நான்கு வருடங்களுக்கு முன்தான் சுத்தம் செய்து வழிபாட்டைத் துவக்கி இருக்கிறார்கள், இந்த டிரஸ்ட் உறுப்பினர் களும் உள்ளூர்க்காரர்களும்! அதற்கு முன் சுமார் அறுபது வருட காலம் இந்தக் கோயில் கவனிப்பார் எவரும் இல்லாமல் பரிதாப நிலையில் இருந்ததாகச் சொல்கிறார்கள். எப்போதாவது ஏதாவது விசேஷங்கள் நடக்குமாம். உள்ளூர்க்காரர்களது வழிபாட்டைத் தவிர, வெளியூர்வாசிகள் எவராவது கோயிலின் மகிமை கேட்டு எட்டிப் பார்த்து விட்டுப் போவார்கள். தற்போது ஞாயிற்றுக் கிழமைகளில் உள்ளூர்க்காரர்கள் கோயிலில் விசேஷ வழிபாடு செய்து வருகிறார்கள்.



குருமலையில் உள்ள இந்த புராதனமான ஆலயத்தில் குடி கொண்ட இறைவனின் திருநாமம் - சுந்தரேஸ்வரர். அம்பாளின் திருநாமம்- மீனாட்சி அம்மன். அந்தக் காலத்தில் மதுரையைப் பிரதானமாகக் கொண்டு ஆட்சி செலுத்தியவர்கள் பாண்டியர்கள் மற்றும் நாயக்க மன்னர்கள். இறை பக்தியில் எந்நாளும் திளைத்தவர்கள் இவர்கள். போர் என்றாலும் சரி... பஞ்சம் என்றாலும் சரி... தெய்வத்திடம் போய்தான் முறையிடுவார்கள். தெய்வ மும் இவர்களைக் கைவிடாது. எனவே, மதுரையில் கோலோச்சும் சுந்தரேஸ்வரர் மற்றும் மீனாட்சியின் நினைவாகத் தாங்கள் கட்டும் மற்ற ஊர் கோயில் தெய்வங்களுக்கும் அதே திருநாமங்களைச் சூட்டி மகிழ்ந்தனர் இந்த மன்னர்கள்.

தவிர, மதுரைக்குப் போய் சுந்தரேஸ் வரரை வழிபட முடியவில்லையே என்கிற குறை, நாட்டு மக்களுக்கு இருக்கக் கூடாது என்பதற்காகவும் வெளியூர்களில் இத்தகைய திருநாமங்களுடன் விக்கிரகங்களை பிரதிஷ்டை செய்ததாகவும் சொல்வதுண்டு. சரி... குருமலை சுந்தரேஸ்வரரிடம் வருவோம்.



குருமலை என்பது ஒரு சிற்றூர். விவசாயம்தான் பிரதான தொழில். சுமார் நூறு குடும்பங்கள் வசிக்கின்றன. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டியில் இருந்து சுமார் 12 கி.மீ. தொலைவு. பேருந்து வசதி உண்டு. கோவில்பட்டியில் இருந்து மந்தித்தோப்பு, ஊத்துப்பட்டி, குமராபுரம், வெங்கடாசலபுரம் வழியாக குருமலையை அடையலாம். மதுரை- திருநெல்வேலி ரயில் தடத்தில் உள்ள கடம்பூர் ரயில்வே ஸ்டேஷனில் இருந்து சுமார் 6 கி.மீ. தொலைவு. கயத்தாறு, கடம்பூரில் இருந்தும் குருமலைக்குப் பேருந்து வசதி இருக்கிறது.

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு ஒன்றியத்துக்கு உட்பட்டது குருமலை பஞ்சாயத்து. இந்த அழகான கிராமத்தை ஒட்டி வட திசையில் நீண்டு காணப்படுவதுதான் குருமலை. ஊத்துப்பட்டி என்கிற ஊரில் ஆரம்பிக்கும் இந்தக் குருமலை, கொப்பம் பட்டி என்கிற ஊரில் முடிகிறது. இந்த மலையின் நீளம் சுமார் 12 கி.மீ.! கோவில்பட்டி மற்றும் இதன் சுற்றுவட்டார மக்களைப் பொறுத்தவரை குருமலை என்பது ஓர் ஆன்மிக மலை. இந்த மலையை இறை அம்சம் கொண்டதாகவே பாவிக்கிறார்கள். குருமலையின் உயர்வைச் சொல்ல, 'குருமலைக்கு மறு மலை இல்லை' என்று உள்ளூர்க்காரர்கள் பழமொழி சொல் கிறார்கள். குருமலைக்கு ஆன்மிகச் சிறப்பு வந்தது எப்படி?



இந்த மலை சுமார் ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன் தோன்றியதாம். பாம்புக் கடி மற்றும் ஏராளமான வியாதி களைப் போக்கும் மூலிகைகள் இந்தக் குருமலையில் இருக்கின்றன. சிரியாநங்கை, ஓரிதழ் தாமரை, கரிசலாங்கண்ணி, விரவாளி, விருவெட்டை, தவிட்டச்சை, சாம்பக்குழை- இது போன்ற ஆயிரக் கணக்கான மூலிகைகள் குருமலையில் காணப் படுகின்றன. இந்த மலை தோன்றியதற்கு ஒரு கதை யும் சொல்கிறார்கள்.

ராமாயணத்தில் வரும் ஒரு சம்பவம்... எதிரி களால் தாக்குதலுக்குள்ளான லட்சுமணனைக் குணமாக்குவதற்கு சஞ்சீவி மலையைப் பெயர்த்து எடுத்து வருமாறு அனுப்பப்படுகிறார் ஆஞ்சநேயர். அதன்படி பெயர்த்து எடுத்து வரும் வழியில் சஞ்சீவி மலையின் சில பகுதிகள் ஆங்காங்கே பெயர்ந்து விழுந்துள்ளன. அப்படி விழுந்த ஒரு பகுதிதான் இந்தக் குருமலை. இதன் காரணமாகவே நோய் தீர்க்கும் மூலிகைகள் இங்கு அதிகம் காணப்படுகின்றனவாம்.



இந்த மலையின் உச்சிப் பகுதியில் ஒரு குகை இருக்கிறது. குருநாதன் சுவாமி குகை என்பது இதன் பெயர். சில நூறு ஆண்டுகளுக்கு முன் தவசித் தம்பிரான் என்ற முனிவர் உட்பட பல்வேறு முனிவர்கள் இந்தக் குகையில் வசித்து வந்ததாகக் கூறப்படுகிறது. பல சித்தர்கள் இங்கு தங்கி தவம் செய்து வந்தார்களாம். தாழையூத்து சாமியார் என்பவர் இங்குதான் அடக்கம் ஆகி இருக்கிறாராம்.

மலை உச்சிக்கு ஏறும் வழியில் பொய்யாமொழி ஐயனார் கோயிலும், மலைக்கு நடுவில் முருகப் பெருமானுக்கு ஒரு கோயிலும் இருக்கிறதாம். ''மலையின் மேலே பசுமை நிறைந்து காணப்படும். தவிர, ஆங்காங்கே நீரூற்றுக்களும் இருக் கின்றன. இப்போதும் தவம் செய்ய விரும்பும் சிலர் மலைக்குச் சென்று வருகிறார்கள். அமைதியும் ஆனந்தமும் தவழும் இந்த மலையைச் சுற்றுலாப் பகுதியாக ஆக்குவதற்கு அரசிடம் கோரிக்கை வைத்திருக்கிறோம்'' என்கிறார் கோவில்பட்டிவாசி ஒருவர்.

குருமலை சுந்தரேஸ்வரர் கோயி லுக்கு வருவோம். தற்போது இந்தக் கோயில், கோவில்பட்டியில் உள்ள அருள் மிகு செண்பகவல்லி சமேத புவனநாத சுவாமி ஆலயத்தின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது.

சுமார் 600 வருடங்களுக்கு முற்பட்ட ஆலயம் இது. பாண்டிய மன்னர்க ளால் கட்டப்பட்டு, பிற்பாடு நாயக்க மன்னர்களால் திருப்பணிகள் மேற் கொள்ளப்பட்ட ஆலயம். ''எட்டயபுரம் ஜமீன் இந்தப் பகுதியில் கோலோச்சி இருந்தபோது குருமலை சுந்தரேஸ்வரர் ஆலயத்தின் வழிபாடுகளுக்கு எல்லாப் பொருட்களும் அங்கிருந்து வந்து சேரும். அத்தகைய காலகட்டத்தில் வழிபாடு களுக்கும் திருவிழாக்களுக்கும் பஞ்சம் இல்லை. மக்கள் கூட்டமும் அதிகம் இருக்கும்.

உதாரணத்துக்குச் சொல்லப்போனால் கோயிலில் தண்ணீர் தெளித்து தினமும் சுத்தம் செய்வதற்கு, வழிபாடு களின்போது சங்கு ஊதுவதற்கு, நந்தவனம் பராமரிப்பதற்கு, மலர்மாலைகள் கட்டு வதற்கு என்று ஒவ்வொன்றுக்கும் மான்யம் கொடுத்திருந்தார்கள் ஜமீன் காலத்தில். பெரிய அக்ரஹாரமே இருந்தது. காலப்போக்கில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களால் இதெல்லாம் மறைந்து போனது. நிலைமை தலைகீழானது. அதன் பின் ஊர்மக்கள் சேர்ந்து சுமாரான அள வுக்கு வழிபாடுகளைச் செய்து வந்தார்கள்'' என்றார் ஊர்ப் பெரியவர் ஒருவர்.

மேளம் மற்றும் நாகஸ்வரக் கலைஞர்கள் ஒரு காலத்தில் குருமலை கிராமத்தில் பெருமளவில் வசித்து வந்தார்களாம். பிரபல நாகஸ்வர சக்ரவர்த்தி யான காருக்குறிச்சி அருணாசலத்தின் மனைவியின் ஊர் இது. இந்த சுந்தரேஸ்வரர் ஆலயத் திருவிழா காலத்தில், காருக்குறிச்சி அருணாசலம் நாகஸ்வரம் வாசித்துப் போன நாட்களும் உண்டாம். கணபதி யம்மா என்பவர், ''இப்பவும் இந்த ஊரைப் பிறப்பிடமாகக் கொண்டு வெளியூர்கள்ல இருக்கிற கலைஞர்கள் அடிக்கடி குருமலை வந்து சுந்தரேஸ்வரர் சந்நிதி முன் நாகஸ்வரம் வாசிச்சுட்டுப் போறாங்க. எவ்வளவோ சிறப்போட இருந்த கோயில் இது. குருமலையையும் கோயிலையும் ஒண்ணா வெச்சுப் பேசுவாங்க. இரண்டுக்குமே அத்தனை சிறப்பு இருந்திச்சு.

ஒரு காலத்தில் திருவிழா நேரங்களில் கச்சேரி அது இதுன்னு குருமலையே அமர்க்களப்படும். இப்ப எல்லாமே போச்சு. இந்த டிரஸ்ட்காரங்க வந்து கோயிலை ஓரளவு கவனிச்சுக்கறாங்க. ஊர்க்காரங்களாகிய நாங்களும் எங்களால் ஆன சரீர ஒத்தாசையை அவங்களுக்குக் கொடுத்திட்டு வர்றோம். என் காலத்துக்குள்ளே இந்தக் கோயில் கும்பாபிஷேகத்தைப் பாத்துடணும்னு எனக்கு ஆசை. அந்த ஈஸ்வரன்தான் மனசு வைக்கணும். நித்தமும் அவனைத்தான் வேண்டிக்கிட்டு இருக்கேன்'' என்றார் நம்மிடம்.



இனி, ஆலய தரிசனம் செய்வோம்.

கிழக்குப் பார்த்த ஆலயம். வெளியே சுற்றுச்சுவர். இரும்பு கேட். இதில் நுழைந்து உள்ளே செல்கிறோம். சிமென்ட் பாதை. இறைவனை அலங்கரிக்கத் தேவையான பூக்களுக்காகச் செடிகளை வளர்த்து வரும் நந்தவனம் அருகே காணப்படுகிறது. நேரே நடக்கும்போது சுந்தரேஸ்வரர் சந்நிதி கண்களுக்குத் தெரிகிறது. உள்ளே செல்லும் முன் ஒரு மண்டபம். இந்த மண்டபத்தில் உள்ள தூண் களில் இடுப்பில் உடைவாளுடன், மீசை வைத்த இருவரின் உருவங்கள் கைகூப்பிய வண்ணம் காணப்படுகின்றன.

இந்த மண்டபத்தில் வலப் புறம் அம்பாள் சந்நிதி. அர்த்த மண்டபம் தாண்டி அம்பாள் கருவறை. கருங்கல் கட்டுமானம். தெற்கே பார்த்த மீனாட்சி அம்பாள். சுமார் நான்கடி உயரத்தில் பீடத்தின் மேல் காணப்படும் இந்த அன்னைக்கு இரு கரங்கள். பழைமையான வடிவம். அன்னையின் அருள் பெற்று அப்பனின் சந்நிதிக்குள் செல் கிறோம். இறைவன் சந்நிதியை விட இறைவியின் சந்நிதி, அதிக சிதிலத் துடன் காட்சி தருகிறது.

பிரதோஷ நந்திதேவர்... நாயன் மார்களின் படங்கள்... தேவாரத் திரட்டு என மகா மண்டபம் திகழ் கிறது. ஈசனின் கருவறையும் இந்த மகா மண்டபமும் சிதிலமாகிக் காட்சி அளிக்கின்றன. சுந்தரேஸ்வரர் லிங்கத் திருமேனியை தரிசனம் செய்கிறோம். அழகான வடிவம். கடந்த சிவராத்திரியின்போது எட்டய புரத்தில் உள்ள 'அடியவர்க்கு அடியவர்கள்' அமைப்பின் சார்பில் நான்கு காலமும் விசேஷ அபிஷேகங்கள் மற்றும் வழிபாடுகள் நடை பெற்றன. மழை பெய்தால் இந்த மண்டபம் உட்பட ஆலயத்தின் சில பகுதிகளில் தண்ணீர் கசிகிறதாம். திருப்பணியின் அவசரத்தைப் பொது மக்களுக்கு உணர்த்துவதற்காக ஆண்டவனே இப்படிச் செய்கிறான் போலிருக்கிறது!

குருமலையில் இருக்கும் அமானுஷ்யமான சித்தர்கள் இன்றைக்கும் இந்த ஆலயத்துக்கு வந்து வணங்கிச் செல்வதாக கூறப்படுகிறது. சுந்தரேஸ்வரரையும் மீனாட்சியையும் வணங்கினால் நீண்ட நாள் திருமணத் தடைகள் விரைவில் அகலுமாம். குழந்தைப் பேறு வாய்க்க, நினைத்த காரியங்கள் ஸித்தியாக, உடல் சம்பந்தமான நோய்கள் குணமாவதற்கு... இங்கு வந்து வழிபடுவது சிறப்பு என்கிறார்கள்.



விநாயகர், மயில் மற்றும் திருவாசியுடன் தோற்றமளிக்கும் முருகப் பெருமான், நாகர்கள், நால்வர், சப்தகன்னியர், சண்டிகேஸ்வரர், தட்சிணாமூர்த்தி, நவக்கிரகங்கள், பைரவர் போன்ற சந்நிதிகளுடன் ஒரு முழுமையான கோயிலாகக் காட்சி தருகிறது.

கோயிலுக்கு உதவி வரும் அருள்மிகு மீனாட்சி சுந்த ரேஸ்வரர் சுவாமி ரிலிஜியஸ், வெல்ஃபேர் அண்ட் கல்ச்சுரல் டிரஸ்ட்டின் செயலரான நாராயணன், ''கடந்த ரெண்டு வருஷமா இந்த டிரஸ்ட் மூலம் பூஜைகளையும் விழாக்களையும் நடத்தி வருகிறோம். சுவாமி, அம்பாள் மற்றும் அர்த்த மண்ட--பச் சுவர்களின் கற்கள் சரிந்துள்ளன. சுவாமி மற்றும் அம்பாள் சந்நிதிகளின் விமானங்கள் ஏகத்துக்கும் பழுதடைந்துள்ளன. சுதைச் சிற்பங்கள் உருத் தெரியாமல் இருக்கின்றன. கோயிலின் சுற்றுச் சுவரைச் சரி செய்ய வேண்டும். பழைய பெருமைகளைச் சொல்லும் அளவுக்கு இந்தக் கோயில் மீண்டும் பொலிவு பெற வேண்டும் என்பதே எங்களது விருப்பம். பிரதோஷ நாட்களில் உள்ளூர்க்காரர்கள் தவிர கோவில்பட்டி போன்ற ஊர்களில் இருந்தும் பக்தர்--கள் வருகிறார்கள். பலரும் இந்த ஆலயத்தின் பெருமைகளையும் குருமலையின் மகிமைகளையும் அறிந்து, இங்கு வந்து இறையருள் பெற வேண்டும் என்பதே இந்தக் கிராமவாசிகளின் ஆசை'' என்று முடித்துக் கொண்டார்.

மதுரையம்பதியின் ஈசன் மகிமையைச் சொல்லும் குருமலை சுந்தரேஸ்வரர் மற்றும் மீனாட்சி அம்பாளை தரிசித்து அருள் பெறுவோம்; சித்தர்கள் தரிசித்த குரு மலையைக் கண்டு இன்புறுவோம்.

தகவல் பலகை


தலம்: குருமலை

மூலவர்: சுந்தரேஸ்வரர், மீனாட்சி அம்மன்.

எங்கே இருக்கிறது?: தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டியில் இருந்து சுமார் 12 கி.மீ. தொலைவு. மதுரை- திருநெல்வேலி ரயில் தடத்தில் உள்ள கடம்பூர் ரயில்வே ஸ்டேஷனில் இருந்து குருமலைக்கு சுமார் 6 கி.மீ.!

எப்படிப் போவது?: கோவில்பட்டியில் இருந்து குருமலைக்கு அரசு மற்றும் தனியார் பேருந்து வசதிகள் உண்டு. கோவில்பட்டியில் இருந்து மந்தித்தோப்பு, ஊத்துப்பட்டி, குமராபுரம், வெங்கடாசலபுரம் வழியாகப் பேருந்துகள் குருமலையை அடையும். கயத்தாறு, கடம்பூரில் இருந்தும் குருமலைக்குப் பேருந்து வசதிகள் உள்ளன.

தொடர்புக்கு:

* கே.எஸ். நாராயணன்,
அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் சுவாமி ரிலிஜியஸ்,
வெல்ஃபேர் அண்ட் கல்ச்சுரல் டிரஸ்ட்,
219/30, வக்கீல் தெரு,
கோவில்பட்டி- 628 501,
தூத்துக்குடி மாவட்டம்.
மொபைல்: 94432 38762

* எம். சங்கரநாராயணன் (டிரஸ்ட் உறுப்பினர்)
மொபைல்: 94434 59491

Comments