வீணை

அம்புப் படுக்கையில் இருந்த பிதாமகன் பீஷ்மர், வாழ்வின் பேருண்மைகளை தருமனுக்கு உபதேசித்தார். ''செல்வம் இருந்தாலும், இழந்தாலும், சுகம் கிடைத்தாலும், துன்பத்தில் துடித்தாலும் மனிதன் மண்ணுலகில் வாழத்தான் விரும்புகிறானா?'' என்று தருமன் கேட்டான்.

''எல்லா உயிர்களும் வாழவே விரும்புகின்றன. வீதியில் நடந்து சென்ற வியாசர் வேகமாக ஊர்ந்து செல்லும் புழுவைக் கண்டதும், 'ஏன் இந்த வேகம்?' என்றார். 'பெரிய வண்டி வரும் ஓசை கேட்கிறது. வண்டியை இழுக்கும் காளை களின் குளம்படிச் சத்தம் காதில் விழுகிறது. அவை, என்னை மிதித்து விடுமோ... என்ற அச்சத்தில் ஓடுகிறேன்' என்றது புழு.


'புழுவாகப் பிறந்த உனக்கு மரணம் மேலானது அல்லவா?' என்று வியாசர் கேட்டதும், 'இந்தப் பிறவியிலும் ஒரு சுகம் இருக்கவே செய்கிறது. ஆகவே, நான் சாக விரும்பவில்லை' என்று சொல்லிவிட்டு விரைந்தது புழு. மகனே, எந்தப் பிறவியாக இருந்தாலும் வாழும் ஆசை போகாது!'' என்றார் பீஷ்மர்.

'நெருப்பைப் புகை மறைப்பது போல், கண்ணாடியைத் தூசி மறைப்பது போல், வயிற்றில் வளரும் குழந்தையைக் கருப்பை மறைப்பது போல், ஆசை அறிவை மறைக்கிறது' என்று அழகான உவமைகளுடன் விளக்குகிறது பகவத் கீதை.

'மனஸ் வந்து விட்டால், உடனே அதற்கு ஆயிரக் கணக்கில் ஆசைகள் என்ற பசி ஏற்பட்டு, அதைத் தீர்க்க கோபம், லோபம், பொய், பொறாமை, அழுகை, பயம் எல்லாமும் பட்டாளமாக வந்து விடுகின்றன. அப்படியாவது ஆசை தீர்ந்ததா என்றால், இல்லை. விடாமல் ஒன்று மாற்றி ஒன்றாக... ஆசை பூர்த்திக்கான காரியங்கள் நம்மைப் பிடித்து, பேய் மாதிரி ஆட்டி வைக்கின்றன. ஆனந்தம் வேண்டும் என்பதற்காகவே இத்தனை காரியங்களும். என்றாலும், இதனால் அடையக் கூடிய சந்தோஷங்களும் தற்காலிக மாக இருந்து மறைந்து போகின்றன. எதுவுமே கலப்படமற்ற சந்தோஷமாக இல்லாமல், கையோடு ஒரு துக்கத்தையும் அழைத்துக் கொண்டு வருகிறது!' என்றார் மறைந்த பரமாச்சார்யார்.

ஆசை நெருப்பு என்றும் அணையாது என்பதற்கு, மகாபாரதம் காட்டும் யயாதியின் வாழ்க்கையே சரியான சான்று. அரசன் யயாதி, சுக்ராச்சார்யரின் மகள் தேவயானியை மணந்தான். அவளுடன் இல்வாழ்க்கை நடந்தபோதே அவளின் தோழி சர்மிஷ்டையுடன் கலந்தான். இதை அறிந்த சுக்ராச்சார்யர், யயாதிக்கு இளமையிலேயே கிழட்டுத் தன்மை வந்து சேர சபித்தார். 'நீ விரும்பினால் உனது கிழட்டுத் தன்மையை ஓர் இளைஞனுக்கு அளித்து, அவனது இளமையை நீ பெறலாம்!' என்று சாப விமோசனமும் அருளினார்.

இளமை இன்பங்களை எல்லையில்லாமல் அனுபவிக்கத் துடித்த யயாதியின் நிலை கண்டு, அவனது கடைசி மகன் பூரு, தந்தையின் கிழட்டுத் தன்மையை ஏற்று, தன் இளமையை மகிழ்ச்சியுடன் தாரை வார்த்தான்.

ஆண்டுகள் பல கடந்தன. இன்பத்தின் எல்லையைத் தேடிய யயாதியின் ஆசையோ வகை வகையாக அனுபவித்த பின்னரும் எள்ளளவும் அடங்கவில்லை. ஒரு நாள், மகனை அழைத்து அவனது இளமையைத் திருப்பித் தர முடிவெடுத் தான்.

''மகனே! உனது இளமையைப் பெற்று ஆசையைத் தீர்த்துக் கொள்ள ஆயிரம் சுகங்களைத் தேடித் தேடி அனுபவித்தேன். விரும்பியதை அனுபவிப் பதன் மூலம் ஆசை அடங்காமல் மேலும் அதிகரிப் பதை நாளடைவில் உணர்ந்தேன். அனுபவித்து ஆசையைத் தீர்ப்பது என்பது நெய்யூற்றி நெருப்பை அணைக்கும் செயல் என்பதை புரிந்து கொண்டேன். நெய்யூற்ற ஊற்ற நெருப்பு வளரும். அனுபவிக்க அனுபவிக்க ஆசை தொடரும். மண், பொன், பெண் எதுவானாலும் ஒரே கதைதான்'' என்றான் யயாதி. 'துன்பத்துக்குத் தீர்வு ஆசையை அனுபவிப்பது அல்ல; ஆசையை அடி யோடு ஒழிப்பதுதான்' என்ற தெளிவு யயாதிக்கு வந்தது. இந்தத் தெளிவு இன்று நம்மில் எத்தனை பேருக்கு உண்டு?

'ஆசையின் நிழலாக துன்பம் தொடர்கிறது' என்று எந்த ஞானியும் உபதேசிக்காமலே நாம் அறிவோம். ஆனாலும் நம்மால் ஆசையை விட முடியவில்லையே!

நாம் அனைவரும் ஆமைகள் என்கிறார் அப்பர். ஆமை நீண்ட நாட்களாக குளிர்ந்த நீரில் வாசம் செய்வதால், அதன் உடல் விரைத்துக் கிடக்கிறது. வழிப்போக்கன் ஒருவன் நீரில் இருந்த ஆமையைக் கண்டான். ஆமைக்கறியின் சுவை அவன் நாவில் நீரை வரவழைத்தது. அதை உண்டு பசியாற வேண்டுமென்று அவனுள் ஆசை எழுந்தது.

ஆமையைப் பிடித்தான். கல்லை அடுக்கி, கையில் கொண்டு வந்த கலனில் நீர் நிரப்பி, அதனடியில் நெருப்பு வளர்த்து, ஆமையைக் கொதி கலனில் போட்டான். நீர் கொஞ்சம் கொஞ்சமாக சூடேறியது. விரைத்துக் கிடந்த ஆமைக்கு நீரின் வெதுவெதுப்பு சுகத்தைக் கொடுத்தது. 'என்ன சுகம், என்ன சுகம்!' என்று ஆமை அங்குமிங்கும் நீரில் திளைத்து ஆடியது. கொதிகலனில் நீரின் வெப்பம் உயர உயர, ஆமையின் உடல் கொதித்து, உயிர் துடித்து, ஆவி அடங்கியது. முதலில் இன்பம்; முடிவில் துன்பம். இதுவே என்றும் மாறாத வாழ்க்கை நியதி.

'உலையில் ஏற்றித் தழலெரி மடுத்த நீரில்
திளைத்து நின்றாடுகின்ற ஆமைபோல் தெளிவிலாதேன்'

என்கிறார் அப்பர். 'எல்லை மீறினால் எதுவும் துன்பமே' என்ற தெளிவு ஆமைக்கு மட்டுமா இல்லை... நமக்கும்தானே?

'எல்லா துக்கங்களுக்கும் ஆசையே காரணம்' என்றார் புத்தர். ஆனால் ஆசை இல்லாமல் போனால் மனித வாழ்க்கைக்கு அர்த்தமே இல்லை. எதுவும் இயல்பாகவே அடங்க வேண்டும்; அடக்கலாகாது. அடக்குதல் எந்த வடிவில் அமைந்தாலும் அது வன்முறையே! இதனால் ஒருபோதும் நன்மை விளைவதில்லை. எதையும் அடக்கி நீண்ட நாள் ஆள முடியாது. ஓங்கி சுவரில் எறிந்த பந்து வேகமாய்த் திரும்பி முகத்தில் மோதும்.

ஆசை, துன்பம் தரும் என்பதற்காக அதை முற்றாக அழிக்க முனைவது ஓர் எல்லை. ஆசைப்படுவதற்காகவே வாழ்க்கை என்று அத்தனைக்கும் ஆசைப்பட்டு அதிலேயே அமிழ்ந்து விடுவது எதிர் எல்லை. இந்த இரண்டு எல்லைகளுமே நமக்குத் தேவையில்லை. நாம் எப்போதும் நடுப்பாதையில் நடப்போம். இதில் நடப்பவர்கள் நல்ல வண்ணம் வாழ்வார்கள்.

சித்தார்த்தன், அரண்மனை வாழ்க்கையில் சிற்றின்பங்களில் மிதந்தான். பார்வை திரும்பிய பக்கம் எல்லாம் பாவையர். நேரம்- காலம் போவது தெரியாமல் ஆடல்- பாடல்; பஞ்சணை சுகம்; பால்- பழம் விருந்து. சித்தார்த்தனுக்குச் சலித்துப் போனது.

சிற்றின்பத்தின் எல்லையில் இருந்து நேரெதிராகப் பேரின்பம் காணத் துறவு நோக்கி நடந்தான். 'உருவேலா' கானகத்தில் ஆறு ஆண்டுகள் உடல் வற்றி, உள்ளெலும்பு வெளித் தெரியத் தன்னை வருந்தி கடும் தவமிருந்தான். உடலில் உயிர் இருந்தால்தானே உண்மை ஞானத்தைத் தரிசிக்க முடியும் என்று உணர்ந்த பின், ஓரளவு உண வேற்று அத்தி மரத்தடியில் அமர்ந்தான். போதம் கனிந்து ஒரு பௌர்ணமி நாளில் சித்தார்த்தன் புத்தனானான். எல்லைகளில் நிற்காமல், நடுப்பாதையில் நம்மை நடக்கச் சொல்கிறது புத்தம். அது புத்தனின் அனுபவத்தில் வந்து சேர்ந்த ஞானம்.

மனிதனிடம் இயல்பாகவே மூன்று உணர்ச்சிகள் இருப்பதாகப் பதஞ்சலி முனிவர் சொல்கிறார். அவை மகிழ்ச்சி, பயம், வெறுப்பு! இந்த மூன்று உணர்ச்சிகளே எண்ணற்ற ஆசைகளாக, கருத்துகளாக உள் மனதில் உருவெடுக்கின்றன. ஆசைகளை அறவே அழித்தொழித்தல் சாத்தியம் இல்லை. ஆனால், நாம் கொஞ்சம் முயன்றால், நமது ஆசைகளை ஒழுங்காக சீரமைத்துக் கொள்ளலாம். ஆசையை அறுத்து நாம் முனிவரா கவோ, ஞானியாகவோ ஆக வேண்டாம். ஆசையை அறம் சார்ந்த எல்லைக்குள் வைத்து நாம் அனைவரும் நல்ல மனிதராவோம்.

ஏராளமான, கண்ணைக் கவர்ந் திழுக்கும் பொருட்கள் நிறைந்த கடைக்குள் நுழைந்து, அத்தனை பொருட்கள் மீதும் ஆசை வைத்து, ஒன்றிரண்டு பொருட்களை வாங்கித் திரும்பும் எவருக்கும், வாங்கிய பொருட்கள் முழுமையான மகிழ்ச்சியைத் தராது. ஏதாவது ஒரு பொருளின் மீது மட்டும் ஆசை வைத்து வாங்கினால் அது தரும் நிறைவில் குறைவிருக்காது.

எல்லாப் பொருட்களின் மீதும் ஆசை வைப்பது, வாழ்க்கையை விபரீதமாக்கும். தேவை குறைந்து, ஆசையும் குறைந்தால் வாழ்நாள் முழுவதும் அமைதி வலம் வரும். மண், பொன், பெண் வேண்டாம் என்பதில்லை. ஒரு மனைவி, ஒரு சிறிய வீடு, அளவான வசதி என்று ஆசைப்படுவதில் தவறில்லை.

வீணை இருக்கிறது. அதன் நரம்புகள் முறுக்கேறினால் நல்லிசை பிறக்கும். முறுக்கிக் கொண்டே போனால் நரம்பும் இருக்காது; இசையும் பிறக்காது. முறுக்கேறாமல் நரம்புகள் தளர்ந்து கிடந்தாலும் வீணையிலிருந்து இன்னிசை வராது. நல்ல இசை வீணையில் கேட்க, அதன் நரம்புகள் அதிகம் தளராமலும், அதிகம் முறுக்கேறாமலும் நடுப்பாதையில் நிலைப்பதுதான் நல்லது.

நம் வாழ்க்கையும் வீணைதான். இதில் ஆசை நரம்புகள் அதிகம் தளர்ந்து விடாமலும், பேராசையால் நிரம்ப முறுக்கேறாமலும் நடுப் பாதையில் வாசித்துப் பழகுவோம். 'கலைமகள் கைப்பொருளே' என்று பாடுவதில் பயனில்லை. வீணையில் வாழ்க்கையைப் படிப்போம்.

Comments

Post a Comment