தோஷங்கள் போக்கும் துர்க்கை


வேப்ப மரமும் அரச மரமும் பின்னிப் பிணைந்து உள்ள இடங்களில் அநேகமாக அம்மன் கோயில்கள் அமைந்திருக்கும். அப்படி ஒரு கோயில், விருத்தாசலத்தில் அமைந்துள்ளது. இங்கே அருள்பாலிப்பவள் அஷ்டபுஜ துர்க்கை.

சகல தோஷ நிவாரண பரிகாரதலமாக கூறப்படும் இங்கு தனியாக நின்ற கோலத்தில் ராஜபரிபாலனம் செய்து வேண்டியவர்களுக்கு வேண்டிய வரங்களைத் தந்தருளும் அன்னையாக அருள்பாலிக்கிறாள் துர்க்கை.

சுமார் முந்நூறு ஆண்டுகளுக்கு முன்பு தோன்றி மீண்டும் புனரமைப்பு செய்யப்பட்ட ஆலயமாகத் திகழ்கிறது.

பல நூறு ஆண்டுகளுக்கு முன், முஸ்லிம் பெரியவர் ஒருவர் வாரந்தோறும் வெள்ளிக்கிழமையன்று இக்கோயில் உள்ள இடத்தில் கற்பூரம் ஏற்றி வணங்கி வந்திருக்கிறார்.

அவரது வழக்கம் தொடரவே அப்பகுதி மக்கள் ஒரு வெள்ளிக்கிழமை அந்தப் பெரியவரை அணுகி விவரம் கேட்டனராம்.

`இந்த இடத்தில் பெண் தெய்வம் ஒன்று இருக்கிறது. அதை நீ வெள்ளிக்கிழமை தோறும் கற்பூரம் ஏற்றி வணங்கு என்று எனது கனவில் ஒரு கட்டளை வந்தது. அதைத்தான் நான் செய்து வருகிறேன்' என்று சொன்ன முதியவர், `இனி நீங்கள் இங்கே கோயில் அமைத்து வழிபட்டுக் கொள்ளுங்கள்' என்று கூறிவிட்டுச் சென்றுவிட்டாராம். உடனே பக்தர்கள் இப் பகுதியில் கோயில் அமைத்து வணங்க ஆரம்பித்துள்ளனர்.

அன்று முதல், இன்று வரை பக்தர்கள் வாழ்வில் வரும் தடைகளை அகற்றும் அன்னையாகவே திகழ்ந்து வருகிறாள் இந்த துர்க்கை. களத்திர தோஷம், சுக்ரதோஷம், மாங்கல்ய தோஷம், செவ்வாய் தோஷம், நாக தோஷம், காலசர்ப்பதோஷம் போன்ற தோஷங்கள் இவளை வழிபடுவதால் நிவர்த்தியாகிறது என்ற நம்பிக்கை பக்தர்களிடையே நிலவி வருகிறது.

வெள்ளிக்கிழமை தோறும் விசேஷ பூஜையும்; ஆடி, புரட்டாசி மாதங்களிலும் தேய்பிறை அஷ்டமி தினங்களிலும் விளக்கு பூஜையும் வெகு சிறப்பாக நடைபெற்று வருகின்றன.

பெண்கள் தொடர்ந்து எட்டு அஷ்டமி தின பூஜையில் கலந்து கொண்டால், நினைத்தது நிறைவேறும் என்பது நம்பிக்கை.

விருத்தாசலம்- கடலூர் ரோட்டில் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வடபுறம் செல்வராஜ் நகரில் அமைந்துள்ளது இந்த ஆலயம்.

Comments