பண்ணேர் மொழியம்மை



பஞ்சமகா தோஷ திருமணத் தடை நீக்கித் திருமணம் நடைபெற வழிபடவேண்டிய பரிகாரக் கோயில்களுள் ஒன்று வெஞ்சமாங்கூடலூர், கல்யாணவிகிர்தீஸ்வரர் கோயில்.

கொங்கு நாட்டில் அடங்கும் கரூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்ற எல்லைப்போர்களில் வெற்றி பெற்ற மன்னர்கள் அருகிலேயே கோயில்களை உருவாக்குவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். எல்லைப் போரில் வேடர்கள் செய்யும் உதவியைக் கருத்தில் கொண்டு சிற்றரசர்களாய் நியமிக்கப்பட்டவர்களில் வெஞ்சமன் எனும் வேடுவர் தலைவனும் ஒருவன். இவனது பெயரிலேயே இப்பகுதி வெஞ்சமாக்கூடலூர் என அழைக்கப்பட்டதாகத் தெரிகிறது. பிற்காலத்தில் வெஞ்சமாங்கூடலூர் என திரிந்தது.

ஒருமுறை சிவனைக் குறித்துப் பதிகங்களைப் பாடி மெய்யுருகி நிற்கிறார் சுந்தரர். மேலும், மேலும் பதிகங்கள் பாடப்பட்டுக் கொண்டே இருந்தன. இறைவன் அவருக்கு உதவிட எண்ணி வயோதிகர் வடிவில் அங்கு தோன்றினார். தன்னுடன் வந்த பார்வதிதேவியை மூதாட்டியாக்கினார்.

கணபதியையும், கந்தனையும் இரு சிறுவர்களாக்கி பொன்பரப்பி என்னும் ஊரில் மூதாட்டியாக இருந்த பார்வதிதேவியிடம் அடகுவைத்துப் பணம் பெற்று சுந்தரர்க்கு அளித்து மகிழ்ந்தார். அந்த மூதாட்டி இருந்த தலத்தில் அம்மன் கோயில் அமைந்தது. அது தற்போது பொன்பரப்பி அம்மன் கோயில் என்றழைக்கப்படுகிறது.

அகலிகையின் அழகில் மயங்கி தவறு செய்த தேவேந்திரன், அதனால் கௌதம முனிவரிடம் பெற்ற சாபம், விகிர்தீஸ்வரரை வணங்கிய பிறகே நீங்கியதாம். கல்யாண விகிர்தீஸ்வரரை வணங்கி சகலவித சாபங்களுக்கும் விமோசனம் பெறலாம்.

ஐந்துநிலை ராஜகோபுரத்துடன் கம்பீரமாகக் காட்சி தரும் திருவாயில் தாண்டி உட்புறமாகப் படிகளில் இறங்கினால், முதலாவதாக காட்சி தருவது, துவஜஸ்தம்பம். அதனை அடுத்து சிற்ப வேலைப்பாடுகளுடன் கூடிய மண்டபம். வலம் வரும்போது அறுபத்து மூவர் சன்னதியைத் தொடர்ந்து ஆனைமுகத்தோன் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். அடுத்ததாக, பஞ்சலிங்கங்கள் அமைந்து பரவசப்படுத்துகின்றன. திருமணம் தடைபடுவோர் இந்தப் பஞ்சலிங்கங்களுக்கு நெய் தீபம் ஏற்றி வில்வ மாலை சாத்தி வழிபட்டால் தோஷம் நீங்குவதாக ஐதிகம். வடக்குப்பகுதியில் முருகப்பெருமான் கிழக்குமுகமாக வள்ளிதெய்வானையுடன் இணைந்து நின்று அருள்பாலிக்கிறார். சண்டிகேஸ்வரர், நடராஜர், பைரவர், நவகிரகங்கள் ஆகிய பரிகார தெய்வங்கள் உள்ளன. பண்ணேர் மொழியம்மை சன்னதியின் வெளிப்புறத்தில் வெஞ்சமன் சிலை வடிக்கப்பட்டுள்ளது. இறைவி பண்ணேர் மொழியம்மை நின்ற கோலத்திலும், இறைவன் விகிர்தீஸ்வரர் கிழக்கு முகமாகவும் இருந்து அருள்பாலிக்கின்றனர். கருவறைக்குப் பின்புறம் லிங்கோத்பவர் வடிவம் உள்ளது.

ஐப்பசியில் அன்னாபிஷேகம், கந்தசஷ்டி உற்சவத்தின்போது ஆறாவதுநாள் திருக்கல்யாணம், மார்கழியில் ஆருத்ரா தரிசனம், மாசி மகத்தின்போது தேரோட்டம் என பெருந்திருவிழாக்கள் கொண்டாடப்படு கின்றன.

கரூர்- அரவக்குறிச்சி சாலையில் வெஞ்சமாங்கூடலூர் பிரிவிலிருந்து கிழக்கே 8 கி.மீ.யில் உள்ளது இக்கோயில்.

Comments