நர்மதா நதியில் அமைந்துள்ள கோவில்கள்





பதினைந்தாம் நூற்றாண்டில், மால்வா பிரதேசத்தின் புகழ்பெற்ற மாண்டு என்ற இடத்தைத் தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்தவர் சுல்தான் கோஷங் ஷா கோரி.

நர்மதாபூர் அவரது ஆட்சிக்கு உட்பட்டிருந்தது. கோஷங்ஷா மூலம் அந்த நகருக்கு கோஷங்காபாத் என்ற பெயரும் வந்தது. பழங்காலத்தில் நர்மதாபுரம் அல்லது நர்மதாபூர் என்பதே அந்த இடத்தின் பெயராக இருந்தது.

நதிக்கரையில் அமைக்கப்பட்டுள்ள படித்துறைகளில் சேடானி காட் பிரபலமான ஒன்று.

ஆங்கிலேயர் ஆட்சி நடந்துகொண்டிருந்த காலத்தில் மண்ணாலான தளமே கட்டப்பட்டிருந்தது. இங்கு நதியில் இறங்க மரத்தாலான சிறிய ஏணி போன்ற படிக்கட்டுகளே அமைக்கப்பட்டிருந்தன. மகர சங்கராந்தி விசேஷமான தினம். அன்று நூற்றுக்கணக்கான பக்தர்கள், `நர்மதே ஹர' என்ற கோஷத்துடன் இறங்கி நீராடுவது வழக்கம்.

ஒரு சமயம், அந்தக் குறுகலான இடத்தில் தன் குதிரையில் அமர்ந்த வண்ணம் ரெக்டென் என்ற ஆங்கில அதிகாரி பாதுகாப்பு ஏற்பாடுகளைக் கவனிக்க நேர்ந்தது. பக்தர்களின் அசௌகரியங்களை உணர்ந்து கொண்ட அவன், அந்நகரின் பிரமுகர் எவர் என விசாரிக்க, சேட்டானி ஜானகி என்ற பெயர் பதிலாகக் கிடைக்கிறது.

சேட்டானி ஜானகி இல்லத்திற்கு அந்த அதிகாரி விரைகிறான். தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு நர்மதைக்கரையில் பக்தர்கள்படும் இன்னல்களை சேட்டானியிடம் எடுத்துரைக்கிறான். அந்நதிக்கரையில் தளம் அமைக்க உதவி செய்யும்படி அந்த அம்மையாரிடம் இறைஞ்சுகிறான். இயல்பாகவே நர்மதையிடம் ஈடுபாடு கொண்ட சேட்டானி ஜானகியின் மனத்தை அந்த ஆங்கிலேயன் வேண்டுகோள் நெகிழ வைக்கிறது.அதன்படி சேடானி காட் கி.பி.1881ல் கட்டி முடிக்கப்பட்டது.

பல சிறிய கோவில்களும் சத்திரங்களும் காட் பகுதியை ஆக்கிரமிக்கின்றன. அருகிலேயே கோரிகாட், கோல்காட் என்ற தளங்களும் அமைந்துள்ளன. கனக பவன் எனப்படும் ராமர் கோயில், நர்மதை மாயீ கோயில், ஸத்ஸங் பவன், சிவாலயம், அனுமன் கோயில், காயத்திரி சக்தி பீடம், ஜகதீசர் கோயில் ஆகியவை குறிப்பிடத்தக்கவை. இவற்றில் காயத்திரி தேவிக்கு அமைக்கப்பட்ட கோயிலும், ஜகதீசர் ஆலயமும் அளவில் சற்றுப் பெரியவை.

ஒவ்வொரு வருடமும் நர்மதாபுரத்தில் நர்மதை ஜெயந்தி என, நர்மதையின் அவதார நாள் மிக உற்சாகமாகக் கொண்டாடப்படுகிறது. மார்ச் மாதம் (மாசி) சுக்ல சப்தமி தினம்தான் நர்மதை ஜெயந்தி.

நர்மதையின் சிறப்பை ஒவ்வொருவரும் அறிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக அது இன்றைய நாட்களில் ஓர் உற்சவமாக வடிவெடுத்திருக்கிறது. அன்றிரவில் செய்யப்படும் `தீப்தான்' என்ற விளக்கு வழிபாடு கண்கொள்ளாக்காட்சி!

ஒன்றோடு ஒன்றாக பிணைக்கப்பட்ட நாவாய் எனப்படும் படகுகள் மூலம், நதியின் மத்தியில் மிதக்கும் மண்டபம் ஒன்றை உருவாக்குகின்றனர். அப்படகுகளிலிருந்து மெதுவாக நதியில் மிதக்க விடப்படும் தீபங்கள் தொலைவிலிருந்து நோக்கும்போது, ஒரு சிறிய ஒளிக்கோடாய்த் தெரிகின்றன. அருகில் வரவர ஒளி அதிகமாகி ஒளிக்கற்றையாய்க் காட்சி தருகின்றன. மிக அருகில் வந்ததும்தான் அவை சின்னஞ்சிறு விளக்குகள் என்பது தெரியவரும். அப்போது படகு மண்டபம் தீயால் சூழப்பட்டதுபோல் காட்சி தருகிறது. தீபங்களே நதியாய் பிரவாகிக்கிறதோ என்ற எண்ணம் நர்மதை ஜெயந்தி இரவின்போது நமக்குத் தோன்றாமல் இருக்காது.

அன்று நர்மதை விக்ரகம் ஒன்று நகரின் வீதிகளில் ஊர்வலமாய் எடுத்துச் செல்லப்படுகிறது. பக்தர்கள் முடிக்காணிக்கை செலுத்துவதும் உண்டு. நர்மதை தேவிக்கு அன்று செய்யப்படும் அபிஷேகம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. பஞ்சாமிர்தம், நெய், தயிர், தேன் ஆகியவை நைவேத்தியப் பொருட்களாகப் பயன்படுத்தப்படுகின்றன.

கோஷங்காபாத் நகரின் கிழக்குப்புறம் சுமார் எட்டு கி.மீ. தொலைவில் நர்மதை நதியுடன் தவா எனப்படும் அதன் துணை நதி சங்கமமாகிறது. நர்மதையின் துணை நதிகளில் மிகப் பெரியது தவா நதி. சுமார் நூற்று எழுபத்திரண்டு கி.மீ. நீளம் உடையது. சங்கம இடத்தை நெருங்கும் முன் வலது பக்கம் தவா நதியின் பெரும் பரப்பைக் காணலாம். நர்மதை தவா நதியை தன் சகோதரியாகப் பாவித்து இரு கரம் நீட்டி வரவேற்கிறாள் எனக் குறிப்பிடுகின்றனர்.

அந்த இடத்தில் நர்மதைக் கோவில் ஒன்றும் அமைந்துள்ளது. நர்மதைக் கோவிலைத் தவிர பாந்தரா பான் என்று அழைக்கப்படும் சங்கம இடக் கரையில் அனுமன், ராம், ஜானகி கோவில் ஆகியவையும் உள்ளன. சங்கம இடத்தில் நதிகளுக்கு நடுவே சிறிய சிவன் கோவிலும் உள்ளது. கார்த்திகை பவுர்ணமி இங்கு மிக விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. சந்திர, சூரிய கிரகணங்களின் போது கூட்டம் அலை மோதும் இடம் இது. தவா நதியின் பழுப்பு நிற நீரும் நர்மதையின் நீல நிறப் பிரவாகமும் ஒன்றாய் சேர்ந்து திரிவேணி சங்கமம் போன்ற தோற்றத்தை உருவாக்குகின்றன.

பாந்த்ரா பான் தீர்த்த மகிமையை வசிஷ்ட சம்ஹிதா ஒரு கதை மூலம் குறிப்பிடுகிறது. பண்டைய நாளில் வைஷ்வானர் என்ற மன்னன் ஒரு நிலப்பரப்பை ஆண்டு வந்தான். துரதிர்ஷ்டவசமாக ஒரு யுத்தத்தில் விரோதிகள் அவனது நாட்டை அபகரித்துக் கொள்கின்றனர். மனமுடைந்த மந்திராசலமலை சென்று சிவனை நினைந்து கடும் தவம் புரியத் தொடங்கினான். அவனது கோர தவத்தை தேவரிஷி நாரதர் கண்டார். மண்ணாசையைத் துறந்துவிட்டு ஆத்ம ஞானத்தைப் பெற முயற்சி செய்! என வைஷ்வானரை உபதேசிக்கலானார். நாரதரது அறிவுரையை வைஷ்வானர் கவனிக்கவில்லை. கோபமுற்ற நாரதர், `சபல சித்தம் கொண்ட வைஷ்வானர், நீ நிலையில்லாமல் தாவும் வானரமாகக் கடவாய்!' என்று சபிக்கிறார்.

துக்கமுற்ற வைஷ்வானர், நாரதரிடமே சாபவிமோசனத்திற்கு மன்றாடு-கிறான். `நர்மதையும் தவா நதியும் சங்கமமாகும் இடத்திற்குச் சென்று உனது தவத்தைப் பூர்த்தி செய்! உனக்கு நல்வழி கிடைக்கும்!' என்று அறிவுறுத்திவிட்டு நாரதர் மறைகிறார். வைஷ்வானரது நீண்ட தவத்தால் மனம் மகிழ்ந்த இறைவன், அவன் இழந்தவற்றைப் பெற வரமும் அளிக்கிறார்.

அதுமுதல் இந்த சங்கமம் `பாந்தரா பான்' என்ற பெயரையும் பெற்றது. இங்கே ஸ்நானம் செய்யும் எல்லோரது வேண்டுதல்களையும் பூர்த்தி செய்யும் என்பது நம்பிக்கை!

Comments

Post a Comment