சாண்டிலேஸ்வரர்

பிரஹ்மாண்ட் காட் என்னும் இடத்தில் நர்மதையுடன் வாராஹி நதி சங்கமம் ஆகிறது. வாராஹி, ஸப்த மாதர் எனக்கூறப்படும் ஏழு தேவியரில் ஒருத்தி. எனவே இப்புண்ணிய தீர்த்தம் அதிக கௌரவத்தைப் பெறுகிறது. தீபேஸ்வரர் கோயிலின் தென் திசையில் அதன் அருகிலேயே இந்த சங்கம இடம் அமைந்துள்ளது.

சூரிய குண்ட் ஸ்நானம் எவ்வளவு மகத்துவமோ அதேபோல் இச்சங்கம இடத்து ஸ்நானமும் முக்கியத்துவம் பெறுகிறது.

நதியின் தென்கரையில் சங்கமேஸ்வரர் என்ற சிவாலயமும் இருக்கிறது. கி.பி.1655-ல் ராணி துர்க்காவதியால் நிர்மாணிக்கப்பட்டதெனக் கூறப்படுகிறது. சிவாலயத்தில் நரசிங்கரது மூர்த்தியும் உள்ளது.

சங்கமேஸ்வரர் கோயில் பிராகாரத்தில் வாராஹ பிரதிமை ஒன்றுள்ளது. பிரதிமை, கோயிலைவிட பழையதாக இருக்கலாம். இந்தத் தீர்த்தத் தலத்திற்கு வருகை புரிவோரை அதிகம் ஈர்ப்பது இந்த வாராஹ பிரதிமைதான்.

உண்மையில் பக்தர்கள் இந்தப் புண்ணிய தலத்தை வாராஹ கேஷத்திரம் என்றே அழைக்கின்றனர். நதியில் ஸ்நானத்தை முடித்துவிட்டு பிரித்திவிக்கு பூஜை செய்வது மிகச் சிறப்பாகக் கருதப்படுகிறது. இது பார்திவ் பூஜன் என்று அழைக்கப்படுகிறது.


பிரதிமையின் அடிவழியாக தவழ்ந்தபடி மறுபுறம் செல்லக்கூடியவர்கள் பாவக்கரையை நீந்திக் கடந்தவர்களாகக் கருதப்படுகிறார்கள்.

நதியின் வடகரையிலும் அனேகக் கோயில்கள் உள்ளன. இந்த காட் மெய்யாகவே மிகப் பிரமாண்டமானது என்பதை ஒவ்வொரு கோயிலிலும் நுழைந்துவிட்டு வரும்போது கண்கூடாகப் பார்க்க முடிகிறது. கணபதி கோவில், ராம் ஜானகி கோயில், கௌரி சங்க மந்திர், லக்ஷ்மி நாராயண் மந்திர், சோமேஸ்வர் மஹாதேவ், ராதா மன்மோஹன் மந்திர் ஆகியவை முக்கியமானவை.

மத்தியப் பிரதேசத்தின் நரசிங்கபூர் மாவட்டத்தில் அமைந்துள்ள இந்தத் தீர்த்தம் போபால் - ஜபல்பூர் இருப்புப்பாதையில் கரேலி ரயில் நிலையத்திலிருந்து சாகர் செல்லும் நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது.

சாண்டில்யேஸ்வரர் தீர்த்தம்: பர்மான் காட் பகுதியிலிருந்து சுமார் எண்பது கி.மீ. தொலைவில் உள்ளது சாண்டில்யேஸ்வரர் தீர்த்தம். வசிஷ்ட சம்ஹிதாவில் இத்தீர்த்தத்தின் வரலாறு விவரிக்கப்பட்டுள்ளது.

ஒருமுறை ஜமதக்னி, யக்ஞவல்கியர், வசிஷ்டர் ஆகியோர் மற்ற ரிஷி, முனிகளுடன் கலந்தாலோசித்து வரகத் என்ற யாகத்தை நர்மதைக் கரையில் செய்ய முற்பட்டனர். அனைத்து முனிவர்களும் அதில் பங்கேற்பது அவசியமானது. ஆனால் வேள்வி தொடங்கும் முன்புவரை மகரிஷி கஷ்யபர் வந்து சேரவில்லை. அவர் பங்கேற்பு இல்லாமல் யாகம் முடிவு பெறாது என்பதை அவர்கள் உணர்ந்தனர். அவரது பெயரை தர்ப்பைப் புல்லில் கிரந்த எழுத்துகளில் எழுதி பூஜை செய்து ஆவாஹன முறைப்படி அவரை எழுப்ப முயன்றனர்.

அப்போது அங்கு கஷ்யப முனியும் வந்துசேருகிறார். அங்கு நடத்திக் கொண்டிருக்கும் பூஜை விவரத்தை அவர் கேட்டறிகிறார். `தங்களது ஸங்கல்பம் விரயம் ஆகக் கூடாது!' என அவர்களுக்கு உரைத்தவர், மந்திரங்களைத் தானும் உச்சரித்தபடி கமண்டலத்திலிருந்து நீரை அந்த தர்ப்பைப் புல்லின்மீது தெளிக்கிறார்.

ஜடாமுடியும் மரவுரியும் தரித்த ஒரு முனிவர் அந்த தர்ப்பை புல்லிலிருந்து எழுந்து கஷ்யபரையும் மற்ற முனிவர்களையும் வணங்குகிறார். அந்த இளம் முனிவர் `சாண்டில்யர்' என்ற நாமகரணத்தை மகரிஷி கஷ்யபர் மூலம் பெறுகிறார். மற்றொரு மகரிஷி உபமன்யு அந்நேரத்தில் அவ்விடத்தில் இருக்க நேரிடுகிறது. அவருக்கு சாண்டிலா என்ற புதல்வி உண்டு. காஷ்யபரிடம் அவர் விண்ணப்பிக்க, சாண்டிலாவின் விவாகம் சாண்டில்யருடன் நடத்தப்படுகிறது. சாண்டில்யரும் சாண்டிலாவும் நீண்ட நாட்கள் அந்த நர்மதை தீரத்தில் தவம் புரிகின்றனர். இந்த இடத்தில் சாண்டில்யேஸ்வரர் என்ற சிவலிங்கத்தையும் ஸ்தாபிக்கின்றனர்.

இன்று யாகம், ஜபம், தபம், அன்னதானம் போன்ற காரியங்கள் இந்த தீர்த்தக்கரையில் நடத்தப்படுகின்றன. நர்மதையின் இத்தீரம் சாண்டியா காட் என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.

குப்ஜா சங்கமம்: ராமாயண மந்தரையின் தோற்றமும் நர்மதை நதிக்கரையில் உருவான நிகழ்ச்சி என வசிஷ்ட சம்ஹிதா உரைக்கிறது. சாண்டில்யேஸ்வரர் தீர்த்தத்திலிருந்து சுமார் பத்து கி.மீ. தொலைவில் குப்ஜா சங்கம் என்ற தீர்த்தம் அமைந்துள்ளது.

ஒருமுறை சரஸ்வதியும் பிரம்ம தேவனும் தங்கள் புஷ்பக விமானத்தில் அமர்ந்து நர்மதையின் இப்பகுதிக்கு வருகை புரிகின்றனர். அது மரீசிக் என்ற மகரிஷி உறைந்த இடம். மரீசிக் முனிவர் விகார உருவம் கண்ட சரஸ்வதி, தன்னை அறியாமல் நகைத்துவிடுகிறாள். மரீசிக் ரிஷி அந்த அவமதிப்பைத் தாங்கமுடியாமல், ``பணிப்பெண்ணாய், கூன் உருவத்துடன் அடுத்தடுத்த ஜன்மங்களில் பிறக்கக் கடவாய்!'' என்று சபித்துவிடுகிறார். பதட்டமுற்ற கலைவாணியும் தன் தவறுக்கு வருந்தி அவரிடம் மன்னிப்பையும் பாவ நிவர்த்தியையும் வேண்டுகிறாள்.

``அடுத்தடுத்த விஷ்ணுவின் அவதாரங்களுக்குப் பின் தங்களுக்குப் பாவ விமோசனம் ஏற்படும்!'' என்றார் முனிவர்.

ராம அவதாரத்தின்போது கூனியாக மந்தரை உருவம் கலைவாணி பெறுகிறாள். பின்னர் நாரதர் உபதேசத்தின்படி நர்மதையின் இக்கரையில் தவம் புரிந்து ஒரு ஜன்மம் துறக்கிறாள். மறு ஜன்மத்தில் கிருஷ்ண அவதாரத்தின்போதும் கூனியாய் விகாரத்தில் இருந்தவள் கண்ணனது மகிமையால் மீண்டும் விமோசனம் அடைகிறாள்.

நர்மதாபூர் (கோஷங்காபாத்): சென்னை - தில்லி இருப்புப்பாதையில் `இடார்ஸி' ரயில் நிலையத்திற்குப் பிறகு உடனே வரும் இடம்! ரயிலில் பயணம் செய்வோரில் பெரும்பான்மையோர் காசுகளை நர்மதை நதியில் விட்டெறிவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். காசுகள் நதியின் பாலத்தில் அமைக்கப்பட்ட பாதுகாப்புச் சட்டங்களில் பட்டுத்தெறித்து சத்தத்தை எழுப்பியபடி நதிக்குள் மறைவது அனைவரும் விரும்பும் காட்சி. எட்டிப் பார்த்து ரசிப்பவர் சிலர். கன்னத்தில் போட்டுக் கொள்பவர்கள் சிலர். வழிபடும் முறைகளில் சில மாற்றங்கள் இருக்கலாம். ஆனால் அந்தப் புண்ணிய நதி தரும் தாக்கம் ஒன்றுதான்.

Comments