காவிரி கரையில் அமைந்துள்ள கோவில்கள் ............









திருச்செங்கோடு

இளங்கோவடிகள் தனது சிலப்பதிகாரத்தில் `சீர்கெழு செந்திலும் செங்கோடும்' என்று புகழ்ந்துரைத்த திருத்தலம்தான் திருச்செங்கோடு. நாமக்கல்லிலிருந்து 35 கி.மீ.

இரண்டாயிரம் அடி உயரம்... அங்கே இரண்டு மலைச்சிகரங்கள் பின்னிப் பிணைந்து நிற்கும் அழகே அழகு! ஈசன், மலைமேல் உமையொரு பாகனாக எழுந்தருளியிருப்பதை வெளிப்படுத்துவதுபோல அமைந்தது.

மலை ஏற 1200 படிகளைக் கடந்து செல்லவேண்டும். பழநி மலையைப் போல ஒன்றரைப் பங்கு. ஐந்து தலைகளையும் விரித்துப் படமெடுத்த வண்ணம், வளைந்து நெளிந்து, தனது தலையில் சிவலிங்கத்தையும் தாங்கியபடி நம்மையெல்லாம் பிரமிக்க வைக்கும் அறுபது அடி நீள ஆதிசேஷனை

தரிசிக்க வேண்டுமென்றால், படிகள் வழியேதான் செல்லவேண்டும். அது தனி அனுபவம் தான்.

நாமக்கல் சாலையில் நுழைவுவாயில் உள்ளது. அதனைக் கடந்து மலையடிவாரத்தை அடைகிறோம். விநாயகப் பெருமானும், ஆறுமுகனும் அங்கே கோயில் கொண்டுள்ளனர். முதல் படியைத் தாண்டியதும் உள்ளது செங்குந்தர் மண்டபம்; அடுத்து காளத்திசாமி மண்டபம், திருமுடியார் மண்டபம், தைலி மண்டபம் உள்ளன. கீழ்ப்புறம் வீரபத்திரருக்கு கோயில், மேற்கு பார்த்தபடி உள்ளது. அடுத்து நாம் காண்பது `பசுவன்' மண்டபம். கர்நாடக மாநிலத்தில் பசவேசுவரர் வழிபாடு அதிகம். `பசவண்ணன்' கோயில் என்று கொங்கு நாட்டின் எல்லைப் பகுதியில் அதன் தாக்கம் அதிகம். சில ஊர்களில் மாதேசுவரன் என்று காளைநாதராக வழிபடுகிறார்கள். நந்தியம் பெருமானுக்குப் பொங்கலிட்டு வெண்ணெய் சாத்தி வழிபடுவது கால்நடைகளைக் காத்திடும் பிரார்த்தனை.

நந்திதேவரை வணங்கி கீழே இறங்குகிறோம். அதுதான் நாகர் பள்ளம். அங்கே தான், ஆதிசேஷன் திருஉருவம் உள்ளது. நாகருக்கு குங்குமம் சார்த்திப் பொங்கலிட்டு, நாகதோஷத்தை விலக்கிக் கொள்ளும் பக்தர்களை இங்கே காணலாம்.

அடுத்து நாம் காண்பது சத்தியவாக்குப் படிகள். சத்யவாக்கு பிரமாணம், செங்குன்றத்தில் அறுபது படிகளாக உள்ளது. கொடுக்கல் - வாங்கல் வழக்குகளில், தீர்வு காண `சத்தியப் பிரமாணம்' செய்வது நடைமுறையில் இருந்தது. அருணகிரிநாதரும் அதனை தனது திருப்புகழில் திருவாக்குமுறை பற்றிக் குறிப்பிட்டுள்ளார்.

அறுபதுபடிகளைக் கடந்து ஆறுமுகனை வணங்கியபின், செட்டி கவுண்டன் மண்டபம், தேவரடியான் மண்டபம், இளைப்பாறு மண்டபம் எல்லாம் கடந்து கோபுர வாசல் மண்டபத்தை அடைவோம். இதற்கெல்லாம் நேரம் இல்லாதவர்கள், கார் மூலம், மலைமீது அமைக்கப்பட்டுள்ள 3 கி.மீ. கப்பிச்சாலையைக் கடந்து மேலே செல்லலாம்.

வடக்குப்புற வாசலில் ஐந்து நிலை ராஜகோபுரத்தை அண்ணாந்து பார்த்து, வணங்கியபின் உள்ளே செல்வோம். திருக்கோயிலின் கிழக்குப் பகுதியில் வேலவர் சந்நதியும், மேற்குப் பகுதியில் அர்த்தநாரீஸ்சுவரர் சந்நதியும் உள்ளன.

வேலவன் சந்நதிக்கு முன்னால் அமைந்துள்ள மண்டபம், அரிய பல சிற்பத் தூண்களைக் கொண்டது. இந்த மலைமீதேறி, எத்தனை நாள் உளிகொண்டு செதுக்கி இந்த உயிரோவியங்களைப் படைத்தனரோ!

வலது கரத்தில் வேலும், சேவல் கொடியை இடது கரத்திலும் ஏந்தியபடி திருக்குமரனாகக் காட்சி தருகிறான் செங்கோட்டு வேலன். உற்சவர், வள்ளி தேவயானையுடன் அருள்பாலிக்கிறார். வேலனை வணங்கியதும், தென்புறம் உள்ள உமையொருபாகன் சந்நதிக்கு விரைகிறோம். மகாமண்டபத்தின் ஒருபுறம், அவனது உற்சவத் திருமேனியைக் காண்கிறோம்.

கருவறையில் கண்கொட்டாது நம்மை பிரமிக்கச் செய்வது, பால் வண்ணமேனியராக அந்தத் திருஉருவே! ஓருருவில் இடப்பாகம் பெண்ணாகவும், வலது பாகம் ஆணாகவும் காட்சி தருகிறார். நவபாஷாணக் கலவையினால் ஆனது இந்தத் திருமேனி என்று கூறுவர். அர்த்தநாரீசுவரரின் அழகே அழகு!

வலதுகரத்தில் தண்டாயுதம், இடது கரம் இடையிலே பதிந்தபடி, உந்திக்கு

மேலே உடலை சற்றே வலப்புறம் சாய்த்தபடி, நிற்கும் அழகுக் கோலம். மகர குண்டலம் வலது செவியில் அசைய, முத்துமணி இடதுசெவியை அணி செய்கிறது. புலித்தோலாடை வலதுபுறமும், பச்சைநிறப் பட்டாடை இடதுபுறமும் அணிந்தபடி, முப்புரி நூலும், மும்மணிமாலையும் மார்பை அழகு செய்ய, `நாகவீரத்தண்டை'யை வலதுபாதத்திலும், அழகிய சிலம்பை இடது பாதத்திலும் அணிந்தபடி அம்மையும் அப்பனும் ஒரே திருவுருவாக, மாதொருபாகனாக நிற்கும் எழிற்கோலம் தான் அது. மணிவாசகர் போற்றிப் பாடிய தொன்மைக் கோலம் தான் அது. ஒன்பது துவாரங்கள் கொண்ட பலகணி வழியேயும் அந்தக் கோலத்தைக் காணமுடியும்.

இந்த அழகுத் திருமேனியின் பாதம் பணிந்து நிற்கும் முக்கால் முனிவர் யார் என்று அறிய வேண்டாமா? அவரது வரலாறு தானே, தலத்தின் வரலாறு ஆகியது.

சதாகாலமும் சிவனையே தொழுபவர் பிருங்கி மாமுனிவர். வைராக்கிய சித்தர். `சிவமே நித்தியம்' என்ற கொள்கைப்படி சக்தியை வணங்காதவர். நித்தமும் கயிலைக்குச் செல்வார். சிவபெருமானை மட்டுமே வணங்கி வலம் வந்துவிட்டுத் திரும்புவார். அவரது அனுஷ்டானம் அன்னையை பாதித்தது. அருகருகே அமர்ந்திருந்தாலும், தனித்து இருப்பதால் தானே பிருங்கி தன்னைத் தவிர்க்கிறார். ஈசனோடு, பாகம் பிரியாளாக, பிரிக்கவே முடியாதபடி இருந்துவிட்டால்? உடனே, ஈசனை வேண்டி தவமிருந்து, அவரது உடலின் இடது பாகத்தினை தனக்குத் தரவேண்டும் என்று கோரினாள். ஈசனும் அவளது கோரிக்கையை ஏற்று உமையொரு பாகன் ஆனார்.

சிவனை மட்டுமே வலம் வரும் தனக்கு இப்படி ஒரு சோதனையா என்று திடுக்கிட்டார், பிருங்கி. வண்டு ரூபம் கொண்டு பறந்து வந்தார். எம்பெருமானை வலம் வருகையில், பாதி உடலைத் துளைத்து வெளியே வந்தார். சக்திக்கு கோபம் வந்தது. அவருடைய இரண்டு கால்களும் இல்லாது போகட்டும் என சபித்தாள். இரு கால்களையும் இழந்த முனிவர், `கால்களை இழந்தாலும், மனத்தால் உன்னைத் தொழுவேன்! என் மனம் உன்னைத் தவிர வேறு எந்த தெய்வத்தையும் நாடாது' என்று அரற்றினார்.

ஈசன் அவரது பக்தியால் நெகிழ்ந்து போய், அவருக்கு மூன்று கால்களையும், ஊன்றி நடந்திட ஒரு கோலையும் தந்தருளினார். பிருங்கி முனிவரின் பக்தி மேலும் சுடர்விட்டது. அந்த முக்கால் முனிவர் தான் அர்த்தநாரீசுவரரின் அருகிலே நிற்பவர்.

அது சரி! மலை எப்படி செங்குன்றம் ஆனது? அதனை அறிய வேண்டாமா! நாககிரி என்று பெயர் கொண்டது இந்த மலை, அதுதான் அந்தக் கதை! அசைக்க முடியாத அந்த மேருமலையை பெயர்த்திட ஆதிசேஷனும், வாயு தேவனும் முனைந்தனராம். தனது ஆயிரம் தலைகளால் அந்த மலையையே மூடி மறைத்தது ஆதிசேஷன். வாயுவோ, புயலாக மாறி சீறிப்பாய்ந்து, அந்த மலையை வேரோடு பெயர்த்தெடுக்க முனைந்தது. அவனது வேகத்தைத் தாங்க முடியாத ஆதிசேஷன் சற்றே விலகிட, மேருவின் சிகரங்களில் ஒன்று பெயர்த்துக்கொண்டு பூமியில் விழுந்தது. அதுவே இந்த நாககிரி. ஆதிசேஷனின் வாயிலிருந்து தெளித்த அதன் உதிரமே, இந்த மலையை சிவப்பாக்கி, செங்குன்றம் என்ற பெயரையும் தந்ததாம்.

மாதொரு பாகன் சந்நதிக்கு தெற்கே

அமைந்துள்ள நாரிகணபதி கோயிலின் தென்மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது நாகேசுவரர் சந்நதி. கோயிலின் தென்புறத்தில் ஆதிகேசவப் பெருமாள் சந்நதி அமைந்துள்ளது. பொன்னாழியும், புரிசங்கமும் ஏந்திய மணிவண்ணனை வணங்குகிறோம்.

மாதொரு பாகன் சந்நதியின், நேர் எதிரில் நிருத்த மண்டபம், கலையழகுமிக்க சிற்பங்களைக் கொண்டது. காளி, ரதி, மன்மதன், ஊர்த்துவதாண்டவர் போன்ற அரிய சிற்பங்கள் உள்ளன.

வடக்கு பிராகாரத்தில் கனகசபை. அருகிலேயே தலவிருட்சம் இலுப்பை மரம். ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தோர் வழிபடவேண்டிய தலமரம் அது. அதனையடுத்து பஞ்சலிங்கங்கள், மல்லிகார்ஜுனர், தட்சிணாமூர்த்தி, துர்க்கை, சூரியன், நாகர், பைரவர் ஆகிய திருமேனிகள் உள்ளன.

குழந்தைச் செல்வம் இல்லாதோர் குறைதீர்க்கும் வந்தீசுவரர், குன்றின் உச்சியில் உள்ள குகை மண்டபத்தில் உள்ளார். 350 அடி உயரம் இருக்கும். உச்சிப் பிள்ளையார், வந்தியா பாடன சிகரம் என்று அழைக்கப்படுகிறது. அங்கே அருள்பாலிப்பவர் வந்தீசுவரர்.

திருஞானசம்பந்தர் இத்தலத்திற்கு வருகைதந்தபோது, இப்பகுதி வாழ்மக்களை குளிர்ஜுரம் வாட்டியதாம். ``செய்வினை வந்து எமைத் தீண்டப் பெறா திருநீலகண்டம்'' என்ற பதிகத்தைப் பாடி, மக்களை குளிர் ஜுரத்திலிருந்து காப்பாற்றியுள்ளார்.

திருவாவடுதுறையைச் சேர்ந்த சிவப்பிரகாச சுவாமிகள் ஒரு சமயம் அடியார்களுடன், திருச்செங்கோட்டுக்கு வந்தபோது, அவர் சிவிகையில் அமர்ந்து செல்வதை சிலர் எதிர்க்க, அவர் சிவிகையிலிருந்து இறங்கி, ஆலயம் சென்றார். அவரது பெருமையை அறியாத சிலர், ``அத்தனை பெரிய மகான் ஆனால், இங்கே உள்ள கல் நந்தியை, நாங்கள் தரும் கடலையை உண்ணச்செய்வாரா?' என்று இகழ்ச்சியாகப் பேசினர்.

அப்போது சுவாமிகள், ``வில்லார் பொதுச்சபையில் வித்தகா'' என்று துவங்கும் வெண்பாவைப் பாட, மண்டபத்தில் அமையப் பெற்ற கல்நந்தி, ஓங்காரமிட்டு எழுந்து நின்று, கடலையைத் தின்று முடித்துவிட்டு, மீண்டும் கல்லுருவானதாம்.

ஊருக்கு நடுவே, கைலாச நாதர் கோயில் உள்ளது. நிலத் தம்பிரான் கோயில் என்று அழைக்கப்படும் இக்கோயில், விக்கிரமபாண்டியன் என்ற மன்னனால் கட்டப்பட்டதால், விக்கிரமபாண்டீசர் கோயில் என்று முன்பு அழைக்கப்பட்டதாம். ஐந்துநிலை ராஜகோபுரமும், அதன் முன்னே 45 அடி உயரம் கொண்ட ஒரே கல்லில் செய்யப்பட்ட விளக்குத் தூணும் அழகூட்டுகின்றன. உள்ளே நாற்பது கால்மண்டபம், ஊஞ்சல் மண்டபம், பெரிய பிராகாரம் எல்லாமே உண்டு. கோயிலைச் சுற்றிப் பல தீர்த்தங்களும் உள்ளன.

கைலாசநாதர் சந்நதியின் இடதுபுறம் ஏலவார் குழலியம்மை சந்நதி உள்ளது. நந்திதேவர் அழகிய கலைப்படைப்பு. அதனையொட்டி வடபுறம் உள்ளது நந்திகூபம். `சிங்கக்கிணறு' பல ஆலயங்களில் கண்டிருக்கிறோம். அதுபோல நந்தியின் ஊடே புகுந்து கீழே படிகளில் இறங்கி கிணற்றுக்குச் செல்லும் அமைப்பு கொண்டது.

கைலாசநாதர் கோயிலின் வடகிழக்கில் மாரியம்மன் கோயிலும், மலைக்கு மேற்கில் மலைக்காவலர் கோயிலும் உள்ளன. அன்னியர் படையெடுத்தபோது, செங்கோட்டுத் தலத்தைக் காத்திட்ட மூவர் கோயில் அது.

வீமணன், ஓவணன், இரங்கணன் ஆகிய மூவரும் இறையருள் பெற்று, மக்களின் தீமைகளை அகற்றி நல்வரம் அளித்து வரும் எல்லைச்சாமிகளாகி உள்ளனர்.

கொமாரபாளையம்

திருச்செங்கோட்டிற்கு வடமேற்கில் காவிரி ஆற்றின் கிழக்குக் கரையில் அமைந்துள்ள திருத்தலம். வளர்ந்துவரும் நகரம் இது. காசி விசுவநாதர் - விசாலாட்சி அருள்பாலிக்கும் தலம். அருகிலேயே பள்ளிப்பாளையம் அக்ரகாரம், ஈரோடு நகரையொட்டி அமைந்துள்ளது. விசுவநாதர் - விசாலாட்சி எழுந்தருளியுள்ள தலம்.

செவ்வந்தீசுவரர் அருள்பாலிக்கும் தேவனாங்குறிச்சியும், சக்தீசுவரர் எழுந்தருளியுள்ள அனங்கூரும், திருச்செங்கோட்டிற்கு மேற்கில் சுமார் 5 கி.மீ. தொலைவில் உள்ளவை ஆகும்.

செம்பகமாதேவி

சாமந்தீசுவரர் என்ற திருநாமத்துடன் ஈசன் அருள்பாலிக்கும் திருத்தலம் `செம்பகமாதேவி'. திருச்செங்கோட்டிற்கு வடகிழக்கில் 15 கி.மீ. தொலைவில் உள்ளது. அதற்கு தெற்கில் கைலாசநாதர் கொலுவிருக்கும் தலம் `பாலாக்குழி'.

மல்லசமுத்திரம்

சோலீசுவரர் அருள்பாலிக்கும் திருத்தலம் இது. திருச்செங்கோடுக்கு வடகிழக்கில் 21 கி.மீ. அருகிலேயே கந்தசுவாமி கோயிலும் உள்ளது. வன்னீசுவரர் எழுந்தருளியுள்ள தலம் பாலமேடு, மல்லசமுத்திரத்திற்கு தெற்கே 7 கி.மீ.

வெண்ணாந்தூர்

மல்லசமுத்திரத்திற்கு கிழக்கே 10 கி.மீ. தொலைவில் உள்ளது வெண்ணாந்தூர். தீர்த்தகிரீசுவரர் அருள்பாலிக்கும் தலம் இது. அருகிலேயே `அலவாய் மலையில்' வேலவன் கோயில் கொண்டுள்ளார். `முத்துக்குமாரசுவாமி', இப்பகுதி மக்களின் கண்கண்ட தெய்வமாக விளங்குகிறார்.

`கந்தசஷ்டி' பிரமாண்டமான முறையில் கொண்டாடப்படும் விழாவாகும். வல்வில் `ஓரி' படையுடன் வந்து வணங்கிய அத்தனூர் அருகிலேயே உள்ளது.

ஆறம்முனை

திருச்செங்கோட்டிற்கு கிழக்கே 6 கி.மீ. தொலைவில் உள்ளது ஆறம்முனை என்ற திருத்தலம். தாமரையாள் உடனிருக்க திருக்குறளப்பன் என்ற திருநாமத்துடன் எம்பெருமான் எழுந்தருளியுள்ள தலம்.

ஊஞ்சனை

கரூர் மாவட்டத்தில் ஊஞ்சலூரை தரிசித்தோம். இப்போது `ஊஞ்சனை' எனும் திருத்தலத்தை நாமக்கல் மாவட்டத்தில், திருச்செங்கோடு-நாமக்கல் சாலையில் 7 கி.மீ. தொலைவில் காண்கிறோம். `சீர்காழி நாதர்' அருள்பாலிக்கிறார். இங்கிருந்து மேலும் 7 கி.மீ. பயணித்து கொக்கராயன்பேட்டையில் பிரமலிங்கேசுவரரையும், பெரிய நாயகியையும் தரிசிக்கிறோம். அதன் அருகிலேயே உள்ளது பாடலூர் எனும் வைப்புத் தலம். அகத்தீசுவரர் எழுந்தருளியுள்ள தலம் இது.

மொலசை

முக்கண்ணீசுவரர் திரிபுரசுந்தரியோடு அருள்பாலிக்கும் திருத்தலம் மொலசை. காவிரியாற்றின் வடகரையில் உள்ளது. திருச்செங்கோடுக்கு தென்மேற்கில் 15 கி.மீ.

திருச்செங்கோடு - நாமக்கல் சாலையில் உள்ள மற்றொரு திருத்தலம்தான் கூத்தம்பூண்டி. பூலோகநாதர் அருள்பாலிக்கும் தலம் இது.


Comments