கோரும் வரம் தரும் கோலவாமணர்

உலகில் எல்லோருக்குமே ஏதாவது ஒரு பிரச்னை நிச்சயம் இருக்கத்தான் செய்யும்.

அந்தப் பிரச்னை பெரிதாகும்போதுதான், அதைத் தீர்த்து வைக்க கடவுளால் மட்டுமே முடியும் என்ற ஞானம் பிறக்கும்.

அப்படித்தான் ஒருசமயம், மண்ணுலக அரசன் மகாபலியால் விண்ணுலக தேவர்களுக்குத் துன்பம் ஏற்பட்டது. அச்சத்தைப் போக்கி அருளும்படி அச்சுதனிடம்போய் வேண்டினார்கள் அமரர்கள்.

காப்பதாக வாக்களித்து, வாமனராக வடிவெடுத்தார் திருமால். மகாபலி அசுரமன்னனாக இருந்தாலும், மிகச் சிறந்த பக்தன் என்பதால், அவனை அடக்குவதில் அநேக சிக்கல்கள் எழுந்தன. அதற்குத் தீர்வுகாண, பூவுலகில் ஓரிடத்தில் சிவ வழிபாடு செய்து, சிவன் அருளால் மகாபலியை பாதாள உலகில் அழுத்தி எல்லோரையும் காத்தார் எம்பிரான்.

சைவமும் வைணவமும் கைகோர்த்துக் கொண்டு அரியும், அரனும் ஒரே வளாகத்தில் கோயில் கொண்டருளும் `சிக்கல்' திருத்தலத்தில் கோலவாமனப் பெருமாள் கோயில் கொண்டதற்கான வரலாறுதான் இது!

சிக்கல் என்று இத்தலத்திற்கு பெயர் அமையக் காரணமாக, சின்னக் கண்ணன் செய்த திருவிளையாடல் ஒன்றும் உண்டென்கிறார்கள்.

இத்தலத்து இறைவனை வழிபட்டு சாபம் நீங்கப் பெற்ற காமதேனு, ஒரு திருக்குளம் அமைத்தது. அதைத் தன் பாலால் நிரப்பியது. அந்தப் பாற்குளத்தில் வெண்ணெய் மிதந்தது. வசிஷ்ட மகரிஷி அந்த வெண்ணெயை லிங்கமாக வடிக்க நினைத்து எடுத்தபோது, அது அவரது கையில் சிக்காதபடி, பகவான் `சின்னக் கண்ணனாக' அவதரித்து தமது கையில் வெண்ணெயை எடுத்து வைத்துக்கொண்டு விளையாடினாராம். வசிட்டர் கையில் வெண்ணெய் சிக்காமல் சிக்கல் ஏற்பட்டதால், இத்தலத்திற்கு `சிக்கல்' என்ற பெயர் வந்ததாம்.

எழிலான கருவறையில் உபயநாச்சியார்களான ஸ்ரீதேவியும் பூதேவியும் உடன் இருக்க, உற்சவமூர்த்தங்கள் முன் இருக்க, எழிற்கோலம் கொண்டு சேவை சாதிக்கிறார் கோலவாமனப் பெருமாள்.

`வாழ்வில் எந்தப் பிரச்னை வந்தாலும் என்னிடம் வா தீர்த்து வைக்கிறேன்' என்பது போல், வரதஹஸ்தத்துடன் தரிசனம் தரும் பெருமாளைக் கும்பிடும்போதே, நாம் கோரிய யாவும் கிட்டிவிட்டதாக மனம் நிறைகிறது. நெஞ்சம் பனித்து கண்கள் நனைகிறது. கோமளவல்லித் தாயாரின் தரிசனம் கண்ணுக்கும் மனதுக்கும் குளுமையளிக்கிறது.

திருக்கண்ணங்குடி திவ்யதேசத்திற்கு அபிமான தலமான இங்கே வந்து எம்பிரானை வேண்டுவோர் வேண்டிய யாவும் பெறுவர் என்பது நிச்சயம்.

கட்டமுது கட்டி வழிபட்டால் கட்டாயம் வரம் அருளும் ஆஞ்சநேயர் சன்னதி இருப்பது சிறப்பு. காமதேனு வழிபட்ட இத்தலத்தில் பக்தர்கள் இணைந்து கோபூஜை செய்து, கோரிய பலன் பெறுவது சமீபகாலச் சிறப்பு.

நாகைமாவட்டம் சிக்கல் நவநீதேஸ்வரசுவாமி திருக்கோயிலினுள் அமைந்துள்ளது, கோலவாமனப் பெருமாள் திருக்கோயில்.

Comments