சூரியனை வழிபடும் ரத சப்தமி!

ஏழு என்ற எண்ணுக்கு பல சிறப்புகள் உண்டு. 'சப்த' ரிஷிகள், 'சப்த' கன்னியர், 'சப்த' நகரங்கள், 'சப்த' ஸ்வரங்கள் என்கிறோம். அதுமட்டுமின்றி, வாரத்தின் நாட்கள், வானவில்லின் நிறங்கள், சூரிய பகவானின் தேர்க் குதிரைகள் மற்றும் சூரிய ஒளியில் இருந்து வெளிப்படும் கிரணங்கள் என அனைத்துமே ஏழு. இதில் சூரிய வழிபாட்டுக்கு உகந்த நாளாக ரத ஸப்தமி கொண்டாடப்படுகிறது.

ஆண்டுதோறும், மாசி மாதம் வளர்பிறையின் ஏழாவது தினமான 'ஸப்தமி திதி'யை 'ரத ஸப்தமி' என்பர். இந்த நாளில், புனித நீர் நிலைகளில் நீராடி சூரியனை வழிபட்டால், பாப விமோசனம் பெறலாம் என்பது நம்பிக்கை.



பகவான் கிருஷ்ணரின் புத்திரன் 'சம்பா' என்பவன் ஒரிஸ்ஸாவில் உள்ள 'சந்திரபாகா' என்ற புனித நதியில் நீராடி, சூரியனை வணங்கித் தனக்கு ஏற்பட்டிருந்த சாபத்தில் இருந்து விடுபட்டானாம்! இன்று அந்த நதி மறைந்து, ஒரு சிறிய குளம் மட்டுமே உள்ளது. இந்தக் குளத்தில் மக்கள் புனித நீராடி வருகின்றனர்.

இதுகுறித்து சூரிய புராணத்தில் உள்ள கதை:

பகவான் கிருஷ்ணருக்கும் ஜாம்பவதிக்கும் பிறந்தவன் சம்பா. ஒரு முறை, நாரதரின் திருவிளையாடலால், தந்தையின் கோபத்துக்கு ஆளாகி, சாபம் பெற்றான் சம்பா. இதனால், தனது அழகையும் இளமையையும் இழந்து தவித்தான். பின்னர், தான் குற்றமற்றவன் என்பதை தந்தையிடம் நிரூபித்து, சாபம் நீங்கப் பெற்றான். விமோசனம் தந்த கிருஷ்ணர், அவனை 'மைத்ரேயி வனம்' சென்று, சூரியக் கடவுளை வணங்கித் தவம் செய்யுமாறு பணித்தார்.

சம்பாவும் அவ்வாறே சென்று, தவம் இருந்து வந்தான். ஒரு நாள் சூரியன் அவனுக்குக் காட்சி அளித்துப் பல்வேறு கடவுளரின் நாமாக்களை ஜபிக்குமாறு கூறினார். அதன்படியே உச்சரித்த சம்பா, ஒரிஸ்ஸாவின் சந்திரபாகா நதியில் மூழ்கி ஸ்நானம் செய்து, சாபம் நீங்கி, மீண்டும் பழைய இளமையையும் பொலிவையும் திரும்பப் பெற்றான். அப்போது தாமரை மீது அமர்ந்த நிலையில் சூரிய பகவான் காட்சியளித்தார். அந்த இடத்தில் ஓர் ஆலயம் எழுப்பி, அங்கு சூரியனாரின் விக்கிரகத்தை பிரதிஷ்டை செய்தான். சம்பா எழுப்பிய கோயிலே 'கோனார்க்' கில் உள்ள 'பிளாக் பகோடா' எனப்படும் கருப்புக் கோயில்.



ரத ஸப்தமி நாளில், கோனார்க் அருகில் உள்ள சந்திரபாகா குளத்தில், அதி காலையில் புனித நீராடும் மக்கள், பின்னர் கடற்கரைக்குச் சென்று, சூரியோதயத்தைக் கண்டு வணங்கி, தங்களது பாவங்களைப் போக்கிக் கொள்கின்றனர். பின்னர் 'அர்க்கசேத்திரம்' எனப்படும் ஆலயத்தில் உள்ள ஒரே கல்லால் ஆன நவக்கிரக மூர்த்திகளை வணங்குகின்றனர்.

ரத சப்தமி நாளில் சூரியக் கோயிலுக்குச் செல்ல இயலாதவர்கள், தங்களது ஊரில் உள்ள புனித நீர் நிலைகளில் நீராடி, சூரியோதயத்தை தரிசித்து, பின்னர் நவக்கிரகங்களை வழிபட்டு பலன்களைப் பெறலாம்.

Comments