தேவர்களை வாழ வைக்கும் அக்னி பகவான்!

வேள்வியில் சமர்ப்பிக் கப்படும் பொருட்களைப் பெற்று, அந்தந்த தேவர் களுக்கு அளிப்பது, அக்னிதேவனின் அண்ணன் மார்கள் மூவரது வேலை. அவர்கள், கௌரவப் பணியாளர்கள்! போதிய பராமரிப்பு இன்றி அவர்கள் ஒவ்வொருவராக இறந்து போக... அண்ணன்களை இழந்த அக்னிதேவன் துவண்டு போனான்.

'இனி தேவர்கள், அந்த வேலைக்குத் தன்னை அமர்த்தி துன்புறுத்துவார்களே!' என்று பயம் அவனுக்கு. எனவே, கடலுக்குள் புகுந்து ஒளிந்து கொண்டான். உணவின்றி தவித்த தேவர்கள், அக்னி யைத் தேடி வந்தனர். மீன் ஒன்று அக்னிதேவனைக் காட்டிக் கொடுத்தது. இதனால் சினமுற்ற அக்னி, 'மனிதர்கள், உங்களை உணவாகச் சாப்பிடுவர்!' என்று சபித்தான். பிறகு, தங்களுக்கு உணவு அளிக்கும் பொறுப்பை ஏற்கும்படி வேண்டிய தேவர்களிடம்,

''வேள்வியில், உங்களுக்கு உணவு அளிக்கப் படும்போது தவறி வெளியே விழும் உணவுகள் இறந்துபோன என் சகோதரர்களுக்குச் சேர வேண் டும். தெய்வமாகத் திகழும் அவர்களுக்கு நான் செய்யும் பணிவிடை இது!'' என்றான். அவனது இந்தக் கோரிக்கையை தேவர்கள் ஏற்றுக் கொள்ள, அவர்களுக்கு உணவளிக்கும் பொறுப்பை தான் ஏற்றான் அக்னி தேவன் என்கிறது வேதம்.

தேவர்களை வாழ வைக்க அவர்களது வேண்டுதலை ஏற்றான் அக்னி. அவனது கோபத்தால், வெளி வந்த சாபமும் உயிரினங் களின் பசியைப் போக்கி, அவர் களது சுகாதாரத்தைக் காப்பாற்று கிறது.



அவனின்றி உயிரினங்கள் வாழாது. உயிரினங்களின் வயிற்றில் இருக்கும் உணவைச் செரிக்க வைக்கும் பொறுப்பு, அக்னியைச் சார்ந்தது. 'தண்ணீரில் ஊடுருவியுள்ள அக்னி, விதையை முளைக்கச் செய்கிறது!' என்பான் காளிதாசன் (பீஜப்ரரோஹ ஜனனீம் ஜ்வலன்: கரோகி). கடலிலும் அக்னியின் சாந்நித்தியம் உண்டு என்பதால், கடல் வாழ் உயிரினங்களையும் அவன் காப்பாற்றுகிறான். அவனுக்கு 'பாட வாக்னி' (வடவாக்னி) என்ற பெயரும் உண்டு. தன்னைக் காட்டிக் கொடுத்த மீன்களையும் அவன் காப்பாற்றுகிறான். மீன்களில் ஊடுருவியிருக்கும் அக்னியின் சூடு, கை- கால் மற்றும் மூட்டு வலிகளை உண்டாக்கும் வாத நோயை அகற்றும் என் கிறது ஆயுர்வேதம்.

'வையகம் முழுவதும் வளமாக வாழ வேண்டும்!' என்பது, ஸனாதன மதத்தின் குரல். (லோகா: ஸமஸ்தா: சுகினோ பவந்து) சீதமும் (தண்ணீர்) உஷ்ணமும் (அக்னி) இணைந்து உலகை இயக்குகிறது என்கிறது வேதம் (அக்னி சோமாத் மகம் ஜகத்). உயிரினங்களும் இந்த இரண்டின் கலவையில் உருப்பெற்று வளர்கின்றன.

சீதம்- உஷ்ணம் ஆகிய இரண்டின் ஏற்ற- இறக்கம் கூடிய கலவையே, நம்மை வாழ வைக்கும் காலத்தின் மாறு பட்ட ஆறு பருவங்கள். கர்ப்பப் பாத் திரத்தில் இருக்கும் நீரில் விந்துவின் சேர்க்கை என்பதும், சீதோஷ்ணங்களின் சங்கமமே!

சீதத்தில் கட்டியான நெய்யை, அக்னி உருக வைத்து விடும். நெய்யின் சேர்க்கையில் அக்னி பலம் பெற்று விளங்கும். வேள்வியில் நெய்யைச் சேர்க்கும்போது, அக்னி கொழுந்து விட்டு எரிவதைப் பார்க்கலாம். நெய்- நெருப்பு ஆகியன தங்களுக்குள் இணைந்து நிறைவுபெற்று விளங்குகின்றன. ஆணும் பெண் ணும் இணைந்து, தங்களை நிறைவு செய்து கொள்வதே திருமணம். இந்த இணைப்பு காலத்தின் கட்டாயம். இருவரது மகிழ்ச்சிக்கும் இதுவே ஆதாரம்.

'நெய்க்குடம் போன்றவள் பெண்; தகதகக்கும் தணல் போன்றவன் புருஷன்' என்று சாஸ்திரம் கூறும் (கிருத கும்பா சமா நாரீ தப்தாங்கார சம: புமான்).

அக மகிழ்வை அளவுகோலாகக் கொண்டு இணையின் தேர்வு நிகழ வேண்டும். பகட்டும் படாடோபமும் பண்பான வாழ்வுக்கு உதவாது. ஆறறிவு அற்ற உயிரினங்கள் தங்களது வாழ்வை பதற்றமின்றி சுவைத்து மகிழ்ந்து, தன்னிறைவு பெறுகின்றன. ஆனால் சிந்திக்கும் தகுதி பெற்ற மனித இனம், 'இன்னும் சிறப்புற வாழ வேண்டும்!' என்று பரபரப்புடன் செயல்படுவதால் அவர்களது வாழ்க்கை, குரங்கு கையில் கிடைத்த பூமாலையாக சிதறுண்டு போகிறது.

சிந்தனைத் திறன் சிறப்பாக உதவும் பாதஞ்சல யோக சூத்திரம் மற்றும் யோக வாசிஷ்டம் போன்ற நூல்கள் மனதின் தன்மையைப் படம் பிடித்துக் காட்டுவதுடன், மனதை அடக்கும் வழிமுறைகளையும் எடுத்துரைக்கும். ராமாயணம், மகாபாரதம் ஆகிய இதிகாச நூல்களும் தர்மசாஸ்திர நூல்களும் இணைந்து மனதை அடக்கும் வழிமுறைகளைச் செயல்படுத்திக் காட்டும். இவை போதிக்கும் கருத்து களை- படிப்பினையை 'பழைய சிந்தனை' என்று புறக்கணிக்கக் கூடாது; அக மகிழ்ச்சிக்கு இவையே ஆணிவேர். மனதைப் புரிந்து கொள்ள பழைய சிந்தனையே உதவும். 'பழசு- புதுசு என்று பார்க்காதே! சிறப்பைப் பார்!' என்பது காளிதாசனின் வாக்கு.

விருத்ராசுரன், வானளாவ வளர்ந்து உலகை அழிக்க முற்பட்டான். உலக இயக்கத்துக்குத் தேவையான சீதம்- உஷ்ணம் இரண்டையும் தன் வாய்க்குள் அடக்கினான். சீதம்- சோமன் (சந்திரன்); உஷ்ணம்- அக்னி என்கிறது வேதம். அசுரனின் கோரப் பற்களுக்கு இடையே சிக்கித் தவித்த அக்னி மற்றும் சோமன் ஆகியோரது செயல்பாடுகள் தடைப்படவே உலகம் துயரத்தில் ஆழ்ந்தது.

எனவே இந்திரன், ப்ரஜாபதியிடம் சென்று முறையிட்டான். அவர், இந்திரனுக்கு வஜ்ராயுதத்தை அளித்து, அசுரனை அழிக்கும் படி பணித்தார். அதன்படி அசுரனை அழிக்க வந்த இந்திரனிடம், ''வஜ்ராயுதத்தை ஏவினால் அசுரனுடன் நாங்களும் மாண்டு விடுவோம்!'' என்று சோமனும் அக்னியும் வேண்டினர்.

சிந்தித்துச் செயல்பட்ட இந்திரன் முதலில் அசுரன் மீது குளிர் ஜுரத்தை ஏவினான். அது அசுரனைப் பற்றியது. குளிர் ஜுரத்தின் ஓர் அறிகுறி கொட்டாவி. அசுரனும் ஜுரத்தின் தாக்கத்தால் கொட்டாவி விட்டான். அதற்காக அவன் வாய் திறந்த வேளையில், சோமன்- அக்னி இருவரும் வெளியே குதித்தனர். அடுத்து வ்ஜ்ராயுதம் ஏவப்பட்டது. தரையில் சாய்ந்தான் அசுரன்!

சோமன்- அக்னி இருவரிடமும், ''இனி உங்களது செயல் பாட்டைத் தொடரலாம்!'' என்றான் இந்திரன். அதற்கு அவர்கள், ''அதிக நேரம் அசுரனின் வாயில் அகப்பட்டுக் கொண்டதால், எங்களது பலம் குன்றி விட்டது. எங்களது வலிமையை அசுரன் ஈர்த்து விட்டான். அது, அவன் வாயில் தங்கி விட்டது. அந்த சக்தி, மீண்டும் கிடைத்தால்தான் எங்களது செயல்பாடு சிறக்கும்!'' என்றனர்.

இந்திரன் யோசித்தான். 'அசுரனை அணுக எவருக்கும் தைரியம் இல்லை. எல்லோருக்கும் நண்பராக இருக்கும் ஒருவரை அனுப்புவதே உசிதம். பசுமாடுதான் அனைவருக்கும் நண்பன். கசாப்புக் கடைக்காரனையும் கூட நம்பும் சாது அது. எவருக்கும் துரோகம் செய்யாது. எனவே, அதையே அனுப்புவோம்!' என்று முடிவு செய்த இந்திரன் பசுமாட்டை அணுகி, அசுரனிடம் இருந்து அந்த சக்தியை மீட்க உதவுமாறு வேண்டினான். பசுவும் தனது பங்குக்கு நிபந்தனை ஒன்றை வைத்தது. ''சோமன்- அக்னி ஆகிய இருவரது தொடர்பும் என்னில் நிரந்தரமாக இருக்கும்படி அருளினால், தாங்கள் இட்ட பணியை முடிக்கிறேன்!' என்றது பசு. இக்கட்டான சூழல், பசுவின் வேண்டுகோளை ஏற்க வைத்தது. சோமன்- அக்னி ஆகியோரது வலிமையை, அசுரனிடம் இருந்து பெற்றுத் தந்தது பசு.

பசுவின் பால்- சோமனின் பங்கு; பாலில் இருந்து உருவாகும் நெய்- அக்னியின் பங்கு. 'பாலும் நெய்யும் நம்மில் உறைந்திருக்கும் தட்பவெப்பத்தை சமச் சீராக வைத்து சுகாதாரத்தைப் பாதுகாக்கிறது; சீதமும் உஷ்ணமும் அனைத்துத் தாவரங்களிலும் கலந்திருக்கும்!' என்கிறது ஆயுர்வேதம். நம் மனதில் தோன்றும் எண்ணங்கள் நல்லவையாக மாற, இவை ஒத்துழைக்கும்.

பகலில் தோன்றும் சூரியனும் இரவில் தென்படும் சந்திரனும் இணைந்து உலகின் தட்பவெப்பத்தை சமச் சீராக்குகின்றனர். இவர்கள் இருவரும் பரம்பொருளின் இரு கண்கள்!

ஈசனின் சிரசில்- சோமனும், நெற்றி யில்- அக்னியும் உண்டு. அம்பாளின் இரு செவிகளிலும் சோமன்- சூரியன் அணிகலன்களாகத் திகழ்கின்றனர். இறை உருவங்களுக்கு அபிஷேகம் செய்வது சோமனின் வெளிப்பாடு. கற்பூர ஆரத்தி அக்னியின் பணிவிடை.

நீராடலுடன் அக்னி வழிபாட்டையும் சேர்த்துச் செய்யச் சொல்கிறது தர்மசாஸ்திரம். அங்கும் சோமனும் அக்னியும் போற்றப்படுகின்றனர். இயற்கை தெய்வமான இந்த இருவரது பணிவிடை, நமது சுகாதாரத்துக்கு காப்பு; பாலும் நெய்யும் உடல் ஆரோக்கியத்துக்கு பாதுகாப்பு.

சோமன்- அக்னி ஆகியோரை வழிபடுவது, உள்ளத் தூய்மையை ஏற்படுத்தும். திருமண வேள்வியிலும் இவர்களை ஆராதிக்கிறோம். உலக இயக்கத்துக்கு இந்த இரண்டின் இணைப்பு தேவை. தாம்பத்திய வாழ்வின் செழிப்புக்கு ஆண்- பெண் என இரு உள்ளங்களின் இணைப்பு தேவை. தெளிந்த இரு உள்ளங்கள் இணைந்தால், இணைப்பு இறுகி விடும்; பிரிவதற்கு மனம் வராது.

திருமணத்தில் இணைந்த தம்பதிகளின் மனம், இணைப்பைக் காப்பாற்றும் பக்குவத்தை அடைய வேண்டும். இதற்கு தர்மசாஸ்திரத்தின் பரிந்துரைகள் நமக்கு உதவும்.

தண்ணீரின் இயல்பு குளிர்ச்சி. நெருப்பின் இயல்பு சூடு. நீர்- நெருப்பை அணைத்து விடும்; நெருப்பு- நீரை சுண்ட வைக்கும். அதே வேளையில், தண்ணீருடன் இணைந்த நெருப்பு அதாவது சுடுதண்ணீர் உடலில் காயத்தை ஏற்படுத்தும். ஆனால், அதே சுடுதண்ணீர் நெருப்பை அணைக்கவும் செய்யும்!

இப்படி எதிரிடையான செயல் பாடுகளும் இவற்றுக்கு உண்டு. எனி னும் இவை இணைந்து செயல்படும் போது, நன்மையே விளையும். நமது உடலில் பரவியுள்ள தண்ணீரும் சூடும், இணைந்து செயல்பட்டு ஆரோக்கியத்தைக் காப்பாற்று கிறது.

மாறுபட்ட கலாசாரம், மாறு பட்ட சூழல், மாறுபட்ட இயல்பு- இவற்றில் பிறந்து வளர்ந்தவர்களாக இருந்தாலும் ஆண்- பெண் இருவரும் தண்ணீரும் நெருப்பும் போல, அக்னியும் சோமனும் போல இணைந்து விட்டால், அட்டகாசமான வாழ்வை சுவைக்கலாம்!

எனவே, இணைப்பின் பெருமையை உணர்ந்து இளைஞர்கள் செயல்பட வேண்டும். உயர்வான திருமண இணைப்பை கொச்சையாகப் பார்க்கக் கூடாது. இணைப்பைப் பாதுகாக்கும் எண்ணம் இளைஞர்களின் உள்ளத்தில் பதிய வேண்டும்.

Comments