பூதப்பாண்டி பூதலிங்க சுவாமி திருக்கோயில் பூதம் காத்த பொன்னகை!

குமரி மாவட்டம், நாகர்கோவிலில் இருந்து வடக்கே சுமார் 15 கி.மீ. தொலைவில் உள்ள ஊர் பூதப்பாண்டி. இங்கு பழையாற்றின் கரையில், தாடகை மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது ஸ்ரீபூதலிங்க சுவாமி திருக்கோயில். பஞ்ச பூதங்களும் வழிபட்ட திருத்தலம் இது. பூதப்பாண்டியன் என்ற மன்னனின் நினைவாக 'பூதப்பாண்டி' எனும் பெயர் பெற்றதாம்.

கவி பாடுவதில் வல்லவனாகத் திகழ்ந்தவன் வழுதியர்கோன் பூதப்பாண்டியன். ஒரு முறை கொடுமையான நோய் ஒன்றினால் அவதிப்பட்ட இந்த மன்னன், நோயில் இருந்து தன்னைக் குணப்படுத்துமாறு மதுரை ஸ்ரீசொக்கநாதரை வேண்டினான். மன்னன் கனவில் தோன்றிய இறைவன், 'பழையாற்றங்கரையில், சோலையின் நடுவே தோன்றியுள்ள ஸ்ரீசுயம்பு லிங்கத்தை வணங்கினால் பிணி தீரும்!' என அருளி மறைந்தார். அதன்படி இங்கு வந்து, ஸ்ரீபூதலிங்கேஸ்வரரை வழிபட்டு பிணி நீங்கப் பெற்ற மன்னன், நன்றிக் கடனாக அந்த இடத்தில் சிவாலயம் எழுப்பி, ஐந்துகால பூஜைக்கும் வழி செய்தான். இதில் மகிழ்ந்த மக்கள், மன்னன் பெயரையே இந்த ஊருக்கும் வழங்கினராம். பூதப்பாண்டி என்கிற ஊர்ப் பெயருக்கு வேறு கதையும் சொல்கிறார்கள்.





மலையடிவாரத்தில், அழகுற அமைந்திருக்கும் திருக் கோயில், கிழக்கு நோக்கியது என்றாலும், மேற்கு வாயிலே பிரதானம். சுமார் 41 அடி உயரத்துடன் 41 சிற்பங்களைக் கொண்டு திகழும் மேற்கு ராஜ கோபுரம் மிக அழகு. நாம், கிழக்கு வாயில் வழியே உள்ளே நுழைகிறோம். முதலில் கொடி மர மண்டபம். தொடர்ந்து துவார பாலகர்கள். இங்கு, பூத கணங்களே துவார பாலகர்களாக அமைந்துள்ளனர். அடுத்து செட்டி மண்டபம். இங்குள்ள செட்டியார் சிலை நமது கவனத்தை ஈர்க்கிறது.

முற்காலத்தில் இங்கு வாழ்ந்த ஆண்டிச் செட்டியார் என்பவர் துணி வியாபாரம் செய்து, செல்வச் செழிப்புடன் திகழ்ந்தார். இவர், தினமும் அர்த்தஜாம பூஜையின்போது கோயிலுக்கு வந்து சிவனாரை வழிபடுவது வழக்கம். ஒரு நாள் செட்டியார் வருவதற்குள் அர்த்தஜாம பூஜை நடந்து முடிந்தது. இதையறியாத செட்டியார் கோயிலுக்குச் சென் றார். அங்கு, ஈசனே அர்ச்சகராக வந்து அவருக்கு விபூதி- பிரசாதம் அளித்தார். மறு நாள், 'நேற்று ஏன் கோயிலுக்கு வரவில்லை?' என்று அர்ச்சகர் கேட்டதும் திடுக்கிட்டார் செட்டியார். ''நேற்று நீங்கள்தானே எனக்கு பிரசாதம் அளித்தீர்கள்!'' என்றார். அர்ச்சகர் மறுத்தார்.



குழம்பிய செட்டியார், 'அர்ச்சகராக வந்தது ஈசனே!' என்று உணர்ந்து மெய்சிலிர்த்தார். தனது சொத்து அனைத்தையும் இறைவனுக்கே அர்ப்பணித்தார். இவரால் அமையப்பெற்றதே செட்டி மண்டபம். இதில் உள்ள ஸ்ரீநடராஜர் சந்நிதி, மர வேலைப்பாடுகளால் ஆனது.

செட்டி மண்டபத்தின் வலப் புறம் ஸ்ரீபூத நாதர் சந்நிதி. இவரையே பிரதான மூர்த்தியாக வழிபடுகிறார்கள். இவருக்கு பூஜை நடந்த பிறகே, ஸ்ரீபூதலிங்கேஸ்வரருக்கு பூஜைகள். செட்டி மண்டபத்தைக் கடந்து சென்றால், மூலவர் சந்நிதி. பாறையைக் குடைந்து அமைக்கப்பட்ட கருவறை. எனவே, மூலவரை வலம் வர முடியாது.

முற்காலத்தில் இங்கு வாழ்ந்த சாலியர்கள் (ஆடை நெய்பவர்கள்) பசுக்களையும் வளர்த்து வந்தனர். பசுக்களில் ஒன்று, மலையடிவாரத்தில் இருந்த லிங்கத்தின் மீது தினமும் பால் சொரிந்து அபிஷேகிப்பது வழக்கம். ஒரு நாள் இதைக் கண்ட மேய்ப்போன், விஷயத்தை ஊராரிடம் தெரிவித்தான். அனைவரும் லிங்கத்தைப் பெயர்த்தெடுக்க முயன்ற னர். முடியாமல் போகவே, அங்கேயே சிறு கோயில் எழுப்பி வழிபட ஆரம்பித்தனராம். இதனால் மூல வருக்கு, 'சாலியர் கண்ட திருமேனி' என்ற பெயரும் உண்டு. கருவறையை ஒட்டி ஸ்ரீசண்டேஸ்வரர் மற்றும் ஸ்ரீதட்சிணாமூர்த்தி ஆகியோரது சந்நிதிகள். மூலவர் சந்நிதியின் வலப் புறம், தனிச் சந்நிதியில் ஸ்ரீமுருகப் பெருமான். இவரது சந்நிதியின் வெளிச் சுவரில் ஆறு படை வீடுகளின் மூர்த்திகளும் சுதைச் சிற்பங்களாக காட்சி தருவது அழகு!



அடுத்து அம்பாள் சந்நிதி. நான்கு திருக்கரங்களுடன் புன்னகை தவழ காட்சி தருகிறாள் ஸ்ரீசிவகாமியம்மை. அம்பாள் மற்றும் ஸ்வாமி சந்நிதிகளுக்கு இடையே வசந்த மண்டபம். இங்கு, உற்சவ மூர்த்திகள் மற்றும் ஸ்ரீஐயப்பன் சந்நிதிகள் உள்ளன. மடப்பள்ளியில், மூடியே கிடக்கும் சுரங்கம் ஒன்றை காணலாம். விழாக் காலங்களில் கோயில் மேல்சாந்தி (அர்ச்சகர்) சுரங்கத்தின் வாயிலில் நின்று பூதகணங்களுக்கு படையல் வைப்பாராம். சற்று நேரத்தில் அந்த படையல் மறைந்து, அந்த இடத் தில் ஆபரணங்கள் இருக்குமாம். அதே போல விழா முடிந்ததும் ஆபரணங்களுடன் படையலையும் சேர்த்து அந்த இடத்தில் வைத்து வழிபடுவார் மேல்சாந்தி. சற்று நேரத்தில் அவை மறைந்து போகும். பிற்காலத்தில் மேல்சாந்தி ஒருவர் செய்த தவறினால் சுரங்கம் மூடிக் கொண்டதாகவும், அதன் பின்னர் பூதகணங்கள் ஆபரணங்கள் தருவது நின்று போனது என்றும் கூறுகிறார்கள்.

Comments

  1. அருமையான பதிவு.
    வாழ்த்துகள்.

    ReplyDelete

Post a Comment