பிராணாயாமம்

சித்தர்கள், சித்தமே அனைத்துப் பொறி புலன்களின் இயக்கத்திற்குக் காரணம் என்பதை உணர்ந்தவர்கள்.இச்சித்தம் நெறிப்படுத்தப்படுமேயானால் பொறி புலன்கள் நெறிப்படுத்தப்படும்.

சித்தத்தின் இயக்கம் வாயுவின் இயக்கத்தை அடிப்படையாகக் கொண்டது. இதனை காலத்தால் பிற்பட்ட சித்தர் இலக்கியங்களாகக் கருதப்படும் சிவயோகசாரம், நிஜானந்த போதம் முதலிய நூல்கள் தெளிவாகக் குறிக்கின்றன.

வாயு என்னும் சொல்லுக்கு இயங்குவது எனப்பொருள். உள்ளும் புறமும் ஓடிக்கொண்டிருக்கும் வாசி எனப்படும் வாயுவைக் கட்டுப்படுத்துவது, பிராணாயாமத்தின் ஒரு பகுதி ஆகும். வாசியை அடக்குவது என்பதை விட அதை நெறிப்படுத்துவது அல்லது கட்டுப்படுத்துவது என்பதே பொருத்தமாக உள்ளது.

நம் உடலின் இயக்கத்தினைப் பத்து வகையான வாயுக்கள் கட்டுப்படுத்துகின்றன.

பிராணன் : உண்ட உணவைச் ஜீரணமாக்கும், அத்துடன் உடலுள் இவ்வளவு நிலைக்கப் பெற்றால் மூப்பு இல்லை.

அபானன் : கழிவுப் பொருட்களை வெளித்தள்ளும் வாயு இது. அன்ன சாரத்தை உடலின் பகுதிகட்குக் கொண்டு செல்வது இதுவே.

வியானன் : உடலின் உறுப்புகளை நீட்டல், மடக்கல் ஆகியவற்றைச் செய்ய உதவும் வாயு.

உதானன் : ஜீரணமான உணவில் இருந்து அன்ன சாரத்தை (சத்தினை) பிரிக்கும். மேலும் தேவையற்ற சாரத்தினைப் பிரித்து வெளித்தள்ளவும் செய்யும்.

சமானன் : ஏனைய வாயுக்களைக் கட்டுப்படுத்தும். அறுசுவைகளையும், நீரையும், அன்னத்தையும் சாறாக்கி (சத்துப் பொருளை) உடலெங்கும் ஒரே சீராகப் பரவச் செய்யும்.

நாகன் : பாடும்படி செய்வதும், கண்களை விழிக்கச் செய்வதும், சிமிட்டச் செய்வதும் உடலை சிலிர்க்கச் செய்வதும் இதுவே.
கூர்மன் : கொட்டாவி விடல், வாயை மூடல், காட்சிகளைக் காணல், கண்ணீர்விடல் முதலியன செய்யும் வாயு இது.

கிருகரன் : செரிமான நீர்களைச் சரிவரச் சுரக்கச் செய்து, பசியைத் தூண்டும். தும்மல், இருமல் முதலியன உண் டாக்கும்.

தேவதத்தன் : சோம்பலைப் போக்கி சுறுசுறுப்பையுண்டாக்கும். சண்டையிடல், அடித்தல், வன்மையாய்ப் பேசுதல், கோபத்தை உண்டு பண்ணுதல், ஒன்றைத் தீர்மானித்தல் ஆகியவை இதன் செயல்.

தனஞ்செயன் : ஒலி எழுப்பச் செய்யும். உடல் இறந்தபோது ஏனைய வாயுக்கள் எல்லாம் உடனே சோர்ந்துவிடும். ஆனால் இவ்வாயு மட்டும் மூன்று நாள் வரையோ சடலத்தின் தலை வெடிக்கும் வரையோ இருந்து பின்பே மறையும். இவ்வாறு தச வாயுக்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு செயலுக்கும் காரணமாகும்.

இவற்றுள் பிராணன் அனைத்து வாயுக்களின் இயக்கத்திற்கும் காரணமாகும். இவ்வுயிர்க் காற்று அல்லது பிராணன் என்னும் சத்து உடலைவிட்டுப் போய்விடுமேயானால் உடல் அசைவிழந்து பிணம் என்னும் பெயர் பெறும். எனவே பிராணனை உடலை விட்டு நீங்கா நிலையில் கட்டுவதே பிராணாயாமம் என்னும் சொல்லுக்கு உண்மை பொருளா கும். ஆனால் காலப்போக்கில் இதற்கு அடிப்படையான மூச்சுப் பயிற்சியையே பிராணாயாமம் எனக் கூறும் வழக்கம் ஏற்பட்டுள்ளது.

Comments