'ஆசைகளை விட்டுக் கொடு!'

நண்பர்கள் இருவர் காசி- அரிச்சந்திர கட்டத்தைப் பார்க்கச் சென்றனர். அங்கு இளம்பெண் ஒருத்தி, உயிர் பிரிந்த தன் கணவனின் உடலைத் தழுவியபடி, தேம்பித் தேம்பி அழுது புலம்பிக் கொண்டிருந்தாள். இதைக் கண்ட நண்பர்களில் ஒருவன், 'கடவுளுக்கு இதயமே இல்லை. இளம் பெண்ணை விதவையாக்கிப் பார்ப்பது, அவருக்கு விளையாட்டு போலும். சுவைத்து மகிழ வேண்டிய அவளது வாழ்க்கையைப் பறித்து விட்டாரே!' என்றான்.



'இயற்கையின் விளையாட்டைப் பார்க்கலாம். ஆனால், மாற்ற இயலாது!' என்று அவனைத் தேற்றினான் மற்றவன்.

பிறகு, இருவரும் காசியை சுற்றிப் பார்த்து விட்டு தாங்கள் தங்கி இருக்கும் அறைக்குத் திரும்பினர். உறக்கம் வரவில்லை. கொட்டகை ஒன்றில் நாடகம் நடந்தது. அதைப் பார்க்கச் சென்றனர். நாடகத்தில் நடனமாடும் நங்கையைப் பார்த்த முதலாமவன் திடுக்கிட்டான். காலையில் கணவனின் பூத உடலில் புரண்டு அழுதவளே அவள். 'காண்பது, கனவா நினைவா... காலையில், எப்படி அழுது புலம்பினாள்? இப்போது இப்படி மாறி விட்டாளே!' என்ற ஆச்சரியம் அவனுக்கு.

'இதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை. 'உடல், உள்ளம், செல்வம் ஆகியவற்றை எனக்கு அர்ப்பணித்து, ஒரு கௌரவ பணியாளனாக சளைக்காது பணிவிடை செய்து மகிழ்ச்சி தந்தாய். உன்னைப் போல் இன்னொருவன் இனி எங்கே கிடைப்பான்; எங்கு தேடுவேன்?' என்ற கவலையே அவளை அப்படிப் புலம்ப வைத்தது. வெளுத்ததெல்லாம் பால் என்று நினைப்பவர்களில் நீயும் ஒருவன்!' என்றான் மற்றவன். இப்படி ஒரு கதை உண்டு.

இன்னும் சில கதைகளை பார்ப்போம்...

இரவு 10:00 மணி. அலுவல்களை முடித்துக் கொண்டு வீடு திரும்பினான் குடும்பத் தலைவன். அவன் மிகவும் சோர்வுற்றிருந்தான். தலைவலியும், உடல் வலியும் அவனை வாட்டியது. மனைவி உணவருந்த அழைத்தாள். அவன் மனம் உணவை மறுத்தது. ஓய்வெடுக்கச் சென்றான்.

சிறிது நேரத்தில் மாட்டுக் கொட்டகையில் இருந்து 'அம்மா' என்று பசுவின் அழைப்பொலி காதில் விழுந்தது. சட்டென்று எழுந்தவன் கொட்டகையை அடைந்து, பருத்திக் கொட்டை மற்றும் புண்ணாக்கை அரிசி கழுவிய நீரில் கலந்து பசுவுக்கு வைத்தான். அதை ஆவலுடன் பருகிய பசுவின் உடலைத் தடவிக் கொடுத்து மகிழ்ந்தான். பிறகு, கொஞ்சம் வைக்கோலைப் பிரித்து பசுவின் முன் போட்டு விட்டு நிம்மதியாக படுக்கச் சென்றான்.

இதைக் கண்ட அடுத்த வீட்டு இல்லத்தரசி அசந்து போனாள். 'வேலைப் பளுவால் சோர்வுற்று, உணவையும் மறந்து, இளைப்பாறச் சென்றவன், பசுவின் குரலுக்கு ஓடோடி வந்து உதவுகிறானே!' என்று அவனது கருணை உள்ளத்தைப் பற்றி தன் கணவனிடம் புகழ்ந்துரைத்தாள்.

அவளின் கணவன், 'அதிகாலையில் 'பெட்' காபிக்கு பால் வேண்டும். அதற்காகவே இந்த பணிவிடை... இது கருணை அல்ல; கவலை!' என்று பதிலளித்தான்.

'பண்டைய கால மாமியார்- மருமகள்கள் ஒத்துப் போக மாட்டார்கள்' என்பர். ஆனால், இன்று இரு சாராரும் ஒத்துப் போகின்றனர். வெளிநாட்டில் இருக்கும் மருமகள், மாமியாரை தனது மகப்பேறுக்கு உதவ அழைக்கிறாள். இதை ஏற்று, மகப்பேறை நடத்தி வைக்கிறார் மாமியார். இருவரும் மனக்கசப்பை மறந்து செயல்படுவது உண்டு. இது கதை அல்ல; நிகழ்வு.

கணவனும் மனைவியும் வேலை பார்ப்பவர்கள். வீட்டைப் பராமரிப்பதும் உணவு தயார் செய்வதும் மாமியார். வேலையில் தளர்ந்து போன மாமியார், இரவு உணவுக்கு இரு அடைகளை தயார் செய்து வைத்து விட்டு, படுக்கையில் சாய்ந்தார்.

மாமியாரது சமையலில் 'ருசி கண்ட பூனை' மருமகள். கடும் பசியுடன் வீடு திரும்பினாள். சமையல் கட்டுக்குள் நுழைந்தவள், இரு அடைகள் மட்டுமே இருப்பதைக் கண்டு, 'என்னம்மா, இரு அடைகளே உள்ளது. மூவருக்கும் இது போதாதே... என்ன செய்வது?' என்றாள். 'ஆளுக்கு ஒன்றாக இருவரும் பகிர்ந்து கொள்ளுங்கள்' என்றார் மாமியார். அவரிடம், ''என்னம்மா இது? இரவு சாப்பிடவில்லை என்றால் தங்கள் உடம்பு தாங்காதே. காலையில் எழுந்து வேலை செய்ய, தெம்பு இருக்காதே!' என்றாள் மருமகள்.

உடனே மாமியார், 'சரி... அப்படியென்றால், தங்கள் பங்கில் இருந்து பாதியை எனக்குத் தாருங்கள். அது போதும்!' என்றார்.

இந்திரனின் புதல்வன் ஜயந்தன். காக வடிவம் ஏற்று சீதையை சீண்டினான்! சீதையின் மடியில் தலை சாய்த்து ஓய்வெடுத்துக் கொண்டிருந்த ராமன் கண் விழித்தார். விஷயத்தை அறிந்ததும் தரையில் இருக்கும் புல்லைக் கிள்ளி, காகத்தை நோக்கி ஏவினார். அது, ஜயந்தனைத் துரத்தியது. புல்லுக்குப் பயந்து ஓடிய காகாசுரன் (ஜயந்தன்), மூன்று உலகங்களிலும் சுற்றித் திரிந்து, கடைசியில் ராமனிடமே அடைக்கலமானான். பிறகு, தனது ஒரு கண்ணை மட்டும் புல்லுக்கு அளித்து, அதனிடம் இருந்து விடுபட்டான்.

அகல்யை மீது இந்திரனுக்கு ஆசை. அவளை அடைய நள்ளிரவில் ஆசிரமத்துக்கு வந்தான். உள்ளே அவளின் கணவரான கௌதம முனிவர் உறங்கிக் கொண்டிருந்தார். ஒரு கணம் யோசித்த இந்திரன், கோழி கூவும் சத்தத்தைத் தோற்றி வைத்தான். அதைக் கேட்டு பொழுது புலர்ந்ததாக எண்ணிய கௌதமர், ஆற்றுக்கு நீராடச் சென்றார். அதன் பிறகு ஆசிரமத்துக்குள் நுழைந்த இந்திரன், அகல்யையை சீண்டினான். ஆற்றை அடைந்த கௌதமர் ஆறு உறங்கிக் கொண்டிருப்பதை உணர்ந்தார். 'நீராடும் வேளை வரவில்லை. இந்தத் தவறு எப்படி நேர்ந்தது!' என்று சிந்தித்தார். அவரின் மனத் திரையில் இந்திரனின் சேஷ்டைகள் பளிச்சிட்டன.

உடனே ஆசிரமத்துக்கு வந்த முனிவர், இந்திரனுக்கு சாபம் கொடுத்தார். சாபம் பலித்தது. இந்திரனின் உடல் முழுவதும் கண்களாகத் தோன்றின! கௌதமரின் சாபம் இந்திரனை என்றென்றும் சித்ரவதை செய்து கொண்டிருக்கிறது.

பரசுராமரிடம் வில் வித்தை கற்க விரும்பிய கர்ணன், அவரிடம் தன்னை ஓர் அந்தணனாக அறிமுகம் செய்து கொண்டான்.

பரசுராமரும் அதை நம்பி அவனைத் தன் சிஷ்யனாக ஏற்றார். கல்வி பெற்ற கர்ணனைப் பார்த்து பெருமிதம் கொண்டார். ஒரு நாள் அவன் மடியில் தலை வைத்து பரசுராமர் உறங்கியபோது, வண்டு ஒன்று கர்ணனின் தொடையைத் துளைக்க ஆரம்பித்தது.

தான் அசைந்தால் குருவின் உறக்கம் குலைந்து விடும் என்று வண்டின் துன்புறுத்தலைப் பொறுத்துக் கொண்டான் கர்ணன். தொடையின் துளையில் இருந்து வெளி வந்த ரத்தம் பரசுராமரின் உறக்கத்தைக் கலைத்தது.

ரத்த வெள்ளத்தில் தோய்ந்த துடையைப் பார்த்து திடுக்கிட்ட பரசுராமர், 'நீ யார்? ரத்தப் பெருக்கெடுக்கும் அளவு துயரத்தைத் தாங்க, அந்தணரால் இயலாது. உண்மையைக் கூறு!' என்றார்.

கர்ணன் உண்மையைக் கூறினான். சினம் கொண்ட பரசுராமர், 'நீ கற்ற வில் வித்தை, உரிய சந்தர்ப்பத்தில் பயன்படாமல் போகட்டும்' என்று சபித்தார். அவரது சாபம் போர்க்களத்தில் அவன் திறமையை இழக்க வைத்தது.

விஸ்வாமித்திரரின் குரு வசிஷ்டர். இருவரும் மோத நேர்ந்தது. விஸ்வாமித்திரர் தோல்வியுற்றார். அவரது தாழ்வு மனப்பான்மை, வசிஷ்டர் மீது பகையை வளர்த்தது.

இந்த நிலையில் த்ரிசங்கு என்பவன், வசிஷ்டரை அணுகி, ''உடலோடு மேலுலகம் செல்ல விரும்புகிறேன். அதைத் தாங்கள் நிறைவேற்ற வேண்டும்!'' என்றான். ''சட்டத்துக்குப் புறம்பாக தங்களை உடலோடு மேலுலகம் அனுப்ப இயலாது!'' என்று மறுத்தார் வசிஷ்டர்.

பிறகு, விஸ்வாமித்திரரை அணுகி, தனது விருப்பத்தையும் வசிஷ்டரது மறுப்பையும் விளக்கிய த்ரிசங்கு, ''எனது விருப்பத்தை தாங்களே நிறைவேற்ற வேண்டும்!'' என்றும் வேண்டினான். வசிஷ்டரின் மீதுள்ள பகை உணர்வு விழித்துக் கொண்டது விஸ்வாமித்திரருக்கு. இதன் மூலம் வசிஷ்டரை எதிர்க்க முயன்றார். ''அவரால் முடியாததை நான் நடத்தி வைக்கிறேன்!'' என்று த்ரிசங்குவின் விருப்பத்தை நிறைவேற்ற சம்மதித்தார்.

த்ரிசங்குவைத் திருப்திபடுத்துவதில் அவருக்கு அக்கறை இல்லை; வசிஷ்டரை எதிர்ப்பதில்தான் முனைப்பாக இருந்தார். தனது தவ வலிமையால் த்ரிசங்குவை மேல் உலகத்துக்கு அனுப்பினார். உடலுடன் தேவலோகம் நுழையும் மனிதனை இந்திரன் தடுத்துக் கீழே தள்ளி விட்டான். அலறியபடி கீழ் நோக்கி வரும் த்ரிசங்குவை, அந்தரத்தில் இருக்கும்படி தடுத்தார் விஸ்வாமித்திரர். மேலுலகமும், கீழுலகமும் இல்லாமல், அந்தரத்தில் தொங்கினான் த்ரிசங்கு. விஸ்வாமித்திரருக்கும் வசிஷ்டருக்கும் பகை. ஆனால், துன்பத்தில் ஆழ்த்தப்பட்டான் அப்பாவி த்ரி சங்கு!

-இந்தக் கதைகளில் தென்படும் மனிதர்களில் மாறுபட்ட மன இயல்புகள் தென்படுகின்றன. இன்றைய மனிதர்களிலும் இத்தகைய மன இயல்புகள் தென்பட வாய்ப்பு உண்டு. இளைஞர்கள் இதைக் கவனிக்க வேண்டும். சிந்தனை வளம் பெறாதவர்களுக்கும் சிறுவர்களுக்கும்- கதைகள்; சிந்தனையாளர்களுக்கு அவற்றின் கருத்து. அறத்துடன் இணைந்த செயல்பாடுகள் ஏற்கத் தக்கவை. அறத்துக்குப் புறம்பானவற்றை அறவே அகற்ற வேண்டும். எல்லை மீறிய ஆசைகளையும், தாழ்வு மனப்பான்மையையும் முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும். மனம் ஒன்று நினைக்க, செயல் வேறு விதமாக இருப்பது அழகல்ல. இத்தனைத் தகவல்களும் கதைகளில் ஒளிந்திருப்பதைக் கவனிக்க வேண்டும்.

வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்கும் வேளையில், அறத்துடன் இணைந்த செயல்பாடு வெற்றி அளிக்கும். ஆசாபாசங்களுக்கு இடம் தராமல், பண்புக்கு முதலிடம் கொடுக்க வேண்டும். திருமணம் நிகழ்ந்த பிறகு, இணையைத் துண்டிக்காமல் இருப்பதில் கவனம் வேண்டும். ஆசைகளை விட்டுக் கொடுத்து, துண்டிப்பைத் தவிர்க்க முயற்சிக்க வேண்டும். துண்டிக்கத் தூண்டும் பரிந்துரைகளை மறுக்க வேண்டும். அந்த மனோவலிமை வாழ்க்கையைப் பசுமையாக்கும். பிறந்த பயனை அடைய முடியும்.

Comments