எல்லாம் அவன் செயல்

சித்தார்த்தன் பிறந்தபோதே ஜோதிடர்கள் எச்சரித்தார்கள்.
‘‘இந்தக் குழந்தையின் ஜாதகம், அதி அற்புதமானது. ஒன்று, இந்த உலகத்தையே ஆளும் சக்ரவர்த்தியாகத் திகழ்வான் அல்லது இந்த உலகத்தையே மாற்றி எழுதப்போகும் சன்னியாசியாக மாறுவான்.’’
தந்தைக்கு எப்படி இருக்கும்?

‘‘இல்லை... இல்லை... என் செல்ல மகன், என்னைப் போல் சக்ரவர்த்தியாகத்தான் திகழவேண்டும். அதற்கு என்ன பரிகாரம்?’’ என்று கெஞ்சினான் தந்தை.
ஜோதிடர்கள் பதில் சொன்னார்கள்.

‘‘பிச்சைக்காரனோ, கிழவனோ, பிணமோ உங்கள் குழந்தையின் கண்ணில் படாமல் வளருங்கள்.

அப்படிப்பட்டவர்களை எப்போது உங்கள் மகன் பார்க்கிறானோ, அந்த விநாடியே துறவறம் பூண்டுவிடுவான். ஜாக்கிரதை!’’ என்று எச்சரித்தார்கள்,
மகாராஜாவான தந்தை உடனடியாய் அதற்கான ஆணைகளைப் பிறப்பித்தான். பிச்சைக்காரர்களுக்கெல்லாம் பொருள் கொடுத்து வறுமையைப் போக்கினான். முதியவர்கள் வீட்டைவிட்டு வெளியில வர தடை விதித்தான். யாராவது இறந்துபோனால், நள்ளிரவில் ரகசியமாய் சவ அடக்கம் செய்ய உத்தரவிட்டான்.

மன்னனின் ஆணையாயிற்றே, எல்லாம் நல்லபடியாகவே நடந்தன.
ஆனால் மூன்று பேர் மட்டும் கவலைப்பட்டார்கள். பிரம்மா, விஷ்ணு, சிவன்!

ஏன்?
மாபெரும் ஞானி ஒருவர் பூவுலகிற்குக் கிடைக்காமல் போய்விடுவார்களே என்ற கவலைதான்.
மூவரும் திட்டம் போட்டார்கள்.
பிரம்மா, பிச்சைக்காரர் போல் சித்தார்த்தன் முன்னால் நின்றார்.
விஷ்ணு முதியவராக மாறித் தள்ளாட்டம் காட்டினார்.

சிவன் பிணம் போல் நடித்து அந்த விநாடியே சித்தார்த்தனை துறவியாக்கினார். சித்தார்த்தன், புத்தனானான்.
இந்தக் கதை சொல்லும் நீதி இதுதான்.

பிச்சைக்காரன் போல் வறுமை சூழலாம். முதுமை வந்து தடுமாறலாம்.
மரணபயம் கழுத்தைப் பிடிக்கலாம். எதற்கும் அஞ்சாதீர்கள். பதட்டப்படாதீர்கள்.

எல்லாம் அந்த முப்பெரும் தேவர்களின் வேலை என்பதை உணருங்கள். இப்போது இருக்கும் நிலையைவிட மிகப்பெரிய ஒன்றிற்காக உங்களை மாற்றும் ஒரு சோதனை, லீலை, திருவிளையாடல் என்பதை உணருங்கள்.
உலகமே உங்களுக்கு இனிமையாகத் தெரியும். உண்மையும் புரியும்.

எல்லோருக்கும் புத்தாண்டு, பொங்கல் வாழ்த்துகள், வணக்கங்கள்.

Comments