நலன்கள் அருளும் நான்கு பைரவர்கள்!

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்துக்குக் கிழக்கில் சுமார் 6 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது திருவிசலூர். இங்குள்ள சௌந்தர நாயகி உடனுறை சிவயோகிநாத சுவாமி திருக்கோயில் வெகு பிரசித்தம். திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற இந்தத் தலம், பைரவர் வழிபாட்டுக்குச் சிறப்புப் பெற்றதாகத் திகழ்கிறது.

முற்காலத்தில் ரிஷிகள் (யோகிகள்) எட்டுப் பேர் இங்கு வந்து, கடும் தவம் புரிந்தனராம். அதன் பலனாக, இறை தரிசனம் கிடைக்கப் பெற்ற ரிஷிகள் இறுதியில் லிங்கத் திருமேனியிலேயே ஐக்கியமானார்களாம். எனவே, இங்குள்ள இறை வனுக்கு, 'சிவயோகி நாதர்' என்று திருநாமம்.





தவிர, புராதனேஸ்வரர், வில்வாரண்யேஸ்வரர், யோக நந்தீஸ்வரர் ஆகிய பெயர்களும் உண்டு. இன்றும், லிங்கத் திருமேனி(பாணம்)யில் ரிஷிகளின் சடைகள் காணப்படுகின்றனவாம்! அம்பாளின் பெயர்- சௌந்தர நாயகி.

ஒரு முறை, தன் மனைவியுடன் இங்கு வந்த ராஜராஜ சோழன், பிள்ளை வரம் வேண்டி தங்கத் தால் ஆன பசுவை தானம் அளித்து வழிபட்டதாகவும், சிவனருளால் அவருக்கு ராஜேந்திர சோழன் பிறந்ததாகவும் கோயில் கல்வெட்டுகள் கூறுகின்றன. தஞ்சை அரண்மனை தேவஸ்தானத்துக்கு உட்பட்ட இந்தக் கோயிலின் மதில் சுவரில் உள்ள சூரிய கடிகாரம், சோழர்களது கலைத் திறனுக்கு எடுத்துக்காட்டு!

இங்குள்ள இறைவனை வழிபட்டால் பூர்வ ஜென்ம பாவங்களும் விலகும் என்பது ஐதீகம். இங்குள்ள நந்தி தேவர் தனி சிறப்பம்சத்துடன் திகழ்கிறார். முற்காலத்தில், கொடிய பாவங்கள் செய்து வாழ்ந்து வந்த ஒருவன், இறக்கும் தறுவாயில் மனம் திருந்தி இங்கு வந்து, 'சிவயோகிநாதா... என்னைக் காப்பாற்று!' என்று அபயக் குரல் எழுப்பினானாம். அதைச் செவியுற்ற இறைவன், 'அபயக் குரல் எழுப்பியது யார்?' என்று பார்க்கும்படி நந்தியை பணித்தார். அதன்படி தலையைத் திருப்பிப் பார்த்த நந்திதேவர், குரல் எழுப்பியது யாரென்று இறையனாருக்குச் சொல்ல... இறைவன், அந்த பாவிக்கு காட்சியளித்து அருள் புரிந்தார் என்கிறது தல புராணம். எனவே, இங்குள்ள நந்தியம்பெருமானின் முகம் இறைவனை நோக்காமல், வேறொரு திசையை நோக்கித் திரும்பிய வண்ணம் காட்சி தருகிறது. நந்தியின் மூலமாக இறைவன் அருள் புரிந்ததால் இந்தத் தலம், ரிஷப ராசி மற்றும் ரிஷப லக்னத்தைச் சேர்ந்த பக்தர்களது குறை தீர்க்கும் தலமாகவும் திகழ்கிறது.



இந்தக் கோயிலில் ஒரே வரிசையில் காட்சி தரும் நான்கு பைரவர்களை 'சதுர்கால பைரவர்கள்' என்பர். முற்காலத்தில், மனிதனின் ஆயுள் காலம் 120 ஆண்டுகளாகக் கருதப்பட்டது. இதை நான்காகப் பிரித்து, சதுர்கால பைரவர்கள் நால்வரையும் ஒவ்வொரு கால கட்டத்துக்கும் உரியவர்களாகக் கருதி வழிபடுவர்.

ஞான பைரவர்: முதல் 30 ஆண்டுகள், ஞானம் பெறு வதே மனிதனின் குறிக்கோள். அந்த ஞானத்தை அருள்பவர் ஞான பைரவர். இவரை வழிபட்டால் கல்வி, வேலை மற்றும் இனிய வாழ்க்கை அமையும்.

சுவர்ணாகர்ஷன பைரவர்: வாழ்வின் 2-வது கட்டத்துக்கு (31 முதல் 60 வயது வரை) உரியவர் இவர். மகாலட்சுமியின் சந்நிதிக்கு எதிரில் திருவாசி யுடன் காட்சி தரும் இந்த பைரவர், தம்மை வழிபடுவோருக்கு செல்வகடாட்சம், வியாபார அபிவிருத்தி, குடும்பத்தில் நன்மை ஆகிய பலன்களையும் அருள்கிறார்.

உன்மத்த பைரவர்: இவர், வாழ்வின் 3-வது கட்டத்துக்கு (61 முதல் 90 வயது வரை) உரியவர். இவரை வழிபட்டால் நோய்கள், சத்ரு பயம், திருஷ்டி பயம், கடன் தொல்லை ஆகியவற்றுடன் சனி தோஷங்களும் நீங்கும்.

ஒரு முறை, சூரியனின் மகனான சனீஸ்வரன் பெரும் அவமதிப்புக்கு ஆளானார். பிறகு, தன் தாய் சாயாதேவி யின் அறிவுரைப்படி பைரவரை வழிபட்டு, நவக்கிரக பதவியைப் பெற்றாராம். ஆகவே, பைரவரை சனீஸ்வரரது குருவாகக் கருதுவர். சனீஸ் வரர் இங்கு, வெண்ணிற ஆடையுடன் பால சனீஸ்வர ராக பைரவர்களின் அருகிலேயே காட்சி தருகிறார்.



யோக பைரவர்: மனித வாழ்வின் கடைசி 30 ஆண்டு களுக்கு உரிய இவர், சகல யோகங்களையும் தருபவர். இவருக்கு அருகில் உத்திர கயிலாய லிங்கம் உள்ளது. எனவே இவரை வணங்கினால், கயிலாயப் பதவி கிட்டும் என்பது நம்பிக்கை.

வளர்பிறை மற்றும் தேய்பிறை அஷ்டமி தினங்கள் பைரவருக்கு உகந்தவை. தவிர இங்கு, ஞாயிற்றுக் கிழமைதோறும் ராகு காலத் தில் பைரவருக்கு சிறப்பு வழிபாடுகள் நடை பெறுகின்றன. இந்த நாட்களில் இங்கு வந்து,

அதிக்ரூர மஹா காய கல்பாந்த தஹநோபம
பைரவாய நமஸ்துப்யம் அனுக்ஞாம் தாதுமர்ஹஸி

- என்ற கால பைரவர் துதி சொல்லி, சதுர் கால பைரவர்களை வழிபட, சகல நலன்களை யும் பெறலாம்.

சமீபத்தில் இந்தக் கோயிலில், 64 பைரவர்களுக் கும் தனித்தனியே குண்டங்கள் அமைத்து, 'சதுர் சஷ்டி பைரவ மகா யாகம்' நடைபெற்றது. உலக நன்மைக்காக நடைபெற்ற இந்த யாகத்துக்கு முந்தைய தினமும், யாகம் முடிந்த பிறகும் பெரு மழை பொழிந்தது குறிப்பிடத்தக்கது!

Comments