நம்பினார் கெடுவதில்லை அது நான்கு மறை தீர்ப்பு

'வைஷ்ணவ ஜனதோ' என்ற பாடல், மகாத்மா காந்திக்கு மிகவும் பிடித்த மானது. இன்றும் மகாத்மா காந்திக்கு அஞ்சலி செலுத்தும் விதம் இந்தப் பாடல் பாடப்படுவதைக் கேட்டிருப்பீர்கள். வைஷ்ணவர் களது குணங்களைச் சொல்லும் விதமாக நரசிம்ம மேத்தா என்ற மகாத்மா பாடிய பாடல் இது.

எளிமையும், ஒழுக்கமும் மகான்களது வாழ்க்கை எனும் நாணயத்தின் இரு பக்கங்கள். நரசிம்ம மேத்தாவின் வாழ்வும் அப்படித்தான். சிறு வயதிலேயே ஸ்ரீகிருஷ்ண தரிசனம் பெற்றவர் நரசிம்ம மேத்தா. தான் ஏழ்மையுடன் இருந்தபோதும் அதைப் பற்றிக் கவலைப்படாமல், எப்போதும் இறைவனையே பாடிக் கொண்டிருந்தவர். இவருக்கு, அழகும் நல்ல குணங்களும் வாய்ந்த ஒரு மகள் இருந்தாள். அவளை, தகுந்த வரனுக்கு மணம் முடிக்க வேண்டுமே என்று கவலைப் பட்டுக் கொண்டிருந்தார் நரசிம்ம மேத்தா.

இந்த நிலையில், அவரது வீட்டுக்கு செல்வந்தர் ஒருவர் வருகை தந்தார். நரசிம்ம மேத்தாவின் மகளின் அழகு, குணம், பண்பு மற்றும் நாகரிகம்... எல்லாவற்றுக்கும் மேலாக அவளது இறைபக்தி ஆகியவற்றைக் கண்டு அதிசயித்தார். அவளைத் தன் மகனுக்கு மணம் முடிக்க விரும்பினார். தன் மனைவி, உறவினர்கள் மற்றும் ஊரில் உள்ளவர்கள் போன்றவர்களது எதிர்ப்பைப் பொருட் படுத்தாமல், அந்த ஏழைக் குடும்பத்துப் பெண்ணைத் தன் மருமகளாக்கிக் கொண்டார் செல்வந்தர். ஆனால் அவரின் மனைவிக்கு, தன் மருமகளின் அழகு, குணம், பண்பு, நாகரிகம், பக்தி போன்ற எதுவும் கண்ணுக் குத் தெரியவில்லை; அவளது ஏழ்மை மட்டுமே தெரிந்தது.

ஒரு நாள் தன் மருமகளை அழைத்து, ''நீ இப் போதே பிறந்த வீட்டுக்குப் புறப்படு. தீபாவளிக்கு 300 ரூபாய் சீதனத்துடன் வருவதாக இருந்தால் திரும்பி வா. இல்லையெனில் வராதே!'' என்று கண்டிப்புடன் கூறி, அந்தப் பெண்ணை பிறந்த வீட்டுக்குத் துரத்தி விட்டாள்.


அந்தக் காலத்தில், 300 ரூபாய் என்பது, இன்றைய 3 லட்சத்துக்குச் சமம். நரசிம்ம மேத்தா எவ்வளவு பாடு பட்டாலும், இவ்வளவு பணத்தை அவரால் தர முடியாது என்பது மாமியாருக்கு நன்றாகத் தெரியும். ஆகவே அவள், 'இனி, அவள் நம் வீட் டுக்கு வரவே மாட்டாள். நம் மகனுக்கு, நமது அந்தஸ்துக்கு ஏற்றாற்போல் ஒரு வரனைப் பார்த்து மற்றொரு திருமணம் செய்து வைத்து விடலாம்' என்று நினைத்துக் கொண்டிருந்தாள்.

திருமணம் ஆகியும் பிறந்த வீட்டுக்கே திரும்பி விட்ட தன் மகள், எப்போதும் கண வனையே நினைத்து அழுது கொண்டிருப்பதைக் கண்டு, உள்ளம் புழுங்கிய நரசிம்ம மேத்தா, செய்வதறியாமல் திகைத்தார். இறைவனிடம் புலம்பி அழுதார். வீட்டில் ஒரே சோகம்!

இந்த நிலையில்... இறையடி யார்கள் சிலர், நரசிம்மமேத்தாவின் வீட்டுக்கு வந்தனர். அவர்களை பூஜித்து அன்னம் இட்டு, வணங்கி நின்றார் நரசிம்ம மேத்தா. தாங்கள் வெகு தூரத்தில் இருந்து வருவதாகவும், சாதுர் மாஸ்ய விரத காலத்தில், துவாரகாவில் இருக்க விரும்பி அங்கு சென்று கொண்டிருப்பதாகவும் தெரிவித்தனர். அத்துடன், தங்களிடம் 300 ரூபாய் உள்ளது என்றும், அதை கள்வர் பயம் இல்லாமல், துவாராகா வுக்கு எப்படி எடுத்துச் செல்வது என்றும் நரசிம்ம மேத்தாவிடம் ஆலோசனை கேட்டனர்.

பக்தரான நரசிம்ம மேத்தாவின் உள்ளத்தில் பாசம் தலை தூக்கியது. பாசத்தால் சூது எழுந்தது. தன் பெண்ணுக்கும் 300 ரூபாய் தேவை. அடியார்களிடம் இருப்பதும் 300 ரூபாய். 'ஆஹா! இது இறைவனின் திருவிளை யாடலோ!' என்று எண்ணினார். பிறகு ஒரு காகிதத்தை எடுத்து, ஸ்ரீகிருஷ்ணனை மனதில் நினைத்து, ஷ்யாம் சுந்தர் என்ற பெயரை எழுதி, பாடல்கள் எழுதுவது போல் கற்பனையில் ஒரு விலாசத்தை எழுதி துவாரகா என்று முடித்தார்.

அந்த காகிதத்தை அடியார்களிடம் கொடுத்து, ''இவர் துவாரகாவில் உள்ள கோடீஸ்வரர் எனக்கு மிக வேண்டப்பட்டவர் இவரிடம் நீங்கள் கொடுத்த பணத்தை சேர்ப்பித்து விடுகிறேன். நீங்கள் தங்கியிருக்கும் நான்கு மாதங்களுக்கு வேண்டிய அனைத்தையும் இவர் பொறுப்பேற்று கவனித்துக் கொள்வார்'' என்று கூறி அனுப்பி வைத்தார்.

அவர்கள் சென்றதும், அந்த பணத்தைத் தன் பெண்ணிடம் கொடுத்து தீபாவளிக்குக் கணவன் வீட்டுக்கு அனுப்பி வைத்தார். மகளை அனுப்பி வைத்த பின், தான் செய்த காரியத்தை நினைத்துக் கூனிக் குறுகினார் நரசிம்ம மேத்தா. இறைவனிடம் இரவும் பகலும் தனது தவறைக் கூறிக் கூறி, தன்னை மன்னிக்கும்படி மன்றாடினார். இருந்தாலும் அவருக்கு தூக்கம் கொள்ளவில்லை! 'தான் கொடுத்த விலாசம், துவாரகாவில் இல்லாதது கண்டு இறையடியார்கள் என்ன செய்வார்களோ... அவர்களை ஏமாற்றி, பரிதவிக்கவிட்டு விட்டோமோ' என்று நினைத்து நினைத்து அழுதார்.

துவாரகா சென்ற இறையடியார்கள், முதலில் அந்த விலாசமே சரியாக இல்லாததைக் கண்டு கலங்கினர். ஆனால் சற்று நேரத்தில், அவர்களைத் தேடி வந்த தனிகனான (செல்வந்தன்) இளைஞன் ஒருவன், தன்னை ஷ்யாம் சுந்தர் என்று அறிமுகப்படுத்திக் கொண்டான். தன்னிடம் நரசிம்ம மேத்தா எல்லாவற்றையும் கூறியிருப்பதாகத் தெரிவித்தான். அத்துடன், அடியார்கள் நான்கு மாதங்கள் துவார காவில் தங்குவதற்கு இடம், உணவு மற்றும் உடை உள்ளிட்ட வசதிகளையும் செய்து கொடுத்தான். இறையடியார்களுக்கு ராஜ உபசாரம்தான்.

சாதுர்மாஸ்யம் முடிந்து அவர்கள் கிளம்பினர்.அப்போது அந்த இளைஞன், 'தங்களது உத்தரவுப்படி அடியார்களை நன்றாகக் கவனித்துக் கொண்டேன்' என்று எழுதி, ஷ்யாம் சுந்தர் என்று கையப்பம் இட்ட கடிதத்தை அடியார்களிடம் கொடுத்து, நரசிம்ம மேத்தாவிடம் கொடுக்கச் சொன்னான்.

அங்கு, 'இறையடியார்கள் திரும்பி வருவார்களே... என்ன நடக்குமோ?' என்று நடுங்கிக் கொண்டிருந்தார் நரசிம்ம மேத்தா. ஆனால், இன்முகத்துடன் வந்த அடியார்கள்... துவாரகாவில், ஷ்யாம்சுந்தர் தங்களை நன்கு கவனித்த விதத்தையும் அவனது அழகு, பண்பு- பணிவு மற்றும் உபசாரத்தையும் விவரித்தனர். அதோடு, ஷ்யாம் சுந்தர் தந்த கடிதத்தையும் நரசிம்ம மேத்தாவிடம் கொடுத்தனர். அதில், 'ஷ்யாம் சுந்தர்' என்ற கையப்பம் இடப் பட்ட இடத்தில் ஷ்யாம்சுந்தரையே தரிசித்த நரசிம்ம மேத்தா மூர்ச்சையாகி விட்டார்! இறை வனே கையப்பமிட்ட அந்தக் கடிதம், இன்றும் நரசிம்ம மேத்தாவின் பரம்பரையில் எவரிடமோ பாதுகாப்பாக இருப்பதாக சொல்லப்படுகிறது.

நம்பினோர் கெடுவதில்லை!அது நான்கு மறை தீர்ப்பு .

Comments

  1. நல்ல பதிவு.
    வாழ்த்துகள்.

    ReplyDelete

Post a Comment