அஞ்சனாதேவிக்குப் பிரசவம் பார்த்த விஸ்வகர்மா


தேவலோகச் சிற்பியான விஸ்வகர்மா, மனோவசியம் மற்றும் மருத்துவம் ஆகிய வற்றிலும் நிபுணத்துவம் பெற்றவர் என்கின்றன புராணங்கள். ஸ்ரீஆஞ்சநேயரின் அன்னையான அஞ்சனாதேவியின் வாழ்வில் நிகழ்ந்த ஒரு சம்பவம் இதை மெய்ப்பிக்கிறது.
கௌதம முனிவருக்கும் அகலிகைக்கும் பிறந்தவள் அஞ்சனாதேவி. இவளை, 'கேசரி' என்ற வானர வீரனுக்கு மணம் செய்து வைத்தனர். இல்லறம் இனிதே கழிந்தது. ஆனால், பல ஆண்டுகள் ஆகியும் குழந்தை பாக்கியம் வாய்க்காததால் கவலையுற்றாள் அஞ்சனாதேவி.

பராக்கிரமசாலியான மைந்தன் வேண்டும் என்று வேண்டி, கடும் தவத்தில் ஆழந்தாள். தவத்தின் பலனாகவும், வாயுதேவனின் அருளாலும் அஞ்சனாதேவிக்குக் குழந்தை பாக்கியம் கிட்டியது (அஞ்சனாதேவி குறித்து புராணங்களில் பல தகவல்கள் உண்டு ).

அஞ்சனாதேவியின் வயிற்றில், குரங்கு முகத்துட னும் நீண்ட வாலுடனும், ருத்ராம்சம் பொருந்திய குழந்தை உருவாகியிருந்தது. இந்த நிலையில்... ஒரு நாள், பிரசவ வலியில் துடித்தாள் அஞ்சனாதேவி. இதையறிந்த வாயு தேவன், மும்மூர்த்திகளையும் பிரார்த்தித்தான்.


இதன் பலனாக அங்கு வந்த மும்மூர்த்திகள், அஞ்சனாதேவிக்கு சுகப் பிரசவம் நடந்தேற விஸ்வகர்மாவே ஏற்றவர் என்பதை அறிந்து, அவரை அழைத்து விவரம் தெரிவித்தனர்.

இதையடுத்து அஞ்சனையின் வயிற்றில் இருந்த குழந்தை யிடம் பேசினார் விஸ்வகர்மா: ''குழந்தாய், உன் தாயாரின் கர்ப்பத்தில் இன்னும் ஏன் சிறைப்பட்டிருக்கிறாய்? பராக்கிரமனாகத் திகழப் போகும் நீ, இந்த உலகுக்கு வரும் நேரம் நெருங்கி விட்டது. ஆகவே, தாயாருக்குத் துன்பம் எதுவும் தராமல் வெளியே வா!''

இதைக் கேட்ட குழந்தையும் கர்ப்பப்பை யில் இருந்தபடியே பேசியது: ''தேவலோக சிற்பியே! நான் நிர்வாணமாக இருக்கிறேன். மேலும், பருமனான என் உடல் சுகமாக வெளியே வரத் தடையாக உள்ளது. எனவே என் உடலை சிறுகச் செய்து, என் அன்னைக்கு சிறிதும் துன்பம் நேராத வாறு எளிதில் நான் வெளியேற தாங்கள் அருள வேண்டும். மேலும், எனக்கு பொற் கோவணம், பொன் பூணூல் மற்றும் குண்டலம் ஆகியவற்றை வழங்கி உதவுங்கள்'' என்றது. அதன்படியே செய்தார் விஸ்வகர்மா. அவரது மனோவசியக் கலையால் அஞ்சனைக்கும், குழந்தைக்கும் எந்த விதத் துன்பமும் இன்றி சுகப் பிரசவம் நடைபெற்றது. சுபவேளையில் அஞ்சனைக்குப் பிறந்த அந்தக் குழந்தையே ஸ்ரீஆஞ்சநேயர் என்கிறது புராணம்.

மதுரை- உசிலம்பட்டி சாலையில் பொட்டுலுப்பட்டி கிராமத்துக்கு அருகில் சுமார் 2 கி.மீ. தொலைவில் உள் ளது ஆனையூர். இந்த கிராமத்தில் உள்ள ஐராவதீஸ்வரர் கோயிலில், ஸ்ரீஆஞ்சநேயரின் தாயாரான அஞ்சனா தேவிக்குத் தனிச் சந்நிதி உள்ளது. அஞ்சனாதேவியின் வலப் புறம்- குழந்தை ஆஞ்சநேயரும்; இடப் புறம் ஒரு பெண்ணும் காட்சி தருகின்றனர்.

Comments

  1. அருமையான பதிவு.
    அரிய தகவல்.
    வாழ்த்துகள்.

    ReplyDelete

Post a Comment