அகத்தியர் பூஜித்த அப்பன் பெருமாள்

காவிரி நதியின் கிளைநதியான வாளவாய்க்கால் தென்கரையில் அமைந்துள்ள புலிவலம் எனும் தலத்தில் கோயில் கொண்டிருக்கும் அப்பன் பெருமாள், வேண்டியவர்க்கு வேண்டும் வரம் தரும் பெரும் வரப்பிரசாதி!

என்றைக்கும் வற்றாத அபீஷ்டனாக அர்ச்சாரூபம் எடுத்து எழுந்தருளியுள்ள தலங்கள் பலவற்றுள் இத்தலமும் ஒன்றாகும். திருப்பதி மலையில் வெங்கடாசலபதியுடன் எழுந்தருளி இருந்த அப்பன் பெருமாளை, அகத்திய மகரிஷிக்கு திருப்பதி பெருமாளே தந்தருள, அவரை அகத்திய முனிவர் பொதிகைமலை அடிவாரத்தில் பூஜித்து வந்தார்.

வெகுகாலத்திற்குப்பிறகு தான் பூஜித்து வந்த அப்பன் பெருமாளை, திருமலை சுவாமி புஷ்கரணியில் சேர்த்து விட்டு தவம் செய்யச் சென்று விட்டார் அகத்தியர்.

பாரத தேசத்தில் அந்நியர் ஆக்ரமிப்பால் தென் தேசத்திலுள்ள பரமபக்தர்கள் திருப்பதி சென்று ஏழுமலையானை தரிசிக்க முடியாமல் தவித்தனர். அவர்களுக்கு அருள்பாலிக்க வேண்டி பொன்னி மாநதி சூழப் பெற்ற ஆடககே்ஷத்ரம் என்னும் திருஆரூருக்குத் தெற்கு எல்லையாக விளங்கும் `தக்ஷிண கோகனேஸ்வரம்' என்ற தலத்தில் அப்பன் பெருமாள் அர்ச்சகர் ஒருவருக்குக் கிடைத்தார்.

அதையறிந்த சோழ ராஜா, இத்தலத்தில் அப்பன் பெருமாளை பிரதிஷ்டை செய்து கோயில் கட்டி, குடமுழுக்கும் செய்தார். இத்தலத்து எம்பிரான் பிற தலத்துப் பெருமாள்களுக்கெல்லாம் தந்தைபோல் கருதப்படுவதால் இவருக்கு `தகப்பன் பெருமாள்' என்ற பெயரும் உண்டு!

இக்கோயில் மேற்கு நோக்கி அமைந்துள்ளது. மேற்கு நோக்கியுள்ள மூர்த்தி சிறப்பு மிக்கவராகச் சொல்லப்படுகிறது. இந்த பெருமாளுக்கு தினப்படி பால், சந்தனம் திருமஞ்சனம் திருமேனி முழுவதும் செய்யப்படுகின்றது.

திருப்பதியில் உள்ளது போல் மூலவர் அப்பன் பெருமாள் நின்ற திருக்கோலத்தில் சங்கு, சக்கர, அபய, வரத ஹஸ்தத்துடன் சுமார் ஒரு அடி உயரத்தில் சேவை சாதிக்கின்றார். உற்சவர் பூதேவி, ஸ்ரீதேவியுடன் அதே ஆகிருதியுடன் நின்ற கோலத்தில் சேவை சாதிக்கின்றார். வைகுண்ட ஏகாதசி உற்சவம் இங்கு சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது. இக்கோயில் சிறியதானாலும் நல்ல முறையில் பராமரிக்கப்படுகின்றது. சின்ன அளவில்பிரார்த்தனை கருடவாகனம் உள்ளது.

வியாக்ரபாதர் என்ற ஒரு ரிஷி, நாரதர் சாபத்தால் புலியாக மாறவும், புலியாக மாறிய ரிஷி சுயரூபம் பெற அப்பன் பெருமாளை வலம் வந்து, அவரது கருணையால் ரிஷிக்கு சுயரூபம் வந்ததால் இத்தலம் புலிவலம் என்ற காரணப் பெயரைப் பெற்றது.

இக்கோயிலில் கர்ப்பகிரஹம், அர்த்த மண்டபம், மகாமண்டபம், கருட மண்டபம் இவற்றுடன் விஷ்வக்ஸேனர், கருடன் சன்னதி, ஆண்டாள் சன்னதி, உள்ளன. சுதையால் ஆன பாம்பணையில் பள்ளி கொண்ட ரங்கநாதரும் சேவை சாதிக்கின்றார்.

மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துசுவாமி தீட்சிதர் அப்பன் பெருமாள் மேல் பக்தி பூண்டு `கர்நாடக காபி' என்னும் மிகவும் தொன்மையான ராகத்தில் `வெங்கடாசலபதே...' என்ற கீர்த்தனையை சமஸ்கிருதம், தமிழ், தெலுங்கு ஆகிய மூன்று மொழிகளிலும் கலந்து பாடி இத்தலத்துக்கு மேலும் பெருமை சேர்த்துள்ளார்.

திருவாரூருக்குத் தெற்கே இரண்டு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது புலிவலம் என்னும் தலம்.

Comments