பவித்ரமான பக்தி

மஞ்சத்தில் படுத்திருந்த ஸ்ரீகிருஷ்ணரின் காலடியில் அமர்ந்திருந்த சத்யபாமா, ``பிரபோ! தங்களுக்குச் சேதி தெரியுமா?'' என்று கேட்டார்.

``சொன்னால்தானே தெரியும்?''

``சுவாமி! தங்களின் இந்த திவ்யதிருவுரு முழுக்க முழுக்க அடியாளுக்கே சொந்தமானது என்பதை யாவருக்கும் தெரிவிக்கும் வகையில், பலபேர் முன்னிலையில் தங்களை தானமாகக் கொடுக்க உத்தேசித்துள்ளேன்!''

சட்டென்று எழுந்து உட்கார்ந்தார் கேசவன்.

``பாமா! உண்மையிலேயே இது நல்ல சேதிதான். ஆமாம்; யாருக்கு என்னைத் தானமாகக் கொடுக்க உத்தேசித்துள்ளாய்?''

``வேறு யாருக்கு? பிரம்ம புத்திரரான நாரதருக்குத்தான்''.

சத்யபாமா, கண்ணனை நாரத முனிவருக்குத் தானம் கொடுக்க இருப்பதை, பட்ட மகிஷி ருக்மிணிக்கும் மற்றும் இதர மகாராணிகளுக்கும் தெரிவித்து, அவர்களது சம்மதத்தையும் பெற்றுவிட்டார்.

எல்லோருமே அதனை ஒரு சம்பிரதாய நிகழ்வாகத்தான் கருதிக் கொண்டிருந்தனர். தானமாகப் பெற்ற பின் கிருஷ்ணரைத் தங்களிடமே ஒப்படைத்துவிட்டு அந்தத் திரிலோக சஞ்சாரி தன்பாட்டில் போய் விடுவார் என்றுதான் சத்யபாமா உள்பட அனைவருமே எண்ணிக் கொண்டிருந்தனர். ஆனால் நடக்கஇருப்பதைப் பற்றி அவர்கள் என்ன கண்டார்கள்? அது கிருஷ்ணபரமாத்மாவுக்கும், நாரத முனிவருக்கும் மட்டுமே தெரிந்த ரகசியமல்லவா?

நாரதர், கிருஷ்ணரின் கரத்தைப் பற்றி, ``அச்சுதா! இப்போது தாங்கள் என்னுடையவராகிவிட்டீர்கள்! வாருங்கள் போகலாம்!'' கண்ணனை அழைத்துக் கொண்டு கிளம்பினார். நாரதரின் செய்கையைக் கண்டு எல்லோரும் அதிர்ந்து போயினர்.

சத்யபாமா நாரதரிடம், ``ஐயனே! தாங்கள் என் கணவரை எங்கே அழைத்துப் போகிறீர்கள்?'' என்று கேட்டார்.

``எப்பொழுது நீங்கள் அவரை எனக்கு தாரை வார்த்துக் கொடுத்து விட்டீர்களோ, அப்பொழுதே அவர் எனக்கு உரியவராகிவிட்டார். எனது சுவாதீனத்தில் இருக்கும் அவரை நான் எங்கு வேண்டுமானாலும் அழைத்துச் செல்வேன்.''

``மகரிஷி! என் கணவரின் விலையைக் கூறுங்கள்.அதனைக் கொடுத்து நான் அவரை மீட்டுக் கொள்கிறேன்!''

``விலையா? அச்சுதனுக்கு யார் விலையை நிர்ணயிப்பது? சரி போகட்டும், நீங்கள் இவ்வளவு தூரம் முறையிடுவதால் உங்களுக்கு ஒரு வழி சொல்லுகிறேன். பரந்தாமனின் எடைக்குச் சமமான பொருளைக் கொடுங்கள். அதனை ஏற்று அவரை விடுவிக்கிறேன்!''

நாரத மகரிஷி கூறியது நெஞ்சில் பால் வார்த்தது போலிருந்தது பாமாவுக்கு. சற்று மனந்தெளிந்தார். ஆனால் ருக்மிணியோ அதனைக் கேட்டு இடிந்துபோய்விட்டார்.

``துவாரகாநாதனின் எடைக்குச் சமமான பொருளா? எங்கேயுள்ளது அவ்வளவு பொருள்? ஈரேழு புவனங்களையும் அண்ட சராசரங்களையும் பிணையாகக் காட்டினாலும் அவரை ஈடு செய்ய முடியாதே! இது எங்கு போய் முடியப் போகிறதோ?'' என்று சொல்லியபடி தலையில் கையை வைத்து உட்கார்ந்துவிட்டார்.

தங்கத் தராசு ஒன்று தருவிக்கப்பட்டது. அதில் ஒரு தட்டில் கிருஷ்ணர் அமர்ந்தார். இன்னொரு தட்டில் சத்யபாமா பொன்னையும், நவமணிகளையும் கொண்டு வந்து நிரப்பினார். கிருஷ்ணர் அமர்ந்திருந்த தட்டு சற்றும் கிணுங்கவில்லை.

``ஸ்ரீகிருஷ்ண சந்திரன் பாவமயமானவர். எனவே மற்றொரு தட்டில் எவ்வளவு திரவியம் வைக்கப் போகிறீர்கள் என்று சங்கற்பித்தாலே போதும். அது தன் முழுபாரத்தையும் வெளிக்காட்டும்!'' என்றார் நாரதர்.

உடனே, துவாரகையின் அரசாங்க சொத்து முழுவதையும் சமர்ப்பிப்பதாக சத்யபாமா சங்கற்பித்துக் கொண்டார். அப்படியும் தராசுத் தட்டுகள் இணையாகவில்லை. இப்போது பாமாவுக்கு ஆதரவாகச் சுற்றத்தாரும், பாண்டவர்களும், மற்றும் பீஷ்மர், நக்தஜித், ருக்மி ஆகியோரும் முன்வந்து தத்தம் செல்வமனைத்தையும் அர்ப்பணிப்பதாகச் சங்கற்பித்தனர். அப்படியும் கிருஷ்ணர் அமர்ந்திருந்த தட்டு சற்றும் அசைந்து கொடுக்கவில்லை.

பீதியடைந்த சத்யபாமா, முதல்முறையாக ருக்மிணியின் கரங்களைப் பற்றிக் கொண்டு, ``சகோதரி! நீ சாட்சாத் அலைமகளின் அவதாரமென்று ஞானிகளும், முனிவர்களும் கூறுகின்றனர். இந்த இக்கட்டான நிலையில் நீ தான் எனக்கு உதவவேண்டும்'' என்று கண்கள் நீரைச் சொரிய மன்றாடி கேட்டுக் கொண்டார்.

பாமாவைத் தழுவிக் கொண்ட ருக்மிணி, ``சகோதரி! பிருந்தாவனத்திலிருந்து வந்துள்ளவர்களில் எவரையாவது அழைத்து வந்தால் அவர் இவரது மதிப்பை அறிந்தவராக இருக்கக்கூடும்!'' என்றாள்.

பிருந்தாவனம் என்ற வார்த்தையைக் கேட்டதுமே பாமாவுக்கு ராதையின் நினைவுதான் நெஞ்சில் பளிச்சிட்டது.

`அடடா! இந்த சுபநிகழ்ச்சிக்கு நந்தகோபரையும் யசோதா தாயாரையும் அழைக்காதது எத்தனை மடத்தனம்!' என்று தன்னையே நொந்துகொண்ட சத்யபாமா, கலங்கிய மனத்துடன் நடந்தே சென்று கோபிகைகளின் இருப்பிடத்தை அடைந்து, ராதையைத் தேடிப் பிடித்து, அவர் கால்களில் விழுந்து நடந்ததைச் சொல்லி அழுதார்.

ஸ்ரீவ்ருஷபானு குமாரியான ராதை, சத்யபாமாவைத் தூக்கி நிறுத்தி அணைத்து ஆறுதல் கூறித் தேற்றினார்.

கேசவனின் திருப்பாதங்களைத் தன் நெஞ்சில் அனவரதமும் பதிய வைத்திருக்கும் ராதை, யோகேஸ்வரரான ஸ்ரீமந் நாராயணன் தங்கத் தராசில் அமர்ந்திருக்கும் வைபவத்தைக் கண்டு களித்து, கண்களை மூடி, புத்தியால் அவரை நமஸ்கரித்து, மனத்தால் அவரை ஆலிங்கனம் செய்து கொண்டார்.

பிறகு, தராசின் அருகில் சென்று தட்டில் வைத்துள்ள பொருட்களை அப்புறப்படுத்த குறிப்பால் உணர்த்தினார். தட்டு காலியானது. தான் சூடிக் கொண்டிருந்த வனமாலையிலிருந்து துளசிதளம் ஒன்றைப் பறித்து, அதைக் கண்களில் ஒற்றிக் கொண்டு, மிக்க பவ்யத்தோடு அந்தத் துளசி தளத்தைத் தட்டில் வைத்தார் ராதை.

என்ன ஆச்சரியம்! ஸ்ரீகிருஷ்ணர் அமர்ந்திருந்த தட்டு இப்போது எழும்பிற்று!

அடடா! என்ன மகிமை! அந்த ஒரு துளசிதளம் பகவானுக்குச் சமானமாயிற்று!

கூடியிருந்தவர்கள் ராதையின் பவித்ரமான பக்தியைக் கண்டு மெய்மறந்து ஆனந்தக் கண்ணீர் வடித்தனர்.

இந்த சம்பவத்துக்குப் பின் சிலநாட்கள் கழித்து நாரதர் மீண்டும் அங்கே விஜயம் புரிந்தார். அப்போது சத்யபாமாவைப் பார்த்து, ``அம்மணி! ராதையின் சொரூபமே துளசி! அவர் வெறுந்துளசி தளத்தை மட்டும் அன்று தராசுத் தட்டில் வைக்கவில்லை. அத்தோடு தன் இதயத்தையும் சேர்த்தேதான் வைத்தார்! அவர் இருக்குமிடத்தைவிட்டு கிருஷ்ண சந்திரன் விலகியிருப்பாரா? நீங்கள் எனக்குத் தங்களுடைய நாயகனை மட்டும்தான் தானமாகக் கொடுத்தீர்கள். ஆனால் ராதையின் கருணையினால் எனக்கு ராதா கிருஷ்ணர் இருவருமே நிரந்தரமாகக் கிடைத்துவிட்டனர்!'' என்றார் பெருமிதத்தோடு.

நாரதர் சொன்னதைக் கேட்ட சத்யபாமா, ஸ்ரீகிருஷ்ணரின் பிரேமைக்குகந்த மனைவி என்று இதுகாறும் தான் கொண்டிருந்த மமகாரம் நீங்கப் பெற்ற நிலையில் தெளிந்த மனத்தினராகி ராதையின் திருக்கோல வைபவத்தைத் தன் நெஞ்சில் வடித்து அவரைப் போற்றிப் புகழத் தொடங்கினார்.

Comments